மனைவி தன்னிடம் அனுமதி கேட்கவில்லை தகவல் சொல்லியிருக்கிறாள் என முன்னமே தெரியும்தான். இருப்பினும் அவளது அன்றாடம் துவங்கிய பின் என்னவோ ஒரு விலகல் அவனிடம். ஐந்து வருடம் ஒட்டி உறவாடிக்கொண்டா இருந்தோம் என மனம் சொன்னாலும் அனைத்தையும் அமைதியாக கவனித்தான்.
அன்று அரை நாள் தான் பள்ளி. முடிந்து வீடு வருகையில் ராஜாவும் ரவியும் வீட்டின் நடுவே அமர்ந்து ஏதோ பேப்பரை பரப்பி வைத்து பேசிக்கொண்டிருந்தனர்.
“என்ன சார் இன்னைக்கு அரை நாள் தான் ஸ்கூலா?” என ரவி வாயெல்லாம் பல்லாய் கேட்க, ‘உன்னை உள்ளேயே இருக்க விட்டிருக்கணும்டா அவ.’ என நினைத்துக்கொண்டவன் பதில் சொல்லவில்லை. என்னவோ அவனிடம் மட்டுமல்ல சக்தியாய் அழகியை தொடரும் எவரையும் சுலபமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால். ராஜா மீது மட்டும் மெல்லிய கரிசனம் சமீபகாலமாக வந்திருக்கிறது. தன் மனைவி மீதான அவனது அக்கறையும் அவனது தங்கைக்கு நிகழ்ந்த சோகத்தினாலும் வந்த பரிதாபமோ என்னவோ அதை ஆராய விரும்பவில்லை அவன்.
“ராஜா மாமா இன்னைக்கு பீச் போலாமா?” மகள் என்னவோ எளிதாய் ஒட்டிவிட்டாள்.
எப்போதும் இதுபோல் அவர்கள் வீடு வருவதில்லை. அழகிதான் வெளியே சென்று வருவாள். இன்று என்னவோ என முகம் சுருக்க,
“இன்னும் என்ன கோவமாம் உன் சாருக்கு?” நக்கலாக கேட்டான் ராஜா.
“ஷ்ஷ்… டயர்ட்ல வந்திருப்பாரு.”
“சும்மா சாருக்கு மவுத் பீஸ் ஆகாத க்காவ். அவருக்கு எங்களை கண்டாலே ஆகல. சும்மா முறைச்சிட்டே இருக்காரு. ஏதோ உன் வூட்டுக்காரர்னு நானும் பொறுமையா இருக்கேன்.” என ரவி எப்போதும் போல் துள்ள, அவன் தலையை இரண்டு தட்டு தட்டி அமர வைத்தாள். துவக்கத்தில் பெரிதாக துவங்கிய விசாரணை நாட்கள் செல்ல செல்ல மந்தமாகி ஒருகட்டத்தில் ரவி எளிதாக பெயிலில் வந்துவிட்டான். அவன் மேல் பதிந்த வழக்கு என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது, ஆனால் மேலிருக்கும் மத்திய அமைச்சரை கைகாட்டவும் விசாரணை நீர்த்துப்போய் விட்டது. எப்படியும் வருடங்கள் ஆகும் தீர்ப்பு வர என தைரியமாக இருக்கின்றனர்.
“சென்னை சிட்டியை இன்னும் ஸ்மார்ட் ஆக்குறோம்னு சொல்லி நம்ம பக்கம் இருக்குற குப்பத்தை காலி பண்ற திட்டம் ஒன்னு மேலிடத்துல மூவ் ஆகியிருக்கு சக்தி. வழி வழியா எங்க பொழப்பு இந்த குப்பத்துல தான், இதை விட்டா எங்களுக்கு வேற எதுவும் தெரியாது. இப்படி வேரோட எங்களை புடுங்கி வேற இடத்துல நட பாக்குறது சரியில்லைன்னு குப்பத்து ஆளுங்க போராட்டம் பண்றாங்க. இப்போ மேட்டர் என்னன்னா ஆளுங்கட்சி இதை பண்றதுக்கு காரணம் சிட்டியை ஸ்மார்ட் ஆக்குறதுக்கு இல்லை ஐ.டி காரிடர்ல இருக்குற நிறைய கார்பரேட்ஸ்கு லேபர் ஷார்டேஜா இருக்காம். இந்த மக்களை அங்க மாத்தி அவங்களை ஹவுஸ் கீப்பிங், க்ளீனிங் மாதிரியான வேலைகளுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு பாக்குறாங்க.” என ராஜா விளக்க, தீவிரமாய் கேட்டுக்கொண்டாள் சக்தி.
களத்தில் இறங்கி இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய்ந்து குறிப்பு எடுத்துவருவது இவர்களது வேலை. பின் இந்த மூவருமாக சேர்ந்து என்ன செய்யலாம் என ஆலோசித்து அதனை சக்தி மூலம் மக்களிடமும் கட்சி தலைமையிடமும் கொண்டு சேர்க்கின்றனர். அழகியோடு சேர்ந்து இதனை கேட்ட சக்திவேலன் கூட பரவாயில்லையே மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்துகிறார்களே என்று ‘அட’ போட்டுக்கொண்டான், மனதிற்குள்தான்.
வெகு நேர ஆலோசனைக்கு பின் தீவிரமாக எதையோ அவள் பேப்பரில் எழுதவும் அமைதியாக அவளருகில் ஒரு காபி கோப்பையை வைத்துவிட்டு தனக்கொன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தான். மகளுக்கு மதிய உணவு கொடுத்து அவளுடன் வளவளத்தபடி அறைக்குள் அடைந்துகொள்ள, கேலியாய் பார்த்தான் ராஜா.
“சக்தி இதுமாதிரி பிசியா இருக்கும் போது சாப்பிடாது அதுதான் அவர் காபி கொடுத்துட்டு போறாரு. பொண்டாட்டியை தெரியாதா அவருக்கு.” என ராஜா ரவியை அடக்க, லேசாக சிரித்தாள் அழகுராணி.
இன்னும் கணவன் மனைவிக்குள் எதுவும் சகஜமாகவில்லை. தேவைக்கு பேச்சு, மகளின் முன் இயல்பாய் வரும் ஒற்றுமை என்பதை தாண்டி தனிப்பட்டு இன்னும் இருவேறு துருவங்களாய் தான் இருக்கின்றனர். அதில் அவளின் நெருடலை போக்குவது இதுபோன்ற அவனின் அக்கறையான செயல்கள்தான்.
குப்பத்து மக்களுக்கு துணை நிற்பது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பது, ஆளுங்கட்சியின் மறைமுக திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களது ஓட்டு வங்கியை சிதறடிப்பது என பல யோசனைகளை முடிவு செய்தபின் அங்கிருந்து கிளம்பினர் ராஜாவும் ரவியும். கீழே சிதறிக் கிடந்தவற்றை எடுத்து வைத்துவிட்டு அவள் அறையை எட்டிப்பார்க்க, இருவரும் நல்ல உறக்கத்தில். பெருமூச்சுடன் மதிய உணவு உண்டு அறைக்குள் வந்து சில நிமிடங்கள் படுத்து எழுந்தாள்.
சக்திவேலனும் அந்நேரம் எழுந்துகொண்டான். கயல்விழி இன்னும் உறக்கத்தில் இருக்க, கட்சி கூட்டத்திற்கு என கிளம்பி நிற்கும் மனைவியை பார்த்தான். கழுத்தை ஒட்டியபடி முக்கால் கை கொண்ட ரவிக்கை அணிந்து, பாந்தமாக காட்டன் சேலை கட்டியிருந்தாள். முன்பை விட நெற்றியில் சற்று பெரிய பொட்டு, வகுட்டில் குங்குமம், கைகளை உறுத்தாத இருபக்கமும் இரண்டு வளையல்கள் என மிக எளிதாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறாக அவனது பார்வை அன்றைக்கு அவளையே வட்டமிட்டது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே அவளின் அருகாமையில் அவனின் மனம் மெல்ல மெல்ல சரியத் துவங்கியது. மனைவியின் செயலில் பிடித்தமில்லைதான் ஆனால் மனைவியை பிடிக்குமே.
“அழகி…” அவனையும் மீறி வெளியே செல்ல இருந்தவளை அழைத்துவிட்டான்.
இனிய அதிர்வில் உணர்வுகள் தழும்ப அவள் திரும்பிப் பார்க்க, ஒருநொடி தடுமாறியவன், “சேப்டி பின் கழண்டுருச்சு பாரு.” என தன் தோள்பட்டையில் கைவைத்துக் காண்பிக்க, கழுத்தை வளைத்துப் பார்த்தவள் உடனே சரிசெய்துகொண்டு நன்றி சொல்ல, முறைத்துக்கொண்டே திரும்பிவிட்டான்.
“நான் வர லேட்டாகும். நைட்டுக்கு சட்னி அரச்சிட்டேன், தோசை மட்டும் ஊத்திக்கோங்க.” என சொல்லிவிட்டு செல்ல, இவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எதை எதையோ யோசித்து மனம் குழம்பிப் போனது. வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
தினம் இவர்கள் பள்ளி சென்றவுடன் கட்சி அலுவலகம் செல்வது இவள் வழக்கம். மாலை பொழுதுகள் குடும்பத்திற்கு என இருந்தாலும் வாரத்தில் பாதி நாட்கள் அழகுராணிக்கு கட்சி வேலைகள் இருக்கும். இப்போதே இப்படி இருக்கிறதே இன்னும் தேர்தல் வந்தால் எப்படியோ என்று மலைத்துப் போனவன் அவளிடம் எதையும் பகிரவில்லை. ஆனால் அழகுராணி அப்படியில்லை. முக்கிய முடிவுகள், ஆலோசனை கூட்டத்தில் நடந்தவைகள் என சிலவற்றை பகிர்ந்து கொள்வாள். இவன் தலையாட்டிக்கொள்வான். இன்றும் அப்படி சொல்லிக்கொண்டிருக்க,
“சீக்கிரமே நாமினேஷன் தாக்கல் பண்ற மாதிரி இருக்கும். சக்திங்குற பேர்லலேயே நிக்கலாம்னு இருக்கேங்க. அந்த பேர் தான் எல்லார் மனசுலையும் பதிஞ்சிருக்கு.” என சொல்ல, அவன் முகம் மாறியது.
“கெசட்ல பேர் மாத்துற மாதிரி இருக்கும்.” என சொல்லவும் பட்டென எழுந்தவன்,
“உன்கிட்ட பிடிச்சதே அந்த பேர்தான் அதையும் மாத்திட்டு…” கோபமாக ஏதோ சொல்ல வந்தவன் வீட்டில் மகள் இருக்கவும் அடங்கினான்.
“உங்களை புடிச்சதாலதான் இந்த பேர். எங்கேயும் எப்போதும் நீங்கதான் என்னோட அடையாளம்.” என்று அழுத்தமாக நின்றாள் அவளும். அவளை எதிர்கொண்ட அவன் உடல் தளர்ந்தது. அவனுக்காக கடத்தலில் இறங்கி, அவனது பெயரையே அவளது அடையாளமாக மாற்றிக்கொண்டு இப்போது அரசியல் அமைப்பில் அடியெடுத்து வைப்பவள் கொஞ்சம் அல்ல அவனைவிட அதிகமாகவே அவனை காதலிக்கிறாளோ என்று தோன்றியது. அவள் அளவுக்கு அவள் மேல் தான் பாசம் வைக்கவில்லை என்று புத்தி உரைக்க அப்படியே அமைதியாகிவிட்டான்.
“ஏன் அப்பப்போ அமைதியாகிடுறீங்க.” என கேட்ட அழகுராணியின் குரலிலும் சுருதி இறங்கியிருந்தது.
“நீ என்னை இவ்ளோ காதலிச்சிருக்க வேணாம்.” என்று சொல்லியேவிட்டான்.
“என்ன?” அவள் அதிர்ந்து பார்க்க,
“நீதான் என் வொய்ப்னு வெளிய சொல்ல யோசிக்குற என்னையே உன்னோட அடையாளமா சுமக்க தயாரா இருக்க. ஆனா…”
“என்ன பேச்சு இதெல்லாம். இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒருநாள் நீங்க பெருமைப்படுற மாதிரி நான் நிமிர்ந்து நிப்பேன். அன்னைக்கு உங்களோட இந்த தவிப்பு, தயக்கம் எல்லாம் காணாம போயிடும்.” அவன் மனம் புரிந்தது போல் அவன் கைபிடித்து அவள் அழுத்தம் கொடுக்க, வெகு வருடங்களுக்கு பிறகு மனைவியின் கரத்தை தனக்குள் பொதித்துக்கொண்டான்.
அன்றிலிருந்து பேச்சுக்கள் அதிகமானது. பார்வைகள் நெருங்கியது. இடைவெளிகள் அடைந்தது. ஸ்பரிசங்கள் அவ்வப்போது பட்டுக்கொண்டு மீண்டது.
அன்றைக்கு வேட்புமனு தாக்கல். வீட்டு வாயிலில் பத்து பேர் போல் கூட்டமாய் நிற்க,
“இந்த கூட்டத்தை பாத்தாலே அலர்ஜியா இருக்கு. எப்படி தான் சமாளிக்குறியோ.” என கேட்டுக்கொண்டே மனைவியை மட்டும் அனுப்பி வைத்தான்.
“எங்க க்கா ரேன்ஞ் என்னன்னு தெரியாம பேசுறீங்க சார்.” என ரவி சிலிர்த்துக்கொள்ள, அவனை அலட்சியப்படுத்தியவன் ராஜாவிடம், “கூட்டம் அதிகமா இருக்கு. பாத்துக்கோங்க.” என மனைவியை கண்காட்டினான்.
“ரொம்பத்தான் அக்கறை கூடிப்போச்சு.” என சிரித்துக்கொண்டே ராஜா சொல்ல,
“அன்னைக்குதான் பாத்தேன், முண்டியடிச்சி அவகிட்ட பேச வராங்க.” என்றவன் முகத்தில் அவள் பாதுகாப்பு குறித்த ஐயமும் வளர்ந்து வரும் அவளின் செல்வாக்கு குறித்த பெருமையும் ஒருங்கே இருந்தது.
“சக்தியோட பவர் அப்படி சார்…” என்றான் ராஜாவும் சீண்டலை கைவிட்டு.
“அந்த சக்தியோட பவரே இங்கதான் பாஸ்.” என தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ள, ராஜாவின் மனது நிறைந்து போனது.
“சக்தியை அப்படி நீங்க விட்டுட்டு போனது தப்புனு உணர்ந்தீங்களா என்னனு தெரியல ஆனா இனி ஒருமுறை அப்படி ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் சார்.” என்று அழுத்தமாய் பேசிய ராஜாவுக்கு சிறு புன்னகை உதிர்த்தான். விட்டுப்போனது அவனளவில் சரியென்ற எண்ணம் இருந்தாலும் உடன் இருந்து அவளுக்கு உறுதுணையாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் சில நாட்களாய். அதன் பொருட்டு அவள் அரசியல் பிரவேசம் குறித்த அவன் பிடித்தமின்மையின் வீரியம் குறைந்திருந்தது.
திருவிழா கணக்காக தேர்தல் நடந்து முடிய, அந்த ஒருமாதம் முழுதும் அழகுராணியை கையில் பிடிக்க முடியவில்லை. ஒரே வீட்டில் இருந்தாலும் அவள் வரும் நேரம் இவர்கள் உறங்கி விடுவார்கள், அவள் ஓய்வாக இருக்கும் நேரம் இவர்களுக்கு பள்ளி இருக்கும். அதிகமாக மனைவியை அவன் தேட ஆரம்பித்த தருணமது. அத்தனை அலைச்சலிலும் இருவர் வயிறையும் வாடவிடவில்லை அவள்.
“எவ்ளோ அலைச்சல். ரெஸ்ட் எடு நீ. நான் சமைக்கிறேன்.” என்று சக்திவேலன் அவளை பிடித்துவைத்து சொல்ல,
“இனி சாகுற வரைக்கும் என் சாப்பாடுதான் சாப்பிடணும் நீங்க.”
“என்ன பேச்சு இது.” என அவள் வாயில் இரண்டு அடி அடித்தவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
மறந்து போய்விட்டது என்று நினைத்த அவன் வாசம் அவள் நாசி நிறைந்து அவள் சுவாசப்பையை நிரப்ப, நிறைவாக உணர்ந்தவள் ஆசையாக கணவனுக்கு முத்தம் வைத்தாள். விடாமல் அதனை தொடர்ந்தவனுள் காதல் தீ பற்றிக்கொள்ள பிணைப்பு இறுகியது.
“அப்பா ஸ்கூல் போற மாதிரி அம்மாவும் அவ வேலையில பிஸியா இருக்கா. சீக்கிரம் ஃபிரீ பண்ணிக்கிட்டு வந்துடுவா.” கயல்விழி அம்மாவை தேடும் நேரம் முகம் சுழிக்காமல் சமாளித்தான்.
“க்காவ் நான் சொன்னப்போ எல்லாம் என் தலையை தட்டுனியே பாரு உன் தலையில மொளகா அரைச்சது அந்த நிலாதான். நார்காட்டிக்ஸ்ல இருக்காளாம். அவதான் வேவு பாத்து நம்மள போட்டு கொடுத்திருக்கா.” என ரவி வந்து ஆதாரத்தோடு சொல்லுகையில் கோபம் கொள்வாள் என்று பார்த்தால் சிரித்து வைத்தாள்.
“வேவு பாத்தது மட்டுமில்லை, என் குடும்பத்தை பாத்தா தடுமாறி தப்பு பண்ணுவேன்னு பிளான் பண்ணி என் புருஷனையும் பொண்ணையும் என் கண்ணு முன்னாடி இங்க வரவச்சதே அவங்க டிபார்ட்மென்ட்தான். எல்லாம் சென்ட்ரல்ல நான் பெருசா நீ பெருசான்னு ரெண்டு கோஷ்டி அடிச்சிக்கிட்டதோட விளைவுதான். இப்போ அவங்க சேர்ந்துட்டாங்க சோ இனி நமக்கு பிரச்சனை இல்லை, நாமதான் அவங்களுக்கு பிரச்சனை கொடுக்கணும்.” என சொல்ல, அதிர்ந்து பார்த்தனர் ரவியும் சக்திவேலனும்.
“க்காவ்? என்ன சொல்ற நீ?”
“அவ நம்ம இடத்தை விட்டு வெளில போனதுமே ஆள் வச்சி நியூஸ் கலெக்ட் பண்ணியாச்சு. கெட்டதுலையும் ஒரு நல்லது.” என்றவள் பார்வை ஆதூரமாய் தன் குடும்பத்தின் மீது பதிந்தது.
மாதங்கள் ஓட, அவள் சொன்னது போலவே பூரிப்பும் பெருமையுமாய் அந்த பள்ளி ஆண்டுவிழாவில் அமர்ந்திருந்தான் சக்திவேலன். மேடையில் அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அழகுராணி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள்.
“போன ஜெனரேஷன் வரைக்கும் படிப்பு தான் ஒருத்தரை உயர்த்தும்னு சொல்லி சொல்லி வளத்தாங்க. ஆனா இப்போ ஸ்மார்ட் ஒர்க்னு சொல்லி எல்லாத்துலயும் ஸ்மார்ட்னெஸ் தேடுறோம், ஹார்டஒர்க் கேள்விக்குறியாகிடுச்சு. டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுறது, டப்ஸ்மேஷ் பண்றதுனு நம்மளோட ஆக்கங்கள் தேவையில்லாத விஷயங்கள் பக்கம் போய்ட்டு இருக்கு. அதை ஒருமுகப்படுத்தி படிப்புல கவனம் செலுத்துனா நம்ம ஊர் காயத்திரியோ, கார்த்திகேயனோ கூட பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிற சி.ஈ.ஓ ஆகலாம். உலகத்தை நம்மளை திரும்பி பார்க்க வைக்கலாம்.” என பேசியவள் தொடர்ந்து சில ஊக்கம் தரும் வார்த்தைகளை பேசி முடித்து கிளம்பினாள்.
‘இந்த லேடி கஞ்சா வித்துச்சுனு சொல்றாங்க ஆனா இங்க வந்து என்ன பேச்சு பேசுது பாரு. எல்லாம் அரசியல் படுத்தும்பாடு.’ என அவன் காதுபட இருவர் பேச, சுருங்கியது இவன் முகம். வீட்டிற்கு வந்தும் உர்ரென்று சுற்ற,
“என்னங்க?”
“ஒன்னுமில்ல.” முகத்தை திருப்பியவனை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து, நடந்ததை விவரித்தான்.
“இப்படி பேசுற இதே மக்கள் தான் நல்லது பண்ண பலபேரை தோற்கடிச்சு என்னை போல ஆளுங்களை ஜெயிக்க வைக்குறாங்க. நான் உள்ள நுழைஞ்ச வழி வேணும்னா தப்பா இருக்கலாம். ஆனா செய்யுற செயல்ல இனி நேர்மை இருக்கும். நீங்க நம்புறீங்களா?” கண்களில் காதலை தேக்கி வைத்து நம்பிக்கை யாசிப்பவளை எங்கனம் விலக்க, அவன்மனம் தான் என்றோ அனைத்தையும் விளக்கிக்கொண்டுவிட்டதே.
“சந்தர்ப்ப சூழ்நிலை ஒரு அழகுராணியை சக்தியா மாத்துச்சு. இதே மாதிரி இன்னொரு சக்தி பிறக்க வேண்டாம் அதுக்கு இன்னொரு சக்திவேலன் இருக்க வேண்டாம். அவனை என்னைக்கோ புதைச்சிட்டேன். இன்னைக்கு இருக்கிறவன் அவனோட சக்தியை முழுசா நம்புறான், அவ எதை எடுத்தாலும் அதுக்கு நியாயம் செஞ்சிடுவா. எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு அவ மட்டும் போதும்.”
“இந்த அழகுராணியோட சக்தி அதோட சக்தியை சேர்ந்துடுச்சு.” என்று கண்ணீருடன் சிரிக்க, மனைவியை ஆரத்தழுவிக்கொண்டவன் அகத்தினில் அழகுராணிக்கான காதல் கூடிப்போய் சக்தியின் வேகத்திற்கு ஈடுகொடுத்தது.
இனி இரு சக்திகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாய், அரணாய் நிற்பார்கள். தன் குடும்ப நலன் போல் சுற்றத்தினரையும் பேணுவார்கள். முடிந்த உதவிகளை செய்வார்கள். உறுதுணையாக வலப்புறம் ராஜாவும் இடப்புறம் ரவியும் தாங்கிப்பிடிக்க, சக்தியின் பயணம் தடையற்று வேகம் எடுக்கும்.