வீட்டு வாயிலிலேயே போதைப்பொருளை டெலிவரி செய்ய சொல்லி யாரோ ஒருவன் நிற்க, அன்றைக்கு கோவத்தில் பாதுகாப்பு குறித்த ஐயத்தில் உடனே கிளம்பியவன் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் சென்றான். அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்னே சிறிது நேரம் வெறுமையாய் அமர்ந்திருந்தவனுக்கு சிறிது நேரத்தில் செய்த செயலின் வீரியம் புரிய தலையில் அடித்துக்கொண்டான்.
‘அப்படி என்ன மனைவியை தனியே விட்டு வரும் அளவுக்கு அறிவை மழுங்கடிக்கும் கோபம்.’ என்று தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டு ஆட்டோ பிடித்து மீண்டும் வீடு வந்தான்.
வீடு பூட்டியிருக்க, தலையை தேய்த்துக்கொண்டே மகளுடன் சற்று தள்ளி இருந்த கோவிலில் அமர, சிறிது நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்தாள் அழகுராணி. உடலிலிருந்த இரத்தமெல்லாம் வடிந்தது போல் பார்க்கவே பரிதாபமாக இருந்தவளை நெருங்கி அணைத்துக்கொள்ளும் பரபரப்புடன் எழுந்தவன் அவளை தொடர்ந்து வந்த பெண்மணி அவளை நிறுத்தி ஏதோ பேசவும் அழகியின் முகம் மாறவும் அவர்கள் கண்ணில் படாதவாறு லேசாக ஒதுங்கி அருகில் நெருங்கினான்.
“விட்டுட்டு போன உன் புருஷன் பஸ்டாண்டுல தான் இருக்கானாம். பேசாம அவங்க சொல்ற மாதிரி சப்ளை பண்ணு, இல்லைனா உன் பொண்ணுக்கு உத்திரவாதம் இல்லை சொல்லிட்டேன்.” என்று சொல்லிக்கொண்டிருக்க, அழகியின் முகம் வறண்டது போல் இவன் முகமும் பேயறைந்தது போலானது. உறங்கும் மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் சக்திவேலன்.
“ஒருவழிப்பாதை இது. உள்ள வந்துட்டா வெளில போகவே முடியாது, அப்படி போவணும்னு நினைச்சா முடிச்சி விட்டுருவாங்க. உன் புருஷன் டீச்சர்தான. எப்படியும் உன் பொண்ணை வளத்துடுவான். சும்மா நல்லது செய்யுறேன் அதுஇதுனு பேசாம பார்சலை வாங்குனோமா வேற இடத்துல கொடுத்தோமா நாலு காசு பாத்தோமான்னு இருக்கனும். அப்படி இருந்தா நீயும் உன் குடும்பமும் பொழச்சிது, உனக்கும் எந்த தொந்தரவும் இல்லை.” என்று சொல்லிக்கொண்டிருக்க, வந்த தடம் தெரியாமல் நகர்ந்துவிட்டான் சக்திவேலன்.
அதனை கேட்ட ராஜாவின் முகத்தில் பெரிதான மாற்றமில்லை, “உங்க பொண்ணுக்காக சக்தியை விட்டுட்டுடீங்க அதானே… ரொம்ப நல்லது. சக்தியும் வேற ஒருத்தரோட பொண்ணுன்னு நினைச்சிருந்தா போக மனசு வந்திருக்குமா?” என்றுதான் குத்தினான்.
“அந்த அம்மா சொன்னதுக்கு அப்புறம் தான் சுத்தி கவனிச்சி பாத்தேன், பின்னாடி கத்தியோடு ஒருத்தன் நிக்குறான். என்ன பண்ண சொல்றீங்க என்னை? திரும்ப பொண்டாட்டியை கூட்டிட்டு ஊரை விட்டு ஓடிப்போய் போலீஸ்கிட்ட போட்டுக்கொடுக்கலாம்னு நினைச்சாலும் உங்களுக்குதான் பாதிப்பு, போலீஸ் எங்க பக்கம்னு கழுத்துல கத்தி வைக்காத குறையா மிரட்டும் போது பச்சை பிள்ளையை வச்சிக்கிட்டு அங்கேயே நின்னு ஹீரோயிசம் காட்ட நான் என்ன ஹீரோவா? அதோட அந்த அம்மாவும் பார்சல் டெலிவரி பண்ணா அழகிக்கு தொந்தரவு இருக்காதுனு எல்லாம் பேசுச்சு. என்ன பண்றதுனு தெரியல அப்படியே வந்துட்டேன். ஒரு வருஷம்… முழுசா ஒரு வருஷம் என்னை பாலோ பண்ணாங்க அந்த ஆளுங்க. எதுவும் பண்ண முடியாம குழந்தையை வச்சிக்கிட்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.”
“என்னவும் சொல்லு நீ பண்ணது தப்பு. நியாயப்படுத்த முடியாத பாவம். நம்பி வந்தவளை என்ன ஆனாலும் விட்டிருக்க கூடாது. நானும் நீ வேண்டாம்னு சொல்லிட்டேன் சக்தி கேக்கமாட்டேங்குது.” என ராஜா தன் அதிருப்தியை வெளிப்படுத்த அவன் மீது கோபம் வந்தது சக்திவேலனுக்கு. இவன் என்ன என்னை வேண்டாம் என சொல்வது? அவள் வாழ்க்கைக்கும் சேர்ந்து முடிவெடுக்க இவன் யார்? இத்தனை வக்காலத்து வாங்குகிறான் என்று பார்க்க,
“எல்லாத்தையும் வெளில நின்னு பேசணுமா?” என்ற ராஜாவிற்கு வழிவிடாமல் மறைத்தே பாதையில் நின்றான் சக்திவேலன்.
பெருமூச்சு விட்டவன், “பிள்ளையை காட்டி பயமுறுத்தவும் சக்திக்கும் வேற வழியில்லை பயந்துட்டு அவங்க சொன்னபடி செய்ய ஆரம்பிச்சிடுச்சு. அதுக்காக நீங்க போனதெல்லாம் என்னால மன்னிக்கவே முடியாது. இப்போ சக்தி காத்திருக்கு உங்களுக்காக. கிளம்பி வாங்க.” என்றதும் பரபரப்பு சக்திவேலனிடம்.
“ஜெயிலேந்து வந்துட்டாளா?”
“நினைப்பு போகுது பாரு. சக்தி எதுக்கு ஜெயிலுக்கு போவணும்?”
“அரெஸ்ட் பண்ணாங்களே? நியூஸ் எல்லாம் சொன்னாங்க.” என்று சக்திவேலன் புருவம் சுருக்க, மெலிதாக சிரித்தான் ராஜா.
“உங்க அழகுராணிக்குதான் பயமெல்லாம். எங்க சக்திக்கு இல்லை, மடக்கணும்னு நினைச்சா மண்ணை கவ்விட்டு போக வேண்டியதுதான். ஸ்கெட்ச் போட்டது என்னவோ சக்திக்குதான் ஆனா மாட்டுனது நாங்க கை காமிச்ச சக்தி.” என்று கர்வத்துடன் சொல்ல, சக்திவேலனுள் ஆசுவாசம் அதுவும் கொஞ்ச நேரம்தான்.
“இன்னைக்கு இல்லைனா என்ன? எப்படியும் மாட்டிதான் ஆகணும் நீங்க செய்யுற வேலைக்கு.” என்று சக்திவேலன் சொல்ல, சற்று சத்தமாக சிரித்தான் ராஜா. பதறிப்போய் சக்திவேலன் திரும்பிப் பார்க்க, அவன் மகள் அலைபேசியில் கவனமாக இருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை.
“குடும்பத்தை விட்டுட்டு விருப்பமே இல்லாத வேலைல பாத்துட்டு யாரோ பண்ற தப்புக்கு இரையாகி ஜெயில்ல கலி திங்கவா இவ்ளோ கஷ்டத்தையும் தாங்கி வந்திருக்கோம். உங்களுக்கு தெரிய வேண்டியது நிறைய இருக்கு. எல்லாத்தையும் கூட இருந்து தெரிஞ்சிக்கோங்க. சக்தி உங்களுக்காக காத்திட்டு இருக்கு.” என ராஜா அவசரப்படுத்த, சக்திவேலனுக்கு இருமனதானது. முன்பு போல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்துவிடலாம் என்றால் மனது அவளின் நலம் விரும்புகிறது. மகளோ அம்மா வேண்டும் என்று வாய் விட்டே கேட்டுவிட்டாள். அம்மா மகள் வேண்டும் என்று எப்போதோ வந்து நின்றுவிட்டாள். இவர்களுக்கு இடையில் அறநெறி தவறிய சக்தியின் வேலை அவனை போட்டு முரண்டியது.
“என்ன இப்போ சக்தி கடத்துறது உங்களுக்கு புடிக்கல அதானே… எல்லாத்தையும் விட்டுறேன்னு சொன்ன மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு உங்களுக்காக காத்திருக்கு. உங்க பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை இப்போ. இன்னும் என்னய்யா வேணும் உனக்கு? இல்லை சக்தி வேணாம்னா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு சக்தி ஒதுங்கிடும் இல்லைனா இப்படித்தான் உனக்காக காத்திட்டு இருக்கும் அப்புறம் நான் உன்னை தூக்க வேண்டியதாகிடும் பாத்துக்க.” என்னடா இது எதற்கும் மசிய மறுக்கிறான் என்று ராஜா மிரட்டல் போல் சொல்ல, இன்னொரு திருமணம் என்றதிலேயே பிடித்தமின்மை வந்தது. ஆளாளுக்கு இன்னொரு திருமணம் இன்னொரு திருமணம் என்று என்ன பேச்சு இது. மனதில் ஒருத்தியை வைத்துக்கொண்டு இன்னொருத்தியை மணப்பதா? என்று தலையை உலுக்கிக்கொள்ள,
“என்ன இன்னொரு கல்யாணம் முடியாதா? அப்போ எதுக்கு நீங்களும் தனியா இருந்து சக்தியையும் நெருங்கவிடாம பண்ணணுங்குறேன்? என் அழகினு சொல்லத் தெரிஞ்சுதுல அந்த அழகிக்காக இறங்கி வரமுடியாதா? அவ்வளவுதான் உங்க அன்பா? காதலா?” என்று ராஜா பேசிக்கொண்டே செல்ல, சக்திவேலன் தூண்டப்பட்டு வருகிறேன் என்றுவிட்டான்.
ஆசுவாச மூச்சு விட்டுக்கொண்ட ராஜாவின் பார்வை தன்னால் பின்னால் இருக்கும் கயல்விழியிடம் சென்றது, “நிறைய நாள் பாப்பாவை நினைச்சி அழுதிருக்கு சக்தி.” என்று வாஞ்சையாய் சொல்ல, சக்திவேலன் தன் முடிவை மறுபரிசீலனை செய்தான்.
சக்தியிடம் செல்வது என்றால் கயல்விழியிடம் உண்மையை சொல்ல வேண்டி வரும். அப்படி உண்மை தெரியவரும் பட்சத்தில் மகள் அவள் அம்மாவை விட்டு வரப்போதில்லை. இப்போது சென்றால் இனி காலம் முழுதும் அவளுடன்தான் என்று யோசனை செல்ல,
“ரொம்ப யோசிக்காதீங்க. இனிமேதான் பாப்பாவுக்கு சக்தியோட அன்பும் அணுசரனையும் தேவை. உங்களுக்கு விருப்பம் இல்லைனா ஒதுங்கிடுங்க அவங்க ரெண்டு பேரும் இருந்துகட்டும்.” என்ற ராஜாவை முயன்ற மட்டும் முறைத்தவன் எடுத்த முடிவில் உறுதியாக நிற்க முடியாமல் தடுமாறினான். ஐந்து வருடமாக உருப்போட்டு வளர்த்த பிடித்தமின்மை நீங்க மறுத்தது. அதற்காக மனைவியை விட்டு வேறொரு வாழ்வை யோசிக்க முடியுமா என்றால் முடியாது. கயல்விழியே இன்று அம்மா வேண்டும் என்று கேட்டுவிட்டாள், அவளுக்காக வேணும் வேறொருவளை அம்மா என்று காட்ட முடியுமா? முடியாது. பிறகு எதற்கு இந்த வீம்பு? உனக்காக தானே இதற்குள் வந்தாள். நீயே அவளை ஒதுக்கி ஐந்து வருடம் தண்டனை கொடுத்தபின்னும் என்ன எதிர்பார்கிறாய்? என்று மனம் வரிசையாய் கேள்வி எழுப்ப, முழுமனமில்லை என்றாலும் மகளுக்காக என்று தலையாட்டினான் சக்திவேலன்.
“எங்க இருக்கா இப்போ?”
“என்கூட வந்தா தெரிஞ்சடப் போகுது.” என்ற ராஜாவிடம்,
“உன்னை எப்படி நம்புறது நான்?” என கேட்க, இப்போது முறைப்பது அவன் முறை.
“நீங்க இல்லாத இந்த அஞ்சு வருஷத்துல என் தங்கச்சி இடத்துல வச்சி என் சக்தியை பாதுகாத்திருக்கேன். இதுக்கு மேலயும் சந்தேகமா போன் போடுறேன் பேசுங்க.” என்று அலைபேசியை நீட்ட, வேண்டாமென்று மறுத்துவிட்டான் சக்திவேலன்.
பலமுறை ராஜாவை கடற்கரை ஓர தெருவில் பார்த்திருக்கிறான், சிலமுறை சக்தியுடனும் பார்த்திருக்கிறான். இப்போது தங்கை இடத்தில் தன் மனைவியை வைத்துப் பேசவும் நம்பிக்கை வரப்பெற்றவனாய், “வெய்ட் பண்ணுங்க, ரெடியாகி வரோம்.” என்று ராஜாவை உள்ளே அழைத்து அமர வைத்து மகளுடன் அறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் ராஜா எடுத்து வந்திருந்த காரில் அமர்ந்திருந்தனர் மூவரும். மகளிடம் தன் அலைபேசியைக் கொடுத்தவன் ராஜாவைப் பார்க்க,
“இந்த வீடு புடிச்சிருக்கா சார்?” என அவன் கேட்க, ஏதோ புரிவது போலிருந்தது சக்திவேலனுக்கு.
“நீங்க நினைக்குறதுதான். நாங்கதான் பாதுகாப்பா இருக்கட்டும்னு இந்த வீட்டை உங்களுக்கு பாத்து கொடுத்தோம். அந்த தெருவுல நமக்கு வேண்டப்பட்டவங்க கொஞ்சம் பேர் இருக்காங்க, அவங்க உங்களுக்கு பாதுகாப்பா இருந்தாங்க. சக்தியை புடிக்க ஸ்கெட்ச் போட்டதுக்கு அப்புறம் உங்களை அப்படியே விடமுடியுமா? அதான் ஒரு சின்ன ஏற்பாடு.”
“சுத்தி நம்பிக்கையானவங்க இருந்தாலும் ஒன்னு ரெண்டு களை வந்துடுது. அதை புடுங்கனும்னுதான் பத்து நாளா தலைமறைவா இருந்தோம். ஆனாலும் இவ்ளோ விறைப்பா இருந்துட்டு ஒரு வாரமா சக்தியை தேடி தெரு பக்கம் வந்தீங்களே உள்ளுக்குள்ள பாசம் இருக்கு ஆனா வீம்பு புடிச்சுகிட்டு இருக்கீங்க. அதான் நான் கொஞ்சம் அதிகம் பேச வேண்டியதாகிட்டு. இனியாவது நல்லா இருங்க.” என்று ராஜா பேச, பார்வையை வெளிப்பக்கம் திருப்பிய சக்திவேலனுள் பல யோசனைகள்.
வருங்காலம் எப்படி இருக்கப்போகிறது? அனைத்திலிருந்தும் வெளிவந்துவிட்டதாக இவர்கள் சொல்வது போல் உண்மையிலேயே சக்தி வெளியே வந்துவிட்டால் அவர்களை நிம்மதியாக இருக்க விடுவார்களா? உண்மை தெரிந்த பின் கயல்விழி எப்படி உணர்வார்கள்? என மகள் குறித்து யோசனை செல்ல, கைகள் அன்னிச்சையாக கயல்விழியை இறுக அணைத்துக்கொண்டது. திடுமென இறுகிய தந்தையின் பிடியில் நெளிந்த கயல்விழி அப்பா என்று விளிக்க, உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல் விழித்தவன் தன் பிடியை தளர்த்தினான்.
அவர்களை ஓரக்கண்ணால் பார்த்த ராஜா எதுவும் சொல்லவில்லை தன் வேகத்தை கூட்டினான். சில மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு வீட்டு வாசலில் சென்று நின்றது கார்.
யோசனையுடன் உறங்கும் மகளை தூக்கிக்கொண்டு சக்திவேலன் இறங்க, ராஜாவும் இறங்கி வந்து வீட்டின் அழைப்பு மணியை அடித்தான். சக்தி வந்து கதவை திறக்க, அவளிடம் தலையசைத்து ராஜா விடைபெற, சக்தியின் பார்வை உறங்கும் மகள் மீது வாஞ்சையாய் படிந்தது. கைகள் உயர்ந்து அவளை தூக்குவதற்கு நீள, மெல்ல தன் பிடியைத் தளர்த்தி மகளை மனைவியிடம் கைமாற்றிவிட்டான்.
கண்கள் கலங்கி மகளின் உருவத்தை மறைக்க, வேகமாக முழங்கையால் துடைத்துக்கொண்டே கயல்விழியை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். கைமாறியதில் விழித்துக்கொண்ட கயல்விழி சக்தியைப் பார்த்து அதிர்ந்து அப்பா என்று தலையை திருப்ப, மகளின் தலையை ஆதுரமாக வருடியவன், “அம்மா வேணும்னு கேட்டீல்ல. அம்மா பாப்பா… இந்த கயல்விழியோட அம்மா அழகுராணி.” என சக்தியை கைகாண்பிக்க, கண்கள் கலங்கிற்று சக்திக்கு. உணர்ச்சிப் பிடியில் துடிக்கும் கன்னங்களும் கேவல் வெடிக்க காத்திருக்கும் இதழ்களுமாய் மகளை ஆர்வமாய் பார்க்க, தந்தையும் தாயையும் மாறி மாறி பார்த்து மிரண்டாள் குழந்தை.
தன் பிடியில் மகள் மிரளுகிறாள் என்ற நிதர்சனம் நெஞ்சை கிழிக்க, கயல்விழியின் கன்னங்களை தாங்கிப்பிடித்த சக்தி, “அம்மாடா விழி. இனி அம்மா உன்கூடவே இருப்பேன்.” என்று சொல்ல, தந்தையை திருப்பிப் பார்த்த குழந்தை அவன் கண்ணசைக்கவும் அழகியின் கன்னங்களை துடைத்துவிட்டு, “அம்மா.” என்றாள். அவ்வளவுதான் சக்தியின் திடம் மொத்தமும் வடிந்து மகளை அழுத்தி அணைத்துப் பிடித்தவள் வெடித்துக் கிளம்பிய அழுகையுடன் பிள்ளையின் முகமெங்கும் முத்தம் பதித்தாள். சக்தியின் அழுகையில் மீண்டும் கயல்விழி மிரள, “அழகி…” என கணவன் அதட்ட, அதற்கு மேல் முடியாதவளாக மகளுடன் அவன் மீது சாய்ந்துவிட, உணர்ச்சிப் பெருக்கில் வாய்விட்டு அழுதுவிட்டாள் அழகுராணி.