Advertisement

“எப்படி டா இருக்குது?” தன் புது ஆப்பிள் ஐ.பேடை, மித்ரனிடம் காட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

“செம்மயா இருக்குது டா. சும்மா கிளாசா இருக்குது!! எவ்ளோ டா?”

“ஃபிப்டி ஃபோர் டா”

“ஆத்தி!” அந்த ஐ.பேடை கண்களில் ஓற்றியபடி அதை அர்ஜுனிடம் திரும்ப அளிக்க, அர்ஜுன் சிரித்தான்!!

“சரிடா, இதெல்லாம் விடு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அன்னைக்கு நீ காணோம்னு உன்னை தேடி நான் எம்.எல்.ஏ வீட்டுக்கு போனேன் டா. எம்.எல்.ஏ வைஃப், நீ அங்க வரவே இல்லைன்னு சொல்லிட்டாங்க. எம்.எல்.ஏ எங்க போயிருக்கார்னு கேட்டேன், அதுக்கும் அவங்க பதில் சொல்லலை”

நண்பனின் கூற்றில் அர்ஜுனுக்கு சுருக்கென்றிருந்தது. நண்பன் பொய் சொல்ல மாட்டான். அப்படியென்றால்????? 

“டேய்! அவங்க ஏதோ ஒரு நியாபகத்துல சொல்லியிருப்பாங்க டா. பொதுவா செக்யூரிட்டி ரீசன்ஸ்காக எம்.எல்.ஏ எங்க போறார் வரார்னு சொல்ல மாட்டாங்க” நண்பனுக்கு சொல்வது போல் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

“என்னவோ மச்சி! நானும் பல தடவை உன் கிட்ட சொல்லிட்டேன். நீ கேட்க மாட்டேன்னு தெரியும், இருந்தாலும் சொல்றது என் கடமை. அவங்க கிட்ட கொஞ்சம் விலகியே இரு. அவரையும், அவர் குடும்பத்தையும் பார்த்தாலே ஏதோ ஒட்டாத ஒரு உணர்வு”

“நாயே, எப்ப பாரு இதையே பேசிகிட்டு, ஃப்ரியா விடுடா! தங்கச்சி கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்குது?”

“அதெல்லாம் பெருசா ஒன்னும் வேலை இல்லடா. வீட்ல வச்சு தானே கல்யாணம்! ஐயர் கூட கிடையாது. அவங்க கிருஷ்ணகிரி பக்கம் கல்லுகுறிக்கைல கால பைரவர் சாமி கும்பிடுறவங்க. அவங்க முறைப்படி தமிழ் திருமந்திரம் ஒதி தான் கல்யாணம் நடக்குமாம், அதான் அவங்களே எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டாங்க. நம்ம பக்கம் வேலைன்னு பார்த்தா வர சொந்தக்காரங்களை கூட்டிட்டு வரணும், காலையில டிபன் ஏற்பாடு பண்ணுறது, மதிய சாப்பாடு ஏற்பாடு பண்ணனும், அப்புறம் போட்டோ வீடியோ ஏற்பாடு, அப்புறம்…..”

“அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம் டா” அர்ஜுன் நண்பனுக்கு உறுதி அளிக்க, கேட்டுக் கொண்டிருந்த சுசித்ராவுக்கு மனது இடித்தது. 

பதினைந்தாம் தேதி மித்ரனின் தங்கை திருமணம். அதே பதினைந்தாம் தேதி எம்.எல்.ஏ வீட்டில் மேலிட பிறந்தநாள் கொண்டாட்டம். அதை பற்றி ஒரு வார்த்தை மித்ரனிடம் இது வரை மூச்சு விடாமல் இருக்கும் அர்ஜுனை நினைத்து ஒருவித எரிச்சல் மண்டியது. 

அர்ஜுனும், மித்ரனும் சிறு வயது முதலே நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்தவர்கள், பொருளாதார பின்னணி காரணமாக அர்ஜுன் சென்னையில் சிறந்த உயர்மட்ட(!!) கல்லூரியிலும், மித்ரன் தர்மபுரியிலேயே ஒரு கலை கல்லூரியிலும் சேர்ந்து படிக்க, வீட்டில் என்ன விசேஷமானாலும் சரி, முதல் ஆளாய் வந்து நிற்பவன் மித்ரனே. பந்தல் முதல் பந்தி வரை, அழைப்பு முதல் விழா நிறைவு வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்பவன், பதிலுக்கு எதையும் எதிர்பார்க்க மாட்டான்.   

தர்மன் சுசித்ரா திருமணம், அவர்களின் முதல் புதல்வன் காது குத்து, முதல் பிறந்தநாள், இரண்டாமவன் காது குத்து, பிறந்தநாள், ஏன் புரட்டாசி சனிக்கிழமை விரதம், தீபாவளி நோன்பு என்று எல்லா விசேஷங்களிலும் பேன்டை மடித்து விட்டுக் கொண்டு வேலை செய்வான்.

பத்மஜா, ‘கண்ணு! நீ எனக்கு புள்ளை மாதிரி கண்ணு’ என்ற நிலையான ஒரு வசனத்தை பேசி முடிந்த அளவு அவனை வேலை வாங்கி விட்டு, அவருக்கு தேவையில்லாத பொழுதுகளில் “இப்படியா பண்ணுவான்? அப்படியா பண்ணுவான்? எல்லாம் அவன் ஜாதி அப்படி!!” என்று குறை கூற மறக்க மாட்டார்.

அர்ஜுனுக்கோ உயிர் நண்பன் தான். ஆனால் மித்ரன் இவனுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் இவன் திரும்ப கொடுத்தானா என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஏனோ அர்ஜுனை பொறுத்த மட்டில் அது பெருத்த தவறாகவே தோன்றவில்லை. மித்ரனை உதாசீனபடுத்துவதை அனாசியமாய் செய்துக் கொண்டிருந்தான். எது எப்படி இருந்தாலும் மித்ரனுக்கு அர்ஜுனின் நட்பு, கர்ணன் துரியோதனனிடத்தில் கொண்ட நட்பு தான்!!

நண்பனின் தங்கை திருமணத்தை முன் நின்று நடத்தி வைப்பதை தவிர வேறு எதுவும் பெரிதாகவே அவனுக்கு தோன்றக் கூடாது தான். ஆனால் சுசித்ராவுக்கும், தர்மனுக்கும் தெரியும், அவன் நிச்சயம் திருமணத்திற்கு செல்ல போவதில்லை. அன்று அர்ஜுனின் ஆதர்ச புருஷர், அவனின் பீஷமர் ஏற்பாடு செய்திருக்கும் விழா அல்லவா? ஏன் பத்மஜாவுக்கும் இந்த உண்மை தெரிந்தபோதிலும், அர்ஜுனுக்கு தான் துணை நிற்பார்! இதை பற்றி எள்ளளவும் தெரியாத ஒரே ஜீவன் மித்ரன் தான்!

வரவேற்பறையில் அமர்ந்து அர்ஜுனும், மித்ரனும் பேசிக் கொண்டிருக்க, அறையினுள் சுசித்ரா தர்மனின் காதை கடித்தாள்

“ஏன்பா? பேசாம மித்ரன் கிட்ட நாம விஷயத்தை சொல்லிடுவோமா? ரொம்ப எதிர்பார்த்திருந்துட்டு ஏமாந்துட கூடாது”

“இல்லை சுச்! அது அவங்க ரெண்டு பேரோட பெர்சனல். அர்ஜுன் தான் அதை மித்ரன் கிட்ட சொல்லியிருக்கணும், அவனே சொல்லலை. இப்போ நாம போய் சொன்னா அவங்களுக்கு நடுவுல நாம போன மாதிரி ஆயிடும்”

“ப்ச்! பேசாம நாம அன்னைக்கு டூர் போறதா போட்ட பிளான் கேன்சல் பண்ணிடலாம் பா”

“அர்ஜுன், மித்ரன் கிட்ட என்ன பொய் சொல்ல போறானோ தெரியலையே?! நம்ம சொந்தக்காரங்க கல்யாணம் ஒன்னு அன்னைக்கு வருது. ரொம்ப முக்கியமான கல்யாணம், கண்டிப்பா குடும்பத்தோட போயே ஆகணும்னு மித்ரன் கிட்ட சொல்ல போறதா சொல்லிட்டு இருந்தான். அந்த மாதிரி அவன் சொல்லிட்டா நாம மட்டும் எப்படி கல்யாணத்துக்கு போக முடியும்? அப்புறம் இந்த வீட்ல இன்னொரு பூகம்பம் வெடிக்காதா?”

“அப்படி பொய் சொன்னா இப்ப தெரியாட்டியும் பின்னால எம்.எல்.ஏ ஃபங்ஷன்க்கு தான் போனான்னு மித்ரனுக்கு உண்மை தெரிஞ்சிடாதா என்ன?”

“தெரியுமே! கண்டிப்பா மித்ரனுக்கு உண்மை தெரிய வரும். ஆனால் அர்ஜுன் ஏதாவது சொல்லி மித்ரனை சமாளிச்சுடுவான். அவனும் சரின்னு தலையை ஆட்டிட்டு போய்டுவான்”

“என்ன தான் பா செய்ய? இந்த மித்ரன் ஏன் இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்?”

“நாம ரெண்டு பேரும் இல்லையா? அந்த மாதிரி தான்! நல்லதுக்கு எப்பவுமே காலம் கிடையாது. நீ ரொம்ப நல்லவன், நீ ரொம்ப நல்ல பொண்ணுனு சொல்லி சொல்லியே நம்மளை நிமிர விடவே மாட்டாங்க. நம்ம சுயத்தை நமக்கு திருப்பி தரவே மாட்டாங்க. எப்பவும் நாம அந்த நல்லவன் மோட்லையே (mode) இருக்கனும்னு நினைப்பாங்க. அதுலேர்ந்து கொஞ்சம் விலகி இப்படி அப்படி போய்டோம்னு வை, அவ்ளோதான் கொலை குத்தம் செஞ்ச மாதிரி நடந்துப்பாங்க. மித்ரனும் இதே நல்லவன் வகையை சேர்ந்தவன் தான்”

இன்னும் அவர்கள் பதினைந்தாம் தேதி வெளியே சென்று வர இருப்பதை பற்றி பத்மஜாவிடமும், மலயனாதனிடமும் தெரிவிக்கவில்லை. பக்கத்தில் என்றாலும் கூட அப்படி சாதாரனாமாய் அவர்கள் அனுமதி இல்லாமல் கிளம்பிவிட முடியாது. இருவரும் இரு வேறு பிரச்சனைகளை கொண்டு வருவர். 

அர்ஜுன் கார் கேட்ட விவகாரமே பூதாகரமாய் உருமாறி இப்பொழுது தான் சற்று பதுங்கியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறி அனைவரையும் அலைகழித்த குற்றவுணர்ச்சியில் பத்மஜாவும், அவர் விபரீத முடிவெடுத்திருந்தால், அந்த பழி தன்னை வந்து சேர்ந்திருக்குமோ என்ற பயத்தில் மலயநாதனும் அமைதியாய் இருந்தனர். 

அந்த அமைதி குலைந்து மற்றுமொரு பிரச்சனை கிளம்பிவிடுமோ என்று பயந்தே டூர் விவரத்தை எப்படி தெரிவிப்பது என்று தர்மனும், சுசித்ராவும் யோசித்துக் கொண்டிருந்தனர். தங்கள் தட்டில் இருப்பதே அதிகமாய் இருக்கும்போது, அடுத்தவர் தட்டில் இருப்பதை நினைத்து எங்கே கவலைப்பட??!! 

மித்ரனை நினைத்து கவலைப்படுவதா இல்லை, தங்களை தாங்களே நினைத்து கவலைப்படுவதா என்ற குழப்பமான மனநிலையுடன் தர்மனும், சுசித்ராவும் நிற்க, சமயலறையிலிருந்து வெளியே வந்த பத்மஜா ஒரு தட்டில் சாப்பாடும், ஒரு ஸ்பூனும் எடுத்து வந்தார்.

“இந்தா கண்ணு! பருப்பு குழம்பு நெய் ஊத்தி பிசைஞ்சு வச்சிருக்கேன். சாப்பிடு” என்றபடியே தட்டை அர்ஜுன் கையில் கொடுக்க, அவனோ, “மம்மி! எதுக்கு இப்போவே எடுத்துட்டு வந்தீங்க? எனக்கு பசிக்கவே இல்லை”

“டேய்! சாப்பிடு டா, நானும் சாப்பிட்டுட்டு ஆபிஸ் கிளம்பனும்”

அர்ஜுன் ஸ்பூனால் உணவை எடுத்து உண்ண ஆரம்பிக்க, “மித்ரா! போ போய் கை கழுவிட்டு வா. சாப்பிடலாம்”  

“இல்லமா! பசியில்லை. நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன்” 

“ஆங்….அதெப்படி? இங்க வந்துட்டு நீ சாப்பிடாம போய்டுவியாக்கும். ஒழுங்கா வந்து சாப்பிட வா”

அவரை மறுக்க முடியாமல் மித்ரன் சாப்பிட அமர, சமயலறையில் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டே, “ஆ…ஊனா இங்க ஓடி வந்துடுறான். அவனுக்குனு ஒரு வீடு இருக்கிறதே நியாபகம் இல்லை போல??!! எப்ப பாரு இங்கேயே பழியா கிடக்கிறது!! இப்ப இன்னொரு தடவை சாதம் வடிக்கணும். எங்க அவ?” அவர் புலம்பிக் கொண்டிருக்கும் போதே, இது தான் நடக்கும் என்பதை முன்பே ஊகித்த சுசித்ரா சமையலறை நோக்கி வர, “வா வா, உன்னை தான் தேடினேன். மித்ரன் சாப்பிட உட்கார்ந்துட்டான். ஒருத்தருக்கு மட்டும் ஆகுற மாதிரி சாதம் குக்கர்ல வச்சிடு” என்றார்.

“சரிங்கத்தை”

புலம்பிக்கொண்டே மித்ரனுக்கு உணவை எடுத்துச் செல்லும் பத்மஜாவை பார்த்தவாறே அவள் வேலையை கவனிக்கலானாள். 

அர்ஜுன் சாப்பிட்டு முடித்து, அருகிலிருந்த பாட்டிலால் தட்டிலேயே கையை கழுவ, அந்த தட்டை பத்மஜா வாங்கி சென்றபின், குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்து தந்தார்.

Advertisement