Advertisement

“தமிழ்நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதை ஒட்டி, இன்றும், நாளையும் காலை ஆறு மணி முதல் அனைத்து அத்தியாவசிய கடைகளும் செயல்படும்” செய்திகள் வாசித்துக் கொண்டிருக்க,

“ஏன்பா, லாக்டவுன் போட போறாங்க. வீட்டுல மளிகை எல்லாம் காலி ஆக போகுது. காய்கறி, மளிகை எல்லாம் வாங்கணும்”

“வாங்கலாம் மா” தர்மன் விட்டேத்தியாக சொல்லிவிட்டு தலையை அழுத்தி விட்டபடி, சோர்வாய் கண்களை மூடிக் கொண்டான்.

மலயனாதனிடம் சென்று தர்மனிடம் கூறியதையே கூற, அவர் காதுகளில் போனை ஒற்றியவாறே, 

“சார்! சொல்லுங்க! பாஸ்கர் கிடைச்சானா?”

“ம்ம். இப்போ ஸ்டேஷன்ல தான் இருக்கான். ஆனா அவன் கடந்த ரெண்டு நாளா ஊர்லையே இல்லை, வேலையா சேலம் போயிருந்ததா சொல்றான். அதுக்கு ஆதாரமும் இருக்குது. நீங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போங்க”

“இதோ வரேன்” அலைபேசியை அணைத்து விட்டு தலையிலடித்துக் கொண்டார், “ச்சே! இந்த காம்ப்ளக்சை வாங்கும் போதே சொன்னேன், வேண்டாம்னு. யாராவது கேட்டீங்களா? இப்போ எவ்ளோ பெரிய தலைவலியா வந்து நிக்குது!! நேத்து கலெக்டர் கூப்பிட்டு என்ன பிரச்சனைனு கேட்கிறார். இவ்ளோ நாள் சம்பாதிச்ச வச்ச பேரெல்லாம் நாசமா போச்சு. எல்லாவனும் நான் தான் செஞ்சேன்ங்கிற கண்ணோட்டதுலேயே பார்க்கிறான். அவமானமா இருக்குது. இன்னும் என்னென்னலாம் பார்க்கனுமோ?” கவலையுடன் அவர் செல்ல, அவளுக்கு அவள் கவலை, யார் சென்று மளிகை வாங்கி வருவதென்று!!!

சுசித்ரா அர்ஜுனிடம் சென்று மளிகை வாங்கி வர சொல்ல நினைத்தவள், உடனே அந்த எண்ணத்தை விட்டுவிட்டாள். சாதாரன நாட்களில் கூட அர்ஜுன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்ததில்லை. மலையனாதனோ, தர்மனோ சென்று தான் வாங்கி வருவர். நேற்றிலிருந்து அர்ஜுன் இருக்கும் மனநிலைக்கு, சாப்பிட கூட இறங்கி வராதவன், சென்று மளிகை வாங்கி வருவதென்பது நடக்காத காரியம்!!

பத்மஜாவோ உச்சகட்ட மன அழுத்ததிலிருந்தார்! கடை பிரச்சனை ஒருபுறம் இருக்க, மறுபக்கம் யக்ஞாவுக்கு கொரோனா என்று கேள்விப்பட்டதிலிருந்து பயம் அவரை தொற்றிக் கொண்டது!! யக்ஞாவுக்கு ஏதேனும் ஆகி, திருமணம் நின்று விடுமோ என்ற பயம்! செய்திகளில், ஊடகங்களில், அக்கம்பக்கத்தில், தன் உறவினர்களுக்கு, அலுவலக நண்பர்களுக்கு என எங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலம், தனக்கும் கொரொனோ வந்து விடுமோ என்ற பேரச்சம்! 

முந்தின தினம் வரை அலுவலகத்துக்கு சென்று வந்துக் கொண்டிருந்தவர், அதுவும் ஃபீல்டு ட்ரிப் என்று பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்தவர், தனக்கும் கொரொனோ வந்து விடும் பயத்தில் இருந்தார். இத்தனைக்கும் நடுவே, தர்மனிடம் தன் கோபத்தை காட்ட மறக்கவில்லை!! அவன் விழாவிற்கு வராமல் சுசித்ராவுடன் வெளியே சென்றதை, குறிப்பாக தன்னிடம் அனுமதி வாங்காமல் முடிவு செய்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை!

இப்படியான ஒரு மந்த நிலைமையே அந்த வீட்டில் நிலவ, தங்கை திருமணம் முடிந்த கையோடு அங்கு வந்து நின்றான் மித்ரன்! பத்மஜாவை ஓரளவுக்கு தேற்றிவிட்டு, சுசித்ராவிடம் பேசி வீட்டுக்கு தேவையான மளிகை வாங்கி கொடுத்துவிட்டு, அர்ஜுனின் அறை கதவை தட்டினான்.

“அர்ஜுன் கதவை திற டா”

அர்ஜுனிடமிருந்து பதிலில்லை!

“டேய் நாயே! கதவை திற டா. என்ன டா பண்ற?”

“போடா இங்கிருந்து முதல”

“நீ முதல கதவை திற. நான் பேசணும்”

“எனக்கு பேச பிடிக்கலை. தயவுசெஞ்சு இங்கிருந்து போறியா?”

“டேய் பன்னி பயலே, இப்போ நீ கதவை திறக்கலை, கதவை உடைக்க வேண்டி இருக்கும்”

படாரென்று கதவு திறக்க, அர்ஜுன் மித்ரனை ஆத்திரத்தில் உறுத்து விழித்தான்

“ஹலோ! என்ன லுக்கு? இந்த லுக்கெல்லாம் நான் விடனும் பார்த்துக்கோ! இப்போ என்ன பிரச்சனை உனக்கு? கடை பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லடா. அந்த ஏரியாவுல என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட பாஸ்கர் பத்தி சொல்லியிருக்கேன். யார் செஞ்சதுன்னு விசாரிக்கிறதா சொல்லியிருக்கான். அப்புறம் காம்ப்ளக்ஸ் எதிர்த்தாப்ல இருக்கிற ஒரு ஆட்டோமொபைல் கடையில உள்ள சி.சி.டி.வி ஃபூட்டேஜ் கேட்டிருக்கேன். அவங்க ஓனர் வந்ததும் எடுத்து தரதா சொல்லியிருக்காங்க. அதுல ஏதாவது கிளு கிடைக்கும். எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் விடு, அப்பா எவ்ளோ பெரிய பொசிஷன்ல இருந்தவரு, அவரை தாண்டி எதுவும் நடந்துடுமா? அந்த பாஸ்கர் சிக்கிடான்ல. அவன் ஊர்ல இல்லன்னு சொல்லி ஏதோ கேம் ப்ளே பண்றான். போலீஸ் அவனை ரெண்டு தட்டு தட்டினா, உண்மை தானா வெளிய வரும்”

“இப்போ நான் இதெல்லாம் உன் கிட்ட கேட்டேனா? நேத்துதான் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சிருக்குது. இங்க வந்து நிக்குறான், கேனையாட்டம்”

“அந்த ஆணியெல்லாம் நாங்க புடிங்கிறோம். நீ முதல ஏன் இப்படி தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருக்க? கடை பிரச்சனை மட்டுமில்லனு எனக்கு தெரியும். சிஸ்டர் எப்படி இருக்காங்க?”

“ம்ம்ச்ச்!”

“ரொம்ப சலிச்சிக்காத. அதான் உள்ளுக்குள்ள இருக்கிறது உன் மூஞ்சில அப்பட்டமா தெரியுதே?! அப்புறமும் எதுக்கு இந்த முக்காடு? வாய் விட்டு சொன்னா என்ன குறைஞ்சா போய்டுவ?”

“இப்போ தான் அண்ணி கிட்ட பேசிட்டு வரேன். அவங்க சிஸ்டரோட அப்பா கிட்ட பேசியிருக்காங்க. சிஸ்டர் நல்லா தான் இருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. தனிமைப்படுத்தி இருக்கிறதால இப்போதைக்கு பேச முடியாதாம். ஆக்சிஜன் லெவல் குறைஞ்சா தான் பிரச்சனை. சிஸ்டருக்கு அப்படி எதுவும் இல்லை. சும்மா மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்காத” மித்ரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தான் செய்த தப்பை துளி கூட சொல்லிக் காட்டாமல், தனக்கு தோள் கொடுக்கும் தன் மித்ரனை நினைத்து அர்ஜுனின் முகம் சொல்லொண்ணா வேதனையை பிரதிபலித்தது.

“டேய்! போடா பிளீஸ்! எனக்கு ரொம்ப கில்டியா இருக்குது. போய் உன் வீட்டு வேலையை பாருடா”

“என்னடா கில்ட்டி அது இதுன்னு அசிங்கமா பேசிட்டு இருக்க? பல்லை தட்டி கையில கொடுத்துடுவேன் பார்த்துக்கோ. பேசாம நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளு. நீ கிளம்பி சேலத்துக்கு போ. சிஸ்டரை பார்த்து பேச முடியாட்டி கூட நேர்ல விசாரிச்ச மாதிரி இருக்கும். கொஞ்சம் உனக்கு ஆறுதலா இருக்கும். அப்புறம் லாக்டவுன் போட்டுட்டா ஒன்னும் செய்ய முடியாது”

அர்ஜுன் யோசிக்க ஆரம்பித்தான்!

——————————————————————————————————————————————–

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்? அதெல்லாம் அட்வான்ஸ் திரும்ப தர முடியாது. இன்னும் கொஞ்ச நாள்ல கடையை நல்லபடியா திறந்திடலாம்”

“இல்லைங்க! இது சாதாரண விஷயம் இல்லை. தெய்வ குத்தம். கடை திறந்தாலும் அது நிலைக்காது. நீங்க அட்வான்ஸ் திருப்பி தரலேனா உங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுக்க வேண்டி வரும். சமாதானமா பேசி தீர்த்துக்கலாம் மேடம்”

“அட்வான்ஸ் திருப்பி தர முடியாது. என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ?”

உள்ளிருந்து பணத்தை எடுத்து வந்த தர்மன் அதை அவரிடம் கொடுத்துவிட்டு, “உங்க பணம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க. நீங்க கிளம்பலாம்” 

“தர்மா! அது என் பணம்? என்ன செய்யனும்னு முடிவு எடுக்க வேண்டியது நான் தான். முதல வேணும்னு சொல்லுவாங்க, அப்புறம் வேண்டாம்னா விட்டுடனுமா? அப்படியெல்லாம் விட முடியாது. குடும்பத்து மேல அக்கறை இல்லாத உனக்கெல்லாம் எங்க இதை பத்தி கவலை இருக்க போகுது?!!”

“மம்மி! அவரு கிளம்பட்டும் மம்மி! நாம பேசிக்கலாம்”

“ஏன் இப்போ பேசினா என்ன துரையோட மரியாதை குறைஞ்சு போயிருமோ? மரியாதை எதிர்பார்கிறவன், அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும். யாரும் எக்கேடும் கெட்டு போனா எனக்கென்னனு கிளம்பினவன் தானே நீ? என்ன வெங்காயத்துக்கு நீயெல்லாம் மரியாதை எதிர்பார்க்கிற?”

காசை வாங்கிக்கொண்ட அந்த டீக்கடைகாரர் ‘என்ன ஜென்மமோ இது?’ என்பது போல் தலையிலடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்

“சொல்லு டா, யாரு பணத்தை யாரு தூக்கி கொடுக்கிறது? கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி, இந்த காம்ப்ளக்சை வாங்கி போட்டது சும்மா நக்கிட்டு போறதுக்கா? அப்படியெல்லாம் சும்மா விட முடியாது. இப்பவே போய் அவன் கிட்ட அட்வான்சை திரும்ப வாங்கிட்டு வா. மத்த யார் அட்வான்ஸையும் திருப்பி தர முடியாது. கடையை ஆரம்பிச்சு தான் ஆகணும். இல்லேனா நான் சும்மா விட மாட்டேன்”

தொண்டை கிழிய உச்சஸ்தாயில் கத்தியபடி, ருத்ரகாளியாய் நின்றவர், கத்திய கத்தலில் தொடர்ந்து இருமவே ஆரம்பித்து விட்டார்!!

பொறுமையாக கண்களை மூடி திறந்தான் தர்மன், “ஏன் மம்மி? அந்த எம்.எல்.ஏ யாரு நமக்கு? அவரு விசேஷத்துக்கு போகலைன்னு, நான் உங்க புள்ளையே இல்லைங்கிற மாதிரி பேசிறீங்களே? அப்படி நான் என்ன தப்பு பண்ணினேன் மம்மி?”

“என்னடா கேள்வியெல்லாம் பலமா இருக்குது? ஓ! இப்போ புரிஞ்சிடுச்சு எனக்கு. இதெல்லாம் நீயா பேசல, யாரு சொல்லி இது மாதிரி நீ பேசுறன்னு எனக்கு தெரியும். உன் பொண்டாட்டி உனக்கு பூசை போட்டாளா?”

Advertisement