அர்ஜுன் வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்து பத்மஜா நிலைகுலைந்து நிற்கையிலே, அவர்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

தர்மன் ஓடிச் சென்று வாசல் கதவை திறந்தான். வெளி கதவின் அருகே நின்றுக் கொண்டிருந்தான் அவனதருமை இளவல் அர்ஜுன்!

அவனை பார்த்ததும் எழுந்த ஆசுவாசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை! பெரு நதி சுழலிலிருந்து தப்பித்தது போல்! திக்கு திசை தெரியாமல், மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்குள் சுழன்று கொண்டிருக்கும் ஒரு மாயப்பாதையினின்று விலகி வந்ததை போல்! அந்த உணர்வின் வெளிப்பாடாய் அவன் கண்கள் கண்ணீர் சொரிய, அர்ஜுன் திகைத்து நின்றான்

“அண்ணா!”

“எங்க போயிருந்த அர்ஜுன்? ஏன் இப்படி பண்ணின?”

“ஏன் என்னாச்சு ண்ணா?”

அதற்குள் பத்மஜாவும் மொத்த குடும்பமும் வெளியே வர, பத்மஜா அழுதுக் கொண்டே அவனை நோக்கி ஓடினார்.

“மம்மி! என்னாச்சு?”

“எங்கடா போயிருந்த? ஒரு நிமிஷம் எனக்கு உசுரே போய்டுச்சு. உன்னை பார்த்ததும் தான் மூச்சே வருது. என் மேல கோபமா சாமி?”

“நான் தான் அவனுக்கு ஒண்ணுமில்லன்னு சொன்னேன்ல மம்மி! அவன் வெளிய போயிருக்கிறதை சொன்னா கோபப்படுவீங்கனு தான் சொல்லலை. அதுக்குள்ள நீங்க ஏதோதோ கற்பனை பண்ணிட்டு பயந்துட்டீங்க. நீங்க ரொம்ப டையர்டா இருப்பீங்க மம்மி, போய் தூங்குங்க! எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாமே”

மனதும் உடலும் சோர்ந்து போயிருந்த பத்மஜா தர்மனின் சொல்லுக்கு பணிந்து ஓய்வெடுக்கச் சென்று விட்டார்.

அர்ஜுன் வந்து சேர்ந்த தகவலை மித்ரனுக்கு தெரிவிக்க, மித்ரன் தன் வண்டியில் அங்கு வந்திறங்கினான். மிகவும் சோர்ந்து காணப்பட்டான். வந்த அவசரத்தில் வண்டியை அப்படியே போட்டு விட்டு அர்ஜுனை நோக்கி வந்தான். 

“மச்சான்!”

ஓடி வந்து அர்ஜுனை கட்டிக் கொண்ட அவன் கண்கள் கலங்கியிருந்தன!

“டேய்! என்னடா? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க? என்னாச்சு?”

“என்னாச்சா? நாயே அப்படியே அறைஞ்சேனா தெரியும்!! எங்க டா போயிருந்த? உன் போன் ஏன்டா நாட் ரீச்சபிள்ல இருந்தது?”

“என்னது நாட் ரீச்சபிள்ளா?” அர்ஜுன் அலைபேசியை எடுத்து பார்க்க, அதில் தவறிய அழைப்பு குறுஞ்செய்திகள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேல் வந்திருந்தன.

“ஓ! நான் கவனிக்கவே இல்லை”

“எங்க தான்டா போயிருந்த?”

“எம்.எல்.ஏ கூட வத்தல்மலை போயிருந்தேன். அதான் சிக்னல் கிடைக்கலை போல”

தர்மனும், மித்ரனும் அதிர்ச்சி பார்வை பறிமாறிக் கொண்டனர். அர்ஜுன் எம்.எல்.ஏவுடன் சென்றிக்க, எம்.எல்.ஏ மனைவி ஏன் அர்ஜுனை பார்க்கவே இல்லை என்று கூறினார்.

“டேய்! நீ எம்.எல்.ஏவை எங்கேயாவது வழியில சந்திச்சு ரெண்டு பேரும் வத்தல்மலை போனீங்களா?”

“இல்லடா! நான் எம்.எல்.ஏ வீட்டுக்கு போயிட்டு தான் அவர் கூட கிளம்பி போனேன்”

“சரி அர்ஜுன்! அதை போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல? நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா? மதியத்துலேர்ந்து உனக்கு போன் பண்றோம். நீ எடுக்கவே இல்லை. இங்க என்ன நடந்துச்சு தெரியுமா?” தர்மனின் குரலில் அதீத சோர்வு!

மித்ரன் நடந்தவற்றை விவரித்தான், “நாங்க தேடிட்டு இருக்கும் போதே அம்மா என் மொபைல்க்கு கூப்பிடாங்க. நான் இங்க அருவி பக்கம் தான் இருக்கேன் என்னை வந்து கூட்டிட்டு போங்கனு அழுதாங்க. அங்க…..அங்க அவங்க தப்பான எண்ணத்தோட தான் போயிருக்காங்க. அப்புறம் அவங்களுக்கு ஏதாவது ஆச்சுனா, உன் கல்யாணம் நல்லபடியா நடக்காம போயிடுமோனு பயம் வந்திருக்குது, அதான் அவங்களே போன் பண்ணிட்டாங்க. வர வழியெல்லாம் ஒரே அழுகை”

நடந்தவைகளை கேட்ட அர்ஜுன் குற்றகுறுகுறுப்பில் கூனி குறுகி போனான். அளவில்லா சுய பச்சாதாபம் அவனை ஆட்க்கொண்டது. 

“ரொம்ப ரொம்ப சாரி ண்ணா! இப்படியெல்லாம் ஆகும்னு நான் நினைச்சு பார்க்கலை. ஏதோ கடுப்புல போனை எடுத்து பார்க்கவே இல்லை. மேல மலைல சிக்னல் எடுக்கலை போல. போனை சைலன்ட்லையும் போட்டு வச்சிருந்தேன்”

“சரிடா! பத்து மணி வரைக்கும் வத்தல்மலைல என்னடா வேலை?”

“இல்லை ண்ணா! நான் அப்போவே வந்துட்டேன். அப்படியே நம்ம ரஹ்மான் கடைக்கு போய் பரோட்டா சாப்பிட்டுட்டு வந்தேன்”

கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேல், நித்தம் நித்தம் நிந்திக்கும் சிந்தையுடன், தாய்க்கும், தம்பிக்கும் என்ன ஆயிற்றோ என்ற வேதனையில் உழன்று, ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்த தர்மனுக்கு அர்ஜுனின் பதிலைக் கேட்டு தலை சுத்தாமல் இருந்ததென்றால் விந்தை தான்!!!

——————————————————————————————————————————————–

தன்னறைக்கு வந்த அர்ஜுன் தன் போனை எடுத்து பார்க்க யக்ஞாவிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள்! திரும்ப அவளை அழைத்தான். ஒரே ரிங்கில் போனை எடுத்தாள் அவள்!

“ஹலோ! எம்.பி எங்க இருக்கீங்க எம்.பி? சொல்லொண்ணா ஆதங்கத்தில் அவள் குரல் தழுதழுத்தது!

“ஏய் இப்போ எதுக்கு அழுது சீன் போடுற? நான் வீட்ல தான் இருக்கேன்”

“ஏன் போனை எடுக்கவே இல்லை?”

“இங்க வத்தல்மலைனு ஒரு இடம் இருக்குது தெரியுமா? ஹில் ஸ்டேஷன். மேல கொஞ்சம் கிராமம் இருக்குது. அங்க அடிக்கடி மலைச்சரிவு வரதால ரோடு பெசிலிடீஸ் இல்லாம இருந்துச்சு. இப்போ தான் கவர்ன்மன்ட் அந்த வேலையை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. எம்.எல்.ஏ அதை பார்க்க போனார். நான் அவரு கூட போனேன். அங்க டவர் சுத்தமா கிடைக்கலை”

“அதுக்காக ஒரு போன் கூட செய்ய முடியாதா? மதியத்துலேர்ந்து, இப்போ டைம் என்ன பத்தரை, இப்போ வரைக்கும் ஒரு தடவை கூட என் நியாபகம் வரலையா? ச்சே! நான் மறந்தே போயிட்டேன். உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே. அப்புறம் எப்படி எனக்கு போன் பண்ணுவீங்க? பிடிக்காத எனக்கு போன் பண்ண வேண்டாம். உங்க அம்மாவுக்கு, அப்பாவுக்கு, அண்ணனுக்கு, அண்ணிக்கு யாருக்காவது போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல? ப்ளீஸ் எம்.பி நீங்க என்னை ஒரு பொருட்டாவே மதிக்க வேண்டாம். ஆனால் உங்க வீட்ல யாருக்காவது நீங்க எங்க போறீங்கனு சொல்லிடுங்க. நான் அவங்க கிட்ட போன் பண்ணி உங்களை பத்தி விசாரிச்சுகிறேன். இந்த நேரத்துக்கு என் கூட போன் பேசுறது உங்களுக்கு தொந்திரவா இருக்கும். நீங்க போய் படுத்து நல்ல தூங்குங்க” அழுகையினுடே திக்கி திணறி பேசி போனை வைத்து விட்டாள் யக்ஞா!

அவள் அழுகையை கேட்டு எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனை அது பாதித்தது! அன்று அவன் கனவுகளில் அவள் ஆட்சி செய்தாள்!!

——————————————————————————————————————————————–  

இரவு பத்மஜாவின் அறையிலேயே தர்மன் படுத்துக் கொள்ள, அவனை மட்டும் தனியே அங்கே விட மனமில்லாமல், பிள்ளைகளை மலயனாதன் பொறுப்பில் விட்டுவிட்டு, சுசித்ராவும் அந்த அறையின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்!

மருந்துகளின் பயனால் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றார் பத்மஜா, ஆனால் தர்மனோ உறக்கம் தொலைத்தான். துர்சொப்பனங்கள் அவனை சூழ்ந்து கொள்ள, பலமுறை பதறி எழுந்து, பத்மஜா அங்கிருப்பதை உறுதி செய்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும் சுசித்ராவும் அவனுடன் சேர்ந்து எழுந்து அமர்ந்து அவனை ஆசுவாசபடுத்துவாள். 

இப்படியாக அவர்கள் இரவு கழிய, மறுநாள் காலை வழக்கம் போல அலுவலகத்துக்கு தயாராகி நின்றார் பத்மஜா!

“மம்மி! இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடலாம்ல?”

“அறிவே இல்லாம பேசாத தர்மா! நீ என்ன உன் ஆபிஸ் மாதிரி நினைச்சியா? சும்மா ஏனோ தானோனு போனோம் வந்தோம்னு இருக்க?!!! நேத்து ஒரு நாள் பொண்ணு வீட்டுக்காரங்க வராங்கனு லீவ் போட்டதே எவ்ளோ வேலை சேர்ந்து போய் கிடக்கும் தெரியுமா? எவனும் நேத்து ஃபீல்ட்க்கு போயிருக்கவே மாட்டானுங்க. நான் போய் இன்னைக்கு எல்லாரையும் லெப்ட் ரைட் வாங்குனா தான் வேலை நடக்கும்”

தன் வேலையை தவிர, வேறு யார் வேலையும் பெரிதில்லை என்பது போலும், தன் எண்ணங்களை விட வேறு யார் எண்ணங்களும் உயர்ந்ததில்லை என்பது போலும், நேற்று செய்த முட்டாள்தனம் எதுவும் ஒரு பொருட்டில்லை என்பது போலும் சாதாரணமாய் பேசி செல்லும் தன் தாயை நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான் தர்மன்! அதை தவிர வேறு என்ன செய்து விட முடியும்??

“சரி மம்மி! நடுவுல ஜூஸ் குடிங்க. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க”

“ம்ம். ஆங்…அப்புறம் நேத்து நைட் எனக்கு யக்ஞா கால் பண்ணியிருந்தா. நேத்து இருந்த மனநிலைக்கு எடுத்து பேசல. அப்புறம் இன்னைக்கு காலையில போன் பண்ணி நேத்து போன் பார்க்கலைனு சொல்லிட்டேன். வேற எதுவும் சொல்லலை. அர்ஜுன் தூங்கிட்டு இருப்பான். அவன் இறங்கி வந்ததும், நேத்து நடந்ததை பத்தி யக்ஞா கிட்ட எதுவும் பேச வேண்டாம்னு சொல்லிடு”

“சரி மம்மி!”

சரியாக அதே சமயம் அர்ஜுன் கீழிறங்கி வந்தான்.

“கண்ணு! என்ன இன்னைக்கு நேரமா எழுந்துட்ட? நேத்து லேட்டா தானே தூங்குன? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே”

“பரவாயில்லை மம்மி! உங்களுக்கு…..” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே தர்மன் பின்னாலிருந்து எதுவும் பேச வேண்டாமென சைகை செய்ய, “ம்ம்…நீங்க ஆபிஸ் கிளம்பிடீங்களா?” 

“ஆமா கண்ணு! அப்புறம் யக்ஞா எனக்கு போன் பண்ணினா. நீ எங்கனு கேட்டா. பேசிடு. அவ கிட்ட வேற எதுவும் சொல்ல வேண்டாம். நான் என்ன சொல்றேன்னு புரியுதுல?”

“ஆங்…..சொல்லலை மம்மி” 

அவர் சென்றதும் அர்ஜுன், தர்மன் முன் சங்கடத்துடன் நின்றான், “அண்ணா! நேத்து நடந்ததுக்கு சாரி ண்ணா!”