Advertisement

“மம்மி! கல்யாணம் ஆன இந்த எட்டு வருஷத்துல ஒரு தடவை கூட அவ உங்களை பத்தி என் கிட்ட தப்பா பேசுனதே இல்லை, நானே ஏதாவது பேசுனாலும், பரவாயில்லை கவலைப்படாதீங்க விடுங்கனு தான் சொல்லுவாளே தவிர உங்களை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டா. எவ்ளோ வருஷம் ஆனாலும் என்னையும் நீங்க புரிஞ்சிக்கலை, அவளையும் புரிஞ்சிக்கலை”

“என்னடா இன்னைக்கு வாய் இவ்ளோ நீளுது? உன்னை பெத்து வளர்த்து ஆளாக்குன பெத்த தாயை பார்த்து பேசுற பேச்சா இது?” அவர் குரல் உடைந்து கண்கள் சிவக்க ஆவேசத்துடன் எழுந்து நின்றார்.

“மம்மி! இப்படி தான் மம்மி, இப்படியே, இதையே, பேசி பேசி பேசி என் சின்ன வயசுலேர்ந்து இப்போ வரைக்கும் நான் பேசுனதே இல்லை மம்மி, பேசாமையே இருந்து இருந்து நான் ஊமையாவே ஆயிட்டேன் மம்மி! இதை பார்த்து பார்த்து வளருற என் பிள்ளைங்களும் என்னை மாதிரியே ஆயிடுமோன்னு எனக்கு பயமா இருக்குது மம்மி!!”

“ஏன்டா பேச மாட்ட? ஏன் பேச மாட்ட? இந்த வயசுலேயும் நாய் மாதிரி ஓடி ஒடி உழைச்சு வந்து கொட்டுறேனே யாருக்காக? அங்க இடத்தை வாங்கவா, இங்க காம்ப்ளக்சை வாங்கவானு யாருக்காக எல்லாத்தையும் வாங்கி கொட்டுறேன்? சின்ன வயசுலேர்ந்து ஏதாவது குறை வச்சிருக்கேனா உங்க ரெண்டு பேருக்கும்? நீ கேட்காதது கூட எல்லாமே வாங்கி கொட்டினேனே?”

“அதை தான் மம்மி நானும் சொல்றேன். நான் கேட்கவே இல்லையே, நான் உங்க கிட்ட இதை தாங்க, அதை தாங்கனு கேட்டதே இல்லையே. எனக்கு காஸ்ட்லியா பிரான்டடா ஒரு ஷர்ட் வாங்கி தருவீங்க, ஆனா நான் ஆசைப்படுற கலர்ல இருக்காது. எனக்கு பெஸ்ட் பிராண்ட் பைக் வாங்கி தருவீங்க. ஆனா அது நான் ஆசைப்பட்ட பைக்கா இருக்காது. பெஸ்ட் காலேஜ்ல இடம் வாங்கி தருவீங்க. ஆனா நான் ஆசைப்பட்ட குரூப் படிக்க முடியாது. ஏன் சாப்பாடு கூட எனக்கு நான்-வெஜ் வேண்டாம்னு சொன்ன புதுசுல எவ்ளோ ஆர்பாட்டம் பண்ணுனீங்க? உங்களுக்கு பிடிச்ச கலர்ல டிரெஸ் பண்ணி, உங்களுக்கு பிடிச்ச பைக் வாங்கி, உங்களுக்கு பிடிச்சதை சாப்பிட்டு, நீங்க நினைச்ச காலேஜ்ல சேர்ந்து படிச்சு, நீங்க, நீங்க, நீங்க மட்டும் தான் என் லைஃப்ல. என் லைஃப்ல நான் ஆசைப்பட்டு கிடைச்சது சுச்சி மட்டும் தான்” 

“சின்ன வயசுலேர்ந்து நல்ல படிக்கணும் படிக்கணும்னு சொல்லி சொல்லியே அந்த வயசுக்குரிய எதையும் நான் அனுபவிச்சதில்லை. ஃப்ரெண்ட்ஸ் யார் கூடவும் விளையாண்டதில்லை. யாரும் வீட்டுக்கு வந்ததில்லை. நானும் யார் வீட்டுக்கும் போனதில்லை. சொந்த ஊர்லையே தான் இவ்ளோ வருஷமும் இருக்கோம், ஆனா இப்போ வரைக்கும் சொல்லிக்கிற மாதிரி எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் கிடையாது”

“பணத்தை வந்து கொட்டிட்டா, நான் கேக்காததையும் கூட வாங்கி கொடுத்துட்டா, எல்லாமே தி பெஸ்ட்டா பண்ணிட்டா உங்க கடமை முடிஞ்சிடுச்சா. பணம் மட்டும் தான் வாழ்க்கையா?”

“என்னைக்காவது என் கிட்ட சிரிச்சு பேசியிருப்பீங்களா? இல்ல நான் தான் உங்க கிட்ட ஏதாவது ஷேர் பண்ணிக்க முடியுமா? ஆனா சொல்றது மட்டும் நான் என் ரெண்டு பசங்க கிட்ட ஃப்ரென்ட்லியா இருக்கேன்னு சொல்ல வேண்டியது. அதுக்கு அர்த்தம் என்னனு தெரியுமா உங்களுக்கு?”

“எது பேசினாலும் அதுல ஏதாவது ஒன்னை பிடிச்சி தொங்கிட்டு மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு, உங்களோட இந்த கோபமான மூஞ்சியை தான் பார்த்து பார்த்து வளர்ந்தேன். நீங்களும் சரி அப்பாவும் சரி உங்க ஈகோ தான் பெருசா தெரியுது. உங்க சண்டையில என்னை பலிகடா ஆக்கினது உங்களுக்கு தெரியுமா?”

“ஒருவகையில நான் அர்ஜுனை நினைச்சு சந்தோஷப்படுறேன். அவனாவது என்னை மாதிரி இல்லாம, அவனுக்கு வேண்டியதை பிடிவாதம் பிடிச்சு சாதிச்சிக்கிறானே!!! இதெல்லாம் சொல்லி காட்டிட்டா, இல்லையில்ல…… இதுவரைக்கும் நான் சொல்லிக் காட்டினதே இல்லையே?!! அதுக்கே நான் நல்ல புள்ளையே இல்லை, பெத்த தாயை மதிக்க தெரியாதவன், இல்லேனா பயங்கரமா கத்துவீங்க, வீட்டை விட்டு ஓடி போய்டுவீங்க!”

“போதும்டா சாமி, இந்த நல்லவன்ங்கிற பட்டம் எனக்கு போதும். நல்லவனா இருந்து நான் பட்ட பாடெல்லாம் போதும். நானும் எல்லாரையும் மாதிரி கொஞ்சம் சுயநலமா நடந்துக்க போறேன்” மூச்சு வாங்க கண்களை மூடியபடியே நின்றவனின் தோளை ஒரு கை தொட, கண் திறந்து பார்த்தான் தர்மன்.

“என்னபா? எவ்ளோ நேரம் இப்படியே நிப்பீங்க? அத்தை போய் ரொம்ப நேரம் ஆகுது. வாங்க சாப்பிடலாம்” என்றழைத்த தன் உற்றவளை பார்த்த பார்வையில், அப்பட்டமாய் அடிபட்ட வலி தெரிந்தது. 

பத்மஜாவிடம் பேசுவதாய் நினைத்துக் கொண்டு தன் மனதிற்குள்ளேயே அனைத்தையும் பேசி முடித்தவனுக்கு தெரியும் தன் கற்பனை ஒரு நாளும் நிஜமாக போவதில்லை என்பது! அவன் பேசிவிட்டால் மயிரிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்த குடும்ப கயிறு அறுபட்டு போகும்! அது அறுபடாமல் இருக்க அதை உறுதியாய் பற்றியிருந்தவன் கைகள் அறுந்து குருதி கொப்பளித்தாலும் கூட கயிற்றை விட மாட்டான் அந்த மூத்த பிள்ளை!!

—————————————————————————————————————————————-

“நான் உங்க வீட்டுக்கு வெளிய தான் நிக்குறேன்” அலைபேசியில் அர்ஜுன் தெரிவிக்க, ஓடோடி வந்தார் யக்ஞாவின் தந்தை!

“மாப்பிளை! என்ன இப்படி திடீர்ன்னு? ஒருவார்த்தை சொல்லலையே?”

“ஏன் சொல்லாம வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டீங்களா?”

அவனின் இந்த பதிலில் அவர் முகத்தில் அதிர்ச்சி பரவியது! தொடக்கத்தில் இருந்தே அர்ஜுன் உதாசீனமாய் நடந்து கொள்வதை அவர் கவனித்து தான் வந்தார். ஆனால் அது இன்றைய தலைமுறையிடையே சாதாரணம் என்று மனதை சிறிது தேற்றிக் கொண்டாலும் ஒரு நெருடல் இல்லாமல் இல்லை!

அர்ஜுன் கார் வரதட்சினையாக கேட்கவும் தன் பெண்ணுக்கு சரியான வரனை தேர்ந்தெடுத்திருக்கிறோமா என்று சந்தேகம் ஆட்டி படைக்க, அதை தெளிவு படுத்த மகளை நாடினார். அர்ஜுனில்லாமல் நான் இல்லை என்று மகள் தெளிவாய் உரைத்ததும் அவர் மனம் வடிகட்டிய நீராய் தெளிந்தது!! 

மாமனாரின் அதிர்ந்த முகத்தை கவனித்ததும் அர்ஜுனுக்கு சங்கடமாகி போனது! ஏனோ இந்த இரண்டு நாட்களாய் யார் எது பேசினாலும், என்ன நடந்தாலும், ஏன் ஒரு காற்று அசைந்தால் கூட அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது!! அதற்கான காரணத்தை தான் இப்போது தேடிக் கொண்டு வந்திருந்தான்!! 

“இல்லை, அது………யக்ஞா எப்படி இருக்கா?”

சட்டென்று முகத்தை திருத்தியவர், “நீங்க முதல உள்ள வாங்க மாப்பிளை” என்றபடி உள்ளே சென்றார்.

உள்ளே சென்றதும் கைகளை நன்றாக கழுவிவிட்டு, தன்னை வெறுமையாய் பார்த்துக் கொண்டு நிற்கும் குடும்பத்தை சுற்றி கண்களை ஓட்டியவன், மறுபடியும் மாமனாரிடம் அதே கேள்வியை கேட்டான்.

“யக்ஞா எப்படி இருக்கா?”

“இருக்கா மாப்பிளை இப்போ பார்க்க முடியாது. தனிமைபடுத்த சொல்லி சொல்லியிருக்காங்க. நீங்க உட்காருங்க பேசலாம். யம்மாடி! மாப்பிளை வந்திருக்காரு. பார்த்துட்டே நிக்குற. முதல் போய் தண்ணி கொண்டுட்டு வா மா. அப்புறமா சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணு” தன் மனையாளை பார்த்து அவர் உத்தரவிட, சிலைக்கு உயிர் வந்ததை போல் தலையாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் யக்ஞாவின் அன்னை!

“வீட்ல எல்லாருக்கும் பாப்புக்கு இப்படி ஆயிருச்சேன்னு ஒரே கவலை. அதான் கையும் ஓடாம காலும் ஓடாம நிக்குறாங்க. இந்த சிம்பா கூட ரெண்டு நாளா ஒன்னும் சாப்பிடாம, தூங்காம அழுதுட்டே கிடக்குது”      

தலையை ஆட்டியவன் அங்கிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டே, “வீட்ல வேற யாருக்கும் வராம எப்படி யக்ஞாவுக்கு மட்டும்?”

“இப்போ ஒரு ரெண்டு வாரமா அவ ஃப்ரெண்டு கூட தினம் கோயிலுக்கு போயிட்டு வரா. அதனால கூட இருக்கலாம்”

எதுவும் பதில் பேசாமல் தலையை குனிந்தவாறே அவளணிந்த மோதிரத்தை திருகிக் கொண்டிருந்தான்! இப்பொழுதெல்லாம் அவனின் அன்றாட பழக்கமாய் மாறியிருந்தது அது! மனிதர்களுடன் உறவாடுவதை தவிர்த்து விட்டு அந்த மோதிரத்துடன் தான் உறவாடிக்கொண்டிருந்தான்! 

“மாப்பிளை மேல மாடி ரூம்ல தான் இருக்கா. பார்த்து பேச வேண்டாம். நீங்க போய் வெளிய நின்னு பேசிட்டு வாங்க”

தலை ஆட்டியபடியே மாடிக்கு சென்று அங்கிருந்த அறைக்கு முன் நின்றான் அர்ஜுன். கதவை தட்ட கைகளை தூக்கியவன், தட்டாமலே கைகளை இறக்கி விட்டு, தலையை அழுந்த கோதிக் கொண்டு அங்கேயே நடை பயின்றான்! மறுபடியும் கைகளை தூக்கவும், கைகளை இறக்கவுமாய் திண்டாடியவன் படபடவென்று படிகளில் இறங்கிவிட்டான்!

யக்ஞாவின் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு, அவர் சாப்பிட அழைத்தும் மறுத்துவிட்டு வெளியேறியவன் கேட்டின் அருகே நின்று பெருமூச்செறிந்தான்!! 

ஒரு மெல்லிய முனகல் சப்தம் கேட்க திரும்பி பார்த்தவன் கேட்டின் அருகே கட்டபட்டிருந்த சிம்பாவை பார்த்தான்! பாவமாய் படுத்திருந்த அது களைத்து தெரிந்தது! நாயை கண்டாலே தெறித்து ஓடுபவன், இன்று அதனருகில் வந்தான். தன்னருகே வரும் அந்த புதியவனை பார்த்து குறைக்காமல் எழுந்து அவனை பார்த்தது. பின் அவனுருகில் வந்து அவன் காலை சுற்றி சுற்றி வந்து நக்கியது!

குனிந்து அதனருகே மண்டியிட்டவன் அதன் தலையை தடவ, அவன் முகத்தை முகர்ந்துக் கொண்டே அவன் தோளை தொற்றியது. கண்கள் கலங்கும் அறிகுறிகள் தெரிய, சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து வண்டியை கிளப்பிச் சென்றான்!

சிம்பா குறைக்கும் சப்தம் வெகு தூரம் வரைக்கும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது!

Advertisement