Advertisement

பெங்களூர் சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டிருந்தது அந்த புது சிவப்பு நிற சான்ட்ரோ. 

மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ

யுவன் சங்கர் ராஜா இசைத்துக் கொண்டிருக்க, காரை ஓட்டிக் கொண்டிருந்த தர்மனின் உதடுகளில் ஒரு அலட்சிய புன்னகை. மாநிறம், சராசரி உயரம், பூசிய உடல்வாகு, எளிமையான உடை, கையில், காதில் எந்த ஆபரனமுமில்லை 

பின் இருக்கையில், பின் பக்கம் சாய்த்து அமர்ந்திருந்தாள் சுசித்ரா! தர்மனின் தர்ம பத்தினி!

தர்மனின் அதே நிறம், அதே உயரம், கண்களில் கண்ணாடி, காதில் சின்ன ஜிமிக்கி. அவளின் மடியில் மூன்று வயதான ஒரு பிள்ளை வாயை பிளந்துக் கொண்டு அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது. கால் மாட்டில் ஐந்து வயதான ஒரு பிள்ளை காலை குறுக்கி படுத்திருந்தது. 

மதி மயக்கும் யேசுதாசின் குரலை கிழித்துக் கொண்டு கைப்பேசி அலறியது.

சட்டென்று அவள் கண் திறந்து கார் ஓட்டிக்கொண்டிருந்தவனை பார்க்க, முன் கண்ணாடி வழியே அவளை பார்த்தவன் ஒரு தலையசைப்புடன் ஹேன்ட்ஸ்ஃப்ரீ மோடில் அழைப்பை ஏற்றான்.

“சொல்லுங்க மம்மி”

“எங்க வந்திட்டு இருக்கப்பா?”

“இப்போ தான் மம்மி கிருஷ்ணகிரி டோல் பக்கம் வரப்போறோம்”

பட்டென்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மறுபடியும் யேசுதாஸ் தன் குரலை மீட்ட, அவன் பெருமூச்சொன்றை மீட்டினான்

“என்னாச்சு?”

“எப்பவும் நடக்கிறது தான். இன்னும் ஊருக்கு போய் என்னென்ன காத்துட்டு இருக்கோ? ஊப்ப்ப்…..”

“தெரிஞ்ச விஷயம் தானே? விட்டு தள்ளுங்க”

மீண்டும் அடுத்த அழைப்பு. சலிப்புடன் அழைப்பை ஏற்றான்.

“என்னப்பா எங்க வந்துட்டு இருக்கீங்க?”

“இப்ப தான் அப்பா கிருஷ்ணகிரி டோல் பக்கம் வரோம்”

“அப்படியா? ஏன் இவ்ளோ நேரம் ஆயிடுச்சு? நாலு மணிக்கே கிளம்பிட்டீங்களே பா?”

“ஹொசூர்ல ட்ராஃபிக் பா. பசங்க வேற ரெண்டு தடவை டாய்லட் போகணும்னு நிறுத்த சொன்னாங்கபா”

“சரிப்பா. நேராயிடுச்சேனு கேட்டேன். ஒரு மணி நேரம் முன்னாடி போன் பண்ணினப்போ சூளகிரி தாண்டிட்டதா சொன்னியா? அதான் கேட்டேன்”

“ம்ம்ச்ச். ஆமா பா. அதான் சொல்றேன்ல”

“சரிப்பா சரி பார்த்து பொறுமையா வா. இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.எல்.ஏ வந்துடுவாரு. அதுக்குள்ள வந்துடுங்க. அதுக்குனு வேகமா ஓட்டிடாதபா. பார்த்து பொறுமையா நேரத்துக்கு வந்திடுங்க”

தொலைபேசி அணைப்பை துண்டித்தவன் தலையை அழுந்த தேய்த்துக் கொண்டான்.

“சரி டென்ஷன் ஆகாதீங்க. தலை வலி வரதுக்கா?”

“இல்லம்மா! ரொம்ப படுத்துறாங்க மா. நீயே பாக்குற இல்லை? நாம என்ன வேனும்னா லேட்டா கிளம்பினோம்? புள்ளைங்களை வச்சிக்கிட்டு ஒன்னு தெக்குல போகுது, ஒன்னு வடக்குல போகுது. இதை இரண்டையும் கட்டி மேய்ச்சி ரெடி ஆகுறதுக்குள்ள லேட் ஆயிடுச்சு. நேத்தே கிளம்பலாம்னு பார்த்தா ஆபீஸ் வேலை தலைக்கு மேல இருந்துச்சு. முடிக்க லேட் ஆயிடுச்சு. நைட் கிளம்ப வேண்டாமே காலையிலே கிளம்பலாமே பார்த்தா, காலையிலேர்ந்து ஒரு பத்து போன், எங்க இருக்க? எங்க இருக்க? எங்க இருக்க? நான் என்ன பறந்தா வர முடியும்? மம்மி என்னடானா போன் பண்ணிட்டு எங்க இருக்கனு கேட்டுட்டு டொப்புன்னு போனை வைக்கிறாங்க. இவரு என்னடானா ஒரு பத்து கேள்வி கேட்டு குடைஞ்சு எடுக்கிறார். ச்சே! அந்த எம்.எல்.ஏ வந்தா வரட்டுமே இப்போ என்னவாம்?”

அவன் பேசி முடிக்கவும் மற்றுமொரு போன். இம்முறை அவள் இதழில் சிரிப்பு பூத்தது.

ஒரு இளமையான குரல் துள்ளலுடன் ஒலித்தது. 

“அண்ணா! எங்க வந்துட்டு இருக்கீங்க?”

“வரேன் அர்ஜுன்! இப்போ தான் கிருஷ்ணகிரி வந்திருக்கேன். பேசாம நம்ம வீட்ல ஒரு பெரிய டிராக்கிங் சிஸ்டம் வச்சு நான் எங்க வந்துட்டு இருக்கேன்னு டிராக் பண்ணிட்டே இருங்க”

“ஏன் என்னாச்சு?”

“பின்ன என்ன, ஃப்ர்ஸ்ட் மம்மி கூப்பிடாங்க. அடுத்து அப்பா கூப்பிட்டாங்க. வரேன் அர்ஜுன்”

“வாங்க”

“எம்.எல்.ஏ வந்துட்டாரா என்ன?”

“வர நேரம் தான். சென்னைல ஒரு மீட்டிங் முடிச்சிட்டு டைரக்ட்டா இங்க வராராம். இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும் போல”

“ஓ சரி அர்ஜுன் நான் வரேன்”

போனை அணைத்துவிட்டு அவளை கண்ணாடி வழியே பார்த்தவன், “இந்த கொரானா டைம்ல இதெல்லாம் தேவையா சொல்லு? அவரு சென்னைலேர்ந்து அப்படியே வராராம். என்னத்த சொல்ல?”

“அதெல்லாம் ஒன்னும் நடக்காது. எப்பவும் நெகட்டிவா யோசிக்காதீங்க”

அடுத்த அரை மணி நேரத்தில் தர்மபுரியில் கிரகப்பிரவேச விழா நடக்கும் வளாகத்துக்கு வந்து சேர்ந்தனர். தர்மனின் தந்தை மலயனாதனும், பத்மஜாவும் எம்.எல்.ஏவை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர். சற்றே படாடோப ஏற்பாடு தான். 

அந்த வளாகத்தை சுற்றி ஆடம்பரமாய் தொங்கிய மின் விளக்குகள், பந்தல் பந்தலாய் பூக்கள், வந்தவர்களை குளிர்விக்கும் வரவேற்பு பானம், இரண்டு வகை இனிப்பு, முக்கனிகள், அறுசுவைகள், விருந்துண்டு திரும்பி செல்வோருக்கு ஒரு சின்ன பையில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ என ஒரு மினி கல்யாண ஏற்பாடு அரங்கேறியிருந்தது. 

“மம்மி! எம்.எல்.ஏ இன்னும் வரலைல?”

தர்மனின் கேள்விக்கு தலையை திருப்பிக் கொண்டு சென்றார் பத்மஜா.

தர்மனின் கண்களும், சுசித்ராவின் கண்களும் ஒருமுறை சங்கேதமாய் சந்தித்துக் சென்றன.

சிறிது நேரத்தில் வெள்ளை நிற ரேஞ் ரோவரில் எம்.எல்.ஏவும், அவர் மனைவியும் வந்து இறங்க, அவர் பின்னால் இரண்டு கார்களில் அவர் இரண்டு மகன்களும் தத்தம் மனைவிமாருடன் இறங்கினர். அந்த இடமே பரபரப்பானது.

மலயனாதன். பத்மஜா, தர்மா அனைவரும் சென்று அவரை வரவேற்ற, அப்பொழுது தான் தூங்கி எழுந்த குழந்தை ஒரு தோளிலும், மற்றொரு குழந்தை கையிலுமாய் சுசித்ரா அவர்களை தொடர்ந்தாள்.

பத்மஜா தர்மாவை காலில் விழுந்து வணங்கும்படி சைகை செய்ய, அவனும் அதை வழிமொழிந்தான். சுசித்ராவும் தர்மாவை பின்பற்றி குழந்தையுடன் சேர்ந்து காலில் விழுந்து எழுந்தாள். எம்.எல்.ஏ பெருந்தன்மையாக தனக்கு இந்த சம்பிராதாயங்கள் பிடிக்காதென்றபடியே அவர்களை ஆசிர்வதித்தார்(?!)

“என்ன அஸிஸ்டன்ட் எக்ஸிகியுடிவ் எஞ்சினியர் மேடம் எப்படி இருக்கீங்க?”

“ஏதோ உங்க தயவுல நல்ல இருக்கோம் சார்”

“என்னமா இப்படி சொல்லிட்டீங்க? அக்ரி டிபார்ட்மன்ட்டே உங்களை பார்த்து பயப்படுதாம்?! வேலையை முடிக்கலேனா துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட விடுறீங்களாம்?!”

“நம்ம கடமையை நாம செய்றோம் சார் அவ்ளோ தான்”

“ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க. யாரா இருந்தாலும் தூக்கிடலாம்”

“கண்டிப்பா கண்டிப்பா சார்”

“அப்புறம் மலயனாதன் சார். ரிட்டையர் ஆயாச்சு. அதுவும் ரொம்ப முக்கியமான பதவி, கலெக்டர் பி.சியா இருந்து ரிட்டயர் ஆயாச்சு. எப்பவும் பிசியாவே இருந்திருப்பீங்க. இப்போ எப்படி நேரம் போகுது?”

“சும்மா தான் சார் வீட்ல….”

பத்மஜா மலயனாதனை இடைவெட்டினார், “அவரு புதுசா ஒரு பிசினஸ் பண்ற ஐடியாவுல இருக்குறாரு சார்”

“அப்படியா ரொம்ப நல்லது. அப்படி தான் ஏதாவது செஞ்சிட்டே இருக்கணும். ஆமா எங்க நம்ம ஹீரோ சார் அர்ஜுன் எம்.பி?”

“அர்ஜூன் எங்கப்பா?”

“டேய் மித்ரா! அர்ஜுன் எங்க?”

“அர்ஜுன்! ஏய்! அவனுக்கு போன் போடுறா”

அங்கிருந்த அத்துணை குரல்களும், கண்களும் அர்ஜுனை தேடியது.

“மித்ரா! எங்கடா போய்ட்டான் இவன்? எம்.எல்.ஏ வந்துட்டாரு இவனை ஆளை காணோம்” அர்ஜுனின் மற்றொரு நண்பனின் கேள்விக்கு மித்ரனிடமிருந்து அலட்டலில்லாத பதில் வந்தது.

“வருவான் டா. இதென்ன புது விஷயமா சொல்லு. சின்ன வயசுலேர்ந்து அவனை பார்க்கிறோமே. எப்பவுமே லேட்டா என்ட்ரி கொடுத்து எல்லார் கவனத்தையும் அவன் மேல திருப்பிடுவான். இதோ வந்துட்டாரு பாரு அர்ஜுன் எம்.பி”

படபடவென புல்லட் சத்தத்துடன் அங்கு வந்திறங்கினான் அர்ஜுன் எம்.பி! அர்ஜுன் மலயனாதன் பத்மஜா! 

நல்ல உயரம், கோதுமையும், மைதாவும் கலந்த நிறம். முறுக்கு மீசை, ஆங்காங்கே ஓட்டிக் கொண்டிருந்த தாடி, வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேன்ட், கண்களில் கூலர்ஸ், ஒரு கையில் தங்க காப்பு, மற்றொரு கையில் ஆப்பிள் கைக்கடிகாரம், விலையுயர்ந்த ஷூ, மிடுக்குடன் நடந்து வந்த அவன் புறம் அனைத்து கண்களும் திரும்பின.

ஓடி வந்து எம்.எல்.ஏவின் கை பற்றினான், “அண்ணன்! வாங்கண்ணன் வாங்கண்ணன்! சாரிண்ணன்! பக்கத்துல போயிருந்தேன் லேட் ஆயிடுச்சு”

“என்னப்பா என் என்ட்ரி விட உன் என்ட்ரி மாஸ்ஸா இருக்குது! எனக்கே போட்டியா வந்துடவ போலேயே?”

“அய்யோ! என்னண்ணன் என்னை போய் உங்கக் கூட கம்பேர் பண்ணிக்கிட்டு. வாங்கண்ணன் ஃபங்ஷன் ஆரம்பிச்சுடலாம்”

அவர் கையில் ஒரு கத்திரிகோல் கொடுக்கப்பட, வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி அந்த வளாகத்தை திறந்து வைத்தார்.

கீழே சின்னதும் பெரிதுமாய் நாலு கடைகள், மேலே ஒரு கடையும், பத்து அறைகள் கொண்ட ஒரு ஹாஸ்டலும், அதற்கும் மேலே ஒரு செல்போன் டவர் என மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் அது.

எம்.எல்.ஏ சாப்பிட்டுக் கொண்டிருக்க, மலயனாதனின் குடும்பத்தினர் அனைவரும் அவர் முன்பு பவ்யமாய் நின்று பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“அம்மா! பசிக்குது மா” கையை சுரண்டிய தன் குழந்தையை கண்களாலேயே அடக்கினாள் சுசித்ரா.

எம்.எல்.ஏவும் அவர் குடும்பமும் கிளம்பும் வரை தக்கவாறு உபசரிக்க, கிளம்பும் முன் எம்.எஸ்.ஏ அர்ஜுனின் முதுகை தட்டிவிட்டு சென்றார். அவர் மூத்த மகனும், இளைய மகனும் அர்ஜுனுடன் கை கோர்த்து, நட்பு பாராட்டி சென்றனர்.

விழாவிற்கு வந்த மற்ற உற்றார் உறவினர்களை ஓடி ஓடிச் சென்று கவனித்தனர் தர்மனும், சுசித்ராவும். அர்ஜுன் தன் நண்பர்களுடனும், போனிலும் பரபரப்பாக இருந்தான்!! 

நல்லபடியாக விழாவை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தர்மனுக்கு தலை வலி பிளந்தது. அர்ஜுன் பத்மஜாவுடன் பேச்சு வார்த்தையில் இருந்தான்.

“ஏன் மம்மி?”

“பின்ன என்னடா? ஒருவாரமா எவ்ளோ படிச்சு படிச்சு சொல்லிட்டு இருந்தேன். கண்ணு இது ஒரு முக்கியமான ஃபங்ஷன். ரெண்டு நாள் முந்தியே வந்துடுப்பானு. ஏதோ மூணாவது மனுஷன் மாதிரி இப்படி கடைசி நேரத்துல வந்து நிக்குறான். என்ன நினைச்சுகிட்டான் அவன் மனசுல? இந்த குடும்பம் வேண்டாம், நான் வேண்டாம்னு நினைச்சா அவனை அப்படியே அங்கேயே இருக்கச் சொல்லு. இங்க வர தேவையில்லை. இங்க வந்து ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை. எல்லாம் எனக்கு பார்த்துக்க தெரியும். பார்த்ததேயில்லை இன்னைக்கு ஃபங்ஷன் எவ்ளோ கிராண்டா நடந்துச்சுன்னு? இவனா எல்லாம் வந்து கிழிச்சான்? புள்ளைங்களுக்கு புள்ளைங்களுக்குனு ஓடி ஓடி சம்பாத்திச்சு வந்து கொட்டுறேன் பார்த்தியா, என்ன சொல்லணும்?! இவங்க எதுவும் செய்ய மாட்டாங்களாம், ஆனா சொத்து மட்டும் வேணுமாம்! நடத்துங்க நல்ல நடத்துங்க! இன்னும் எவ்ளோ காலத்துக்குன்னு நானும் பார்த்துடுறேன். மேலேர்ந்து எல்லாத்தையும் கடவுள் பார்த்துட்டு தானே இருக்கார். பார்க்கலாம் எவ்ளோ தூரம்னு”

Advertisement