Advertisement

ஏப்ரல் 15

முகத்தில் சலன ரேகைகள் அப்பியிருக்க, காரை செலுத்திக் கொண்டிருந்தான் தர்மன்! பின் இருக்கையில், கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மீதிருந்து கண்களை அகற்றாது சுசித்ரா!

இவர்கள் வெளியே கிளம்பும் செய்தி கேட்டபின் பத்மஜாவின் எதிர்வினை எப்படி இருக்குமென்பதை நினைத்து அச்சம் கொண்டவன், அதை அவரிடம் சொல்லாமல் இழுத்தடித்தான். காலையில் கிளம்பியபின் அவரின் முன்னால் நின்று செய்தியை சொல்ல, விழாவுக்கு செல்ல கால தாமதமானதால் அவனுக்கு பதிலே சொல்லாமல் கோபமாக அங்கிருந்து வெளியேறினார். 

மனதில் அவர் கோப முகமே வந்து போக, இறுக்கத்தை தளர்த்த, சுசித்ராவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, அவன் ஏற்பாடு செய்த பயணத்தின் நொடிகளை அனுபவிக்க முடியாமல் திணறினான்!

தர்மன் பெங்களூரில் பணியில் இருக்கும் போதும் வார நாட்களில் வேலையின் பின் ஓடுபவன், வார இறுதியில் தருமபுரி ஓடி வந்துவிடுவான்! வராவிட்டால் அவன் தாய்க்கு உற்ற பிள்ளையும் கிடையாது! குடும்பத்தின் மீது பொறுப்பும் கிடையாது என்பதே பத்மஜாவின் கூற்று! மலயநாதன், பத்மஜாவை போல் அவனை திட்டி தீர்க்க மாட்டார் தான், ஆனால் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ வழி வகுக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு தோன்றாது! 

திருமணம் ஆன புதிதில் தர்மனையும், சுசித்ராவையும் ஊட்டிக்கு ஹனிமூன் அனுப்பி வைத்தனர். அதுவும் பயணத்தின் போது அவர்கள் ஏற்பாடு செய்த கார் டிரைவரின் கண்காணிப்பின் கீழும், ஊட்டியில் அரசு சுற்றுலா விடுதியில் மலயனாதனுக்கு தெரிந்த மேனேஜரின் கண்காணிப்பின் கீழும்!!! தங்கள் அறையை மட்டுமே அவர்கள் எட்டி பார்க்கவில்லை என்பதே தர்மனின் புலம்பலாக இருக்கும்!!!

தர்மனின் இந்த புலம்பல்கள் அவன் இயலாமையின் ஒரு வடிகாலாகும்! திருமணமான புதிதில் தன் தாய் தந்தை பற்றி சுசித்ராவிடம் எதுவும் கூறினானில்லை. ஆனால் சுசித்ரா அங்குள்ள நிலவரங்களை சீக்கிரத்தில் புரிந்துக் கொண்டாள். 

தர்மனுக்கும், சுசித்ராவுக்கும் நல்லதொரு புரிதல் வந்தபின்பே அவன் தன் தாய் தந்தையை பற்றி அவளிடம் புலம்ப ஆரம்பித்தான். அது போன்ற வேளைகளில் ஒவ்வொரு முறையும் அவன் பெரும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளானான். “நானே எங்க அம்மாவை பத்தி இப்படியெல்லாம் சொல்றேன்னு நீ அவங்களை எதுவும் தப்பா எடுத்துக்காத சுச்! ஒரு நாள் கூட அவங்களை கேவலமா பார்த்துடாத. என்னால அதை தாங்கிக்க முடியாது. அவங்க என்ன தான் பண்ணினாலும், முடிவுல அவங்க என் அம்மா! அதை மாத்த முடியாது”

சுசித்ராவுக்கு தர்மனின் ஆதங்கம், பரிதவிப்பு, குற்றவுணர்ச்சி அனைத்து புரிந்தது, அவன் விளக்கி சொல்லாமலே! அவன் உணர்ச்சிகளின் அகராதி அவள்! 

பேருக்கு ஏற்றார் போல், தர்மத்தை மட்டுமே தர்மன் கடைபிடிக்க,  ஆனால் அதற்கு அவன் அனுபவித்த துன்பங்கள் கோடி! ஆனால் அவனுக்கு வரமாய் அமைத்தது அவன் இல்வாழ்க்கை தான்!! பத்மஜாவின் குணத்தினால் அவன் விழும்போதெல்லாம் தாங்கும் அவள், தன் பக்கமிருந்து அவனுக்கு எந்தவொரு மனக்கவலையையும் துளி கூட விழுந்து விடாமல் பார்த்து கொள்வாள். அவன் குற்றவுணர்ச்சியில் திளைக்கக் கூடாது என்பதற்காகவே பத்மஜாவை எதிர்த்தோ, பார்க்கும் பார்வையில் கூட மரியாதை குறைவை காட்டி விட கூடாதென்பதில் கவனமாய் இருப்பாள்.

கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் காரணத்தால் பெங்களூர் வீட்டை எட்டி கூட பார்க்காமல் இருக்கும் அவனுக்கு வேலையிலும், வீட்டிலும் இருக்கும் சுமையை குறைக்கும் முயற்சி மட்டுமே சுசித்ராவின் ஆகப்பெரிய வேலை! அவள் நினைவெல்லாம் அதை சுற்றி மட்டுமே இருக்கும். தனக்கென்ன பெரிதாய் ஆசைகளை வளர்த்து பழக்கமில்லாத அவளுக்கு இந்த பயணம் பற்றிய பேச்செடுத்தது தவறென்று தோணியது!   

தர்மனின் அலைபேசி ஒலித்தது! அழைத்தது அர்ஜுன்!! இந்த நேரத்தில் அர்ஜுனின் அழைப்பு அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது! எம்.எல்.ஏ வீட்டில் இருப்பவன் தனக்கு அழைக்கும் காரணமென்ன? குழப்பத்துடன் அழைப்பை ஏற்க, மறுபக்கம் அர்ஜுன் சொன்ன செய்தியை கேட்டு சட்டென்று காரை வளைத்து கடைக்கு திருப்பினான்!!!!

——————————————————————————————————————————————–   

“அர்ஜுன்! எப்படிபா இப்படி நடந்துச்சு?”

“அதான் எனக்கும் தெரியலை பா. இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்குது. அக்கம் பக்கம் எதுவுமே சத்தம் கேட்கலையா?”

“இதுல ஏதோ சதி இருக்குது. கண்டிப்பா கவர்ன்மன்ட் ஆபிசர்ஸ் உதவி இல்லாம இதை பண்ணியிருக்க முடியாது. கண்டிப்பா அந்த கறிக்கடைகாரன் பாஸ்கர் தான் பண்ணியிருக்கான்”

“நீ போய் எம்.எல்.ஏ கிட்ட இதை பத்தி சொல்லு கண்ணு. அவரையும் கூட்டிட்டு கடைக்கு போவோம். போலீஸ் கம்ப்ளெயின்ட் ஆயிடுச்சுனா பிரச்சனை ஆயிடும். அப்புறம் காலத்துக்கும் இங்க யாரும் கடை நடத்தவே முடியாது. அம்மா தாயே! எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு, நல்லபடியா கடை வாடகைக்கு போய்டுச்சுன்னு நினைச்சேனே?! இப்படி ஆயிடுச்சே கண்ணு!”

அர்ஜுன் சென்று எம்.எல்.ஏவிடம் விஷயத்தை கூற,

“அப்படியா? ச்சே! இதுக்கு தான் நம்ம பையனை விட்டு அவனை வேவு பார்க்கச் சொன்னேன். அவன் எதுவும் பண்ண மாட்டேன்னு நினைச்சேனே? சரி, நீ ஒன்னு பண்ணு. நீ போய் என்ன எதுனு பாரு, நான் நாளைக்கு வந்து இதை பத்தி பேசிக்கிறேன்”

“அய்யோ அண்ணன்! அங்க பெரிய பிரச்சனை ஆயிடுச்சு போல. அந்த ஏரியாக்காரங்க எல்லாரும் ரவுண்ட் அப் பண்ணிடாங்களாம். அந்த ஏரியாவே எல்லாம் ரவுடி பசங்க தான். நீங்க அங்க வந்தா கொஞ்சம் சமாளிக்கலாம்”

“என்ன பேசுற அர்ஜுன் நீ? இங்க ஃபங்ஷன் நடந்துட்டு இருக்குது. அப்படியே விட்டுட்டு அங்க எப்படி வர முடியும். நீயே ஏதாவது சமாளி அர்ஜுன்” சொல்லிவிட்டு அவர் செல்ல, எம்.எல்.ஏவின் மூத்த மகன் வெற்றி சிரிப்புடன் இதை பார்த்தபடி நின்றான். அவன் எதிர்பார்த்தது இதை தானே?! இது இப்படி தான் நடக்கும் என்று தெரிந்தும் மறைத்தது அவன் தானே?! 

எம்.எல்.ஏ கண்டிப்பாக தன்னுடன் வருவார் என்ற நம்பிக்கை வைத்திருந்த அர்ஜுனுக்கு இது பெரிய அதிர்ச்சி தான்! குழப்பமான மனநிலையில் என்ன முடிவெடுப்பதென்றே தெரியாமல் கலங்கி நிற்க, தன் தமையனை அழைத்தான்! அடுத்த பத்தாவது நிமிடம் அங்கு வந்து நின்றான் தர்மன்!

கலங்கி நிற்கும் தன் தம்பிக்கும், அழுதுக் கொண்டிருக்கும் தன் தாய்க்கும் நம்பிக்கை கொடுத்து, கடை வளாகத்திற்கு வந்து சேர்ந்தனர். 

கடை வளாகத்திற்கு முன்பிருந்த பெரிய மரத்தின் பல கிளைகள் உடைக்கப்பட்டு, மரத்தினடியிலிருந்த கோயிலும் சிதைக்கபட்டிருந்தது! 

அந்த கடைக்கே ஒரு அடையாளமாய் இருந்தது அந்த மரம் தான்! பல கிளைகளை கொண்ட பழங்கால மரம். அதன் கிளைகளை கடை வளாகத்தின் மேல் மாடி வரைக்கும் பரப்பியிருந்தது. அதை அகற்ற இதற்கு முன்னால் இருந்த உரிமையாளர் பெரும்பாடு பட்டும் அவரால் அது முடியவில்லை, அதற்கு காரணம் அந்த மரத்தடியிலிருந்த குலதெய்வ கோயிலே ஆகும்!! இப்பொழுது அந்த மரம் சிதைக்கபட்டிருந்தது!!!!

ஒரு பெரிய கூட்டமே அங்கு கூடியிருந்தது! இவர்கள் வரவை பார்த்ததும் அடுத்த நிமிடம் அந்த கூட்டம் இவர்களை சூழ்ந்துக் கொண்டது. இவர்களை பேச விடாமல் ஒவ்வொருவரும் ஒரு கேள்வி கேட்க, சிலர் கம்பு கட்டைகளை எடுத்து வர, பத்மஜா நடுங்கி விட்டார். 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தர்மன் தாயையும், சுசித்ராவையும், குழந்தைகளையும் காரினுள் உட்கார வைத்துவிட்டு, அங்கிருந்தவர்களை சமாதான படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

“என்னப்பா? பணக்காரங்கனா என்ன வேணுமானாலும் பண்ணலாம். நாங்க பார்த்துட்டு சும்மா இருப்போனு நினைச்சியா?” அந்த ஏரியா பெரியவர் போலிருந்த ஒருவர் முன்னால் வந்து பேச, அர்ஜுன் எகிறினான்.

“ஹலோ! என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க? கொஞ்சம் பார்த்து பேசுங்க!”

“லேய்! இப்படி ஒரு கேடு கெட்ட காரியத்தை பண்ணின உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்குது” கையில் உருட்டுக்கட்டையுடன் நின்ற ஒரு இளவட்டம் துள்ளி குதிக்க, தர்மன் அர்ஜுன் கையை பற்றினான், “அர்ஜுன்! ப்ளீஸ், இது கோபப்பட வேண்டிய நேரம் கிடையாது. சமாதனாமா பேசனா மட்டும் தான் இதுலேர்ந்து தப்பிக்க முடியும். தயவுசெஞ்சு நீ கொஞ்சம் அமைதியா இரு, அப்படி உன்னால இருக்க முடியாதுனா நீயும் மம்மி கூட கார்ல ஏறி உட்கார்ந்திரு. அப்பா! நீங்களும் எதுவும் பேசாதீங்க”

அதன்பின் அர்ஜுன் சற்று அமைதியானான். தர்மன் அந்த தலைவரிடம் அமைதியாய் பேசினான்.

“ஐயா! இதை நாங்க பண்ணலை. இதுக்கும் எங்களுக்கும் எந்த சமந்தமும் கிடையாது”

“அதெப்படி தம்பி அப்படி சொல்றீங்க? இது உங்க இடம் தானே? அந்த மரம் உங்க இடத்துக்குள்ள தானே வருது? உங்க காம்பளக்சை மறைச்சிக்கிட்டு வளர்ந்திருக்குது. அதோட கிளை மேல உங்க பில்டிங் வரைக்கும் வந்திச்சு. இதுக்கு முந்தி இருந்த ஓனர் கூட மரம் ரொம்ப இடைஞ்சலா இருந்ததா புகார் கொடுத்துட்டே இருந்தார். உங்களுக்கும் அதே பிரச்சனை தானே? அதான் ராவோட ராவா அதை வெட்டி போட்டுட்டீங்க. சும்மா இல்லை தம்பி, இங்க சுத்தி முத்தி இருக்கிற முப்பது நாப்பது குடுமபத்துக்கு மேல அங்கிருந்த தெய்வம் தான் குலதெய்வம். ஏன் என்னோட குல தெய்வமும் அது தான். அதை சாய்ச்சுபுட்டீங்களே? இது எவ்ளோ பெரிய தெய்வ குத்தம் தெரியுமா? இது உங்க குடும்பத்தை சும்மா விடாது”

Advertisement