“குரலை உசத்துறது எல்லாம் என்ன பழக்கம்? எங்கிருந்து கத்துகிட்ட?” என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைத்துவிடப்போகிறது ஏழு வயது சிறுமியிடமிருந்து.
“சுவாதி ஆன்டி கூட இருந்தா ஹாப்பியா இருக்கும், நம்மகூடவே அவங்க இருக்கட்டும்னு சொன்னா வேணாம் சொல்ற, இந்த வீட்ல பால்கனி இருக்கு. இங்க நின்னு பாத்தாலே பீச் தெரியும் எனக்கு இங்கதான் இருக்கணும்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குற. உனக்கு என்னை புடிக்கல.” என்று அடுத்து அழுகையில் இறங்க, நெற்றியை பிடித்து அமர்ந்துவிட்டான் சக்திவேலன்.
அவன் தேடியது போல குறுகிய நாட்களிலேயே வேறு ஒரு வீடு அமைந்துவிட, அங்கு செல்வதற்குதான் இந்த பாடு. இதுநாள் வரை கயல்விழி அவனுக்கு எந்த கஷ்டமும் கொடுத்ததில்லை. அவன் சொல்வதை கேட்டுக்கொள்வாள் பெரிதாக பிடிவாதங்கள் எல்லாம் இருக்காது. இங்கு வந்தபின் அனைத்தும் புதிதாய். தலை வலிப்பது போல் இருந்தது. அன்று இரவு சண்டையிட்டு பாதியில் கிளம்பிச் சென்ற மனைவி திரும்பி வராததே ஏமாற்றமும் நிம்மதியுமாய் இருவேறு உணர்வுகளை கொடுக்க, வீடு இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மூலம் விஷயம் கேள்விப்பட்டு நேரில் சென்று வீட்டை பார்த்து வந்துவிட்டான். தாமதப்படுத்தாது விரைவில் கிளம்பிவிட வேண்டும் என்று பொருட்களை அடுக்க மகளின் உதவியை நாடும் வேளையில் தான் இப்படி அவள் பிடிவாதம் பிடிப்பது.
“என்னை உங்ககூட கூட்டிட்டு போங்க. அப்பாக்கு என்னை பிடிக்கல.” என்ற குரலில் திடுக்கிட்டு யோசனையிலிருந்து வெளிவந்தவன் திரும்பிப் பார்க்க, அலைபேசியில் அழுகுரலில் பேசிக்கொண்டிருந்தாள் கயல்விழி. யாரென்று பார்க்காமலே தெரிந்துபோனது, சுவாதியை தவிர வேறு யாரிடமும் இப்படி பேசுபவளில்லையே கயல்.
“என்ன பேசிட்டு இருக்க பாப்பா? போய் ஹோம்ஒர்க் பண்ணு, ஓடு.” மகளிடமிருந்து அலைபேசி வாங்கி அவளை நகர்த்தப் பார்க்க அழுகையுடன் அவனை ஏறிட்டாள் கயல்விழி.
கன்னங்களை நனைக்கும் கண்ணீரின் பலனில் அவளின் கண்களும் கன்னங்களும் சிவந்து போக மனம் முழுதும் பாரமேறியது. பிஞ்சு மனதிற்கு என்ன தெரியும் இங்கிருக்கும் ஆபத்தும் அச்சுறுத்தலும். அருகிலிருக்கும் பெற்றவள் அரணாய் நிற்கவேண்டியதற்கு பதில் ஆபத்தாய் இருப்பதை மகளிடம் எப்படி சொல்வது என்று தவிப்பாய் பார்த்தவன் கயல்விழியை தன் மீது சாய்த்துக்கொண்டான்.
கோபத்தில் அவனை இரண்டடி அடித்தவள் அவனிடமிருந்து விலகி அறைக்குள் ஓடினாள். இவன் பின்னோடு செல்வதற்கு முன் அலைபேசி அழைப்பு வந்து தடுத்தது. இவர்களுக்குள் பேசிக்கொள்ளவும் சுவாதிதான் அழைப்பை துண்டித்து மீண்டும் அழைத்திருந்தாள். பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றவன்,
“வேலை டைம்ல கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டாளா? நான் சொல்லி வைக்குறேன்.” என்றான் பொதுவாய்.
“போன் போட்டு அழறா இப்போ என்னை டிஸ்டர்ப் பண்றது தான் பெரிய விஷயமா? என்னாச்சு? இப்படியெல்லாம் பேசுற பொண்ணு இல்லையே கயல்.” பதட்டமும் வருத்தமுமாக ஆரம்பித்தாள் சுவாதி.
“ப்ச்… வேற வீடு பாத்துட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல ஷிப்ட் ஆகுறோம் அதுக்குதான் இந்த ஆர்ப்பாட்டம்.” கயலின் அழுகையில் சுவாதி வருந்துவது புரிந்து வேறு வழியின்றி பகிர்ந்தான் சக்திவேலன்.
“அப்படி மாறியே ஆகணும்னு என்ன வந்துது? கயலை அழ வேற விடுறீங்க, அவளை விடவா இப்போ இது அவசியம்? எந்த அளவுக்கு கஷ்டமா இருந்தா நீங்க வேண்டாம்னு சொல்லுவா. வீடெல்லாம் மாற வேண்டாம், ஹவுஸ் ஓனர்கிட்ட பேசுங்க.” என்று கட்டளை போல் சொல்ல, எரிச்சலானது சக்திவேலனுக்கு. ஆளாளுக்கு தன் முடிவுகளில் மூக்கை நுழைத்து தன்னை அவர்கள் இசைவுக்கு ஆட்டிவைக்க முயல்கிறார்கள் என்ற கடுப்பு மொத்தமும் இவளிடம் இறங்கியது.
“முடிஞ்சா அவளை சமாதானம் பண்ணு இல்லையா பேசாம இரு, எனக்கு ஆடர் போடுற வேலையெல்லாம் வேண்டாம்.”
“கயல் அழுகுறத பார்த்தும் எப்படி இப்படி பேசுறீங்க? இங்க இருக்குற எனக்கே நெஞ்சு பதறுது புள்ளை அழுகுறாளேனு…” இவளும் பின்வாங்காமல் சற்று காட்டமாகவே கேட்டாள்.
“என் பொண்ணை அழ விடணும்னு எனக்கு ஆசை பாரு. உன்னை விட அவ மேல எனக்கு அக்கறை அதிகம் இருக்கு… நீ ஜஸ்ட் பிரென்ட் தான் அந்த லிமிட்ல இரு.” என்று இவன் குதறியதில் காயப்பட்டு போனாள் சுவாதி.
“ஜஸ்ட் பிரென்ட் இல்லை… நல்லது. இதை உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க மிஸ்டர். சக்திவேலன். தினம் போன் பண்ணி அவளுக்கு புடிச்சது, புடிக்காதது, ஸ்கூல் பிரண்ட்ஸ்கிட்ட காசிப் பேசுனது, அவளுக்கு வேண்டியது, வேண்டாததுனு எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்றா. அவகிட்ட போய் சொல்லுங்க நான் ஜஸ்ட் பிரெண்டு என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுனு… எவ்ளோ ஈஸியா சொல்லிட்டீங்க. அஞ்சு வருஷமா தினம் என்கிட்ட அவளை விளையாட அனுப்புனப்போ தெரியல நான் ஜஸ்ட் பிரெண்டுனு.”
பட்டென்று சொல்லியிருக்கக்கூடாதோ என்று யோசித்த சக்திவேலன் நெற்றியை பிடித்துக்கொண்டான், “சுவாதி.”’
“இந்த ஜஸ்ட் பிரென்ட் இல்லைனா அவளுக்கு இருக்குற ஏக்கமெல்லாம் பாரமா அழுத்தி தொலைஞ்சி போயிருப்பா… உங்களுக்கு புரியுதா இல்லையா ஏழு வயசு குழந்தை அவ. அம்மா, அப்பா, பிரெண்ட்ஸ் இதுதான் அவ உலகம். அதை சுருக்கிட்டே போனா அவளோட மெண்டல் ஹெல்த் பாதிக்கப்படாதா?” கயல் மீதான அக்கறையில் சுவாதி பேச பேச, இவனுக்கு குத்தியது. பெற்றவர்கள் கல்லென இருக்க, மகளின் ஏக்கங்களுக்கு வடிகாலாய் வேறொருவள் இருக்கிறாள்.
“ஹலோ இருக்கீங்களா?” என்ற சுவாதியின் கேள்விக்கு இவனிடமிருந்து சிறு முனகல் பதிலாய்.
“அவளை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. அம்மா இல்லாத பொண்ணு…” என்றதும் இவனுக்கு சுருக்கென்றது. என் மகளுக்கு அம்மா இல்லையா… இதோ அரை கிலோமீட்டர் தொலையில் என் பார்வைக்கு ஏங்கி எங்களுடன் இணைய காத்திருக்கிறாளே. ம் என்றால் என்னையும் மகளையும் உள்ளங்கையில் வைத்து தாங்குவாள். ஆனால் உடன் சேர்க்க முடியாதே… அதனை வாய் திறந்து சுவாதியிடம் சொல்ல முடியவில்லை.
“இங்கிருந்து அங்க போனதே அவளுக்கு சுணக்கம்தான். இங்க மாதிரி அங்க வீட்டு பக்கத்துல அவளுக்கு பிரெண்ட்ஸ் இல்லை. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தா லோன்லியா பீல் பண்றா. இதுல திரும்ப வீடு மாறனும்னா அவளுக்கு அக்சப்ட் பண்ணிக்க முடியல.” சக்திவேலன் அமைதியாகவும் சுவாதி இறங்கி வந்து பேசினாள். இவன் என்ன கோபப்பட்டாலும் சிறு வயதிலிருந்து தன்னிடம் ஒட்டிக்கொண்ட கயல்விழியை அப்படியே விட மனமில்லை சுவாதிக்கு.
“எனக்கு ஒன்னு தோணுது, சொன்னா கோச்சிக்க கூடாது.” அவள் பீடிகை போட, வரப்போகும் கேள்விக்கு சுத்தமாக அவன் தயாராக இல்லை என்று தாமதமாக புரிந்தது.
“நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்ககூடாது, கயலுக்காக? அம்மா இல்லைங்குற ஏக்கம் அவளுக்குள்ள இருக்கு, சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கன்னு அமைதியா இருக்கா. அவளுக்காக யோசிங்க. கயலுக்கு இனிமே தான் அம்மாவோட அரவணைப்பும் ஆதரவும் ரொம்ப தேவைப்படும்.” என்று அவள் சொல்லவும் அழைப்பை அப்படியே துண்டித்துவிட்டான். இன்னொரு திருமணமா அவனால் யோசிக்க கூட முடியவில்லை.
கயல்விழி போதும் தனக்கு என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன் மகளை தேடிக்கொண்டு சென்றான். அழுகை நின்று பால்கனி வழி வந்த கடல் காற்றின் உபயத்தால் உறக்கத்திற்கு சென்றிருந்தாள். மகள் அருகினில் அமர்ந்தவன் அவள் தலை ஒதுக்கி ஆதுரமாக முகத்தை வருடினான்.
“அம்மா வேணுமா பாப்பா உனக்கு? சுவாதி சொல்றா நீ ஏங்கி போயிருக்கேன்னு… இந்த அப்பா மட்டும் போதாதாடா? இன்னொரு அம்மா கொண்டு வரச்சொல்றா சுவாதி. அவளை மாதிரி நீயும் கேட்டுறாதடா, அப்பாவால கண்டிப்பா அதை செய்ய முடியாது. அம்மா தப்பு பண்ணிட்டா, அப்பாவால மன்னிக்க முடியலைனாலும் வேறொருத்தரை அம்மா இடத்துல வைக்க முடியாதுடா. எனக்கும் என் அழகிக்குமான காதலுக்கு கிடைச்ச பரிசு நீ, அம்மானு வேற ஒருத்தரை உன்னை உரிமை கொண்டாடவிட்டு அதை பாக்குற சக்தி எனக்கு இல்லைடா. எனக்கு நீ உனக்கு நான் போதும்டா…” மனதில் தோன்றியதை மகளிடம் பகிர்ந்து அவளுடனே உடலை குறுக்கி படுத்துக்கொண்டான்.
சொன்னது போல் இருதினங்களில் முரடு பிடித்த மகளை சமாளித்து புது வீட்டிற்கு வந்துவிட்டனர். பால்கனி இல்லையென்றாலும் மாடி வீட்டின் முன் பகுதியில் நிறைய இடமிருந்தது. ஒரு ஊஞ்சல் அதில் மாட்டப்பட்டிருக்க, கயல்விழியின் மொத்த வருத்தமும் இருந்த தடம் தெரியாமல் மறைந்து போனது.
“ஐ ஊஞ்சல்… அப்பா என்னை ஆட்டி விடுங்க.” ஜம்மென்று அதில் ஏறி அமர்ந்துகொண்ட மகளை வாஞ்சையுடன் தழுவி முத்தமிட்டு ஊஞ்சலை ஆட்டிவிட்டான்.
இந்த வீடு பள்ளியிலிருந்து சற்று தூரம் தான் எனினும் சக்தியின் வாடையிலிருந்து தூர வந்துவிட்ட உணர்வு நிம்மதியையும் ஒருவித அலைப்புறுதலையும் கொடுத்தது. இனி அவளை பார்க்கவே போவதில்லை என்றில்லை. அத்தனை எளிதில் அவள் தங்களை விட்டு விலகிவிடுவாள் என்றும் தோன்றவில்லை. போதாதற்கு பள்ளியில் வேலையும் படிப்பும் இருக்கிறது, அவள் அங்கு வர நூறு என்ன இருநூறு சதவிகிதம் வாய்ப்புண்டு. அப்போது எப்படி சமாளிக்க என்று யோசனை.
“அப்பா இன்னும் ஸ்பீடா…” என்று சொல்ல, மகளின் ஆசைப்படி ஆட்டிவிட்டவன்,
“பாப்பா ஸ்கூல்ல தேவையில்லாம யார்கிட்டேயும் பேசக்கூடாது. உன் பிரெண்ட்ஸ் கிட்ட பேசலாம் ஆனா நாம எங்க இருக்கோம்னு எல்லாம் ஷேர் பண்ணிக்காத. அதுவும் அந்த பொண்ணு நிலா அவங்களோட பேசவே கூடாது.” என்று சொல்லி வைக்க, சமத்தாக தலையாட்டியது சிட்டு.
…
“பாப்பா என்னை பாத்தாலே முகம் திருப்பிட்டு போறா அக்கா.” சுணக்கத்துடன் சக்தியிடம் வந்து முறையிட்டாள் நிலா.
சக்தி யோசனையாய் பார்க்க, “பாப்பாவை பத்திரமா பாத்துக்க சொன்னீங்கள்ள சரினு பின்னாடி போனா திரும்பி பாத்து முறைச்சிட்டு போறா. அப்படியே உங்க கண்ணுதான்.” என்று செல்லமாய் சலித்துக்கொண்டவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் சக்தி.
“பாப்பா இங்க பக்கத்து தெருவுல இருக்குற மாதிரி தெரியல. நீங்க பாத்தீங்களா அக்கா? சார் என்ன சொல்றாரு?” ஆர்வமாக கேட்ட நிலாவின் சக்தியின் பார்வை ஆராய்ந்தது.
அவள் பார்வை வீச்சில் நெளிந்தவள், “என்ன அக்கா? சீக்கிரம் சாரோட வீட்டுக்கு போய்டுவீங்கள்ள?” என்று கேட்க, இல்லை என்பது போல் மெல்ல அசைந்தது அவள் தலை.
“ஏன் அக்கா?” அதிர்ந்து கேட்டாள் நிலா.
“ஒத்து வராது நிலா.” என்றாள் சக்தி மொட்டையாக. நிலாவிற்கோ தலைவெடித்துவிடும் போலானது.
“என்ன என்னக்கா? ஏன்? பாப்பா பாவம் க்கா.”
கயல்விழியை சொன்னதும் கனிந்து வருந்தியது சக்தியின் விழிகள், “பெத்தவங்க பண்ற தப்புக்கான பாவம் புள்ளைங்க தலையில தான விடியும். அது வேண்டாமாம் என் வீட்டுக்காரருக்கு.”
“பாவமா? என்னக்கா பேசுறீங்க. இந்த தெருவுல இருக்குற எல்லாருமே உங்களை எப்படி புகழ்ந்து பேசுறாங்க தெரியுமா. நீங்க இல்லைனா எனக்குமே இந்த வாழ்க்கை இப்படி இருந்திருக்குமா தெரியாது. நீங்க சேக்குற புண்ணியம் உங்க பொண்ணை சேரும் க்கா. இதெல்லாம் யோசிக்காதீங்க, சார்கிட்ட பேசுங்க.” என்று நிலா ஊக்குவிக்க, அவளை உத்துப் பார்த்த சக்தி,
“எந்த உறவையும் கட்டாயப்படுத்தி நிலைக்க வைக்க முடியாது நிலா. நான் வாழுற இந்த வாழ்க்கையை அவரால ஏத்துக்க முடியல. வற்புறுத்தவா முடியும்? சில நேரம் ஒத்துவராததை வெட்டி விடுறது தான் எல்லாருக்கும் நல்லது.”
“இல்லை அக்கா…” ஏதோ சொல்ல வந்தவளை தடுத்த சக்தி பேசி அனுப்பி வைத்தாள்.
“நான் அவங்களோட சேரணும்னு நினைக்குற உன் நல்ல மனசு எனக்கு புரியுது. ஆனா என்ன செய்ய விதின்னு ஒன்னு இருக்கே. இதை பத்தி இனி நாம பேச வேண்டாம்.”
அடுத்து வந்த சில நாட்கள் சந்தையில் இருக்கும் தன் மீன்கடைக்கு செல்வது மாலை கடற்கரையில் ஓய்வெடுப்பது என்று தன் பஞ்சாயத்துகள் அனைத்தையும் ஓரங்கக்கட்டி வைத்து இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள். தன் ஆட்களையும் அவரவர் வேலை பார்த்துக்கொண்டு அமைதி காக்க சொன்னாள்.
“இன்னா சக்தி தெருவையே சுத்தி சுத்தி வர்ற… நம்ம ஊருல கொள்ளையடிக்குறது வம்பிழுக்கிறது எல்லாத்தையும் நிறுத்திட்டாங்களா என்ன? பஞ்சாயத்துக்கு போன மாதிரி தெரியலையே…” என்று தெருவில் இருந்தவர்கள் கூட கவனித்துக் கேட்டனர். அனைத்தையும் சிறு சிரிப்புடன் கடந்தவள் அன்றைய இரவு பரபரப்பாக வீட்டில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
குடும்பத்துடன் சேர்வதற்கு முன் இறுதியாக ஒப்புக்கொண்ட வேலையை முடிக்கும் நாள் அன்று. அவள் பெயரில் சரக்கை வெளியே எடுத்து சந்தையில் பரப்பிவிட டோக்கன் போட்டிருக்க, தன் திட்டம் சரியாக நிறைவேறுமா என்ற பதட்டத்தில் இருந்தாள். அந்நேரம் பார்த்து, “அக்கா…” என்று வந்து அழைத்த நிலாவைப் பார்த்ததும் சக்தியின் முகம் இயல்பை தத்தெடுத்துக்கொண்டது.
“தூங்கலையா நிலா?”
“க்கா… எல்லாம் என்னன்னவோ பேசிக்குறாங்க?”
“என்ன பேசிக்குறாங்க?”
“உங்களுக்கு தெரியாதா?” என்று சக்தியையே திருப்பிக்கேட்டாள் நிலா.
“நீதான பேசிக்குறாங்கனு சொன்ன?” என்று அவளையே மடக்கப் பார்த்தாள் சக்தி.
“இல்லைக்கா… போதை பொருள் கடத்துறீங்க அது இதுனு சொல்றாங்க. கேட்டதும் எனக்கு சுர்ருன்னு வந்துச்சு, நல்லா திருப்பி கேட்டுவிட்டு வந்தேன்.” என்று கோவம் போல் பேச,
“அப்படியா? யார் பேசுனா?” சாவுகாசமாக கேட்டவளை கண்கள் சுருக்கிப் பார்த்தாள் நிலா.
“நம்ம கோடித்தெரு குப்பம்மா மருமவன்கிட்ட வஞ்சிர மீனுக்கு சொல்லியிருந்தேன். அதை வாங்க போறப்போ தான் அவன் தோஸ்த்துக்கிட்ட இப்படினு சொல்லிட்டு இருந்தான்.”
“ஓ…”
“அதுமட்டுமில்லை இன்னைக்கு ஏதோ சரக்கு வருது அதை வாங்கி வெளிய விட்டா உங்க ரேஞ்சே மாறிடும்னு எல்லாம் சொன்னான்.”
“உன்னை முறைச்சிகிட்டே திரிஞ்சானே ரவி அவன் என்ன கேஸ்ல உள்ள போனான்னு தெரியுமா?” என்று சக்தி அழுத்தமாக கேட்கவும் ஜெர்க்கானது நிலாவுக்கு.
“க்கா?”
“சொல்லு நிலா. என்கூட இருக்குற என் வலது கை அவன். அவன் எதுக்கு உள்ள போனான்னு நினைக்குற?”
“போதை பொருள் கடத்தல்.” தேய்ந்து ஒலித்தது நிலாவின் பதில்.
“அப்போ நான் என்ன பண்றேனு நினைக்குற நீ?” இப்படி நேரடியாய் அதிரடிப்பாள் என்று எதிர்பாராத நிலா அதிர்ந்து பார்த்தாள்.
“க்கா?”
“அந்த குப்பம்மா மருமவன் சரியா சொல்லியிருப்பானா இல்லை தப்பா சொல்லியிருப்பானா?”
“க்கா…”
“சரி விடு. புறணி பேசுறவன் ஆயிரம் பேசுவான் அதை எதுக்கு ஆராய்ஞ்சிட்டு? எனக்கு தூக்கம் வருது. நீ வேணும்னா இன்னைக்கு இங்கேயே தூங்குறியா?”
“இல்லை இல்லை அக்கா… புது இடத்துல தூக்கம் வராது. நான் வீட்டுக்கே போறேன். நீங்க பாருங்க.” என்று கிளம்பிவிட்டாள் நிலா.
அவள் சென்றபின் வீட்டை பூட்டிக்கொண்டு சக்தி தெருவில் இறங்கி நடக்க, அவளெதிரே ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுற்றி முற்றி பார்த்துவிட்டு சக்தி அதில் ஏறி சென்றுவிட, அங்கிருந்த ஒரு தடுப்பிற்கு பின் மறைந்திருந்து அவளை கண்காணித்த உருவம் அவசரமாக தன் அலைபேசி எடுத்து சக்தி கிளம்பிவிட்டதை செய்தியாக யாருக்கோ அனுப்பிவிட்டது.
சில நிமிடங்களிலேயே சென்னைத் துறைமுகம் பரபரப்பானது. மறுநாள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாகியது.
“தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பல் சென்னை துறைமுகத்தில் கையும் களவுமாக பிடிபட்டனர். அந்த கும்பலுக்கு தலைமை வகித்த சக்தி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.”