*16*

“அண்ணாச்சி பேசுனாரு. ரவியை வெளிய விடுறது கஷ்டங்குற மாதிரிதான் சொல்லியிருக்காங்க.” என்றான் ராஜா அந்நாளின் முடிவில்.

“வேற எதுவும் பண்ணமுடியாதா?” சக்தியின் முகத்தில் கவலையும் யோசனையும் போட்டி போட்டு அமர்ந்திருந்தது.

“சந்தேகத்தின் பேர்ல அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகல. எவிடென்சோட புடிச்சிருக்காங்க. அவ்வளவு சீக்கிரம் கையில தொக்கா கிடைச்ச ஆளை விடுவாங்கனு தோனல.” 

“யாரையும் பதிலுக்கு உள்ள இழுத்துவிட்டா ரவியை வெளில எடுக்க முடியுமோ?” யோசனையாய் கேட்டாள் சக்தி.

“முடிஞ்சளவு பாக்கலாம் சக்தி.”

“அதுக்குள்ள அவன்மேல கைவச்சிட்டா?” ரவியை நினைத்து கலக்கம் கொண்டு சக்தி பேச, அதே வருத்தம் ராஜாவுக்கும்.

“இதுவரைக்கும் வைக்காம இருப்பாங்கன்னு நினைக்குறியா?”

“ம்ச்… எவ்வளவு கவனமா இருந்தும் எப்படி இது நடந்துச்சுனு எனக்கு புரியவே இல்லை. நேரடியா கண்லபடாத மாதிரி பிரெட்டுகுள்ள தான சரக்கை வச்சிருந்தோம்.”

“நம்மள நல்லா மோப்பம் புடிச்சிருக்காங்க சக்தி. சரக்கு எப்படி பேக்கரிக்கு போயி அங்கிருந்து ஏஜென்டுக்கு கைமாறி விற்பனைக்கு போகுதுனு நோட்டம் விட்டிருக்காங்க. ரவியை புடிச்ச கொஞ்ச நேரத்துலேயே நம்ம சரக்கை ரொடேஷனுக்கு எடுக்குற பேக்கரிக்கு சீல் வச்சிட்டாங்க. இப்போ அந்த கடை ஓனரும் அவங்க கஸ்டடில தான். இதுலேந்து எப்படி வெளில வரப்போறோம்னே தெரியல இதுல கடைசியா ஒருமுறை சரக்கு எடுப்போம்னு சொல்ற. கூண்டோட கைலாசம் போற பிளான் எதுவும் வச்சிருக்கியா?”

மெலிதாக சிரித்த சக்தி, “சொன்னேனே நம்ம கூட்டதுல இருக்குற கருப்பு ஆட்டை கலையெடுக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்னு.”

“எதுவுமே வேண்டாம்னு முடிவெடுத்தப்புறம் அந்த கருப்பு ஆடை கண்டுபுடிச்சி நீ என்ன பண்ண போற? போணும் முடிவெடுத்தப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே போக வேண்டியதுதானே?” கோபத்தில் அவன் குரல் உயர்ந்தது.

“என் வாழ்க்கையை பாக்க போறேன்னு சொன்னது அவ்வளவு பெரிய குத்தமா? குத்திக்கிட்டே இருக்கீங்க.”

“எது உன் வாழ்க்கை? ஹான் சொல்லு சக்தி… எல்லா வழியும் அடைச்சப்புறம் உன் உயிரா நினைச்சவர் உயிரை காப்பாத்த இதுக்குள்ள வந்த. அதை கூட புரிஞ்சிக்க முடியாம உன்னை அம்போன்னு விட்டுட்டு போனவருக்காக உன்னையே தங்களோட நம்பிக்கையா, வாழ்வாதாரமா நினைச்சிட்டு இருக்குற கூட்டத்தை விட்டுட்டு போறேன்னு சொல்றது சரியா?” அடக்கப்பட்ட ஆத்திரமும் வருத்தமுமாய் ராஜா சக்தியை அழுத்தமாய் பார்க்க, சக்தி முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“உன்னை விட்டுட்டு போனதுக்கப்புறம் உனக்கு என்ன ஆச்சுனாவது தேடி இருப்பாரா சக்தி?” என்று அவன் கேட்கையிலேயே அவள் முகம் கசங்கியது.

“அவர் மட்டும் அவசரப்பட்டு உன்னை விட்டுட்டு போகாம நிதானமா யோசிச்சிருந்தா நீ இப்படி சக்தியா மாறியிருக்க வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது. அழகுராணியா உன் குடும்பத்துக்கு ராணியா வாழ்ந்திருப்ப சக்தி.”

“கடைசி வரைக்கும் நான் இப்படியே இருக்கணும். பூசி மொழுகி அதானே சொல்ல வர்றீங்க.” மனதிற்கு இனியவனை குறைவாக பேசுகிறான் என்ற கோபக்கனலுக்கு இணையாக அழுத்தமும் விரக்தியும் போட்டிபோட்டுக் கொண்டு வெளிப்பட்டது அவளது குரலில்.

“நீ இருந்தாலும் இல்லைனாலும் வாழ்க்கையை வாழ முடியுற ஒருத்தருக்காக நீ எல்லாத்தையும் விட்டுட்டு போகணுமான்னு தான் என் ஆதங்கம். ஆயிரம் அழகுராணி இருக்கலாம் ஆனா சக்தி கொஞ்சமாதான் இருக்காங்க. இங்க உன்னோட தேவை அதிகம் சக்தி.” 

“ஓஹ்… தேவை. ம்ம்ம்.” முகம் இறுக உணர்வுகளின் பிடியில் தத்தளித்தவள் தொண்டை நெறிக்கும் உணர்வை விழுங்கி, “இங்க என் இடத்தை நிரப்ப யார் வேணும்னாலும் வரலாம் ஆனா என் பொண்ணுக்கு அப்படியில்லை. அம்மாங்குற என் இடத்தை இவ்வளவு நாள் விட்டுட்டேன் இனி மாட்டேன். என்னை மாத்த முயற்சி பண்ணாதீங்க.” என்று தீர்மானமாய் கூறிவிட, அதனை ஏற்கவில்லை ராஜா.

“இப்போ நீ பண்ற இந்த வேலையை செய்ய ஆயிரம் சக்தி வரலாம் ஆனா சக்திக்கு இருக்குற குறிக்கோள் எல்லாருக்கும் இருக்காது. பணத் தேவைக்காக இதுல இறங்கியிருந்தாலும் உன் தேவைக்கு மீறி ஒத்த ரூபா எடுத்தது இல்லை. உனக்காகனு எதுவும் செஞ்சிகிட்டத்து இல்லை, எல்லாத்தையும் உன்னை சுத்தி இருக்குறவங்களுக்கு கொடுத்து அவங்க வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி இருக்க. பல பேரை காப்பாத்தி அவங்களுக்குனு ஒரு உலகத்தை உண்டாக்கி வாழ்வாதாரம் குடுத்திருக்க. நீ இருக்கேங்குற தைரியத்துல தான் பலபேர் நிம்மதியா தூங்குறாங்க.” 

“ஆனா நான் நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆச்சே.” என்றவள் குரல் கரகரப்பு அவனையும் வருந்தச் செய்தது. 

“உன் வருத்தம் எனக்கு புரியுது சக்தி. ஆனா ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதை செயல்படுத்த நிதானமா ஒவ்வொரு படியா ஏறி வந்து பாதி கிணறுல நிக்கும் போது இப்படி விட்டுட்டு போறது சரியா? இனியும் உன்னோட கொள்கையை ஒத்த மாதிரி ஒருத்தர் வருவாங்கனு நினைக்கிறியா?” 

“ப்ச்…” முகத்தை திருப்பிக்கொண்டவள் மனதினில் கல்லெறிந்த உணர்வு எழுந்தாலும் தன் குடும்பத்தை இனியும் விட்டு இருக்கும் எண்ணமில்லை. பல் முளைத்து பால்பருவத்தில் நெஞ்சு முட்டிய மகள் இன்று நெஞ்சுக்குழி வரை வளர்ந்து நிற்கிறாள். கொடுமையிலும் கொடுமையாக பெற்றவளை தெரியவில்லை மகளுக்கு. இதைவிட பெரிய தண்டனை என்ன இருந்துவிட முடியும் என்று நெஞ்சடைக்கும் உணர்வோடு அவள் தவிக்க, 

“உன் போட்டோ கூட காமிக்காம உன் பொண்ணை வளர்த்திருக்காரு சக்தி. அதுலயே தெரியலையா உன்னை அவங்க வாழ்க்கையில எங்க நிறுத்தியிருக்காருன்னு. அவருக்கு நீ தேவையில்லை.” அவளை ஒத்த இறுக்கத்துடன் மொழிந்தான் ராஜா. 

“ஆனா எனக்கு அவங்க தேவை. என் பொண்ணுக்கு நான் தேவை, அதை யாரும் மறுக்க முடியாது.” 

“எல்லாத்தையும் மறந்துட்டு உன் குடும்பம் உன் பொண்ணுன்னு சுயநலமாகிட்ட என்னவோ பண்ணு நீ.” என்று அதிருப்தியுடன் அவன் சென்றுவிட, கலக்கத்துடன் அமர்ந்துவிட்டாள் சக்தி. 

செய்யும் திரைமறைவு வேலைகளை விட்டுவிட்டு இயல்பானதொரு வாழ்வு வாழலாம் என்ற தன் விருப்பத்திற்கு இப்படி இருபுறமும் மறுப்பு வர கண்ணீர் வருவது போல் இருந்தது. உற்ற துணையாய் உடன்பிறந்தவன் போல் தன்னை காத்து தன்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் பக்கபலமாய் இருப்பவன் எதிர்ப்பு சோர்வுற செய்ததென்றால் கணவனே தன்னை ஒதுக்குவது மரண வேதனையாய் உள்ளிருந்து அழுத்தியது. சக்திவேலனுடன் கழித்த திருமணத்திற்கு பின்னான நாட்களை எண்ணி அந்த வாழ்க்கைக்கு மீண்டும் ஏங்கியது மனது. மகளும் கணவனுமே தன் உலகம் என்று வாழ்ந்த அந்த அழகுராணியின் களங்கமற்ற வெகுளித்தனம் மீண்டும் தன்னுள் வந்துவிடாதா என்ற ஏக்கம் இன்று ஏகத்திற்கும் போட்டு படுத்த அப்படியே வெறுந்தரையில் படுத்துவிட்டாள். எப்போதும் இருப்பது தான் அவனது நினைவுகள் எனினும் அவர்களை நேரில் பார்த்தபின் அவனது இல்லாமையும் ஒதுக்கமும் அக்னி நட்சத்திரமாய் போட்டு பொசுக்கியது. கால்களை குறுக்கி சுருண்டு படுத்தவள் அகக்கண்ணில் தாயின் வாசமின்றி வளர்ந்து தாயை பற்றிய கேள்விக்கு கலங்கித் தவித்து நின்ற கயல்விழி வந்து நிறைந்தாள்.

‘அம்மா இருக்கேன்டா விழி. இனி அழக்கூடாது நீ. என்னை மாதிரி அம்மா இல்லாதவளா உன்னை வளர விடமாட்டேன்டா தங்கம். அப்பா கோபமா இருந்தாலும் அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், சீக்கிரமே என்னை ஏத்துப்பாங்க. அப்புறம் நீ, நான், அப்பா மூணு பேரும் சந்தோஷமா இருக்கலாம். என் விழிக்கு பிடிச்சதெல்லாம் அம்மா செஞ்சி தருவேனாம், உன்னை மடியில போட்டு கதை சொல்லி தட்டிக்கொடுத்து தூங்க வைப்பேனாம்… என் சக்கரைகட்டி கூடவே இருந்து நல்லா பார்த்துப்பேனாம்… அப்பா அம்மாவை புரிஞ்சுப்பாங்களாடா? அப்பா வேண்டாம்னு சொன்னாலும் நீங்க அம்மாவோட இருப்பீங்கள்ல தங்கம்…’ உணர்வுகளின் பிரவாகமாய் மகளுடன் மானசீகமாய் ஒர் உரையாடல். தாயின் வேதனையை அவளின் இருப்பை அறியாத சிட்டோ முகம் சுருக்கி தந்தையை பார்த்தாள்.

“இங்கதான் பீச் இருக்குப்பா. பால்கனி கூட இருக்கு. இங்கேயே இருக்கலாம்.” என்று கெஞ்சலான பார்வையுடன் மொழிந்தவளை கண்டமாய் பார்த்துக்கொண்டே அறையில் இருக்கும் பொருட்களை அட்டைப்பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தான் சக்திவேலன்.

“ஊர்ல என் பிரெண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டு இப்போதான் இங்க வந்தோம். திரும்ப வேற வீட்டுக்கு போகணுமா. எனக்கு இங்கதான் புடிச்சிருக்கு.” தந்தை கண்டுகொள்ளவில்லை எனவும் பிடிவாதம் கூடிப்போனது பெண்ணிடம். 

“என்ன புதுசா பிடிவாதம் புடிக்குற. இங்கிருந்து கிளம்ப சொல்லிட்டாங்க கிளம்புறோம். அவ்வளவுதான்.” என் முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாக சொன்னவன் மனமெல்லாம் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று அலறியது. அது புரியாத கயல்விழி பாவமாய் முகத்தை கைகளில் தாங்கிக்கொண்டு,

“இங்கேயே இருக்கலாம்னு பேசுங்க அப்பா. ப்ளீஸ்.” 

“கயல்.” அதட்டல் போல் அவன் குரல் உயர்த்த, அந்த குட்டி உதடு அழுகையில் பிதுங்கியது.

“என்னை திட்டிட்டே இருக்கீங்க. சுவாதி ஆன்ட்டிகிட்ட இருந்து இங்க கூட்டிட்டு வந்தீங்க இப்போ இங்க வேண்டாம்னு சொல்றீங்க.” அழுதுகொண்டே புகார் வாசித்தவள் பொத்தென்று கட்டிலில் இருந்து குதித்திறங்கி மேசையில் இருந்த அவன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

புதிதாக முளைத்திருக்கும் மகளின் பிடிவாதத்தில் தலையை உலுக்கிக்கொண்டவன் பின்னோடு சென்று பார்க்க, சுவாதியிடம் அலைபேசியில் குறை பேசிக்கொண்டிருந்தாள் கயல்விழி. வேகமாக அவளிடம் வந்தவன், “முடிஞ்சிச்சுச்சா? போயி டிரெஸ் மாத்து புது வீடு பாக்க போகணும்.” என்று சொல்லிக்கொண்டே அவளிடமிருந்து அலைபேசியை பறித்திருந்தான். தந்தையை தலையுயர்த்தி பார்த்த கயல்விழி தன் குட்டி விழிகளின் முறைப்புடன் அங்கிருந்த நாற்காலியில் காலை மடித்துக்கொண்டு முகத்தை திருப்பி அமர்ந்துகொண்டாள்.

“அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே அலைபேசியை காதில் வைக்க,

“சின்ன குழந்தை அவ. இப்படி தான் ரியாக்ட் பண்ணுவா. அந்த வீடு அவளுக்கு புடிச்சிருச்சு, ஏன் காலி பண்ணனும்னு இருக்கீங்க. அவளுக்காக இருக்கலாம்ல.” என்று பொறுமையாக சுவாதி பேச,

“ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொன்னதுக்கு என்கிட்ட முகத்தை காமிச்சிட்டு உக்காந்திருக்கா.” என்று சக்திவேலனும் குறை பாடினான்.

“அங்க போய் இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலையே அதுக்குள்ள ஏன் காலி பண்ண சொல்றாங்க? என்னாச்சு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க, தற்போதைய சக்தியின் உருவம் மனதிற்குள் நிழலாடியது. அவளது அருகாமை தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் மாறிவிடுமோ என்ற ஐயத்தில் ஒன்று சக்தியுடனான பழக்கத்தை குறைத்துக்கொள்வதோடு அவளின் வரவை தடுத்து நிறுத்துவது இல்லையென்றால் வீட்டை காலி செய்வது என்று வீட்டின் உரிமையாளர் கொடுத்த இரண்டு தேர்வில் காலி செய்வதை பிடித்துக்கொண்டான். சக்தியை ம்கூம் அழகியை அருகில் வைத்துக்கொண்டு அவனால் இயல்பாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை அதனாலேயே இந்த முடிவு. அதனை எப்படி சுவாதியிடம் பகிர முடியும் என்று யோசித்து நிற்க,

“இன்னும் என்னை வேறாளா தான் பாக்குறீங்கல்ல?” என்ற அவளது கேள்வியில் திடுக்கிட்டவன், “என்ன பேச்சு இது?” என சற்று காட்டமாகவே கேட்டிருந்தான். அதில் உச்சுக்கொட்டியவள், “தினம் ஒருதடவை கயல் கிட்ட பேசிடுறேன் ஆனா நீங்க இன்னும் அ ஆன்னு இருக்குறது நல்லவா இருக்கு. பிரெண்டா கூட ஏத்துக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்? என்னவோ போங்க சார். கயல்கிட்ட நாளைக்கு பேசுறேன்.” என்று வைத்துவிட்டாள் சுவாதி.  

நொடி நேரம் அவள் பேச்சின் பேதம் அவனை குழப்பியிருக்க, அலைபேசியால் நெற்றியில் அடித்துக்கொண்டான். கயல் அழவும் ‘என்கிட்ட காரணத்தை வாங்க பாத்திருப்பா’ என்று அதனை புறந்தள்ளியவன் மகளின் முன் சென்று அமர்ந்தான். கைகளை மார்போடு கட்டிக்கொண்ட கயல்விழி அவன் வந்தமரவும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

இருபக்கமும் இருந்த சிண்டு இப்படியும் அப்படியும் ஆட அவளின் சிலுப்பலை ரசித்தவண்ணம் மகளை அப்படியே கைகளில் தூக்கி இருந்தான் சக்திவேலன். ம்ம்கூம் மாட்டேன் என்று சிணுங்கிய கயல்விழி கை கால்களை உதறினாள். அனாசியமாக அவளை சமாளித்து மடியில் அமர்த்தியவன் மார்போடும் அவளை கட்டிக்கொண்டு அவள் உச்சியில் முத்தம் பதித்தான். தந்தை அரவணைப்பில் சிறுமியின் கோபமெல்லாம் குளிர்ந்து கரைந்துவிட அதனை பிடித்துவைத்துக்கொள்ள தெரியாதவளாய், “நம்ம ரூம்ல நின்னு பாத்தாலே பீச் தெரியுது அப்பா. இங்கேயே இருக்கலாம்.” மனதின் ஆசையை வார்த்தைகள் கோர்த்து வாதாடி பெற்றுக்கொள்ளும் சூட்சுமம் அறியாத பிஞ்சாய் முகம் சுருக்கி தந்தை முகம் பார்த்தாள். மகளுக்கு நிதர்சனத்தை புரிய வைக்க முடியாத தந்தையாய் தவித்தவன் மகளை இன்னும் இன்னும் தனக்குள் சேர்த்துக்கொண்டான் அடைகாக்கும் கோழியைப் போல்.

“அப்பா…”

“அடுத்து நாம போக போற வீட்லயும் பால்கனி இருக்குற மாதிரி பாக்குறேன்டா அப்பா.” என்று சமாதானமாய் சொன்னவனுள் யோசனை ரேகைகள். 

வீட்டை காலி செய்துவிடலாம் என்று ஒரு வேகத்தில் முடிவு எடுத்துவிட்டாலும் அதே வேகத்திற்கு வேறு வீடு கிடைக்குமா என்பதில் சந்தேகம். அதுவும் இப்போதிருக்கும் இருப்பிடத்திற்கு தொலைதூரத்தில் பார்க்க வேண்டுமென்றால் எங்கு வீடு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கண்கள் சுருங்க, தங்கும் பகுதிகளை பட்டியலிட்டு யோசனையில் ஆழ்ந்தான். தந்தையை நிமிர்ந்து பார்த்த கயல்விழி அவன் அமைதியாக இருக்கவும் உதடு பிதுக்கி அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு அவன் அலைபேசியை லாவகமாக உருவி அதில் யூடியூப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். 

மறுநாள் வழக்கம் போல எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு சமைக்க பாத்திரங்களை எடுத்து வைக்க, அழைப்பு மணி அடித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையின் துவக்கத்தில் நெற்றி நிறைந்த பெரிய பொட்டோடு வெற்றிலைச் சிவப்புடன் தூக்கி கொண்டையிட்ட முடியும் பெயருக்கு உடல் சுற்றி இழுத்து கட்டியிருந்த சேலையுமாய் வந்து நின்றாள் சக்தி. அவளாக இருக்கக்கூடாது என்று வேகமாக தலையை உலுக்கிக்கொண்டவன் மீண்டுமொளித்த அழைப்பு மணியில் மகள் விழித்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் விரைந்து சென்று கதவைத் திறந்தான். அங்கு நின்றவளைக் கண்டு வீட்டுக்கதவோடு சேர்ந்து அவன் வாயும் பிளந்து கொண்டது. 

இருபுறமும் அம்பு தாங்கியது போல் வில்லென வளைந்து கொடுத்த புருவங்களுக்கு மத்தியில் புள்ளியாய் சிறிய பொட்டு. இருபக்கமும் கொஞ்சம் முடி எடுத்து உச்சியில் ஏற்றி நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல். இணையாக செவியை அலங்கரித்து கண்ணை பறிக்காத சிறிய மொட்டு காதணி. அதனை உறவாடிச் செல்லும் மதுரை மல்லி. அதன் நறுமணம் காற்றில் கலந்து மெலிதாய் அவனை தீண்டிச் செல்ல, அவனையும் அறியாமல் கள்ளத்தனமாய் மீண்டும் அவ்வாசத்தை உள்ளிழுத்துக்கொண்டது அவன் நாசி. விழிகள் அனிச்சையாக முகத்தை படித்து கீழிறங்க, கழுத்தை சுற்றியிருந்த மெல்லிய தாலிக்கொடி மடிப்பெடுத்து கட்டப்பட்டிருந்த புடவையின் பின் மறைந்துகொண்டது. அவளுருவம் முழுதாய் கருத்தில் பதிந்து மனதை ஆக்கிரமிக்க, அவன் இதழ்கள் தன்னால், “அழகி” என்றிருந்தது. ஒரே இரவில் சக்தியின் அடையாளங்களை முற்றிலுமாய் துறந்து அவன் அழகியாய் அவளது சுயம் தாங்கி நின்றிருந்த அழகுராணியின் முன் மீண்டும் வசமிழந்து போனான் சக்திவேலன்.