Advertisement

முடிவே இல்லாமல் நீண்ட அந்த வலிமிகு இரவுகளுக்கு பின்னும், நல்ல செய்தியை அவர்கள் கேட்கவில்லை! ஆனால் தினமொரு பணக்கணக்கை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர்! தர்மனும், அர்ஜுனும் மாற்றி மாற்றி வந்து பார்த்துவிட்டு சென்றனர். வயதின் காரணத்தால், கொரோனா தொற்றின் பயத்தால், மலயனாதனை அலைய வைக்க துணியவில்லை. 

பத்மஜா உடளவிலும், மனதளவிலும் பாதியாய் கரைந்து விட்டார். அவருக்கும் அவர் ஆணவத்துக்கும் பெரும் அடி! பணமோ, பதவியோ மட்டுமே அவரை காப்பாற்றி விடாது என்பதை உணர்ந்த நிமிடங்கள் அவை! 

அவருக்கு மட்டுமல்ல பலருக்கும் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தது கொரோனா என்னும் கொடூரன்!

யக்ஞாவின் தந்தையும் தாயும் தினம் அர்ஜுனுக்கு அழைத்து பேசினர். அவர்கள் குரலை கேட்கும் போதெல்லாம் சோர்வுற்ற அவன் மனம் மேலும் சோர்வுறும். யக்ஞாவின் குரலை கேட்க அவன் உள்ளம் ஏங்கியது. அவள் தேறி வருகிறாள் என்ற நல்ல செய்தியை அவன் கேள்வியுற்றிந்தாலும், இதுவரை அவளை அழைத்து அவன் பேசவில்லை. அதற்கு காரணம் குற்றவுணர்ச்சியா, இல்லை அவள் வெறுத்து பேசிவிடுவாளோ என்ற பயமா என்பதை அவனாலும் கணிக்க முடியவில்லை.

மருத்துவமனை செலவு சில லட்சங்களை கடந்து விட்டது. கையிருப்பு குறைந்துக் கொண்டே வந்தது. கடை வளாகம் வாங்குவதற்காக மொத்த கையிருப்பையும் இறக்கியிருக்க, பற்றாததற்கு சில சேமிப்பு கணக்குகளையும் மொத்தமாக காலி செய்திருந்தனர். மலயனாதனின் பென்ஷன் பணம் மட்டுமே சற்றே கைகொடுத்தது! தர்மனின் கையிருப்பும் கம்மி தான்! கணக்கை துடைத்து எடுத்து விட்டான் அவன்! அர்ஜுனுக்கோ கையிருப்பு வைக்கும் பழக்கமே கிடையாது. கையில் இருக்கும் பணத்தில் நிறைவாய் செலவு செய்து, ஆடம்பரமாய் வாழ்ந்தே பழக்கப்பட்டவன்!

முட்டி மோதி சிகிச்சை செலவை கட்டி விட, மூன்று வாரங்களுக்கு பின் பத்மஜா இப்பொழுது தேறியுள்ளார், பிராணவாயு அளவும் உயர்ந்துள்ளது, இனி வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம் என்றனர். அறையை காலி செய்வதற்கு முன் மருந்து செலவு, ஏனைய செலவு என்று பாக்கி வெறும் ஒரு ஐம்பதாயிரம் மட்டுமே (?!!) ரசீதை நீட்டியது மருத்துவமனை நிர்வாகம்! 

அவர்கள் குடும்பத்திற்கு இந்த பணம் ஒரு பொருட்டே இல்லை தான். ஆனால் தற்போதைய நிலமையில் அந்த ஐம்பதாயிரம் துண்டு விழுந்தது! யாரிடமாவது கடன் பெற்றாக வேண்டும்! தர்மன் கையை பிசைய, அர்ஜுன் துவண்டு விட்டான், யாரிடம் கேட்பது? கடன் கொடுக்கும் நிலைமையில் இருந்தவர்கள் கடன் வாங்குவதா? என்ன ஒரு அவமானம்? அவன் மனம் வேதனையில் உழன்றது. அவன் கையில் வைத்திருந்த ஐம்பதாயிரம் மதிப்புள்ள அந்த ஆப்பிள் ஐ பேட் அவனை பார்த்து இளித்தது!

தேவையற்ற பொருள் தான், ஆடம்பரத்துகாக வாங்கியது. அந்த ஐம்பதாயிரத்தை செலவு செய்யாமல் இருந்திருந்தால் இன்று??? தன் ஐ.பேட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தவனின் தோள் தொட்டன மித்ரனின் தோள் கொடுக்கும் கரங்கள்.

“வா கிளம்பலாம்”

“நீ எதுக்கு இங்க வந்த? நீயாவது ஃசேப்பா வீட்லையே இருக்கலாம்ல?”

“ஏன் நீயும் அண்ணனும் இருக்கும் போது நான் இருக்கக் கூடாதா?”

“ப்ச்…..நீ போடா நான் வரேன். பில் செட்டில் பண்ணனும். கொஞ்ச நேரம் ஆகும்”

“அதெல்லாம் பண்ணியாச்சு. வா அம்மாவை கூட்டிட்டு கிளம்பலாம்”

விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தான் அர்ஜுன்.

“பணம் ஏதுடா?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு? கட்டியாச்சு அவ்ளோ தான்”

“டேய் நாயே! இப்போ சொல்ல போறியா இல்லையா?” 

“தங்கச்சி மறுவீட்டுக்கு செய்யுறதுக்கு பணம் கொஞ்சம் சேர்த்து வச்சிருந்தேன். மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டாரு. உங்க தங்கச்சி இனிமே என் மனைவி. அவளுக்கான எல்லாமே நான் செய்யனும். கல்யாணத்தை நீங்க செஞ்சதே எங்க அம்மாவோட வற்புறுத்தல் தான். என் கல்யாண செலவை நானே ஏத்துகிட்டு செய்யுறது தான் சரி. இதுக்கு மேலேயும் எதுவும் செலவு பண்ணி என்னை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீங்கனு சொல்லிட்டாரு டா. நல்ல டைப் டா அவரு. அதான் அந்த பணம் அப்படியே இருந்துச்சு. அதை கட்டிட்டேன்”

பெரிதாய் அலட்டலில்லாமல் சொல்லிய மித்ரனை பார்த்தபடியே நின்றான், கார் இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றுரைத்த அவனதருமை நண்பன் அர்ஜுன்!!!

பத்மஜாவை வீட்டில் சேர்த்தபின் சேலத்திற்கு கிளம்பி விட்டான். கொரோனாவும் சற்றே குறைய தொடங்கியிருக்க, ஈ.பாஸ் வாங்கிவிட்டு கிளம்பி சென்றான்.

யக்ஞாவின் வீட்டிற்கு வந்ததும், சிம்பா இவனை பார்த்து ஓடிவந்து இவன் காலை நக்க, மென்சிரிப்புடன் அதை தடவி கொடுத்தவனுக்கு, உள்ளிருந்து பேச்சுக் குரல்கள் கேட்டது.

“இப்போ நீ சொல்ற பேச்சை கேட்க போறியா இல்லையா? இப்போ தான் உடம்பு தேறி வந்திருக்க, அலைஞ்சு மறுபடியும் உடம்பை கெடுத்துக்க போறியா? இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகி அடுத்த வீட்டுக்கு போக போற, கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்குதா? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியே உன் மாமியார் வீட்டுக்கு போறேன்னு சொல்றியே, அவங்க வீட்ல என்ன நினைப்பாங்க?!”

“என்ன நினைச்சாலும் பரவாயில்லை. நான் பார்க்க போறேன்”

“இந்தாங்க! உங்க மகளை பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு நிக்குறீங்களா? ஒரு பொறுப்பான அப்பா செய்யுற வேலையா இது? அவ தான் சொன்னானு நீங்களும் அவ கூட போறதுக்கு கிளம்பி நிக்குறீங்க? ஏற்கனவே ஒரு முறை என் கிட்ட சொல்லாம அப்பாவும், மகளும் போய் மாப்பிளையை பார்த்துட்டு வந்திருக்கீங்க!! ஊர் உலகத்துல எங்கேயாவது இப்படி நடக்குமா? யாருக்காவது தெரிஞ்சா நம்ம பொண்ணை தானே காரி துப்புவாங்க”

“அது என்னமா? மாப்பிள்ளை பொண்ணை பார்க்க வீட்டுக்கு வரலாம், அது தப்பில்லை, ஆனா பொண்ணு மாப்பிள்யை பார்க்க போகக் கூடாதா?”

“போகக் கூடாதுடி. அப்படி தேடி போனா என்ன இந்த பொண்ணு இப்படி அலையுறானு நாக்கு மேல பல்லை பேசுவாங்கடி. அதுமட்டுமில்ல அவங்க வழக்கப்படி கல்யாணத்துக்கு முந்தின நாள் புடவை படைக்கிறதுக்கு முன்னாடி, அவங்க வீட்டுல நீ காலடி எடுத்து வைக்கக் கூடாது. உங்கப்பனுக்கு தான் அறிவில்லை உனக்கு ஜால்ரா போட்டுட்டு திரியுறார். உனக்கு கொஞ்சமாச்சும் வெக்கம் இருக்க வேண்டாம்?”

இதற்குமேல் அவரின் வசவுகளை அர்ஜூனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அங்கிருந்த அழைப்பு மணியை அடித்தான்.

யக்ஞா தான் வந்து பார்த்தாள். வாசலில் அர்ஜுனை பார்த்து உறைந்து நின்று விட்டாள்.

“மாப்பிளை! வாங்க மாப்பிளை” யக்ஞாவின் தந்தையும் தாயும் அவனை வரவேற்க, யக்ஞாவிடம் எந்த அசைவுமில்லை!

“பாப்பு! மாப்பிளை வந்திருக்காரு. வாங்கனு கூப்பிடு”

“வாங்க” அவனை அழைத்துவிட்டு நிமிர்ந்து கூட பார்க்காமல், உள்ளே சென்றுவிட்டாள். அதுவே அவனுக்கு பெரியதொரு அடி. அவள் பேசவில்லை என்ற கவலை மறைந்து கோபம் துளிர்த்தது.

‘ஏன் ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சா என்ன பல்லெல்லாம் உதிர்ந்து போயிருமாக்கும்?! நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்? இந்த சில்வண்டு இவ்ளோ கோபப்படுறதுக்கு? அப்புறம் எதுக்காம் என்னை பார்க்க வீட்டுக்கு போறேன்னு கிளம்பி நின்னு அவங்க அம்மா கூட சண்டை போட்டாளாம்?’

‘அவ உன்னை பார்க்க தான் கிளம்பினானு உனக்கு தெரியுமா? அவ மம்மியை பார்க்க கிளம்பியிருப்பா. நீயெல்லாம் அவ்ளோ வொர்த் இல்லை’ அவன் உள்மனம் இடித்துரைத்தது. 

யக்ஞாவின் தந்தையும் தாயும் அவனிடம் பத்மஜாவை பற்றி விசாரிக்க, அவன் வாய் மட்டுமே இயந்திரமாய் பதிலளித்துக் கொண்டிருக்க, அவன் கண்கள் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

“நல்லவேளை மாப்பிளை அம்மா எந்த பிரச்சனையும் இல்லாம குணமாகி வந்துட்டாங்க. ரொம்ப சந்தோஷம். எல்லாம் அந்த கடவுள்…..”

அவன் பொறுமை காற்றில் பறந்தது. “ஒரு நிமிஷம்! நான் யக்ஞா கூட கொஞ்சம் தனியா பேசணும். அவளை வெளிய கூட்டிட்டு போயிட்டு வரேன்”

இன்னுமே அவன் வாயிலிருந்து ‘மாமா’ என்ற வார்த்தையும் வரவில்லை! யக்ஞாவை அழைத்து செல்கிறேன் என்ற தகவலை தான் கூறினானே தவிர, அழைத்து செல்லவா என்று அனுமதி கேட்கவில்லை என்பதையும் அந்த தந்தையுள்ளம் கண்டுக்கொண்டது.

அவர் தன் மனைவியை பார்க்க, அவரோ கண்களாலே வேண்டாமென்று சைகை செய்தார்.

“ஒரு அரை மணி நேரம் தான். நான் உங்க பொண்ணை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்து விட்டுடுறேன்” அவன் குரல் இப்பொழுது சற்று உயர்ந்து அதில் கோபம் எட்டி பார்த்தது, தன்னை நம்பவில்லையே என்ற கோபம்!

“சரி மாப்பிளை, நீங்க கூட்டிட்டு போயிட்டு வாங்க. பாப்பு! இங்க வா. மாப்பிளை கூட வெளிய போயிட்டு வா மா”

எதுவும் பேசாமல் அவன் பின்னால் அவள் தொடர, அர்ஜுன் தன் புல்லட்டின் அருகில் சென்று அதில் சாவியை சொருகினான்.

“ஒரு நிமிஷம்! நடந்தே போகலாம். இங்க தெரு கடைசில ஒரு பார்க் இருக்குது. அங்க போய் பேசலாம்”

“ஓ! அப்போ நீ என் கூட பைக்ல வர மாட்ட?”

“எனக்கு ஒண்ணுமில்ல, உங்களுக்கு தான் என் கூட பைக்ல வர இஷ்டம் இருக்குமோ என்னவோனு சொன்னேன்”

அவனின் எந்த சொற்களும் துயரம் நீக்கபோவதில்லை, காயம் ஆற்றபோவதில்லை! அவன் அவளை பார்த்த பார்வையில் தெரிந்தது என்ன? அவன் கண்களின் யாசிப்பு என்ன? அவனின் யாசிப்பை அவள் மனம் உள்வாங்கியதா? 

 

   

       

Advertisement