Advertisement

“மம்மி இப்போ என்ன ஆச்சுன்னு அழுவுறீங்க? அதான் கரெக்ட் டயத்துக்கு அண்ணா வந்துட்டாருல”

தர்மன் அறைக்குள் நுழைந்தான்.

“மம்மி! புரிஞ்சிகோங்க மம்மி. ஆபிஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்த்தி. விட்டுட்டு கிளம்ப முடியல. அதான் இன்னைக்கு காலையிலே கிளம்புனோம்”

“டேய் போடா போக்கத்தவனே! பெரிய புடலங்காய் வேலை! என்ன பெரிய வேலை செஞ்சு கிழிச்சிட்ட நீ? இந்த வயசுலேயும் தினம் நான் நாய் மாதிரி எவ்ளோ கிலோமீட்டர் டிராவல் பண்ணி வேலை பார்க்கிறேன் தெரியுமா? இந்த காலெல்லாம் அப்படியே வீங்கி போகுது. யாருக்காக? உங்களுக்காக தானே டா? சரி! புள்ளைங்க நாள பின்ன கஷ்டப்படக் கூடாதே, நாலைஞ்சு இடம், நிலம், புலம், சொத்து, சொந்த வீடுன்னு நல்ல வாழணும்னு தானே இப்படி மாடா உழைக்கிறேன். அது புரியுதா டா உனக்கு? வந்துட்டான் பேச. ஆபிஸாம் ஆபீஸ்”

விழாவிற்கு வாங்கிய இனிப்புகளில் ஒன்றை உள்ளே தள்ளியபடி அங்கு வந்த மலயனாதன், “விடு பத்து! அதான் டயத்துக்கு வந்துட்டான்ல”

“அர்ஜுன் அவரை பேச வேண்டாம்னு சொல்லு அர்ஜுன். நான் கொலைகாரியா மாறிடுவேன்”

“ஆமா இப்போ மட்டும் என்னவாம் நீ அப்படி தானே இருக்க?”

“அட சீ நிறுத்துங்க! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க மரியாதை கெட்டு போய்டும். ச்சே! என்ன மனுஷனோ?! இந்த காம்ப்ளக்ஸ் வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். பணத்துக்கு அங்கேயும், இங்கேயும் லோலோனு அலைஞ்சு, கஷ்ட்டப்பட்டு எவன் எவன் கிட்டலாமோ கடன் வாங்கி இந்த காம்ப்ளக்சை நான் வாங்கி போடுவேனாம், இவரு ஜாலியா காலி நீட்டி படுத்திருந்து பார்த்துட்டு, வேஷ்டி, சட்டை போட்டுட்டு ஜம்முனு ஃபங்ஷனுக்கு முன்னாடி வந்து நின்னுடுவாராம். ஒரு சல்லி காசு நீங்க செலவு பண்ணினீங்களா? அவ்வளவும் என் பணம். ஏன் உங்க ரிட்டயர்மன்ட் காசை எடுத்துக் கொடுக்க வேண்டியது தானே? அதுக்கு மனசு வரலை. அப்படியே பெரிய பாசக்கார அப்பனாட்டம் புள்ளைக்கு சப்போர்ட் பண்ணிட்டு பேச வந்துட்டாரு. அங்க வந்தும் சும்மா இருந்தாரா, எம்.எல்.ஏ என்ன பண்றீங்கன்னு கேக்குறாரு. வீட்ல சும்மா தான் இருக்கேன்னு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சொல்றார். எனக்கு அவமானமா இருக்குது. ரிட்டையர் ஆனோமா ஏதோ ஒரு பிசினஸை பார்த்து கொஞ்ச காசு சம்பாதிச்சு புள்ளைங்களுக்கு சொத்து சேர்த்தோமானு இல்லாம கடைசி காலம் வரைக்கும் இப்படி என் கிட்ட சுரண்டி சுரண்டியே என்னை ஒன்னும் இல்லாம நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுங்க. அது தானே உங்க ஆசை? ”

“மம்மி! போதும் மம்மி விடுங்க! பேசாம கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க” அர்ஜுன் அவர் அறை கதவை சாற்றிவிட்டு அங்கிருந்து கழண்டுகொள்ள, தர்மன் தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

“என்னாச்சுபா? தலை வலிக்குதா? கொஞ்ச நாளா தலை வலி வரதில்லைன்னு சொன்ன? இப்போ மறுபடியும் வருதா என்ன? மாத்திரை சாப்பிடுறியா? காலையிலே ரெகுலரா வாக்கிங் போக சொன்னாரே டாக்டர், போகுறியா இல்லையா? எவ்ளோ நாளா இப்படி வலிக்குது?”

“அப்பா! டிராவல் பன்னினது என்னவோ தலை வலிக்கிற மாதிரி இருக்குது பா. விடுங்க”

“சரி சரி பா. தலையை பிடிச்சிட்டு உட்கார்ந்திருந்தியேனு கேட்டேன். ஏன்னா இப்படியெல்லாம் அடிக்கடி தலைவலி வந்தா நல்லதில்லை. உடனே மறுபடியும் செக் பண்ணிடனும் பா. கொரோனா வேற ஜாஸ்த்தியாயிட்டே போகுது. தலை வலியும் அதோட ஒரு சிம்ப்டம் தான். இந்த நம்ம வேலாயுதம் இல்லை, அவரு அக்கா பையன், அதான் பா ஜி.ஹெச்ல வேலை பார்த்தாரே, ராதை சித்தியோட அண்ணன், உங்க கல்யாணத்துக்கு கூட வந்தாரே பா?”

“ஆமாம்பா சொல்லுங்கப்பா”

“அவரு ரெண்டு நாள் முன்னாடி கொரோனால செத்து போய்ட்டாரு. நல்லா தான் இருந்தாரு மனுஷன். இப்படி தான் சின்ன தலைவலி, உடம்புவலி, சளினு சொல்லிட்டு இருந்தாராம். திடீருன்னு சீரியஸ் ஆகி ஹாஸ்பிட்டல் கொண்டு போனாங்க, போற வழியிலேயே ஆள் அவுட். அதுக்கு தான் பா சொல்றேன். ஜாக்கிரதையா இருக்கனும்”

ஊசிக் குத்தியதை போல் இருந்த தலைவலி இப்பொழுது சுத்தியலை வைத்து இடித்தது போல பெரிதாயிற்று.

அவன் முன் சுசித்ராவின் கரம் காப்பி கோப்பையை நீட்டியது.

“எனக்கு காப்பி பிடிக்காது, வேண்டாம், அது, இது, ஆணை பூணைனு சொல்லாம. இதை குடிங்க. கொஞ்சம் ரிலீஃபா இருக்கும். குடிச்சிட்டு கொஞ்சம் நேரம் படுத்து தூங்குங்க”

“பிள்ளைங்க ஏதாவது சாப்பிட்டாங்களா?”

“ரெண்டு பேரும் நல்ல சாப்பிட்டாங்க. நல்ல தண்ணி குடிச்சாங்க. நல்ல விளையாடுறாங்க. உங்களுக்கு இருக்கிற டென்ஷன் போதும். பிள்ளைங்களை பத்தி கவலைப்படாம நிம்மதியா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க”

புன்னகையுடன் தன் முன் நின்றவளை பார்த்து ஆதுரமாய் சிரித்தான்.

“தேங்க்ஸ் பார் எவரிதிங் சுச்! என் வாழ்க்கையில நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான். தேங்க்ஸ் சோ மச்!”

“ஹ்ம்ம்! நீங்க கொடுத்து வச்சவர், அதான் உங்களுக்கு இப்படி ஒரு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருக்கா! ஆனா என் தலையெழுத்து பாருங்க உங்க கிட்ட மாட்டிட்டு இப்படி கஷ்டப்படுறேன். என்ன செய்ய?” 

பக்கத்தில் நின்றிருந்தவள் இடுப்பை பிடித்து கிள்ளியவன், “ஏய்! ஜெல்லி மிட்டாய்! வாய் உனக்கு ரொம்ப ஜாஸ்த்தி ஆயிடுச்சு. நைட் அதை கட்டி போடுறேன் வா”

“போடா பீன் பேக்!” அவன் முதுகில் மொத்திவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தாள். 

காப்பியை பருகி விட்டு படுக்க, தலை வலி குறைந்து, மறுநாள் புது தலை வலி பிறப்பதற்கான வழி வகுத்தது.

தன் ஆஸ்தான ஜோசியர் முன் அமர்ந்திருந்தார் பத்மஜா.

“உங்க பையனுக்கு செவ்வாய் தோஷம் கழிஞ்சிருச்சு. நீங்க சுத்த ஜாதகம் உள்ள பொண்ணே பார்க்கலாம். பொண்ணு தெற்க்குலேர்ந்து தான் அமையும். இவரோட ஜாதகம் எப்படின்னு பார்த்தீங்கனா கொஞ்சம் அதிகாரமான, ஆளுமையான ஜாதகம். எந்த துறையல இவர் கால் வச்சாலும் உயரத்துக்கு போய்டுவாரு. ஒரே நிமிஷத்துல எல்லாரையும் கவர்ந்து இழுத்துடுவாரு. இவருக்கு அமைய போற பொண்ணு ரொம்ப அமைதியா, அடங்கி போற மாதிரி தான் அமையும். கல்யாணம் மட்டும் கொஞ்சம்……”

“கல்யாணத்துல எதும் பிரச்சனை வருங்களா?”

“கல்யாணம் நல்லபடியா விமர்சையா நடக்கும். ஆனா ஆரம்பத்துல நிறைய தடங்கல் வரும். இழுத்துபுடிச்சு தான் கட்டி வைக்கணும். அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கை அமோகமா அமையும்”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க”

அலுவலகத்துக்கு திரும்பிய பத்மஜாவுக்கு காலையில் திருமண தகவல் மையம் மூலம் வந்த பெண்ணின் புகைப்படம் கண் முன் வந்து போனது.

ஒல்லியான உடல்வாகு, கொஞ்சம் உயரம் தான், நல்ல குடும்பம், விசாரித்தபின் தான் சுற்றி முற்றி சொந்தமென்பது தெரிய வந்தது. நல்ல அந்தஸ்து. கைவசம் பெரிய தொழில் இரண்டு மூன்று கடைகள், சேலம் நகரத்தின் பிரதான இடத்தில் பெரிய வீடு, நிலம் புலம் என்ன பல வசதிகள், வீட்டிற்கு ஒரே பெண், சொத்து அங்கும் இங்கும் பிரியாது, எல்லாம் சரி தான் ஆனால் பெண்ணின் நிறம், மாநிறத்திற்கும் இரண்டு மூன்று ஷேட் கம்மி, சீட்டு கட்டு போல் கட்டிய அத்தனையும் அந்த ஒரு இடத்தில் பொலபொலவென இடிந்தது.

மனது ரெண்டும், மூணும் ஏழு என கணக்கு போட்டது. வீட்டிற்கு வந்து புகைப்படத்தை அர்ஜுனிடம் நீட்ட, அவனோ பார்த்த மறுநொடி, “பிடிக்கலை” என்றான். 

“ஏன்டா பிடிக்கலை?”

“இது என்ன கேள்வி? அந்த பொண்ணை பார்த்துட்டு தான் இப்படி பேசுறீங்களா?”

“டேய்! கொஞ்சம் தான் டா கலர் கம்மி. மத்தபடி நல்ல குடும்பமாம். நல்ல வசதி. மாப்பிளைக்கு நல்ல செய்வாங்களாம். உங்க அப்பாவோட சொந்தம் தான்”

“இல்லை மம்மி! செட் ஆகாது” 

“பாக்குற பொண்ணுக்கெல்லாம் இப்படி நொள்ளை நொட்டை சொன்னா எப்படி கண்ணு?! அன்னைக்கு ஒரு பொண்ணு நல்ல கலரா நல்லா இருந்துச்சு. அவங்க அப்பா அம்மா டீச்சர் அதனால வேண்டாம்னு சொல்ற”

“ஆமா நாள பின்ன நான் ஹை பொசிஷன்ல இருப்பேன். அப்போ என் மாமானார் மாமியார் என்ன பண்றாங்கனு கேட்டா டீச்சரா இருக்காங்னு சொன்னா நல்லாவா இருக்கும்?! கொஞ்சமாவது என் ஸ்டேடஸ்க்கு இருக்க வேண்டாமா?”

“சரிடா நீ சொல்றது கூட ஒரு வகையில நியாயம் தான். விட்டுரு. ராணிபேட்டையில பார்த்த பொண்ணு ஆளும் நல்லா தான் இருந்துச்சு, பேக்ரவுண்ட் நல்லா தான் இருந்துச்சு. அதை ஏன் வேண்டாம்னு சொன்ன?”

“மம்மி! கலரா இருந்துட்டா மட்டும் போதுமா? அந்த பொண்ணு வாயை பார்த்தீங்களா? நல்ல வாஸ்பேசின் வாய் மாதிரி காது வரைக்கும்! மூஞ்சில வாய் மட்டும் தான் தெரியுது. வேற ஒன்னும் அந்த பொண்ணு கிட்ட ஸ்பெஷல்லா இல்லை”

“இப்படியே சொல்லிட்டே போனா என்ன கண்ணு அர்த்தம்? வயசு ஏறிட்டே போகுது கண்ணு”

“ஏன் இப்போ என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க? இதுக்கு தான் நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன். என்ன விட்ருங்க! நான் முதல அரசியல்ல பெரிய ஆளா வரணும். அது தான் என்னோட ஒரே குறிக்கோள்”

“டேய்! யார்டா இவன் கூறுக்கெட்டவன்? எப்ப பாரு அரசியல் அரசியல்னுட்டு. இப்படியே பேசி பேசியே உன் கல்யாணத்தை நீயே கெடுத்துடாத. அரசியல் இருக்கிறவனுக்கு யாருடா பொண்ணு கொடுப்பா?”

“பொண்ணு கொடுக்கவே வேண்டாம். கொடுக்கக் கூடாதுன்னு தான் அரசியல்ல இறங்கணும்னு முடிவு பண்ணினேன்”

“ஏன்டா இப்படியெல்லாம் பேசுற?”

“மம்மி! நான் இன்னும் பழசு எதையும் மறக்கலை. என் மனசுல உள்ள காயம் என்னைக்கும் ஆறவே ஆறாது. என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆளை விடுங்க” 

“பார்த்தியா டா தர்மா! இவன் என்ன பேசிட்டு போறான்னு? கொஞ்சம் அவன் கிட்ட இதை பத்தி பேசுடா. நீ தான்டா வீட்டுக்கு மூத்த புள்ளை. இப்படி எதையுமே கண்டுக்காம இருந்தா எப்படி? அவன் கிட்ட போய் பேசு டா”

நேற்றைய தலைவலி காணாமல் போயிருந்தது. புதிதாய் பிறந்த இன்றைய தலைவலியை தீர்க்க தன் உடன்பிறந்தவனை தேடிச் சென்றான் தர்மன். 

 

Advertisement