Advertisement

தன் தம்பியாவது செய்த செயலுக்கு வருந்துகிறானே என்று ஆறுதலுற்றவன், “அர்ஜுன்! நேத்து நடந்ததை பத்தி மம்மி கிட்ட நீ எதுவும் பேச வேண்டாம். அது மறுபடியும் தேவையில்லாத மனஉளைச்சல் தான்”

“ம்ம் சரி! இப்போ என்ன கவுன்சிலிங்க்கு கோயம்பத்தூர் போறோமா என்ன?”

காலை உணவு இட்லி தானே என்பது போல் மனநல மருத்துவரிடம் செல்வதை சாதரணமாய் கேட்கும் தன் உடன்பிறந்தவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் அவனை வெறித்து பார்த்தான்

“அண்ணா??”

“ம்ம், தெரியல அர்ஜுன் பார்க்கலாம்”

“சரி ண்ணா! நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். எனக்கொரு கொரியர் வரும் அதை மட்டும் வாங்கி வச்சிடுறீங்களா?”

“ம்ம் சரி அர்ஜுன்!”

அங்கிருந்து நகர்ந்தவன் சற்று நிதானித்து மீண்டும் தர்மனை பார்த்து, “அண்ணா! அது….நான் ஒரு ஆப்பிள் டேப் ஆர்டர் போட்டிருந்தேன். அது தான் இன்னைக்கு வரும். வந்ததும் கொஞ்சம் பார்சல் மட்டும் பிரிச்சு பார்த்துடுங்க. நான் வீட்டுக்கு வந்து பார்த்துகிறேன்”

“ஓ! சரி அர்ஜுன்” தர்மனின் குரல் உள்ளிறங்கியது.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த மலயனாதன், 

“ஆப்பிள் டேப் ஆர்டர் போட்டிருக்கியா? யாருக்குப்பா?”

“எனக்கு தான் பா”

“நீ தான் ஐ போன் வச்சிருக்கியே பா? இது எதுக்கு?”

“தேவைப்படும் பா”

“அது எவ்வளவு?”

“பிஃப்டி ஃபோர் பா”

“என்னது ஐம்பத்துநாலாயிரமா? அவ்வளவா? அவ்வளவு காசு ஏது பா உனக்கு?”

“ம்ம்ச்ச்….அப்பா! காசெல்லாம் அக்கவுண்ட்ல இருக்குது பா”

“ஏம்பா மொத்த காசையும் எடுத்து செலவு பண்ணிட்டா, தினப்படி செலவுக்கு என்ன பண்ணுவ? ஏற்கனவே பேருக்கு தான் நீ ஐ.டில வேலை பார்க்கிறதா சொல்லிட்டு இருக்க, முழுக்க முழுக்க அந்த எம்.எல்.ஏ கூட தான் சுத்துற, திடீருன்னு உன்னை வேலையை விட்டு தூக்கிட்டா என்ன பண்ணுவ?”

“இப்போ என்னபா உங்க பிரச்சனை? காசே இல்லாட்டியும் உங்க கிட்ட காசு கேட்டு வந்து நிக்க மாட்டேன் போதுமா? வேலை போனாலும் என்னால இன்னொரு வேலை தேடிக்க முடியும் அந்த திறமை எனக்கு இருக்குது”

“அதில்லை அர்ஜுன்…..”

“அப்பா! ப்ளீஸ்! நேத்து தான் ஒரு பெரிய புயல் அடிச்சி முடிச்சிருக்குது. மறுபடியும் இன்னொன்னு ஆரம்பிச்சுடாதீங்க. நீங்க உள்ள போங்க பா. அர்ஜுன் நீ கிளம்பு”

“ஆங்…..சொல்ல மறந்துட்டேன். அந்த பொண்ணு யக்ஞா எனக்கு போன் பண்ணினா பா. நீ நேத்து போன் எடுக்கலைனு பயந்துட்டா போல. ஒரு வார்த்தை பேசிடு”

:ம்ம்….சரிப்பா”

“அர்ஜுன் சாப்பிட வா” சுசித்ரா அவனை சாப்பிட அழைக்க,

“இல்லை அண்ணி! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது. நான் வெளிய சாப்பிடுக்குறேன்”

“ஓ”

“வரேன் அண்ணி! வரேன் ண்ணா”

“ஒரு நிமிஷம் அர்ஜுன், யக்ஞா நேத்து…..”

“போன் பண்ணி நான் எங்கனு கேட்டாளா?”

“ஹ்ம்ம்….ஆமா அர்ஜுன்”

“நான் பேசிடுறேன் அண்ணி”

அர்ஜுன் அங்கிருந்து கிளம்பவும், மலயனாதன் தர்மனை பிடித்துக் கொண்டார்,

“என்ன தர்மா இவன் இப்படி இருக்கான்? கொஞ்சம் கூட காசோட அருமை தெரியாம இருக்கிறான். இப்போ எதுக்கு தேவையே இல்லாம டேப்?”

“நீங்க சொன்னதும் அவன் உடனே கேட்டுட்டு திருந்திட போறானா? அல்லது நீங்க தான் சண்டை போடுறதை விட்டுட்டு பொறுமையா இந்த விஷயத்தை எப்படி ஹேண்டில் பண்ணலாம்னு யோசிக்க போறீங்களா? அல்லது மம்மி தான் அவன் பண்றதுக்கு எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணாம, அவனுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல போறாங்களா? இதுல எதுவுமே நடக்க போறதில்லை, பின்ன பேசி என்ன ஆக போகுது?”

—————————————————————————————————————————————-

வெளியே கிளம்பி வந்த அர்ஜுன் சட்டென்று திகைத்து நின்றான்! மாமரத்துக்கடியில் யக்ஞா நின்றுக் கொண்டிருந்தாள்! 

அந்த நிமிடம், அவளை அங்கே பார்த்த அந்த நிமிடம், அர்ஜுனுக்குள் பலதரப்பட்ட மாற்றங்கள்! மனதிலிருந்த வெற்றிடம் வண்ணங்களால் நிரம்பிய உணர்வு! ஒரு மெல்லிய சந்தோஷம்! திடீரென்று முளைத்த உரிமையுணர்வு! மன வானிலை பிரகாசமா, அவனை பார்த்ததும் ஜவலிக்கும் அவள் கண்களை பார்த்தவாறு சீட்டி அடித்தபடியே அவள் புறம் சென்றான்!!!

“ஏய்! இம்சை! நீ எங்க இங்க? மறுபடியும் என்னை பார்க்கவா?”

“ஹ்ம்ம் இல்லையில்லை! தர்மபுரியில புதுசா ஒரு பாய் ஃப்ரெண்டு புடிச்சிருக்கேன். அவனை பார்க்க தான் வந்தேன்”

“நல்லவேளை டா அர்ஜுன். நீ உசுரு தப்பிச்சிட்ட”

பட்டென்று அவன் கன்னத்தில் அவள் அடிக்க, பதிலுக்கு கைகளை ஓங்கிய அவன், தன்னை கட்டுபடுத்திக் கொண்டு கைகளை இறக்கினான்!!

“ஏய்! என்ன நினைச்சுட்டு இருக்க? ரோட்டில நின்னுட்டு? யாரவது பார்த்தா என்ன ஆகுறது? எங்க வீட்ல யாராவது பார்த்தா என்ன ஆகும் தெரியுமா?”

“அத்தை, இப்போ தான் ஆபிஸ் கிளம்பி போனாங்க பார்த்தேன், மாமா வெளிய வர மாட்டங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். சுச்சி அக்கா எதுவும் சொல்ல மாட்டாங்க. உங்க அண்ணா தான் ஏதாவது சொல்ல வாய்ப்பிருக்கு ஆனால் நான் சமாளிச்சுக்குவேன். மத்தபடி ஊர் உலகத்தை பத்தி எனக்கு கவலையில்லை”

“ஓ! அப்போ ஒரு பிளானோட தான் வந்திருக்க?”

“ஆமா பின்ன, உங்களை அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? சிக்னல் கிடைக்காத அந்த காட்டுக்கு போனீங்கள்ல, அப்படியே அந்த காட்டுக்குள்ளேயே சிங்கம், புலி கூட குடும்பம் நடத்த வேண்டியது தானே? எதுக்கு திரும்ப வந்தீங்களாம்?”

“ஹ்ம்ம்..செஞ்சிருக்கலாம் தான். உன் கூடவே குடும்பம் நடத்த ஒத்துக்கிட்டேன். சிங்கம், புலியெல்லாம் எனக்கு எம்மாத்திரம்?”

“அப்போ நான் சிங்கம், புலியெல்லாம் விட பயங்கரமா இருக்கேன்னு சொல்றீங்களா?”

“ச்சே! ச்சே! அது கூட உன்னை கம்பேர் பண்ணி அதை கேவலப்படுத்த நான் விரும்பலை”

“உங்களுக்கு சிரிப்பா இருக்குதுல……அங்க போனது கூட பரவாயில்லை, வந்த பின்னாலயாவது போன் பண்ணி பேசியிருக்கலாம். நீங்க என்னடானா ரஹ்மான் கடை பிரியாணி சாப்பிட்டுட்டு ஜாலியா வந்திருக்கீங்க”

“இப்போ என்ன பண்ணனும்ங்கிற?”

“உங்களுக்கு கண்டிப்பா இதுக்கு ஒரு பனிஷ்மன்ட் உண்டு”

“என்ன பனிஷ்மன்ட்?”

“ஹான்….அது…….ஆங்…….நான் இனிமே எங்க போனாலும் போன் பண்ணுவேன்னு நூறு தடவை இம்போசிஷன் எழுதி எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்க”

“அடியேய்!” சற்று முன் அவன் மனதில் தோன்றிய உரிமையுணர்வு அவனை இலகுவாக பேச வைத்தது!

“அதெல்லாம் பனிஷ்மன்ட் கொடுத்தா கொடுத்தது தான். நீங்க எழுதுறீங்க”

“அதல்லாம் முடியாது போடி சில்வண்டு! இம்சை!” 

“அப்போ என் கிட்ட இன்னொரு அடி வாங்கிக்கோங்க”

“நீ செஞ்சாலும் செய்வ, வா யாராவது பார்க்கிறதுக்கு முன்னாடி வேற எங்கேயாவது போய்டலாம்”

“ஹலோ! நாம என்ன கள்ளகாதலா பண்றோம்? வீ ஆர் என்கேஜ்ட்”

“சரிடி இம்சை, இங்கேயே எவ்ளோ நேரம் நின்னுட்டு பேச முடியும்? வா போகலாம். அப்படியே நானே உன்னை வீட்ல டிராப் பண்ணிடுறேன். நீயும் என் கூட பைக்ல வரணும்னு ரொம்பபப ஆசைப்பட்ட”

“ஆசையும் இல்லை, தோசையும் இல்லை”

“ஆமா ஆமா சொன்னாங்க, வா போகலாம்”

“வேணாம், நான் பைக்ல ஏறலாம்னு வருவேன். உங்க எம்.எல்.ஏ அண்ணன் கூப்பிடுவார். உடனே விழுந்து அடிச்சு, என்னை அம்போனு விட்டுட்டு ஓடிடுவீங்க”

“எல்லா நேரமும் அதே நடக்குமா? இன்னைக்கு என்ன ஆனாலும் நானே உன்னை கொண்டு விடுறேன் சரியா?”

“ஒன்னும் வேண்டாம்”

“இன்னும் கோபமா?”

“ச்சே! ச்சே! அதெல்லாம் உங்களை பார்த்ததும் போய்டுச்சு. அப்பா இங்க தான் இருக்கார் அதான்”

“என்னது இங்க இருக்காரா? எங்க? எங்க இருக்கார்?” பதறிய அர்ஜுனை பார்த்து,

“எம்.பி! இங்கனா, இங்க இல்லை, தர்மபுரியில இருக்கார். கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணை சும்மா சும்மா வெளிய விட்டுடுவாங்களாக்கும். அன்னைக்கு விட்டதே பெரிய விஷயம். அவர் தான் என்னை கூட்டிட்டு வந்தார். உங்களை பார்க்கணும்னு தோனுச்சு அதான் வந்தேன். பார்த்துட்டேன், கிளம்புறேன்”

“நீ என்னை தான் பார்க்க வரேன்னு உங்க அப்பாவுக்கு தெரியுமா?”

“தெரியும்”

“நல்ல்ல்லல குடும்பம்!!”

“ஓ! அப்போ அப்பாவுக்கு தெரியாம உங்களை பார்க்க வந்தா அது நல்லதா? இல்லேனா பல குடும்பத்துல, பொண்ணு பக்கத்து தெருவுக்கு போனாலே சந்தேகப்படுற அப்பா இருக்காங்களே அந்த மாதிரி இருந்தா நல்லதா?”

“அம்மா தாயே! நான் உங்க அப்பாவையும், உன்னையும் ஒண்ணுமே சொல்லலை. நீ முதல கிளம்பு”

“ப்ச்……ஆனாலும் ஒரு உண்மையை ஒத்துகிட்டு தான் ஆகணும்”

“என்ன?”

“உங்க கூட பைக் ரைட் நான் ரொம்பவே மிஸ் பண்றேன். நான் வரேன் பை” வெள்ளந்தியாய் சிரித்தபடி செல்லும் அவளை, பார்த்த கண்கள் பார்த்தவாறே  நின்றுவிட்டான் அர்ஜுன்!!!!!! 

Advertisement