Advertisement

ஊரடங்கு முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட, பத்மஜாவின் பயம் உண்மையானது. கொரோனா கோர தாண்டவமாடிய சமயம் அது! சாதாரண இருமலாக ஆரம்பித்தது, காய்ச்சலாக வளர்ந்து, கொரோனா என்று உறுதியானது!

உடளவில் பாதிக்கப்பட்டதை விட மனதளவில் அதிகம் பாதிக்கப் பட்டார். செய்திதாள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என தினம் கேட்கும் இறப்பு செய்திகள் அவருக்கு உயிர் பயத்தை விதைத்திருந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கற்பனைகள் புனைந்து, பயத்தை கலந்து, புலம்பல் காவியம் வாசித்தபடியே இருந்தார். 

தனியறையில் அடைந்து கிடந்தவர், நோடிக்கொரு முறை ஆக்சிமீட்டர் (Oxymeter) வைத்து சோதித்து பார்த்துக் கொண்டிருந்தவர் அர்ஜுனின் அலைபேசிக்கு அழைத்தார்.

“கண்ணு! அப்போ செக் பண்ணினப்போ ஆக்சிஜன் 97  இருந்துச்சு. இப்போ 96 காட்டுது. ஒரு மாதிரி படபடனு வருது கண்ணு! ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?”

“மம்மி! ஐஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தானே ஆக்சிமீட்டர் வச்சு செக் பண்ணினீங்க. சும்மா சும்மா அதையே பார்த்துட்டு இருக்காதீங்க மம்மி. ஒண்ணு ரெண்டு முன்ன பின்ன தான் காட்டும்”

ஆறுதலாய் அவன் பேசினாலும், உள்ளூற அவனுக்கும் உதறல் தான். சிறு வயதிலிருந்தே பத்மஜா மேல் அர்ஜுனுக்கு அதிக அன்பு உண்டு! அவரின் செயல்பாடுகள் அவனுக்கு பிடிக்காவிட்டாலும், அர்ஜுனின் பிடிவாத குணத்தினால் அவனிடம் அடங்கியே போவார் பத்மஜா! 

அதனால் அவரிடம் குரலை உயர்த்தி தன் எதிர்ப்பை காட்டினாலும் அவரிடம் அளவற்ற பாசம் உண்டு. மலையனாதன் பெரிதாய் பிள்ளைகளிடம் ஓட்டுதல் காட்ட மாட்டார். அதனாலேயே அர்ஜுனுக்கு தாய் என்றால் தனி பிரியம் தான். தாயின் தற்போதைய உடல்நிலை மன உளைச்சலில் இருந்த அவனை மேலும் சோர்வாக்கியது. 

தர்மனும் பத்மஜாவுக்கு தொடர்ந்து நம்பிக்கை மந்திரத்தை உரு போட்டுக் கொண்டே இருந்தான். 

“மம்மி! இந்த சமயத்துல உங்க நோய்க்கு முதல் மருந்தே உங்க நம்பிக்கை தான். எதையும் நினைச்சு பயப்படாம, நல்ல படுத்து தூங்குங்க. பாசிடிவா யோசிங்க. ரொம்ப முக்கியமா போன்ல நியூஸ் பார்க்காதீங்க”

நோயுற்ற நேரங்களில் மனம் உறவுகளுக்கு ஏங்கும். உறவுகளின் அருமையை புரிந்து கொள்ளும். அப்படி ஒரு புரிதல் பத்மஜாவுக்கு வந்ததா என்பது தெரியாது ஆனால் தர்மனுடம் தன் மனக்கிலேசங்களை பகிர்ந்துக் கொண்டார்.

“எனக்கென்னவோ பயமா இருக்குது தர்மா! அர்ஜுன் கல்யாணத்தை நடத்தி முடிச்சிருக்கலாமோனு தோணுது. அவன் கல்யாணத்தை பார்க்க முடியாம போய் சேர்ந்திடுவேனோ?”

“அர்ஜுன் கல்யாணம் மட்டுமில்ல, அவன் பிள்ளைக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீங்க நல்லா தான் இருப்பீங்க. தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதீங்க”

“இல்லைடா, அந்த பொண்ணுக்கும் வேற கொரோனா வந்திடுச்சு. எனக்கு என்னவோ எல்லாமே சகுன தடையாவே தோணுது. ஒருவேளை……ஒருவேளை……நான் முன்னாடி அந்த பொண்ணுக்கு செஞ்ச பாவம் தான், இப்போ அவன் கல்யாணத்துக்கு தடையா வந்து நிக்குதோ?”

“இல்லை மம்மி! அப்போ நீங்க செஞ்சது தான் சரி. அர்ஜுனும் அந்த பொண்ணும் ஒன்னு சேர்ந்திருந்தா அவங்க வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிருக்காது. இப்போ அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகி சந்தோஷமா வாழுது. அப்புறம் எப்படி அது பாவமாகும்? இந்த பேச்சை இத்தோட விட்டுடுங்க. அர்ஜுன் கேட்டா அவ்ளோ தான்! யக்ஞாவுக்கும் ஒன்னும் ஆகாது, உங்களுக்கும் ஒன்னும் ஆகாது. கல்யாணம் நல்லபடியா நடக்கும்”

அந்த நிமிட சமாதானம் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும். மீண்டும் தன் புலம்பலை ஆதியிலிருந்து தொடங்கி விடுவார்.

பத்மஜாவுக்கு கொரோனா என்று உறுதியான மறுநாளே தர்மன் தன் பிள்ளைகள் இருவரையும் சேலத்தில் இருக்கும் சுசித்ராவின் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிட்டான். சுசித்ரா காலில் ஸ்கேட்டிங் ஷூவை கட்டிக் கொண்டு, சமையல், வீட்டு வெளி வேலைகள், பத்மஜாவுக்கு வேளாவேளைக்கு சத்தான உணவு கொடுப்பது என்று சுற்றிக் கொண்டிருந்தாள்.

அவள் வேண்டுதல் எல்லாம் ஒன்று மட்டுமே, தனக்கும் கொரோனா வந்துவிட கூடாதென்பதே! தனக்கும் வந்துவிட்டால் வீட்டையும், பத்மஜாவையும் கவனித்துக்கொள்வார் யாருமில்லை! அவள் வேண்டுதல் பலித்து அவளுக்கு மட்டுமில்லாது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா பரவவில்லை. ஆரம்ப கட்டத்திலேயே பத்மஜா தன்னை தனிமைபடுத்தி கொண்டதே அதற்கு காரணம். 

பத்மஜாவுக்கு அண்ணன்கள் இரண்டு பேர், அவர்கள் பிள்ளைகள் என்று சொந்தங்கள் நிறைய உண்டு தான், ஆனால் சொந்தம் இருந்தால் மட்டும் போதுமா, சொந்ததோடு பந்தம் வேண்டாமா? ஒவ்வொருத்தரோடும் ஒவ்வொரு விதமான சண்டை. மலயனாதனின் சொந்தங்களோடும் இதே நிலைமையே! அலைபேசியில் விசாரிக்கும் சொந்தங்களும் இல்லை, உதவி கரம் நீட்டும் உறவுகளும் இல்லை!   

துன்பத்தில் தோள் கொடுக்கும் உறவுகள் இல்லா பணக்காரனும் ஏழையே! சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் உறவுகள் இல்லா மனிதன் அனாதையே! அந்த வகையில் பத்மஜாவும் இப்பொழுது ஏழையாய், அனாதையாய் நிராதரவாய் நின்றார்! 

பொதுவாகவே அதிகார குணம் கொண்ட பத்மஜாவுக்கு அக்கம்பக்கத்தினருடன் சுமூக உறவு கிடையாது. “உங்க வீட்டு குப்பை எங்க வீட்டுக்கு பறந்து வருது”, “எங்க மரத்து காயை ஏன் பறிச்சீங்க?”, “உங்க குட்டி பொண்ணு என்னை பார்த்து குரங்குன்னு சொல்றா. நீங்க சொல்லிக் கொடுக்காமலா இப்படி பேசுவா?”, வேனுமுன்னே என் கோலத்து மேல வண்டியை விட்டுட்டு போறீங்களா?”, “ஒரு பலகாரம் செஞ்சு கொடுத்து விட்டா பாத்திரத்தை திருப்பி தரணும்னு விவஸ்த்தை வேண்டாம்”, “கல்யாணத்துக்கு கூப்பிடுறாங்க. தட்டு வச்சி கூப்பிட வேண்டாம். தர்மன் கல்யாணத்துக்கு நாம அவங்களுக்கு தட்டு வச்சி தானே கூப்பிட்டோம். மரியாதை தெரியாதவங்க கல்யாணத்துக்கு போகவே வேண்டாம்” 

இப்படியான பல சண்டைகளால் அவர்களின் வெறுப்பை சம்பாதித்து வைத்திருந்தார். பத்மஜா, மற்றும் மலையனாதனின் பதவி பலத்தால், தனக்கு காரியம் ஆக வேண்டுமென நினைப்பவர்கள் மட்டுமே குல்லா போட்டுக் கொண்டு அவர்களுடன் நட்புறவாடினர்! மற்றவர்கள் அதிக பேச்சிலாமல் கடந்து விடுவர்!

அவருக்கு கொரோனா என்று தெரிந்ததும், அவரை வீட்டில் வைத்திருக்க கூடாதென்றும், அதனால் தாங்களும் பாதிக்கப்பட கூடுமென்றும் அவரை மருத்துவமனையில் சேர்க்க சொல்லி தெருவிலிருந்த பலர் எதிர்ப்பு குரல் கொடுக்க, அர்ஜுன் அவர்களுடன் மல்லுக்கு நின்றான்.

தர்மன் தான் எல்லாவற்றையும் சமாளித்தான். தலைக்கு மேல் சேர்ந்திருக்கும் அலுவலக வேலையுடன், பத்மஜாவின் அனத்தல்களை பொறுமையாய் சகித்து, அண்டை அயலாரின் கூக்குரல்களுக்கு பொறுமையாய் பதிலளித்து, நிலையில்லாமல் துள்ளும் தன் தம்பியை அமைதிப்படுத்தி, கடைக்கு கொடுத்த முன் தொகையை கேட்டு நிற்பவர்களிடம், பத்மஜாவின் வற்புறுத்தலினால் கொடுக்கவும் முடியாமல், அவர்களை சமாளிக்கவும் முடியாமல், இப்படியாக திண்டாடி போனான்.

ஒரு வாரம் ஆன பின்பும் பத்மஜாவின் காய்ச்சல் ஏற்ற இறக்கத்துடன் குறையாமல் இருக்க, அவரது பிராணவாயு அளவும் குறைய ஆரம்பித்தது. அருகிலிருந்த பிரபல தனியார் மருத்துமனைக்கு அவரை கொண்டுச் செல்ல, பிராணவாயு அளவு தொண்ணுற்றி நான்குக்கு கீழ் குறைந்தால் சேர்க்க முடியாது என்று நிராகரித்துவிட்டனர். 

மருத்துவமனை வாசலிலேயே அனைவரும் காத்திருக்க, அர்ஜுன் எம்.எல்.ஏவுக்கு அலைபேசினான்.

“அண்ணன்! அம்மாவுக்கு கொரோனா வந்திருச்சு ண்ணன்”

“கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல பா. சரி சரியாயிடும் விடு”

“இல்லேண்ணா! ஆக்சிஜன் அளவு 90 வந்திடுச்சு. இங்க டி.எம்.வி ஹாஸ்பிடல் வந்திருக்கோம். ஆக்சிஜன் அளவு குறைஞ்சதால சேர்க்க மாட்டோம்னு சொல்றாங்க. நீங்க தான் கொஞ்சம் சேர்க்க சொல்லி சிபாரிசு பண்ணனும்”

“என்னபா? டி.எம்.வி ஏன் கூட்டிட்டு போன? அது யார் ஹாஸ்பிடல்னு உனக்கு தெரியும்ல?”

“அண்ணன்! தருமபுரி எம்.பியோட ஹாஸ்பிடல், அதனால தான் இங்கேயே கூட்டிட்டு வந்தேன். நீங்க கொஞ்சம் இங்க போன் போட்டு பேசுறீங்களா? அல்லது எம்.பி கிட்ட சொல்லுங்க”

“புரியாம பேசாத அர்ஜுன். இரண்டு நாளா என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்குது, நீ என்ன பேசிட்டு இருக்க?! தருமபுரி மின் மயானத்துல இயந்திரம் கோளாறானதால, அப்படியே போட்டு எரிக்கிறாங்க. இப்போ எரிக்கவே இடம் இல்லாம போச்சு, ஆனா கவர்ன்மன்ட் ரிகார்ட்ல டெத் ரேட் எப்பவும் போல கம்மியாவே காமிச்சோம். அந்த எம்.பி இதை ஒரு பிரச்சனை ஆக்கி விட்டுட்டார். ட்விட்டர்ல இதை பத்தி அவரு பேசினது கட்சிக்குள்ள எல்லாருக்கும் ரொம்ப அதிருப்தி. கட்சிக்குள்ள இருந்துட்டே அவரு இப்படி பண்ணிடாப்லனு மேலிடத்திலிருந்து போன் மேல போன். ஒரே தலைவலியா போச்சு. இந்த நேரத்துல நீ அங்க போய் நிக்குற?”

கண்களை மூடி திறந்தவன், “எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. சரி நான் கமலம் இல்லேனா தங்கம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். நீங்க ஒரு வார்த்தை ஹாஸ்பிடல்க்கு பேசிடுங்க ண்ணா”

“அர்ஜுன், நீ ஒன்னு பண்ணு. இப்போதைக்கு ஜி.ஹெச் கூட்டிட்டு போ. இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். நானும் அதுக்குள்ள ஃப்ரீ ஆயிடுவேன். வேற ஹாஸ்பிடல் மாத்திடலாம். இல்லேனா சேலம் காவேரிக்கு கூட போகலாம். இப்போதைக்கு எதுவும் பண்ண முடியாது. உன் கிட்ட பேசிட்டு இருக்கும் போதே நைய் நைய்யுனு அவ்ளோ மிஸ்ட் கால். நான் அப்புறம் பேசுறேன். ஆங்….அந்த கடை பிரச்சனை சால்வ் ஆயிடுச்சு தானே?”

ஒரு நிமிட மௌனத்தின் பின் “ம்ம்ம்…..ஆயிடுச்சு” அவன் குரல் நலிந்து ஒலித்தது

“சரி, நான் கூப்பிடுறேன்” என்றபடி அவர் வைத்துவிட, அர்ஜுன் நின்ற இடத்திலேயே எதுவும் செயல்படாமல் முடங்கி நின்றான்.

தர்மன் அவன் தோள் தொட்டான். 

“நம்பிக்கையா இரு. எதுவும் ஆகாது. சேலம் காவேரிக்கு கூட்டிட்டு போகலாம். எப்படியாவது சேர்த்துடலாம்”

அரசு மருத்துவமனையில் சேர்க்க அவர்களுக்கு தயக்கம், பயம்! நம் நாட்டில் அரசு மருத்துவமனை பற்றிய மக்களின் நிலைப்பாடு அத்தகையது!!!

சேலம் காவேரியிலும் அனுமதி மறுத்தனர். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் மருத்துவ அவசர ஊர்தியிலேயே (Ambulance) காத்திருந்தவர்கள், எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பே, உயிருக்கு ஆபத்தென்றால் மருத்துவமனை பொறுப்பேற்காது என்பதை எழுதி வாங்கி அனுமதித்தனர். அதுவும் ஒருநாள் அறை வாடகையே பல ஆயிரங்களில்!! 

அன்றைய நாள் மலயனாதன் குடும்பத்துக்கு ஜென்ம ஜென்மத்துக்கும் மறக்க முடியாத நாளாய் அமைந்தது. பத்மஜாவின் பிரானவாயு குறைந்துக் கொண்டே சென்று 84  என்றானது, அவர் நினைவு தப்பியது! தீவிர சிகிச்சை பிரிவில் பிராணவாயு வழங்கபட, தொற்று பரவலின் காரணமாய் தர்மன்,அர்ஜுன் உட்பட யாரும் அங்கிருக்க அனுமதி வழங்கபடவில்லை! 

Advertisement