பொருட்கள் எதுவும் இன்னும் அதன் இடம் சேராது பெட்டியில் அடைந்திருக்க, அந்த புது வீட்டின் பெயிண்ட் வாசனைத் தாண்டி மல்லிகைப்பூ மணம் அவன் நாசியை நிறைத்தது. பால் டம்ளருடன் தன்னெதிரே நிற்கும் அழகியை பார்த்தான்.
“இன்னைக்கே இதெல்லாம் பண்ணனுமா?” என்று அவன் கேட்க, அவளுக்கு என்ன புரிந்ததோ வெட்கத்தில் தலை குனிந்தவள் பாலை கட்டிலின் கால் ஒட்டி கீழே வைத்துவிட்டு புதிதாய் வாங்கிப் போட்டிருந்த மெத்தையில் ஏறி ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டாள்.
அதுவரை அவளை பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலன் அவள் படுக்கவும், “ஏய் ஏய் என்ன பண்ற?” என்று வேகமாய் அவளை நெருங்கினான்.
அவனின் பதட்டம் புரியாது புருவம் சுருக்கி எழுந்தமர்ந்தவள், “என்னங்க? ஏதாவது வேணுமா?” என்று பார்க்க,
“நீ தெரிஞ்சு செய்றியா இல்லை தெரியாம செய்றியா அழகி?” என்று கேட்டுக்கொண்டே மெத்தையில் ஏறி அவளை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்திருந்தான் சக்திவேலன்.
சட்டென நெருங்கிவிட்டவன் நெஞ்சில் கைவைத்தவள் திணறலுடன், “நீங்கதான இன்னைக்கே பண்ணணுமான்னு கேட்டீங்க?” என்று நிமிர்ந்து பார்க்க, ஒருவிரல் கொண்டு அவள் நெற்றியிலிருந்து ஊர்வலம் இறங்கியவன், “மக்கு அழகி… இன்னைக்கே பால் காய்ச்சி உன் கிட்சன் வேலையை ஆரம்பிக்கணுமான்னு கேட்டேன்.”
“ஓ…” என்று குவிந்த அவள் இதழ்களில் பட்டென தன் இதழை பொருத்தியவன் பிடித்ததை பிரிய மனமின்றி இதழ் இணைப்பைத் தொடர, நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை அவளால்.
சிணுங்கலுடன் அவனை தள்ளிவிட, “என்னடி அழகி?” சரசமாய் அவள் வதனம் நிறைக்க நாசியின் நுனியால் அங்குமிங்குமாய் உலா போனான்.
அவன் தீண்டலை இரசித்து குழைந்தவள், “இன்னைக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.” என்றுநெகிழ்ந்து சொல்ல, அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்த சக்திவேலன், “என் வாழ்க்கையிலும் தான்.” என்று அவள் செவி உரசினான்.
“இனி நான் தனியாள் இல்லை. எனக்கு நீங்க இருக்கீங்க.” கரகரப்பாக வந்ததோ அவள் குரல்.
“எனக்கும் நீங்க இருக்கீங்க அழகி.” என்றவன் அழகியை அடுத்து யோசிக்கவே விடவில்லை. நெற்றியில் துவங்கி கழுத்தில் இளைப்பாறியவன் அங்கு தன் முகம் பதித்து, புரட்டி, முத்தமிட்டு லேசாக அவ்விடத்தை இதழுக்கிடையில் கவ்வ, அவன் நெருக்கம் கொடுக்கும் சிலிர்ப்பும் நடுக்கமும் அவள் மயிர்க்கால்களை நிமிரச் செய்து அவளையும் மீறி முனகல் வெளிப்பட்டது. அதுவரை பூவின் மென்மை போல் கையாண்டு தீண்டிக்கொண்டிருந்தவன் அடுத்து மொத்தமாய் அவளை வாரிச்சுருட்டும் வேலையில் இறங்க, முதலில் இதழ்கள் முந்த அதன் வழியில் கரங்கள் பிந்தி அழுத்தங்கள் கொடுத்தது.
காதலும் மோகமும் கூடி, கலந்து, களித்து களைத்த வேளையில் அன்று அவன் கட்டிய மஞ்சள் கயிறு மட்டும் அவனின் ஆழியாட்டத்தில் தப்பிப் பிழைத்து அவள் கழுத்தில் தன் இருப்பை உறுதி செய்துகொண்டது. மற்றவை காதல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட, செல்ல சிணுங்கல்களும் கொஞ்சல்களும் இரவின் இனிமையை குளுமையை பெருக்கியிருந்தது. அது எந்தளவுக்கு என்றால் அன்றைய குளுமை இன்று அவனின் தேகத்தில் வெம்மையை கூட்டும் அளவுக்கு நினைவுகள் மேலெழும்பி படுத்த, புது வீட்டின் புது அறையில் மகளுடன் கட்டிலில் படுத்திருந்தவன் சட்டென எழுந்துவிட்டான்.
முதல் நாள் இரவு அலைச்சலில் ஹாலில் படுத்திருந்ததால் எந்த நினைவும் வந்திருக்கவில்லை. இன்று கட்டில் பொறுத்தி மெத்தையில் படுத்தபின் அழகி நினைவு துரத்தியது. அந்த கட்டிலும் மெத்தையும் அவர்கள் திருமணம் முன்னிட்டு வாங்கியதுதான். இந்த வீடு போன்று புதிதாய் கட்டி பெயிண்ட் அடித்த ஒரு மாடி வீட்டில்தான் அவர்கள் வாழ்க்கை தொடங்கியது. வருடங்கள் கடந்து மீண்டும் நாசி தீண்டிய அந்த புது பெயிண்ட் வாசனை பழைய நினைவுகளை தூண்டிவிட்டிருக்க, உறங்கா இரவாகிப் போனது அவனுக்கு.
அந்நேரத்திலும் வேகவேகமாக தண்ணீரை மொண்டு ஊத்தி குளித்து வந்தவன் கயல்விழி கீழே விழுந்துவிடாத வண்ணம் தலையணை வைத்துவிட்டு பால்கனி கதவை திறந்துகொண்டு ஆழிக் காற்றை சுவாசித்து அனுபவித்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டான். கண்கள் அதன் பாட்டிற்கு மூட விழிகளில் உறக்கமில்லை, அவள் நினைவுகள் நிழலாய் கண்முன் அசைந்தது.
***
“பேஷண்ட் பேர், வயசு, எப்படி அடிபட்டுச்சுனு எல்லாம் சொல்லுங்க.” கையில் ஒரு நோட்டுடன் கேள்விகளை சரமாரியாய் அடுக்கிய செவிலியரிடம் ராஜா விஷயத்தை கூற,
“போலீசுக்கு சொல்லணும் சார்.” என்றாள் சீருடையில் இருந்த அப்பெண்.
“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். அந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு செக் பண்ணி சொல்லுங்க.” என்றாள் சக்தி.
“முதலுதவி பண்ணியிருக்கோம். அந்த பொண்ணு இன்னும் மயக்கம் தெளியல. டியூட்டி டாக்டர் பக்கத்துல போயிருக்காங்க. வந்துடுவாங்க. அவங்க பாத்துட்டு சொல்லுவாங்க.” என்றவர், “போலீசுக்கு சொல்லிடுங்க. இல்லைனா எங்களுக்கு பிரச்சனையாகிடும்.”
சரியென்று ராஜா சொல்லவும் வேகமாக அவர்களிடம் வந்த ரவி, “அதான் ஆஸ்பித்திரில சேத்தாச்சுல. நாம கிளம்பலாம்.” என்று குதிக்க,
“அந்த பொண்ணு யாரு என்னனு இன்னும் ஒன்னும் தெரில. கண்ணும் முழிக்கல. அப்படியே விட்டு வர சொல்றியா?” என்றாள் சக்தி.
“இன்னாத்துக்கு இப்போ அந்த பொண்ணை நீ சுமக்கனும்னு நினைக்குற? ரோட்டுல அப்படியே வுடமுடியாதுனு சொன்ன, சரினு இங்க வந்து சேத்தாச்சு. இத்தோட வுட்டு கிளம்பலாம்.” என்று ரவி பிடிவாதமாய் நிற்க, வாய்மொழி அல்லாது அமைதியாய் அங்கிருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்தாள் சக்தி.
“அந்த பொண்ணு கண் முழிச்சு பேசுற வரைக்கும் சக்தி எங்கேயும் வராதுன்னு அர்த்தம்.” என்று சரியாக கணித்துக் கூற, காலை தரையில் உதைத்த ரவி, “அப்போ சரக்கு? அதை ஆரு பாக்குறது?”
ராஜாவின் நெற்றி யோசனையில் சுருங்கி பார்வை சக்தியிடம் செல்ல, “நீங்க போய்ட்டு வாங்க. நான் இருக்கேன்.” என்றிருந்தாள் சக்தி.
“உன்னைய தனியா வுட்டு போக முடியாது.” ராஜாவுக்கு முன் ரவி மறுத்தான்.
சக்தி இதழில் இகழ்ச்சிப் புன்னகை குடிகொள்ள, ரவி காற்றில் ஒரு குத்துவிட்டான்.
“அதுக்குத் தெரியும்டா. நாம கிளம்பலாம். போகும் போது போலீசுக்கும் சொல்லிடுறேன்.” என்ற ராஜா சக்தியிடம் சிறு தலையசைப்புடன் நகர, கோபத்தில் ரவியும் அவனுடன் கிளம்பிவிட்டான்.
அந்த சிறிய அரசு சுகாதார நிலையத்தில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்த சக்தி அவ்விடத்தை சுற்றிப் பார்த்தாள். ஒன்றிரண்டு பேர் தவிர ஆள்நடமாட்டம் பெரிதாய் இல்லை. அந்த நிலையமும் பிரதான சாலையில் ஒரு கிளை சாலை சேருமிடத்தை ஒட்டி இருந்தமையால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு குறைவு என்பது போலவே தெரிந்தது. இருந்தாலும் மயக்கத்தில் கிடக்கும் பெண்ணை சந்தேகப்படும்படியாய் தேடிக்கொண்டு யாரேனும் வந்தால் அவர்களை தாக்கவென தன் கூரிய ஆயுதம் இடையில் இருக்கிறதா என்று வலது இடை மடிப்பை தொட்டுப் பார்த்துக்கொண்டாள் சக்தி.
அவள் பாதுகாப்பிற்கு என்று எப்போதும் அவளிடம் இருக்கும் அந்த சிறிய கத்தி பற்றி அவள் உடன் இருப்பவர்களுக்குக் கூடத் தெரியாது. அத்தனை சாமர்த்தியமாய் சந்தேகம் கொள்ளாதபடி தனக்கான அரணை தானே அமைத்துக்கொள்ளும் சாதுர்யத்தை வளர்த்துக்கொண்டவள் அவள். தன் கவனத்திற்கு வரும் தவறுகள் அனைத்திற்கும் தன்னிடம் தீர்வுண்டு என்ற நம்பிக்கையை அடுத்தடுத்த மணித்துளிகளில் நிரூபித்தாள்.
செவிலியர் சொல்லியது போல சற்று நேரத்தில் மருத்துவர் வந்து பார்க்க, அப்போதுதான் கண்விழித்த அப்பெண்ணோ பயத்தில் அலறியடித்து கட்டிலிலிருந்து குதித்து இறங்கினாள்.
“நீங்க பாதுகாப்பா இருக்கீங்கமா… உங்களுக்கு அடிபட்டிருக்கு அதை பாக்கத்தான் நான் வந்திருக்கேன்.” என்று ஆண் மருத்துவர் ஒருவர் சொல்லிக்கொண்டிருக்க, வெளிறிய முகத்துடன் அச்சத்தில் பின்னே நகர்ந்தாள் அப்பெண்.
“இவங்க டாக்டர்மா. ஒன்னும் பண்ண மாட்டோம்.” என்ற செவிலியர் பேச்செல்லாம் காதில் வாங்காமல் அந்த ஆண் மருத்துவரைக் கண்டு அரண்டவளாய் ஓட்டமெடுத்தவளை அறை வாயிலில் வைத்து பிடித்து நிறுத்தினாள் சக்தி.
“இது ஆஸ்பித்திரிமா. உன்னைய யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க. நீ முத உள்ள வந்து மருந்து போட்டுக்கோ…” என்று சக்தி அப்பெண்ணை உள்ளே தள்ள,
“என்னை விடுங்க… என்னை விடுங்க…” என்று கத்திய அப்பெண் ஆவேசம் கொண்டவளாய் சக்தியின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றவள், “நான் மாட்டேன்… நான் போவணும். தப்பிக்கணும்…” என்று திமிறினாள்.
“அவங்கதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து சேத்தாங்கமா. நீ பயப்படாத. போலீஸ் கிட்ட நாங்க உன்னை பாதுகாப்பா அனுப்பிடுறோம்.” என்று அருகே வந்த செவியிலரைக் கண்டு இரண்டடி பின்னெடுத்த அப்பெண் சக்தியை ஐயத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.
“ஆட்டோல வந்து மோதி விழுந்து மயங்கிட்ட நீ. நாந்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். நாம மெயினான ஏரியாவுலதான் இருக்கோம். பயப்பட தேவையில்லை.” என்று ஆறுதல் பேச, மருண்டு விழித்த அப்பெண் எகிறும் தன் இதயத்துடிப்பை சீராக்கும் வழி அறியாது வேக மூச்சுக்கள் எடுத்து நின்றாள்.
“என்னை நம்பலாம். என்னை மீறி உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.” என்று தன் கரம் கொண்டு அப்பெண்ணின் கையை ஆதரவாய் அழுத்த, அது கொடுத்த தைரியமோ என்னவோ அப்பெண் சற்று உடலை தளர்த்தி சுற்றி முற்றி பார்த்தாள்.
அந்த அறையில் இன்னும் இரண்டு நோயாளிகள் படுத்திருக்க, அவர்களின் உறவினர்கள் இவள் அடிக்கும் கூத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் சங்கடமாய் உணர்ந்தவள் மருத்துவரை ஏறிட்டு பின் சக்தியை பார்த்தாள்.
“வா…” என்று கைபிடித்து அழைத்துச் சென்ற சக்தி அங்கிருந்த மெத்தையில் அவளை அமரவைத்து அருகிலேயே நின்றுகொள்ள, மருத்துவர் அவளின் காயத்தை ஆராய்ந்து அவள் நாடித்துடிப்பையும் பரிசோதித்தார்.
“பயப்படுற அளவுக்கு அடி எதுவுமில்லை.” என்று சக்தியிடம் சொல்லியவர் சற்று நகர்ந்து சென்று, “அந்த பொண்ணு நடந்துக்குறதை பார்த்தா சந்தேகமா இருக்கு. என்ன ஆச்சுன்னு விசாரிங்க. போலீசுக்கு சொல்லிடுங்க. மயக்க மருந்து எதுவும் கொடுத்திருந்தா அதுக்கு நாம டிரீட்மென்ட் கொடுக்கணுமா என்னனு பாக்கணும்.” என்று செவிலியரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
“உன் பேர் என்ன?” என்று சக்தியின் கேள்விக்கு, “நிலா.” என்று பதில் வந்தது.
“உன் வீட்டுக்கு சொல்லணுமே. போன் நம்பர் சொல்லு.” என்றதும் சுற்றி முற்றி பார்த்த நிலாவின் முகம் கசங்க,
“என்னாச்சு?” என்று அழுத்தமாக பார்த்தாள் சக்தி. தான் யூகித்திருப்பது நடந்திருக்கக் கூடாதுனு என்று மனம் அடித்துக்கொண்டாலும் நிதர்சனம் என்ற ஒன்று நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்குமே.
“என் போன் எங்கன்னு தெரில…”
“கண்டுபுடிச்சிடலாம்… உன் குடும்பம்?”
“அப்பா, அம்மா இறந்துட்டாங்க. பாட்டியோட செங்கல்பட்டுல இருந்தேன். ஒரு மாசம் முன்னாடி பாட்டியும் தவறிட்டாங்க. அதுக்கு அப்புறம்…” என்று அப்பெண் திணற, ஆதரவாய் முதுகை வருடிவிட்டாள் சக்தி.
“தண்ணி குடிக்கிறியா?” என்று கேட்டு அறையிலிருந்த ஒரு டம்ளரில் தண்ணீரும் எடுத்துக் கொடுத்தாள்.
மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம் சிந்தி அதை குடித்து முடித்தவள் வாயை துடைத்துவிட்டு நினைவு வந்தவளாய் உடனே குனிந்து தன் உடையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட, சக்திக்கு மனது அழுத்துவது போல இருந்தது.
“என்னமா?” பரிவாய் நிலாவின் கேசம் வருட, கண்ணை கசக்கிய நிலா இமைமூடி அப்படியே சக்தி மேல் சாய்ந்துவிட்டாள்.
“எதுவும் பண்ணுதா?” என்று சக்தி பதற, செவிலியரும் அருகே வந்துவிட்டாள்.
“ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை.” என்ற நிலா நிமிர்ந்து அமர்ந்து முகத்தை தேய்க்க, காவலர்கள் வந்துவிட்டார்கள்.
அவர்களைக் கண்டதும் மீண்டும் கலவரம் பூசிக்கொண்டாள் நிலா. அதை கவனித்த சக்தி, “ஒன்னுமில்லை. என்ன நடந்துச்சுனு சொல்லு அது போதும்.” என்ற தைரியமூட்டினாலும் சக்தியின் மனதினில் ஏற்கனவே நிலாவை தொந்தரவு செய்த கயவர்களை வேட்டையாடும் வேகம் பிறந்தது.
விசாரிக்க வந்த காவலர்கள் ஆணொன்று பெண்ணொன்றாய் இருவர் இருக்க, அந்த பெண் காவலருக்கு சக்தியை அடையாளம் தெரியவும் சிறிய தலையசைப்பு கொடுத்தார் அவர். சக்தியும் இமை மூடி திறந்தவள் நிலாவை தோளோடு பிடித்துக்கொண்டாள்.
“என்னாச்சும்மா?”
“என் பேர் நிலா. செங்கல்பட்டுல ஒரு சின்ன வளையல் கடையில வேலை பாக்குறேன். நேத்திக்கு நைட் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பிட்டு இருக்கும் போது யாரோ பின்னாடிலேந்து என் மூக்குல எதையோ அழுத்தின மாதிரி இருந்துச்சு. பயந்து போய் அவங்களை தள்ளிவிட்டு ஓடுனதுதான் நியாபகம் அப்புறம் எழுந்து பாத்தா ஒரு ரூமுக்குள்ள இருந்தேன். ஒன்னுமே புரியல. அங்க யாரும் இல்லை. கதவை நல்லா தட்டுனேன் அதுவே துறந்துக்குச்சு. அங்கிருந்து தப்பிக்கும் போதே ரெண்டு பேர் துரத்துனாங்க அப்போ ஏதோ ஆட்டோல மோதின நியாபகம்.” என்று நெற்றியை பிடிக்க,
“நீங்க கண் முழிச்சப்போ இருந்த ரூமோட அடையாளம் சொல்ல முடியுமா?”
“எதுவும் நியாபகம் இல்லை சார். இருட்டா இருந்துச்சி. தப்பிக்கணும்னு வேகமா ஓடி வந்தேன். கவனிக்கல.” என்று அவள் கை விரிக்க, சக்தியிடமும் எங்கிருந்து அவளை அழைத்து வந்தாள் என்றும் கேட்டுக்கொண்டனர்.
“உன் போன் நம்பர், அட்ரஸ் கொடுமா. உன் ஏரியா ஸ்டேஷன்ல உன்னை ஒப்படைச்சிடுறேன். நீ எதுக்கும் பயப்படாத, நான் பாதுகாப்பு கொடுக்க சொல்றேன்.” என்று பெயருக்கு சொல்லிவிட்டு நடந்தார் அந்த ஆண் காவலர்.
“எங்க ஏரியாவுல நடந்தாலே ஒன்னும் கண்டுபுடிக்க மாட்டாங்க. இது வேற மாவட்டம், ஒன்னும் கண்டுபிடிக்க மாட்டாங்க சக்திக்கா. நீங்க பாத்துக்கோங்க.” என்றுவிட்டு கிளம்பினார் அந்த பெண் காவலரும்.
அவர்கள் நகர்ந்ததும் சக்தியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்ட நிலா ஐயத்துடன் ஏறிட்டு, “நீங்களும் என்னை விட்டு போயிடுவீங்களா? பயமா இருக்கு அக்கா…” என்று அழ,
“என்னை நம்புனவங்களை என்னைக்கும் விடமாட்டேன். என்கிட்ட வந்துட்டீல்ல நிம்மதியா தூங்கு.” என்று அவளை படுக்கவைத்த சக்தி, நிலா கண்மூடவும் அவள் முகத்தையே பார்த்து நின்றாள்.
பால் முகம் என்றாலும் முகத்தசைகள் இறுகி, ஒல்லியான தேகத்துடன் முடியெல்லாம் கலைந்து பார்க்கவே பாவமாய் இருந்தாள். பெண்ணாய் பிறந்த எவருக்கும் பாதுகாப்பு என்பதே இல்லையா? ஏன் எப்போதும் பெண்களின் கற்பை குறிவைத்து அவர்களின் தைரியத்தை சூறையாடி ஒருவித அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கிறார்கள் இந்த ஆண் வர்க்கத்தினர் என்று கோபம் கோபமாய் வந்தது சக்திக்கு. இதற்கு தீர்வே இல்லையா என்று யோசனையுடன் சக்தி நகரப்போக, அவளை நகரவிடாமல் பிடித்து இழுத்த நிலாவோ,
“என்னைவிட்டு போயிட மாட்டீங்களே?” என்று நடுங்கும் குரலில் கேட்க, இடையில் சொருகியிருந்த கத்தியை உருவி அவள் கையில் வைத்தவள், “அஞ்சு நிமிஷத்துல வந்துறேன்.” என்று நகர்ந்தாள்.
கையில் இருக்கும் கத்தியில்தான் தன் உயிரே இருப்பது போல் அத்தனை இறுக்கமாய் அதை பிடித்துக்கொண்டாள் நிலா.
அறை விட்டு வெளியே வந்த சக்தி தன் மறு இடையில் இருந்த போனை கையிலெடுத்துக்கொண்டு தனியிடம் தேடிச் சென்று ராஜாவுக்கு அழைத்தாள்.
“அங்க எல்லாம் சரியா போகுதா?”
“ஒன்னும் பிரச்சனை இல்லை சக்தி. சரக்கு கப்பலேந்து நம்ம படகுக்கு சரக்கு கைமாறிடுச்சு. கார்ட்ஸ்கிட்ட மாட்டாம ஹார்பருக்கு தான் வந்துட்டு இருக்காங்க. இன்னும் ஒரு அரைமணி நேரத்துல கரைக்கு வந்துடும். வந்ததும் வண்டியில ஏத்திவுட்டு நாங்க கிளம்பிடுறோம். அங்க என்னாச்சு?” என்று கேட்டான் ராஜா.
“சரக்கை செக் பண்ணிட்டு நம்ம வண்டியில ஏத்துங்க.” என்ற சக்தியின் கட்டளைக்கு மறுபக்கம் கேள்வி வந்தது.
“செக் பண்ணிதான் நம்ம படகுலேயே ஏத்தி இருக்காங்க சக்தி. திரும்ப செக் பண்ணனுமா என்ன?”
“இந்த தடவை அதிகமா இறக்குறோம். ஒன்னுக்கு ரெண்டு முறை பாக்குறது தப்பில்லையே.”
“சரி. நான் பாத்துக்குறேன்.”
“ம்ம். இங்க அந்த பொண்ணு கண் முழிச்சிடுச்சு.” என்ற சக்தி நிலா குறித்த தகவல்களை தெரிவிக்க,
“அப்போ நாங்க நேரா அங்க வந்துடுறோம் சக்தி. நைட் முழுக்க அந்த பொண்ணு அங்கேயே இருக்கட்டும். விடிஞ்சதும் அது வீட்டுக்கு கொண்டு விட்டுரலாம்.” என்றான் ராஜா.
“அந்த பொண்ணை பாத்தா என்னை பாக்குற மாதிரியே இருக்கு.” என்று சக்தி குரல் செருமிக் கூற, அடுத்து அவளது முடிவு என்னவாக இருக்கும் என்று புரிந்துபோனது ராஜாவுக்கு.
“நீ எது பண்ணாலும் நான் துணையா இருப்பேன் சக்தி.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் ராஜா.