தான் மறுத்தால் சண்டைபிடிப்பாள், அழுவாள் பின் நிதர்சனம் உணர்ந்து விலகிவிடுவாள் என்று எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கொண்டிருந்தவனுக்கு பெருத்த அடியானது அவள் மகளுடன் சென்று படுத்துக்கொண்டது. இயலாமை, கோபம், அதிர்ச்சி என உணர்வுப்பிரவாகமாய் இருந்தவன் மனம் இளக்கமும் கலக்குமாய் கலங்கிக்கிடந்தது. இரவு உணவு சமைக்க வருவேன் என்று அவள் சொல்லிச் சென்றதிலேயே பீதியாகி ஊர் சுற்றியவன் சில வீடுகளை வாடகைக்கு பார்த்துவிட்டு கயல்விழிக்கு உறக்கம் சுழற்றவும் உணவு வாங்கிக்கொடுத்து கூட்டிவந்தான். சக்தி காத்திருந்து பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாள் என்று இலகுவாக அவளை எடைபோட்டு இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வண்டியை விட, இவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்தாள் அழுகுராணியாக.
தோளில் உறங்கும் மகள், நிலவொளியில் தங்கள் வீட்டு வாயிலில் காத்திருக்கும் மனைவி. எல்லாம் சுமூகமாக இருந்திருந்தால் இக்காட்சி அவன் நெஞ்சத்தை நிறைந்திருக்கும். மாறாக தணலென தகித்தது. இவள் வழிமாறாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணியவனுக்கு அவள் அப்படி இருந்திருந்தால் அவனே இவ்வுலகில் இல்லாமல் போயிருப்பான் என்ற நிதர்சனம் பொட்டில் அறைய, அமைதியாக மகளுடன் படுத்திருக்கும் மனைவியை பார்த்தான்.
என்ன தோன்றியதோ படுத்திருந்த அழகி சடாரென எழுந்தாள். அவளிடம் நிலைக்குத்தி நின்ற அவன் பார்வையின் தாக்கத்தில் எழுந்து அவனிடம் வந்தவள், கலங்கும் மனதினை மறைக்க முயலாது,
“பாடாப்படுத்துற இந்த காதல் உங்களை விடக்கூடாதுனு சொல்லுது அறிவு இப்படி வேண்டாம் வேண்டாம்னு இருக்குறவனை துரத்தி துரத்தி போறியேனு கேக்குது. என்னை ஏன் இப்படி படுத்துறீங்க? நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன், பாசத்தை காமிச்சு காதலை கொட்டி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காமிச்சு நீங்க இல்லைனா எதுவுமே இல்லைங்குற அளவுக்கு பழக்கிவிட்டுட்டு போகப்பார்த்தீங்க, காப்பாத்தி கூட்டிட்டு வந்தா அப்படியே விட்டுட்டு போனீங்க. தேடி உங்ககிட்ட வரத்தெரியாம ஒதுங்கி இல்லை, நான் செஞ்சது தப்புனு எனக்கே தெரியும் அதுக்கு தண்டனையா தள்ளி இருந்துகிட்டேன். முழுசா அஞ்சு வருஷம் என்னை நானே தொலைச்சு முகமூடி போட்டுட்டு வாழறப்போ கண்ணு முன்னாடி வந்து என்னை பலவீனப்படுத்துறீங்க.”
“இதுக்கு மேல என்னால முடியாது எல்லாத்தையும் விட்டுட்டு வரேன்னு சொன்னாலும் காது கொடுத்து கேக்க மாட்டேங்குறீங்க, சரினு பிடிவாதமா நான் இங்க வந்தா… என்னை ஏன் இப்படி தள்ளி நிறுத்துறீங்க? அம்மா வாசம்னா என்னனு தெரியாம வளந்த என்னோட பொண்ணுக்கும் என் நிலைமைதானா? அவளை யோசிக்க மாட்டீங்களா? இப்போவும் தூக்கத்துல எழுந்து என்னை பாத்து என் பொண்ணு என்ன சொல்லுவானு நினைச்சாலே கண் மூட முடியல என்னால… உங்க உயிரை என்கூட புடிச்சி வச்சிக்க நினைச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?” மனதின் அழுத்தங்கள் அவன் காட்டும் பாராமுகத்திலும் எதிரியென எட்ட நிறுத்தும் அவன் பார்வையிலும் வெடித்துக்கிளம்பியது.
வேண்டாம் வேண்டாம் என்று அவன் ஒதுங்க ஒதுங்க, இவளின் ஆற்றாமை பெருகி சுயமிழக்க செய்தது. மனதின் புழுக்கம், அதனுள் அடைபட்டிருக்கும் காதல், இரத்தமும் சதையும் கொடுத்து ஈன்ற மகளின் முன் யாரோவென நிற்கும் அவலம் என எதுவும் அவளை அவளாக இருக்க விடவில்லை.
ஐந்து வருடமாக தன்னை திடமாக காட்டிக்கொண்ட சக்தி, எதையும் யோசித்து குறிவைத்து சொல்லியடிக்கும் சக்தி, வழிதவறி மாட்டிக்கொண்டவர்களை தூக்கிநிறுத்தி வழிகாட்டிவிடும் சக்தி இன்று தன் வாழ்க்கையை காப்பாற்றும் வழியறியாது நிற்கதியாக நிற்கும் அழகுராணியாக அவன் முன் தன் பலவீனங்களை கொட்டினாள். அதனை எதிர்கொண்டவனும் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனபலத்தை இழந்து கொண்டிருந்தான்.
“இன்னும் என்னதான்யா வேணும் உனக்கு? எல்லாத்தையும் விட்டாலும் நான் வேணாமா உனக்கு? நகமும் சதையுமா வாழ்ந்துட்டு இன்னைக்கு எப்படி யாரோ மாதிரி நிக்க முடியுது உன்னால? என் பொண்ணுக்கு அப்பா வேணும்னு நான் நினைச்ச மாதிரி அவளுக்கு அம்மா வேணும்னு ஒருநாள் கூட தோணலையா உனக்கு? கொள்கை, நேர்மை, கடமை, கண்ணியம்னு கட்டிக்காத்த எதுவும் உன் உயிரை காப்பாத்த வரலை…” என்று உணர்வுப்பிடியில் பேசியவளின் பேச்சிற்கு தடைபோடுவது போல் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
இருவரின் பார்வையும் ஒன்றொடு ஒன்று மோதிக்கொள்ள, நிச்சயம் சக்தியை தேடித்தான் வந்திருப்பர் என்று இளகிய முகம் மீண்டும் இறுக நின்றான் சக்திவேலன். கயல்விழி விழித்துவிடுவாளோ என்று அவசரமாக சென்று சக்தி கதவை திறக்க, பரபரப்பாக நின்றான் ராஜா.
“என்னாச்சு?”
“நீ வா சக்தி. முக்கியமான விஷயம்.” அவன் முகத்தில் இருந்த கலவரம் சக்தியை என்னவோ என்று எண்ண வைத்தது. திரும்பி சக்திவேலனை பார்க்க, ஏளனமாக விரிந்தது அவன் இதழ்கள். நீ விட நினைத்தாலும் அது உன்னை விடாது என்ற செய்தி அவன் முகத்தினில் இருந்ததோ? அவள் மேற்கொண்டு யோசிக்கும் முன்,
“சக்தி.” ராஜா அழுத்தமாக அவளை அழைக்க, அதனை மீற முடியாமல் கிளம்பினாள். படிக்கட்டில் இறங்கும் சமயம் கூட கணவனைத் தேடி தவிப்பாய் மேல் சென்று வந்த அவள் விழிகளுக்கு பதிலாய் வெறுமையே மிஞ்சியது.
கீழே வந்ததும் ஆட்டோவை கைகாட்டி அவன் ஏற சொல்ல, “என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே ஏறினாள்.
பதிலேதும் பேசாமல் ராஜாவே ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வெகுதூரம் சென்றான். விஷயம் பெரிது என்று அவன் செய்கையிலேயே புரிந்துகொண்ட சக்தி முன்னெச்சரிக்கையாய் விழிகளை நாலாபுறமும் சுழலவிட்டாள். சென்னை எல்லையைத்தாண்டி புறவழிச்சாலையின் ஒரு ஓரமாய் ஆட்டோவை நிறுத்தி இறங்கி சுற்றிலும் பார்த்தான். சந்தேகம் கொள்ளும்படி யாருமில்லை என உறுதி செய்த பிறகே சக்தியை கீழே இறங்கச் சொன்னான்.
“யாரும் பாலோ பண்றாங்களா?” விஷயம் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் அவள் கேட்க, நெற்றியை தேய்த்தவன், “ரவி பேசுனான் சக்தி.” என்று சொல்ல, சக்தியும் பரபரப்பானாள்.
“நார்காட்டிக்ஸ் ஆளுங்க அசந்த நேரம் நம்ம சைட் உள்ள ஏட்டு ஒருத்தர்கிட்ட போன் வாங்கி கூப்பிட்டான். நமக்கு ஷேடோ போட்டிருக்காங்க சக்தி.”
“தெரிஞ்ச விஷயம்தானே. ரவி என்ன சொன்னான் அதை சொல்லுங்க, நல்லாயிருக்கான்ல?” சக்தி அவசரப்பட்டாள்.
“நல்லாயிருக்குறதா? நீ வேற சக்தி. ஏதோ மூணு வேலை சோறு போடுறாங்களாம், அதுவே பெரிய விஷயம்.” ராஜா சலிக்க, இவள் கடுப்பானாள்.
“அவனை வெளில எடுக்க ஏற்பாடு பண்ணீங்களா இல்லையா?”
“எல்லாம் பாத்துட்டுதான் இருக்கேன். கவுன்சிலர் குடோனை வேற ஒருத்தருக்கு லீசுக்கு விட்டமாதிரி டாகுமெண்ட் ரெடி பண்ணி சரண்டராக வச்சாச்சு. கவுன்சிலர் ரூட் க்ளியர். இப்போ ரவி நம்மள பாலோ பண்றது ஒரு பொண்ணுன்னு சொல்றான். அவனுக்கு நிலா மேல தான் சந்தேகமா இருக்கு. யோசிச்சு பாரேன் அந்த பொண்ணை நீ காப்பாத்தி நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் எல்லாமே நடக்குது. உன் வீட்டுக்கே வந்து சோதனை போட்டாங்க, கவுன்சிலர் குடோன்ல வச்சி ரவியை புடிச்சி, பேக்கரி வரைக்கும் கண்டுபுடிச்சி சீல் வச்சிட்டாங்க.”
“நிலாவா?” ஏற்கனவே பலமுறை நிலா மீது சந்தேகம் என்று ரவி எகிற, இவள்தான் அடக்கி வைத்திருந்தாள்.
“நம்ம இடத்துக்கே வந்து பாவப்பட்ட மாதிரி நடிச்சி டீட்டையில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கோனு எனக்கும் சந்தேகமா இருக்கு.” இப்போது ராஜாவும் சந்தேகத்தொனியில் பேச, யோசித்துப்பார்த்தாள். நிலா வந்தபின் தான் போலீஸ், கேஸ் என்ற குளறுபிடி எல்லாம்.
“இதுல உன் வீட்டுக்காரர் வேலை பாக்குற ஸ்கூல்ல அந்த நிலாவுக்கு வேலை வாங்கிக்கொடுத்தது மட்டுமில்லாம உன் பொண்ணை பாத்துக்க சொல்லியிருக்க. இப்போ இவ்ளோ பிரச்சனை போய்ட்டு இருக்குறப்போ உன் குடும்பத்தோட உறவு கொண்டாடிட்டு இருக்க. எதுவும் சரியாப்படல சக்தி. நமக்கு மட்டுமில்லை உன்னோட குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேணும் இப்போ.” என்ற ராஜாவின் பேச்சில் பயந்துதான் போனாள் சக்தி.
“ஏன் ஏன் என் பொண்ணை என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே. இத்தனை வருஷம் அவங்க இந்த ஊர்லையே இல்லையே.” ஐயத்தில் பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது.
“அவங்க இதுல சம்மந்தப்படலதான் ஆனா அவங்க சம்மந்தப்பட்ட நீ இதுல இருக்கியே. உன்னை சிக்க வைக்க அவங்களை யூஸ் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?” என்று இன்னும் கிலிபடுத்தினான் ராஜா. வேண்டுமென்றில்லை இருக்கிற பிரச்சனையில் இப்போது இதுவும் சேர்ந்துகொண்டதே என்ற தவிப்பும் எரிச்சலும் அவனிடத்தில் ஒருங்கே இருந்தது.
“இப்போ என்ன பண்றது?” தன் குடும்பம் என்று வருகையில் அவளது மூளை வேலை நிறுத்தம் செய்தது. ஏற்கனவே தன்னால் பாதிப்பு வரும் என்ற எண்ணம் சக்திவேலனுக்கு உண்டு, அது உண்மையாகும் பட்சத்தில் அவளாலே அவளை மன்னிக்க முடியாமல் போய்விடுமோ என்று எங்கெங்கோ யோசனைகளை சென்றது.
“உன் வீட்டுக்காரர் சொல்ற மாதிரி விலகிடு சக்தி.” என்ற ராஜாவை சக்தியின் பார்வை எரிக்காமல் போனது ஆச்சர்யம்தான்.
“நேரா சொல்லி கேக்கலைனு இப்படி சுத்தி வளைச்சி சொல்றீங்களா?” அக்கினியாய் அவள் விழி விரிக்க, உச்சு கொட்டினான் ராஜா.
“எனக்கு வேற வேலை இல்லைனு நினச்சியா சக்தி? உனக்கும் உன் குடும்பத்துக்கும் அஞ்சு வருஷமா எந்த தொடர்பும் இல்லை அதை அப்படியே மெய்ன்டையின் பண்ணு, தானா அவங்க பக்கம் எதிரிங்க பார்வை போகாது. இல்லை எனக்கு என் குடும்பம் முக்கியம்னு உறவு கொண்டாடுனீன்னா அந்த உறவுக்கு வர ஆபத்தை பேஸ் பண்ணிதான் ஆகணும்.” என்ற கூற்றை ஏற்கமுடியாமல் கண்கள் கலங்க முகம் திருப்பினாள் சக்தி. உலகமே தன் விருப்பத்திற்கு எதிராய் நிற்பது போல் ஒரு பிரம்மை.
“சக்தி…”
“பேசாம நானே போலீஸ்ல சரண்டர் ஆகிடவா?” குரல் கலங்க சக்தி கேட்க, கோபம் கொள்வது ராஜாவின் முறை.
“லூசா நீ?”
“வேற என்ன பண்ணறது நான்? என் புருஷனுக்கு நான் நெறி தவறி செய்யுற வேலை புடிக்கல, அவருக்கு நான் வேணாம். உங்களுக்கு என்னை அவமதிச்ச புருஷனோட நான் சேர வேண்டாம், போக வேண்டிய தூரத்துல பாதி தாண்டிட்டோம் மீதியும் தாண்டுனு நிக்குறீங்க. இப்போ என் பொண்ணுக்கும் பிரச்சனை வரும்னா என்னதான் செய்யணும் நான்? அட்லீஸ்ட் தண்டனை அனுபவிச்சா என்னை ஏத்துப்பாருல என் சக்தி.” ராஜாவுக்கு இணையாக இவளும் குரலை உயர்த்தினாள்.
“அவர் ஏத்துக்கணும்னா தண்டனை முடியுற வரை முதல்ல நீ உயிரோட இருக்கனும். எதுவும் வேண்டாம்னு திருந்தி நீ உள்ள போயிட்டா உன்னை அப்படியே விட்டிருவாங்கனு நினைக்குறியா? விஷயம் வெளிய வரக்கூடாதுன்னு சத்தமில்லாம உன்னை முடிச்சிடுவாங்க. இது ஒருவழிப்பாதைனு கொஞ்ச நாளா நீ மறந்து போயிடுற சக்தி.” என்று அதற்கும் ராஜா பேச, சோர்ந்துதான் போனாள் சக்தி. உடலிலும் மனதிலும் வலுவில்லாதது போல் ஓய்ந்துபோய் அப்படியே சாலையில் அமர்ந்து ஆட்டோவில் மேல் சாய்ந்துகொண்டாள்.
“சக்தி… சக்தி… கொஞ்சம் எமோஷ்னலா யோசிக்காம அழகுராணியை ஒதுக்கி வச்சிட்டு சக்தியா யோசி.” மீண்டுமொருமுறை உடைந்து போகும் கண்ணாடிப் பாத்திரம் போல் விரிசல் கொடுக்க இருந்தவளை மீட்டெடுக்க முயன்றான் ராஜா.
பாவமாய் அவள் நிமிர்ந்து பார்க்க, இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டான் ராஜா.
“எதையும் யோசிக்காத, ஜஸ்ட் கண் மூடி உக்காரு சக்தி. உன்னால ஹேண்டில் பண்ண முடியும்.” தண்மையாய் சொன்னவன் வெகுநேரம் அவளை தொந்தரவு செய்யவில்லை. தானே தெளியட்டும் என்று துணையாக அமர்ந்திருந்தவன் ஒருகட்டத்தில் தூங்கிப்போக, சக்தி தோள் தொட்டு உசுப்பவும் விழித்தான்.
“தூங்கிட்டேனா?” என்று கேட்டுக்கொண்டே முகத்தை துடைத்துவிட்டு அவளைப் பார்க்க, சற்றுமுன் இருந்த உணர்வுகள் துடைக்கப்பட்டு நிர்மலமாக இருந்தாள்.
“சக்தி?”
“ஒரு யோசனை இருக்கு, சரி வருமான்னு தெரியல. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்.” என்று அவள் சொன்ன தொனியே சக்தி மீண்டுவிட்டாள் என்று உணர்த்தியது.
“எனக்குத் தெரியும்.” என்பது போல் கண்சிமிட்டியவள் தன் யோசனையை சொல்ல, அது சாத்தியப்படுமா என்ற சிந்தனைக்கு சென்று மீண்டவன் இப்படியும் அப்படியும் தலையசைத்து கட்டை விரல் உயர்த்தினான். தெளிந்த மனதோடும் திட்டத்தோடும் அங்கிருந்து கிளம்பினர்.