Advertisement

வெளியே வந்து புல்லட்டில் சாவியை நுழைக்க போனவன் நினைவில், கண்களில் நாணமும், எதிர்பார்ப்பும் போட்டி போட அவள் நின்றதும், ‘உங்க கூட பைக் ரைட் நான் ரொம்பவே மிஸ் பண்றேன்’ என்றதும் அவன் நினைவுக்கு வர, ஒரு வித ஆற்றாமை அவனை அண்டியது. ஏனோ அந்த புல்லட்டை இயக்க அன்று அவன் மனம் வரவில்லை,

மறுபடியும் வீட்டினுள் சென்றான். 

“அப்பா! நான் உங்க பைக் எடுத்துக்குறேன்”

“ஏன்பா? உன் பைக் என்னாச்சு?”

அர்ஜுன் திரும்பி அவரை ஒரு பார்வை பார்க்க, அதே சமயம் தர்மனும் மலயனாதனை அமைதியாய் இருக்குமாறு சைகை செய்ய, சண்டையை தவிர்க்கும் பொருட்டு அவர்,

“சரிப்பா! எடுத்துட்டு போ” என்று முடித்துக் கொண்டார்.

அவன் வெளியே வரவும் எதிரிலிருந்த மாமரம் கண்ணில் பட்டது! அங்கே அவள் நின்றதும், கண்கள் மலர அவள் பேசியதும் அவன் மனக்கண்ணில் படமாய் விரிந்தது! ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் அவன் மனதுக்குள் அந்தகாரம் சூழ்ந்துக் கொண்டேயிருந்தது!!    

நாளைய விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து தன் கவனத்தை திசை திருப்ப முயன்றவனுக்கு தோல்வியே கிட்டியது!

வாங்கிய பொருட்களை எம்.எல்.ஏ வீட்டில் சென்று கொடுத்து விட்டு, அங்கேயே அமர்ந்திருந்தான்

“பேப்பர் பிளேட், பேப்பர் கப், ஸ்வீட் பாக்ஸ் எல்லாம் ஒகே, கூல்ட்ரிங்க்ஸ் வாங்க சொன்னேனே? அது எங்க அர்ஜுன்?”

எம்.எல்.ஏ மனைவி கேட்க, அர்ஜுனிடம் பதிலில்லை. அவன் கவனம் இங்கிருந்தால் தானே?! தன் விரல்களில் யக்ஞா அணிந்த மோதிரத்தை இப்படியும், அப்படியுமாய் திருப்பியபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான் அர்ஜுன்!

“அர்ஜுன்! அர்ஜுன்!”

“ஆங்….என்ன அண்ணி கேட்டீங்க?”

“சரியா போச்சு போ. உன் கவனம் எங்க இருக்குது? மறுபடியும் வீட்ல ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை”

“அப்போ என்ன, அந்த பொண்ணு ஏதாவது டார்ச்சர் பண்ணுதா? இங்க வராத, அங்க போகாத, எம்.எல்.ஏ வீட்டுக்கு போகாத இப்படி ஏதாவது சொல்லியிருக்குமே? இந்த பொண்ணுங்க எப்பவுமே இப்படி தான் அர்ஜுன். கல்யாணம் ஆனதும் பாரு, உன்னை எப்படியாவது இங்க விடாம அவ கூடவே இருத்தி வைக்கணும்னு தான் ட்ரை பண்ணுவா”

“அண்ணி……” அவனையறியாமேலே குரலை உயர்த்தி பேசியிருந்தான்!! இதற்கு முன்பே ஒன்றிரண்டு முறை யக்ஞா பற்றி அவர் தவறாக பேசியதுண்டு, அப்பொழுதெல்லாம் எதிர்பேதும் சொல்லாமல் அமைதியாய் கடந்து விடுபவனால், இன்று அப்படி கடந்து போக முடியவில்லை.

முதல் முறை அவளை பார்த்த போது அவன் அரசியல் ஆர்வம் பற்றி கூறியதும், அதற்கு அவள் ஆதரவு தெரிவித்தும், அவள் குடும்பத்தை அதற்கு சம்மதிக்க வைத்ததும் நினைவுக்கு வந்தது. இதுவரை அவளுடன் பேசிய நாட்களில் ஒரு நாள் கூட அர்ஜுன் எங்கே போகிறான், வருகிறான், ஏன் போகிறான் என்று அவள் கேட்டதில்லை, அன்று வத்தல்மலை சென்ற தினத்தன்று கூட, எங்கே சென்றாலும் யாருக்காவது தெரியப்படுத்திவிட்டு செல்லுமாறு தான் சொல்லி ஆதங்கப்பட்டாளே தவிர, அவன் சென்றதற்கு அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி பட்டவளின் மீது எம்.எல்.ஏ மனைவி கூறிய குற்றத்தை அவன் மனம் துளியும் ஏற்கவில்லை.

“அண்ணி…..ப்ளீஸ், இனிமே அவங்களை பத்தி எதுவும் பேச வேண்டாம். அவங்க எனக்கு வைஃப்பா வர போறவங்க” அவன் குரலின் பேதத்தையும், அவன் யக்ஞாவுக்கு கொடுத்த மரியாதையும் குறித்துக் கொண்ட அவர் உள்ளம் உள்ளுக்குள் கொதித்தது

‘எங்க வீட்டு வேலைக்காரன் நீ? என்னை எதிர்த்து குரலை உசத்தி பேசுறியா? இருக்குது உனக்கு’ அவர் மனம் குரூரமாய் சிந்திக்க, வெளியே வேஷம் கட்டி பேசினார், “பாருடா! அவன் பொண்டாட்டி பத்தி பேசுனதும் என் புள்ளைக்கு வர கோபத்தை. இனிமே உங்க வைஃப்க்கு நாங்க மரியாதை கொடுத்து பேசுறோம் சரிங்களா?”

“அய்யயோ அண்ணி! உங்க பொண்ணு மாதிரி தான், வா போனு சொல்லுங்க. ஆக்சுவலா யக்ஞா எனக்கு ரொம்ப சாப்போர்ட் தான். அதான் அப்படி சொன்னேன். சாரி அண்ணி! தப்பா எடுத்துக்காதீங்க”

“இப்போ தான் உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அர்ஜுன். எங்கே உனக்கு பிடிக்காம இந்த கல்யாணம் நடக்குதோனு ரொம்ப கவலைப்பட்டேன்”

“சாரி அண்ணி!”

“அதெல்லாம் உன் சாரியை ஏத்துக்க முடியாது. அதுக்கு தண்டனையா இன்னைக்கு மதியம் நீ என் கையால தான் சாப்பிட போற”

“அய்யோ அதுக்குனு இவ்ளோ பெரிய தண்டனையா?”

“படவா!” அவர் அவனை முதுகில் தட்ட, மெல்ல சிரிப்பை உதிர்த்தபடி எழுந்து எம்.எல்.ஏவை பார்க்கச் சென்றான்.

எம்.எல்.ஏ அர்ஜுனிடம் கட்சி சமந்தமாக பேசிக் கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் அவனை தருமபுரி மாவாட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக நியமிப்பதாக சொல்லியிருந்ததை ஒட்டி, அவனிடம் சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அர்ஜுனின் அலைபேசிக்கு யக்ஞாவிடமிருந்து அழைப்பு வந்தது.

வேக வேகமாக அலைபேசியை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தவான் அங்கு அமர்ந்து தன்னிடம் பேசிக்கொண்டிருந்த எம்.எல்.ஏவை முற்றிலும் மறந்தே போனான். தன்னிடம் அனுமதி கூட பெறாமல் ஓடும் அவனை வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

அர்ஜுன் அலைபேசி திரையை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனசாட்சி அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தது

‘அர்ஜுனா! பேசாம போனை எடுத்து பேசி சாரி கேட்டு சரண்டர் ஆகிடு’

‘என்னது? அர்ஜுன் சாரி கேட்கிறதா? அதெல்லாம் முடியாது’

‘டேய்! தப்பு உன் மேல தான். அந்த பொண்ணு தான் விட்டுக்கொடுத்து போயிருக்குது. நீ பேசுனது ரொம்ப ரொம்ப தப்பு. வறட்டு கவுரவம் பார்க்காம சாரி கேளு’

‘நான் பேசுறேன். ஆனால் சாரியெல்லாம் கேட்க மாட்டேன். அவ ஏதாவது மறுபடியும் இதை குத்தி காமிக்கிற மாதிரி பேசினா, அப்புறம் அவ்ளோ தான்….’

‘என்ன? கோபப்பட்டு கல்யாணத்தை நிறுத்திடுவ அதானே?! இன்னொரு முறை நீ அபப்டி பண்ணின, போடா போனு போயிட்டே இருப்பா, அப்புறம் ஃபீல் பண்ணி ஒன்னும் பிரயோஜனம் இல்லை பார்த்துக்கோ’

‘சரி சரி நான் இனிமே கோபப்பட மாட்டேன். ஆனால் சாரியும் கேட்க மாட்டேன்’

மனசாட்சியுடன் உரையாடி முடித்து விட்டு அவன் அலைபேசியை எடுக்கவும் அது அணையவும் சரியாக இருந்தது! அவன் முகம் வெளுத்துவிட்டது! தவறு செய்து விட்டோமா, அவள் கோபம் அதிகரித்திருக்குமோ? திரும்ப கூப்பிட்டு விடலாம் என்றெண்ணிய பொழுது மீண்டும் அவன் அலைபேசி ஒலித்தது. முதல் ரிங்கிலேயே எடுத்து விட்டான்.

மொத்த ஏக்கத்தையும் குரலில் மறைத்து, சாதாரணமாக பேசும் முயற்சியில் அவன்!

“ஹலோ! சொல்லு! நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதான் போன் எடுக்கலை. சொல்லு என்ன விஷயம்?”

“——–“

‘அர்ஜுன்! கொஞ்சம் பார்த்து பேசு டா’ அவன் மனசாட்சி கெஞ்சியது!

“ஏய்! இம்சை! என்னனு சொல்லு? எனக்கு வேலை இருக்குது”

“சித்…..சித்தப்பா……நீங்க தான் எங்க சித்திக்கு வர போற சித்தப்பாவா?”

“ம்ம்…யாருங்க மேடம் நீங்க?”

“நான் கீர்த்தினி. இது கூட உங்களுக்கு தெரியாதா?”

“அய்யயோ எனக்கு தெரியாதே. இனிமே தெரிஞ்சிக்குறேன். சரிங்களா? என் பேரு என்னனு தெரியுமா?”

“தெரியுமே, அர்ஜுன்”

“வெரி குட். சரி உங்க சித்தி எங்க? போன் யாரு பண்ணினது?”

“அது நான் தான் உங்க கூட பேசணும்னு பண்ணினேன். சித்தி இங்க…..ஆங்….என்ன சித்தி…..இல்லைன்னு சொல்லனுமா…..சித்தப்பா, சித்தி இங்க இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க”

“ஓ அப்படியா, சரி உங்க சித்திக்கு என் கிட்ட எப்ப பேசணும்னு தோணுதோ அப்போ பேசச் சொல்லு. நான் வச்சிடவா? பை செல்லம்”

“பை சித்தப்பா! சித்தி உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ பேச சொன்னாங்க சித்தப்பா” அந்த சுட்டியின் குரல் தேய்ந்து ஒலித்தது! முன்னை விட முற்றிலும் சோர்ந்தது அவன் மனது!! இருந்தாலும் அவள் கண்டிப்பாக மறுபடியும் அழைப்பாள் அப்பொழுது பார்த்து கொள்ளலாம் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவன் வேலையே பார்க்க சென்ற அவனுக்கு தெரியவில்லை அடுத்து அவள் அழைக்க போவேதேயில்லை என்பதும், அவளுடன் பேசம் வாய்ப்பு கிடைக்க அவன் தவமிருக்க போவதும், அவளுடன் பேச இவன் உயிரின் ஒவ்வொரு அணுவும் துடிக்க போகிறதென்பதும்!!!!!!  

   

 

Advertisement