Advertisement

ஏப்ரல் 14 

முகமெங்கும் சிரிப்பு பொங்க பத்மஜா, அந்த ஐம்பதாயிரத்தை கையில் பெற்றுக்கொண்டார்.

“ரொம்ப சந்தோஷம்! அப்புறம் கடையை எப்போ திறக்க போறீங்க?”

“அடுத்த வாரத்துலேயே ஒரு நல்ல நாள் பார்த்து திறந்திடலாம்னு நினைக்கிறோம். கடை திறப்புக்கு மேடம் கண்டிப்பா வரணும்”

“பார்க்கலாம். நீங்க தேதி பார்த்துட்டு சொல்லுங்க. டைம் கிடைச்சா வரேன்”

“சரிங்க! அப்போ நாங்க வரோம்”

“வாங்க!”

அவர்கள் சென்றதும் கடைக்கு பெற்ற முன்பணத்தை தர்மனிடம் கொடுத்து, ”தர்மா! இதை எடுத்து பத்திரமா உள்ள வை”

“சரி மம்மி!”

“ஏன்பா அதை எண்ணிட்டு வை பா. எல்லாமே நூறு ரூபா நோட்டா இருக்குது. இந்த காலத்துல யாரையுமே நம்ப முடியாது. ஒரு நூறு ரூபாய் கொறைச்சு கொடுத்தா கூட அவனுக்கு லாபம் தானே?”

காம்ப்ளக்சில் இருந்த நான்கு கடைகளுமே வாடகைக்கு விடப்பட்டிருந்தன! ஹோமியோபதி கிளினிக் ஒரு கடையும், ஆட்டோமொபைல் கடை ஒன்றும், பழக்கடைக்கு மற்றொரு கடையும், கறிகடைக்காரனால் இழுத்தடித்த கடையை டீக்கடைக்கும் வாடகை விடப்பட, அதன் முன்பணத்தை தான் தற்போது பெற்றிருந்தனர்!

“என்னவோ தர்மா? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. எல்லா கடையும் வாடகைக்கு போயாச்சு. இனிமே எந்த கவலையும் இல்லை. மேல ஹாஸ்டல் கூட ஒருத்தர் கேட்டிருக்கார். அதுவும் சீக்கிரம் போய்டும். போகாட்டி கூட இந்த நாலு கடை வாடகை, டவர் வாடகையும் நமக்கு நல்ல லாபம் தான். எல்லாம் அந்த அம்மாவோட மகிமை. நாம எப்பவுமே பணத்துக்கு ஆசை பட்டதே கிடையாது. அதான் கடவுள் நமக்கு அள்ளி கொடுக்கிறான். என்ன சொல்ற?”

“ஹ்ம்ம்….ஆமா ஆமா மம்மி”

“என்னடா உன் மூஞ்சில சந்தோஷமே இல்லை”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மம்மி. எனக்கும் சந்தோஷம் தான்” அவன் எண்ணம் முழுவதும் நாளை அவனும், சுச்சியும் எம்.எல்.ஏ ஃபங்ஷன்க்கு வரவில்லை என்பதையும், வெளியே செல்ல போவதையும் எப்படி சொல்ல போகிறோம் என்பது தான்!

அர்ஜுன் கிளம்பி கீழே வந்தான். கடை விஷயங்கள் எதை பற்றியும் அவன் விசாரிப்பதில்லை! விசாரிக்கும் மனநிலையில் இல்லை!  

“டேய்! எங்க டா கிளம்பிட்டு இருக்க?”

“——“

“அர்ஜுன்! நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பதில் பேசாம போயிட்டே இருந்தா என்னடா அர்த்தம்?”

“நாளைக்கு ஃபங்ஷன்க்கு எல்லா ஏற்பாடும் பண்ணனும் மம்மி! அதுக்கு தான் போயிட்டு இருக்கேன். இந்த டீட்டயில்ஸ் போதுமா? இல்லை, எத்தனை மணிக்கு, எங்க எந்த இடத்துல இருப்பேன், அடுத்து எங்க போவேன் இது எல்லாமே ஒரு ஸ்கேடியூல் போட்டு சொல்லனுமா?”

“ஏன்டா எரிஞ்சு எரிஞ்சு விழுற? எங்க போறனு தானே கேட்டேன்?”

“இதுக்கு தான் கம்முனு போனேன். பேசுனாலும் தப்பு, பேசாட்டியும் தப்பு, ஏதாவது சொன்னா உடனே நீங்க கோபப்பட்டு வீட்டை விட்டு கிளம்பி போய்டுவீங்க. வீடா இது? இந்த மாதிரி தான் எல்லார் வீட்லையும் பசங்க வெளிய போகும் போது, எங்க போறனு கேட்டு கேட்டு டார்சர் பண்ணுறாங்களா? நல்லவேளை இந்த வீட்ல நான் பொம்பளை புள்ளையா பிறக்கலை! இல்லேனா அவ்ளோதான்!!”

“ஏன் கண்ணு இப்படியெல்லாம் பேசுற? கொரோனா ஜாஸ்த்தி ஆயிட்டே இருக்குதுன்னு சொல்றாங்க. டீ.வியில நியுஸ்ல என்னென்னவோ சொல்றாங்க. அடுத்த வாரத்துலேர்ந்து லாக்டவுன் போட போறாங்களாம். இந்த சமயம் நீ இப்படி சுத்தி கல்யாண நேரத்துல கொரோனா எதுவும் வந்துட போகுது கண்ணு”

“அதானே…….அதானே பார்த்தேன்……உங்களுக்கு உங்க வேலை நடக்கணும். எப்ப பாரு கல்யாணம் கல்யாணம் கல்யாணம், கொரோனா வந்து அதனால கல்யாணம் நின்னுட கூடாது. என்னை கிணத்துல தள்ளி விட அவ்ளோ அவசரம். உங்களுக்கு உங்க கடமை முடியனும். வேற எதை பத்தியும் கவலை இல்லை. முதல இந்த கல்யாணம் நடக்க போறதே கிடையாது. எல்லா ஏற்பாட்டையும் நிறுத்துங்க” அடித்தொண்டையலிருந்து கத்தியவன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

இன்றுடன் யக்ஞாவிடம் பேசி ஒரு வாரம் ஆயிற்று! யக்ஞாவும் இவனை அழைக்க முயற்சிக்கவில்லை! அதுவே அவனது இந்த கோபத்துக்கும், எரிச்சலுக்கும் முக்கிய காரணி! இருவருக்குமிடையே மௌனமெனும் கண்ணாடியை உடைக்கும் கல்லை யார் முதலில் எரிவதென்ற போட்டியில் இரு மனங்களும் சுக்கு நூறாய் உடைந்துக் கொண்டிருந்தது!

அவன் பிடிவாதத்தை தளர்த்த தயாராயில்லை, ஆனால் அவள் அழைத்து பேசாதது அவனை நிலைக்கொள்ளாமல் இயங்கச் செய்தது. இந்த ஒரு வாரத்தில் அவன் எல்லாரிடமும், எல்லா நேரத்திலும், எல்லா செயலிலும் கோபத்தை காட்டினான்! செய்யும் செயலில் கவனமில்லை! எதிலும் ஈடுபாடில்லை! பிடித்தவை எல்லாம் பிடிக்காதவையாயிற்று! மனதிற்குள் எந்நேரமும் ஒருவித அழுத்தம்!

இவ்வாறான வலிகளை அவன் பின்னொரு நாள்களிலும் அனுபவித்திருக்கிறான். ஆனால் இப்பொழுது யோசித்து பார்க்கும் போது அவையெல்லாம் சிறுபிள்ளைதனமாய் தோன்றுகிறது. இன்று இந்த நொடி அவன் அனுபவித்துக் கொண்டிருகிறானே அது தானே உண்மை? பழையது பொய்யன்ற உண்மையை அவனுக்கு பொட்டில் அடித்தாற் போல் உணர்த்த தான் இப்பொழுது நடக்கும் இந்த நிகழ்வுகளா?? அவன் மனம் பழைய நினைவுகளை வெளியே தள்ளி அதை அசைப்போட்டது.

அர்ஜுன் மூன்றாம் வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். சென்னையில் அதி உயர்மட்ட கல்லூரி அது. ஆண் பெண் இருவரும் எந்த பாகுபாடுமின்றி பழக இடமளிக்கும் தாராள மனப்பான்மை (??) கொண்ட கல்லூரி. நண்பர்கள், கல்லூரி பாடங்கள், கேலி, கிண்டல் எல்லாவற்றையும் தாண்டி அவன் உலகத்தை ஆக்கிரமித்திருந்தது ரேஷ்மா ரேஷ்மா ரேஷ்மா மட்டுமே!

முதல் வருடத்தில் அறிமுகமாகி, இரண்டாம் வருடத்தில் உற்ற நண்பர்களாகி, மூன்றாம் வருடத்தில் இணை பிரியா காதலர்களாய் மாறியிருந்தனர். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தன் பிள்ளைகளை கண் கொத்தி பாம்பாய் கவனித்து வந்த பத்மஜா கண்ணில் அர்ஜுனின் காதல் மட்டும் தப்பி விடுமா என்ன?

ரேஷ்மா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். முயன்று தங்கள் சக்தியை மீறி அந்த நல்ல்ல்லலல (??) கல்லூரியில் சேர்த்திருந்தனர். காதல் என்ற வார்த்தை பத்மஜாவை பொறுத்த வரை தீண்டதாகாத சொல். அதை அவர் வாயால் கூட சொல்ல மாட்டார். அவர் பிள்ளை அந்த டேஷை (காதலை) செய்தால் விட்டுவிடுவாரா என்ன? அதிலும் அந்த நடுத்தர குடும்பம் என்ற வார்த்தையும் அவரது எதிர்ப்புக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

அவர் சிந்தித்தார்! திட்டி சண்டை போட்டாலோ, அவன் விருப்பத்துக்கு மாறாய் செயல்பட்டாளோ அர்ஜுன் பல மடங்கு அதிகமாய் எதிர்க்கக் கூடும். எனவே இங்கே தன் பலத்தை காட்டாமல், தன் தந்திரத்தை காட்டினார் அவர்!

அவரின் தந்திரத்தால் மூன்றாம் வருட இறுதியில் இனிமேல் படிப்பை தொடர போவதில்லை என்று வந்து நின்றான் அர்ஜுன்!   

பழைய நினைவுகள் திட்டுதிட்டாய் மன செல்களை அரிக்க, நேற்றிரவு நடந்த சம்பவம் அவனை புரட்டி போட்டிருந்தது! இரவு யக்ஞாவின் தாய் பத்மஜாவை அழைத்திருந்தார்.

“கண்ணு! யக்ஞாவோட அம்மா தான் போன் பண்றாங்க. இரு ஸ்பீக்கர்ல போடுறேன்”

“மம்மி! அவங்க உங்களுக்கு தானே கூப்பிடாங்க. நீங்க பேசுங்க. ஸ்பீக்கர் வேண்டாம்”

“டேய்! உன் மாமியார் என்ன பேசுறாங்கனு தெரிஞ்சிகிறதுல என்ன இருக்குது? நீ கம்முனு இரு”

அலைபேசியை ஸ்பீக்கரில் போட அர்ஜுனின் மனம் படபடவென அடித்துக் கொண்டது! எதற்காக அழைத்திருப்பார்? திருமணத்தை நிறுத்தவா? 

வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பின் பேச்சு யக்ஞாவை பற்றி தொடர்ந்தது 

“கொஞ்சம் செல்லமா வளர்ந்த பொண்ணு, எல்லாம் அவங்க அப்பா தான் ஓவர் செல்லம். ஆனால் வேலை எல்லாம் ஓரளவு கத்து வச்சிருக்கா அண்ணி. ஏதாவது தப்பு செஞ்சா பொறுமையா சொன்னா கேட்டுப்பா”

“இதுல என்ன இருக்குது?! நானெல்லாம் கல்யாணம் ஆகி வந்த பின்னால தான் சமயல்கட்டுகுள்ளேயே போனேன். அதெல்லாம் புள்ளைங்க அந்தந்த வயசு வந்ததுட்டா தானா எல்லாம் கத்துப்பாங்க”

“ஆமாங்க அண்ணி! புள்ளைங்க வளருறதே நமக்கு தெரியாம போய்டும். நாம இன்னும் சின்ன புள்ளையாவே பார்த்துட்டு இருப்போம். ஆனா அவங்க திடீருன்னு பொறுப்பா மாறிடுவாங்க. எங்க யக்ஞா கூட நிச்சயம் ஆகுற கொஞ்ச நாள் முன்னாடி வரை, கல்யாணம் ஆனதும் எங்க வீட்டு சிம்பா, அதான் ஒரு நாய் பார்த்திருப்பீங்களே, அதை மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன்னு சொல்லிட்டே இருப்பா. நாங்க அதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சொன்னாலும் கேட்க மாட்டா. இப்ப பாருங்க நேத்து வந்து, நீங்களே சிம்பாவை நல்லபடியா பார்த்துக்கோங்கனு பொறுப்பா புரிஞ்சிகிட்டு சொல்றா. இப்பவே அந்த பொறுப்பு வந்திடுச்சு பாருங்க”

“சும்மா தோன தோனனு பேசிட்டு, என் கூட மல்லுக்கு நிக்குற புள்ளை இப்போ எது சொன்னாலும் அமைதியா சரின்னு கேட்டுட்டு போயிடுறா. அதுமட்டுமில்ல, முன்ன எல்லாம் நான் கோயிலுக்கு கூப்பிட்டா கூட வர மாட்டா. இப்போ தினமும் அவளாவே கோயிலுக்கு போயிட்டு வரா. இதெல்லாம் பொறுப்பு வந்ததாலே தானே”

“ஹ்ம்ம்…..நீங்க கொல்லூர் மூகாம்பிகையை கும்பிட சொல்லுங்க. எங்க இஷ்ட தெய்வம் அது தான். அந்த ஆத்தாக்கு அவ்ளோ வலிமை இருக்குது. கூடவே இருந்து அருள் புரிவா”

“கண்டிப்பா அண்ணி! நான் சொல்றேன்”   

பேச்சு தொடர்ந்தது! மற்றவை எதுவும் அர்ஜுன் காதில் விழவில்லை! அவன் நினைத்ததை சாதித்து விட்டான் தான். ஆனால் எதிலோ தோற்ற ஒரு உணர்வு! அதன்பின் வெகுவாக யக்ஞாவின் அழைப்பை எதிர்பார்த்திருந்தான்! அவள் அழைக்கவில்லை என்றதும் சிறிது கோபமும் துளிர்த்தது! ஆனால் அவன் மனசாட்சி இடித்துரைத்தது! தப்பு அவனிடம் இருக்கும்போது, அவனுக்காக அவளுக்கு விருப்பான ஒன்றை விட்டுக்கொடுக்க அவள் முன்வந்திருக்கும் போது, அவளே அழைக்கவும் வேண்டுமென அவன் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்??!!

Advertisement