Advertisement

அவர் சென்றதும், “ஏன்டா? நீயே போய் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடலாம்ல? உனக்கு தட்டு கொண்டு வந்து கொடுக்கிறாங்க, அதுலேயே கை கழுவுற, அப்புறம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வராங்க. ஊட்டி மட்டும் தான் விடலை. வயசாயிடுச்சுல அவங்களை இப்படி கஷ்ட்டபடுத்தலாமா?”

“கஷ்டம்னு அவங்க உன் கிட்ட சொன்னாங்களா? போடா, அட்வைஸ் அறுவை ஆறுமுகம்!”

“ம்ம்கும்! நீ இப்படியே பண்ணிட்டு இரு. சிஸ்டர் வந்து உன்னை குமட்டுலேயே ரெண்டு குத்து குத்த போறாங்க. அப்புறம் சாப்பாடு எடுத்துட்டு வரது மட்டுமில்ல, சமையலே நீ தான் செய்ய போற”

“அவ செஞ்சாலும் செய்வா டா, சரியான சில்வண்டு அவ. ராட்சசி!”

“இங்க பாரு மச்சி, நான் மறுபடியும் சொல்றேன். நீ அவங்களை எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுட்டு போ. அது உன்னோட பெர்சனல். ஆனால் அடுத்தவங்க முன்னாடி அவங்களை மரியாதை குறைவா பேசாதே. அவங்க உன்னோட பெட்டர் ஹாஃப் ஆக போறாங்க. நியாபகம் வச்சிக்கோ”

“உன் கிட்ட தானே டா பேசுறேன்”

“ஓஹோ! அப்போ நீ எம்.எல்.ஏ, அவங்க வைஃப் கிட்ட எல்லாம் சிஸ்டர் பத்தி பேசுறதே இல்லை, அதை நான் நம்பனும்?”

“கொஞ்சம் மூடிட்டு சாப்பிடுறியா?”

“இல்லடா, யோசிச்சு பாரு. இப்போ அவங்க யாரோ மூணாவது மனுஷங்க கிட்ட உன்னை மரியாதை குறைவா, அவன் இவன்னு பேசுறாங்கனு வச்சிக்கோ, அதை உன்னால ஏத்துக்க முடியுமா? மரியாதைக்கு ஆண், பெண் முகமூடி போடக் கூடாது. ஆணுக்கொரு மரியாதை பொண்ணுக்கொரு மரியாதைனு பிரிக்கக்கூடாது. நம்மளை சேர்ந்தவங்களோட மரியாதை நம்மிலிருந்து தான் ஆரம்பிக்குது”

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அர்ஜுனின் அலைபேசி ஒலிக்க, அதையே சாக்காய் வைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் அர்ஜுன்!!

அலைபேசியில் எம்.எல்.ஏவின் மூத்த மகன், 

“அண்ணன்! சொல்லுங்க ண்ணன்”

“அர்ஜுன், அந்த எக்ஸ் ஒன்றியத்தோட ஆள் அந்த கறிகடைக்காரன் பாஸ்கர், அவன் உனக்கு ஏதோ குடைச்சல் கொடுக்கிறதாவும், பதினைஞ்சாம் தேதி உங்களை ஏதோ பண்ணிடுவேன்னு மிரட்டுனதாவும், அவனை வேவு பார்க்க சொல்லி அப்பா என் கிட்ட சொல்லியிருந்தார். நானும் ஒரு வாரமா அவனை கிளோசா வாட்ச் பண்ணிட்டு தான் வரேன். எனக்கு வித்தியாசமா ஒன்னும் படலை. அவன் அவ்ளோ வொர்த் கிடையாது. சும்மா சவடால் மட்டும் விட்டுட்டு போயிருக்கான். வேற ஒன்னும் செஞ்சு கிழிச்சிட மாட்டான்” 

“நீங்க எதுக்கும் பயப்படாம, அந்த கடையை யாருக்கு கொடுக்கணுமோ கொடுங்க. அந்த ஒன்றியத்தோட கொடுக்கு மட்டுமில்ல, அவனே வந்தாலும் ஒன்னும் கிழிக்க முடியாது” மனதறிந்து கறிகடைகாரன் பற்றிய ஒரு பெரிய உண்மையை அர்ஜுனிமிருந்து மறைத்தான் எம்.எல்.ஏவின் மகன்!! பின்னே, அர்ஜுனை பழி வாங்க இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் அமைந்து விடுமா என்ன? 

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ண்ணன்! பயமெல்லாம் இல்லை, இருந்தாலும் மனசோட ஒரு ஓரத்துல அவன் பேசுனது அறிச்சிட்டே இருந்துச்சு. நல்ல வேளை! நீங்க கிளியர் பண்ணிட்டீங்க. எனக்காக மெனக்கெட்டதுக்கு தேங்க்ஸ் ண்ணன்”

“அட இதுக்கெல்லாம் எதுக்குபா தேங்க்ஸ்?”

“அப்புறம் வேற என்ன விஷயம் ண்ணன்?”

“ஆங்….நம்ம டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் மாத்த போறாங்க. நம்மளுதோட சேர்த்து மொத்தம் ஐஞ்சு டிஸ்ட்ரிக்ட் மாத்துறாங்க. தர்மபுரியில ***** ஐ.ஏ.எஸ் வர போறாங்க. நியுஸ் இன்னும் சேனல்ல கூட டெலிகாஸ்ட் பண்ணியிருக்க மாட்டாங்க. இப்போ தான் மேலிடத்து உத்தரவு வந்திருக்குது. சுட சுட நியுஸ் உனக்காக”

“அய்யோ அண்ணன்! அரை மணி நேரத்துக்கு முன்னாடியே எனக்கு இந்த விஷயம் தெரியும் ண்ணன். நீங்க தான் லேட்டு. உங்க அப்பா எனக்கு அப்போவே போன் பண்ணி சொல்லிட்டார்”

“ஓ” அவன் குரல் உள்ளிறங்கியது!! தன் தந்தையை நினைத்து ஆத்திரம் கரைபுரண்டது!!

“சரி ண்ணன். நான் அப்புறமா பேசுறேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”

அர்ஜுன் அலைபேசியை அணைத்ததும், எம்.எல்.ஏவின் மூத்த மகன் முகத்தில் கோபமும், குரூரமும் மாறி மாறி மின்னி மறைந்தது. அவன் அர்ஜுனிடம் கூறிய பொய்யை நினைத்து அவன் மனம் உவகைக் கொண்டது. பதினைந்தாம் தேதிகாய் காத்திருக்கத் தொடங்கினான்!!!!

———————————————————————————————————————————————   

அர்ஜுன் யக்ஞாவுக்கு அழைத்திருந்தான்!! 

தினமும் மூன்று முறையாவது அவள் அழைத்து பேசிவிடுவாள், அர்ஜுனின் பாஷையில் மொக்கை போட்டு விடுவாள். அன்றைய சம்பவத்திற்கு பின், அவள் வந்து அவனை பார்த்து சென்றதிலிருந்து, அவனும் அவளுக்கு அழைக்க ஆரம்பித்திருந்தான். அவள் பெயரை அலைபேசி திரையில் பார்த்தால் அவனையறியாமலே ஒரு மென்னகை தோன்றி, அவளுடன் பேசி முடிக்கும் வரை அவன் உதடுகளில் உறைந்து நின்றது! முதன் முதலாய் அவள் அவனயறியாமல் எடுத்த செல்ஃபியை அவ்வபொழுது எடுத்து பார்த்தான்! அது அவன் அலைபேசி தொடுதிரையில் நிரந்தரமாக இடம் பெரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே எல்லா அறிகுறிகளும் கூறின!! இவையெல்லாம் அவனுக்கு புதிதாய் முளைத்திருக்கும் நோயின் ஆரம்ப கால அறிகுறிகளாகும்!! காதல் நோயின் அறிகுறிகள்!!! 

“எம்.பி?”

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“உங்களை நினைச்சுட்டு இருந்தேன்”

“ஷ்……ஷப்பா……நான் போனை வைக்குறேன்”

“ஹலோ ஹலோ! வச்சிட்டாதீங்க. நான் உங்களை நினைக்கலை போதுமா? அவனவன் ஒரு பொண்ணு எதுவும் சொல்லாமையே தீயிற அளவுக்கு கடலை வறுப்பானுங்க, இதுல உங்களை தான் நினைச்சேன்னு சொன்னா அவ்ளோ தான் கேட்கவே வேண்டாம்! நீங்க என்னடானா டென்ஷன் ஆகுறீங்க?”

அவள் பேசுவதே காதில் விழாதது போல், “நான் புதுசா ஆப்பிள் ஐ.பேட் வாங்கியிருக்கேன் தெரியும்ல?”

“ஓ சூப்பர் கலக்குங்க, புது பொண்டாட்டி, புது ஐ.பேட், புது கார் கலக்குற அர்ஜுன். ம்ம்…சொல்ல மறந்துட்டேன், கார் இன்னைக்கு டெஸ்ட் டிரைவ் வருதாம். எங்க அப்பா உங்க அப்பா கிட்ட பேசுறதா சொன்னாங்க”

“ஓ!”

“ஆமா அது என்ன ‘தார்’ கார்? நான் கேள்விபட்டதே இல்லை”

“கூகிள் பண்ணி பாரு லூசு”

அவள் அடுத்த நிமிடமே கூகிள் செய்து பார்த்து விட்டு கூவினாள், “ஐ! இது ‘காக்க காக்க’ படத்துல சூர்யா ஜோதிகா ‘என்னை கொஞ்சம் மாற்றி’ பாட்டுல ஓட்டிட்டு போவாங்கள்ல? நீங்க கூட அந்த படத்துல வர அன்புச்செல்வன் மாதிரி தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர். அப்படியே நான் உங்க பக்கத்துல…..”

“ஹேய் ஸ்டாப்! நான் வேணும்னா சூர்யானு சொல்லிக்கலாம், ஆனால் தயவுசெஞ்சு நீ ஜோதிகானு மட்டும் சொல்லாத. என்னால தாங்க முடியாது”

“உங்களுக்கு பொறாமை” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் பின்னால் அதிக சத்தம் கேட்க, 

“ஏய்! அங்க என்ன இப்படி சத்தம் கேட்குது?”

“அது, எங்க வீட்டு சிம்பா கத்துறான். நான் உங்க கூட பேசுறது அவனுக்கு பிடிக்கலையாம்! அவன் ரொம்ப பொசசிவ்!!”

“எது? நான் அன்னைக்கு வரும்போது வாசல்ல ஆள் உயரத்துக்கு ஒரு நாய் இருந்துச்சே அதுவா?”

“என் சிம்பாவை நாய்னு கூப்பிடாதீங்க. எனக்கு கோபம் வரும்”

“நாயை நாய்னு சொல்லாம, பேய்னா சொல்லுவாங்க”

“எம்.பி நான் சீரியஸா சொல்றேன். அவனை சிம்பானு கூப்பிடுங்க. நாய்னு சொல்லாதீங்க. அவன் எங்க வீட்ல ஒரு ஆள் மாதிரி தான். என் தம்பி அவன்”

அர்ஜுன் வெடி சிரிப்பு சிரித்தான், “எது? உன் தம்பியா? அது சரி, இப்போ தான் புரியுது, நீ அந்த ஃபேமிலியா? உன்னையே நான் பேர் சொல்லிக் கூப்பிட்டது கிடையாது. நாயெல்லாம் பேர் சொல்லிக் கூப்பிடனுமாக்கும்”

“அர்ஜுன், நீங்க கிண்டல்ங்கிற பேர்ல அளவு மீறி பேசுறீங்க. நீங்க பேசுறது எனக்கு ஹர்ட்டிங்கா இருக்குது. நீங்க என்னையும், அவனையும் சேர்த்து அவமானப்படுத்துறீங்க. மறுபடியும் சொல்றேன், அவன் எங்க வீட்ல ஒரு ஆள் மாதிரி. நான் கல்யாணம் ஆகி அங்க அவனை கூட்டிட்டு வந்த பின்னாலும் நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா அது சரிபட்டு வராது”

“ஹேய்! வெயிட் வெயிட்! கல்யாணம் ஆனதும் அந்த நாயை இங்க கூட்டிட்டு வர போறியா? என்ன விளையாடுறியா? சான்சே இல்லை! எனக்கு நாய்னாலே அலர்ஜி, அதோட முடியெல்லாம் மூக்குக்குள்ள போகும், அப்புறம் டாய்லட் போய், எச்சி வடிச்சு உவக்!”

“அர்ஜுன்! நான் சும்மா சொல்லலை. இதுக்கு கண்டிப்பா உங்க வீட்ல எதுவும் மறுப்பு சொல்ல மாட்டீங்கனு உறுதியா நான் நம்பினேன். அதனால தான் இதை பத்தி நான் எதுவும் பேச்செடுக்கலை. முன்னமே இதை பத்தி பேசியிருக்கனுமோனு தோணுது”

“பேசி?? நாங்க வேண்டாம்னு சொல்லியிருந்தா கல்யாணத்தை நிறுத்தியிருப்பியா? லூசு மாதிரி பேசாம, போனை வைடி சில்வண்டு”

“அர்ஜுன், ப்ளீஸ் ஐ அம் சீரியஸ். அவன் பாட்டுக்கு ஒரு ஓரமா வெளிய இருக்க போறான். நான் தான் அவனை பார்த்துக்க போறேன். உங்க பக்கம் கூட வராம பார்த்துகிறேன். கல்யாணத்துக்கு பின்னால சிம்பா என் கூட தான் வருவான். இதுக்கு மேல இதுல பேச எதுவும் இல்லை”

அவ்வளவு தான்! அர்ஜுன் முருங்கை மரம் ஏறிவிட்டான்! அவன் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் கொண்டவன். எதிராளியின் பாதி பலம் வந்து சேரும் வாலியை போல, அர்ஜுனின் முன் நின்று அவன் கருத்துக்கு எதிர் கருத்து பேசினால், எதிராளியின் பாதி பிடிவாதம் அவனுக்கு வந்து சேர, அவன் பிடிவாதம் இரட்டிப்பாக, உக்கிரமாய் எதிர்ப்பான்!

அதனால் தான் சிறுவயது முதல் பத்மஜாவால் தர்மனிடம் காட்டியது போன்ற ஆதிக்கத்தை அர்ஜுனிடம் காட்ட முடியவில்லை. அவன் காட்ட விடவில்லை! எப்படி பத்மஜா அவனை அடித்த போது நடு தெருவில் புரண்டு அழுது அவரை அடிக்க விடாமல் செய்தானோ, அதே போன்ற உத்திகளை அவன் செய்ய நினைத்த காரியங்களிலெல்லாம் கடைபிடித்தான். அவன் கல்லூரி படிக்கும் போது நடந்த ஒரு நிகழ்வை தவிர!!!! 

அந்த நிகழ்வே பத்மஜா இந்த கல்யாணத்தை முனைந்து நடத்தி விட காரணமாய் அமைந்தது! ஆனால் யக்ஞாவே அதை தடுக்கும் விதமாக பேசிக் கொண்டிருந்தாள்! அவன் நினைத்த காரியத்துக்கு எதிராய் அவள் பேசிக் கொண்டிருக்க, அர்ஜுனின் பிடிவாதம் பல மடங்காய் பெருகியது!!

“இப்போ நீ என்ன தான் சொல்ல வர?”

“அதான் சொல்லிட்டேனே. நானும் சிம்பாவும் சேர்ந்து தான் அங்க வருவோம்”

“சோ சாரி! நாய்க்கெல்லாம் எங்க வீட்ல இடம் கிடையாது. நீயும் இங்க வர வேண்டாம். உன் நாயும் இங்க வரவேண்டாம். இனிமே என்னை கூப்பிடாத”

அவன் பட்டென்று அலைபேசியை அணைத்து விட, இரண்டாம் முறையாக அலைபேசியை காதில் வைத்தவாறு உறைந்து அமர்ந்தாள் யக்ஞா!!! 

Advertisement