“என்னமா எல்லா இடத்துலயும் கை விரிச்சிட்டாங்களா? இந்த சமுதாயமே அப்படிதான். தேவைங்கும் போது கூட நிக்காது. கொள்ளையடிக்கத்தான் பார்க்கும், இந்த ஆஸ்பித்திரி மாதிரி.” என்று மருத்துவமனையை பார்க்க, 

“ஏதோ ஐட்டம் அதுஇதுனு சொன்னீங்களே. என்ன அது?” தயக்கம் இருந்தாலும் அழகுராணிக்கும் வேறு வழி தெரியவில்லை. என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று கேட்டாள்.

“பெருசா ஒன்னுமில்லைமா. எங்கிட்ட ஒரு பார்சல் இருக்கு, அதை நான் சொல்ற இடத்துல சேர்த்துடனும். உன் பாதுகாப்புக்கு நான் கேரண்டி. இதை பண்ணிட்டேன்னா உனக்கு சேர வேண்டிய பங்கு வந்துடும். என்ன சொல்ற?” என்று குறிப்பிட்ட தொகையை சன்மானமாகச் சொல்ல, யோசனையாய் பார்த்தாள் அழகுராணி.

“அப்படி என்ன இருக்கு அந்த பார்சல்ல?”

“அது உனக்கு தேவையில்லாதது.” என்று கறார் பிடிக்க,

“இல்லை… இல்லை. இது சரியாப்படல.”

“அப்போ எப்படி உன் புருஷனை இங்கிருந்து கூட்டிட்டு போவ? நீ பணம் கட்டலைன்னு உன் புருஷனுக்கு கொடுக்க வேண்டிய ட்ரீட்மெண்ட்ல கைவச்சா அப்புறம் போனது போனதுதான் பாத்துக்கோ.” அவளின் கையாலாகாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு நன்றாகவே ஐயமூட்டி தூபம் போட்டார். 

அவர் எதிர்பார்த்தது போல் அஞ்சி, நடுங்கிவிட்டாள் அழகுராணி. அவளுக்கு சக்திவேலனை விட்டால் யாருமில்லை. அவன்தான் அவளின் ஆணிவேர். அவனில்லை என்றால் அழகி இல்லை. ஆனால் அவர்களின் மகள் இருக்கிறாளே. தன்னை போலின்றி அவளுக்கு தந்தையின் அன்பும் தாயின் அரவணைப்பும் நிச்சயம் தேவை என்று திண்ணமாய் தோன்ற, சக்திவேலனை நல்லபடியாக மீட்டு அவர்கள் வாழ்வில் வீசிக்கொண்டிருக்கும் புயலை வசந்த காலமாய் மாற்ற விரும்பி, அந்த பெண்மணி கேட்டுக்கொண்டதற்கு ஒத்துக்கொண்டாள். 

அன்றைய இரவே ஒரு பார்சல் அவள் கைக்கு வந்தது. பார்சல் என்கவும் ஏதோ பெரிதாக இருக்கும் என்று அவள் எண்ணியதற்கு மாறாக சிறிய பால்பாய்ண்ட் பேனா போல் ஒன்று இருந்தது. அதை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், ‘இதுக்கா இவ்வளவு காசு?’ என்று சந்தேகம் கொண்டாலும் அவள் சூழ்நிலை அதற்கு மேல் ஆராயவிடவில்லை. 

அவள் ஐயமே கொள்ள தேவையில்லை என்பதுபோல் அந்த பேனாவை ஒரு நோட்டு புத்தக கடையில் பேனா எழுதவில்லை என்று சொல்லி திரும்ப கொடுக்கச் சொன்னார்கள். கொடுத்துவிட்டு உரிய பணத்தை அவர்களிடமே வாங்கிவந்து மருத்துவமனையில் இருக்கும் அந்த பெண்மணியிடம் கொடுக்க, அவள் பங்கு என்று ஒரு தொகை வந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் இதுபோல் வேறு வேறு கடைகளுக்கு அவள் கொடுத்துவிட்டு வர, தேவையான பணம் சேர்ந்துவிட்டது. அதை அப்படியே மருத்துவமனையில் கட்டிவிட, ஒரு வாரத்தில் சக்திவேலன் வீடு வந்துவிட்டான். 

வாழ்க்கை இயல்புக்கு திரும்ப நேரமெடுத்தது. குழந்தையை பார்த்துக்கொள்வது, ஓய்வில் இருக்கும் சக்திவேலனை கவனிப்பது, மருத்துவமனை அழைத்துச் செல்வது என்று மாதங்கள் இறக்கை கட்டி பறந்தது. இடையிடையே அவ்வப்போது பேனா டெலிவரி செய்யச் சொல்லி அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஓரிரு முறை செலவுக்கு தேவையென பேனாவை ஒப்படைத்து வந்தவள் இனி இதை தொடர முடியாது என்றாள். சக்திவேலனுக்கு தெரியாமல் இதை செய்வதில் பிடித்தமே இல்லை அவளுக்கு. அவனிடம் சொல்லிவிடலாம் என்றால் என்ன வேலையென்று சொல்வது என்பதில் குழப்பம்.

வம்பே வேண்டாம் என்று அவள் அவ்வேலையை மறுக்க, அவர்களோ உன்னால் முடியாது என்றால் உன்னை போல் நலிந்த பெண்ணை சேர்த்துவிட்டு போ என்றனர். அவர்களின் இறுக்கத்தில் தான் அவளின் சந்தேகம் பலமாகியது. இதில் ஆபத்து இருக்கும் என்று உணர ஆரம்பித்தாள். இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டின் அழைப்பு மணி அடிக்க, சற்று தேறியிருந்த சக்திவேலன்தான் கதவை திறந்தான்.

“அழகுராணிக்கு பார்சல் வந்திருக்கு.” என்றதும் சக்திவேலன் புருவம் முடிச்சோடு அதை வாங்க கைநீட்ட, அவனிடம் கொடுக்க முடியாது என்றுவிட்டனர்.

யோசனையுடன் மனைவியை அழைத்தான், “அழகி பார்சல் வந்திருக்கு பாரு.”

“நீங்களே வாங்க வேண்டியதுதானே?” என்று சொல்லிக்கொண்டே வாங்கியவள் அதை பிரித்துப் பார்க்க, சிறிய அட்டைப்பெட்டியில் பேனா இருந்தது. அழகிக்கு புரிந்துவிட்டது. பதட்டத்துடன் சக்திவேலனை பார்த்தாள். 

“இந்த சின்ன பேனாக்கு இவ்ளோ பெரிய பார்சல். ஆமா, உனக்கு யாருடி பேனாவெல்லாம் இப்படி பேக் பண்ணி பார்சல் அனுப்புறா?” என்று கேட்டுக்கொண்டே சக்திவேலன் அதை வாங்கிப் பார்க்க, பட்டென அவன் கையிலிருந்து பிடுங்கினாள் அழகி. 

“என்னடி? எதுவும் மேஜிக் பேனாவா என்ன, இப்படி புடுங்குற?” என்று கேலி பேசிக்கொண்டே அவன் இருக்கையில் அமர, தடுமாற்றத்துடன் அந்த பேனாவை மேசையின் இழுவையில் வைத்தாள்.

“எனக்குத் தெரியாம அப்படி யார் உனக்கு இதெல்லாம் அனுப்புறா? பார்சல் அனுப்புற அளவுக்கு அப்படி என்ன அந்த பேனால ஸ்பெஷல் இருக்கோ. எடு எழுதி பாத்துட்டு உள்ள வச்சிக்கலாம்.” 

“இல்லை… பாப்பா கைக்கு போச்சுன்னா சுவத்துல எல்லாம் கிறுக்கிடுவா.” என்று அழகி சமாளிக்க, சக்திவேலன் கண்கள் ஆதுரமாய் மகள் மீது படிந்தது.

வாழ்க்கையின் விளிம்பு வரை சென்று மீண்டுவந்த பின் மனைவி, மகள் மீது இன்னுமே பற்று கூடிற்று. இருவரையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு தன் உடல்நிலையை முதலில் தேற்ற வேண்டும் என்று உடலில் கவனம் செலுத்தி தொடங்கியிருந்தான். 

“கொஞ்சம் நேரம் தூங்குறேன்டி. நீயும் நேரமே வீட்டு வேலை முடிச்சிட்டு வந்து ரெஸ்ட் எடு.” என்று அவன் அறை புகுந்துகொள்ள, அவசரமாக அந்த பெண்மணிக்கு அழைத்தவள் எதற்கு வீட்டிற்கு எல்லாம் பார்சல் அனுப்புகிறீர்கள் என்று கண்டிப்பு காட்டினாள்.

“உனக்கு தேவைங்கும் போது நாந்தான் கை கொடுத்தேன். எனக்கு தேவை இருக்கும் போது நீ இப்படி பாதியில் போறது சரியா?”

“அன்னைக்கு பேசும்போதே என்னோட தேவைக்கு கைகொடுக்கிறேன்னு தான் சொன்னீங்க. கடைசி வரைக்கும் நான் இதை செய்யணும்னு சொல்லவே இல்லை.”

“இப்படி பதிலுக்கு பதில் பேசுறது நல்லா இல்லை ராணி. இதுவரைக்கும் என்னால உனக்கு எதுவும் பிரச்சனை வந்திருக்கா? இனியும் வராது. இதை மட்டும் அப்பப்போ செஞ்சு கொடு.”

“என்னால முடியாது.”

“இப்போ மாதிரி எப்போவும் கெஞ்சிட்டு இருக்க மாட்டேன். ஒரு போன் போட்டா போதும் போலீஸ் உன் வீட்டுக்கு வந்து சோதனை போட்டு உன் மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிடும். காலத்துக்கும் வெளில வரமுடியாது பாத்துக்கோ.” என்று மிரட்ட, அத்தனை விவரம் இல்லாத அழகுராணி பயந்துதான் போனாள். 

சக்திவேலன் உறங்கும் போதே அந்த பேனாவை கடையில் கொடுத்துவிட்டு வந்தாள். வாரத்திற்கு ஒருமுறை என்று இதுவே தொடர்கதை ஆனது. 

அன்று சக்திவேலன் உடல் தேறி மீண்டும் பள்ளியில் சேரும் நாள். குளித்து கிளம்பி வந்தவன் தன் பள்ளி பையில் அனைத்தையும் எடுத்து வைக்க, புதிய பேனா சிக்கியது.

“அன்னைக்கு வந்த பேனா தானே இது? எழுதி பாத்தியாடி?” மனைவியிடம் கேட்டுக்கொண்டே பேனாவை திறந்து எழுதப்போக, ரீபில் உள்ளே சென்றிருந்தது. அதனை சரிசெய்யும் பொருட்டு பேனாவை அவன் உதற அதிலிருந்து சிறிய பை ஒன்று கீழே விழுந்தது.

“என்னடி இது?” சக்திவேலன் என்னவென்று அதனை எடுத்து பிரித்துப்பார்க்க, காய்ந்த இலைகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகம் கொண்டு அதனை முகர்ந்த்து பார்க்க, அது என்னவென்று கண்டுகொண்டான் அந்த அறிவியில் ஆசான். கோபம் கொள்ளக்கூடாது என்று எத்தனை கட்டுப்படுத்தியும் அவன் குரல் அவ்வீட்டில் முதன்முறையாய் உயர்ந்தது.

“ராணி.”

கழிப்பறை சென்றிருந்தவள் அவனது குரலிலும் அழைப்பிலும் அடித்துபிடித்து ஓடிவந்தாள்.

“என்னங்க?”

“இது யாருடி கொடுத்தா? இது எப்படி நம்ம வீட்டுக்கு வந்துச்சு?” என்று அந்த சிறிய பையை காண்பித்துக் கேட்க, அதிர்ந்து பார்த்தாள் அழகி.

இன்று டெலிவரி செய்யச்சொல்லி நேற்று மாலைதான் அந்த பேனா வீடு வந்தது. சக்திவேலன் கிளம்பவும் இதை கொண்டு கொடுக்கலாம் என்று இருந்தாள். இப்போது அவன் கண்டுகொண்டு கேட்க, எதையும் மறைக்கவில்லை அழகுராணி. அவளின் அலைச்சல்கள், தவிப்புகள், தயக்கங்கள், ஐயங்கள் என்று அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“லூசாடி நீ?” என எகிறிக்கொண்டு அவளை நெருங்கினான் சக்திவேலன்.

“நீங்க கோபப்படக்கூடாது. அமைதியா இருங்க ப்ளீஸ்.” தடுமாற்றதுடன் அவனை நெருங்கி அவன் நெஞ்சை நீவிவிட்டாள். 

“அறிவிருக்கா? என்ன செஞ்சிட்டு இருக்கேனு புரியுதா இல்லையா உனக்கு?” பற்கள் நெறிபட, தன் மனைவி நெறி தவறி செய்த செயலை ஏற்கமுடியாமல் அவளை நகர்த்திவிட்டு அங்குமிங்கும் நடந்தான்.

“எனக்கு வேற வழி தெரியல. முதல்ல வெறும் பேனானு தான் நினைச்சேன், அப்புறம் எதுவும் டைமென்ட் கடத்துறாங்கனு நினைச்சேன். எனக்கே இப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி இது போதை பொருள்னு தெரியும்.” 

“தெரிஞ்சுதுல்ல… உடனே நீ என்ன பண்ணி இருக்கணும்? போலீசுக்கு போயிருக்கனும். அதை விட்டு இதை வீட்டுக்குள்ள வரைக்கும் வர விட்டிருக்க. என்ன நினைச்சிட்டு இதெல்லாம் செய்யுற ராணி?”

“நீங்களும் நானும் ஆஸ்ரமம், ட்ரஸ்ட்னு அவ்ளோ பேருக்கு உதவி பண்ணியிருக்கோம். ஆனா நமக்கு தேவைன்னு வரும்போது அவ்வளவு பெரிய தொகையை என்னால புரட்ட முடியல, யாரும் முன்வரவும் இல்லை. என்னை என்ன பண்ண சொல்றீங்க?”

“ப்ரைவேட்ல தான் பாக்கணும்னு என்ன இருக்கு இப்போ? அதான் சென்னை இல்லைனா பாண்டி போக சொன்னாங்கள்ல அங்க கூட்டிட்டு போக வேண்டியதுதானே? பிரைவேட்டுக்கு போனா செலவு அதிகம் ஆகும்னு தெரியாதா உனக்கு? என்ன காரியம் பண்ணி இருக்க நீ? இப்படி கடத்தி தான் என்னை காப்பாத்தணும்னு என்ன…”

“ஷ்ஷ்… எப்படியோ போகட்டும்னு உங்களை அப்படியே விட சொல்றீங்களா? எனக்கு நீங்கதான் முக்கியம், வேறேதும் எனக்கு தேவையில்லை.”

“பைத்தியமாடி நீ?”

“ஆமா பைத்தியம்தான். மூச்சு பேச்சு இல்லாம நீங்க கிடந்தப்போ பைத்தியம் பிடிச்ச மாதிரி சுத்துனேன். புள்ளையை மடியில வச்சிக்கிட்டு துக்கம் தொண்டையை அடைக்க அடைக்க என்னால அழக்கூட முடியல. உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா…” என்று அழுகையினூடே கத்தியவள் அவன் நெஞ்சில் சாய, அவன் கோபம் சற்று மட்டுப்பட்டது. 

அவள் தோளில் கைவைத்து அழுத்தியவன் அவளை தன்னிலிருந்து பிரித்தெடுத்து, “சரிடி. இனி எதுவும் நீ பண்ணக்கூடாது. முடியாதுனு சொல்லி இதை அவங்ககிட்டேயே கொடுத்துடு. இதால நிறைய படிக்குற பசங்க சீரழியுறாங்க. போதை பின்னாடி போய் அவங்க வாழ்க்கையே திசை திரும்பிடுது.”

“முடியாதுனு சொன்னேன். போலீஸ்ல காட்டி கொடுத்துடுவோம்னு மிரட்டுறாங்க.” விழி நிரம்பிய வேதனையுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் அழகி.

“அதுக்காக இதை செஞ்சிட்டே இருப்பியா? அவங்க போறதுக்கு முன்னாடி நாம போயிடுவோம்.”

“போலீசுக்கு தெரியாம இது நடக்குதுன்னு நினைக்குறீங்களா? நாம போலீசுக்கு போனா அவங்க ஆளுங்களை வச்சி கேஸை நம்ம மேல திருப்பிடுவாங்க. அப்புறம் நம்ம குடும்பமே இல்லாம போயிடுங்க.”

“அதுக்குன்னு தப்புக்கு துணை போக சொல்றியா?” காட்டமாக அவன் கேட்க, அவன் விழிகளை சந்திக்க மறுத்த அழகி, “நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னா நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.”

“அறிவுகெட்டதனமா பேசாத அழகி. இங்க பாரு வேணும்னா நாம இந்த ஊரை விட்டுகூட போயிடலாம்.”

“அப்படி போனாலும் போலீஸ்ல சொல்லிடுவேன்னு மிரட்டுறாங்க.” என்றாள் பாவமாய்.

“அவங்க மிரட்டலுக்கு எல்லாம் பயந்துட்டே இருக்க முடியாது. நான் இருக்கேன்ல இதை விட்டுரு. நாம இங்கிருந்து தூரமா போயிடலாம்.”

“அவங்களுக்கு பெரிய நெட்ஒர்க் இருக்கு. நம்மள கண்காணிச்சிக்கிட்டே இருக்காங்க. நான் எதுவும் சொதப்புனா உங்களுக்கும் பாப்பாவுக்கும் பாதுகாப்பு கிடையாது.”

“முடிவா என்னதான் சொல்ற?”

“சட்டுனு வெளில வரமுடியாது. நான் பேசி பாக்குறேன்.”

“இந்த பேசி பாக்குற கதையெல்லாம் சரிப்பட்டு வராது அழகி. நீ பேச பேச உன்மேல சந்தேகம்தான் அதிகம் வரும். பட்டுனு சொல்லாம கொள்ளாம கிளம்பிடனும். நீ எல்லாத்தையும் பேக் பண்ணு. நாம இப்போவே கிளம்புறோம்.”

“இப்போவா?” அதிர்ந்து பார்த்தாள் அவள்.

“ஆமா இப்போதான். தப்புனு தெரிஞ்சும் அதை செய்யுறது பாவம். உன்னை விட்டா பயந்துகிட்டு இதையே செஞ்சிட்டு இருப்ப. அதை என்னால அலோ பண்ண முடியாது.” என்றவன் அப்போதே ஒரு பையில் அவனது, குழந்தையினது மருத்துவ அறிக்கை, அடையாள அட்டைகள் போன்று முக்கிய கோப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவளையும் இழுத்துக்கொண்டு புறப்பட, வாசலை மறித்தபடி நின்றான் ஒருவன். பார்த்தாலே அடிதடி செய்பவன் போல் இருந்தான்.

“பையெல்லாம் எடுத்துக்கிட்டு சரக்கோட எங்க கிளம்பிட்டீங்க? பாப்பாவை விட்டுட்டு போயிட்டு வாங்க.” என்று அவன் சக்திவேலன் கையிலிருந்த கயல்விழி நோக்கி கைநீட்ட, அசூயையாய் முகம் சுழித்து இரண்டடி பின் வைத்த சக்திவேலன் அழகியை அழுத்தமாய் பார்த்தான்.

தங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரியும் ஆனால் இப்படி வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்காத அழகுராணி அதிர்ந்து நிற்க, 

“நீ சொன்னதுதான் சரி. உன்னால எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. உன்னை காதலிச்சு கட்டுனதுக்கு நான் பலியாக தயாரா இருக்கேன். ஆனா நம்ம பொண்ணு ஏன் கஷ்டப்படணும்? போதும். எல்லாம் போதும். நீயும் நானும் சேர்ந்து இருந்ததும் போதும். நாங்க பாதுகாப்பா நல்லா இருக்கணும்னு நினைச்சா விலகிடு. விலக விடு.” என்று சொல்லிவிட்டு அவளை திரும்பியும் பாராது கிளம்பியிருந்தான் சக்திவேலன். காதலித்து கட்டிய மனைவியை விட ஈன்றெடுத்த மகளின் பாதுகாப்பே அந்நேரம் முக்கியமாய்பட்டது அவனுக்கு. யோசியாமல், இருந்த கோபத்தில் அவன் அழகியை நட்டாற்றில் விட்டு அப்படியே கிளம்பிவிட்டான். அந்நேரம் அவன் அறிவை எந்த சக்தி மழுங்கடித்ததோ. தான் இல்லையென்றால் அவள் என்ன செய்வாள் என்றெல்லாம் சிந்திக்கவே இல்லை. அவனுக்கு ஆகாத விஷயத்தில் அவள் மாட்டிக்கொள்ள மகளின் பாதுகாப்பு முதன்மையாய் பட்டது. 

நடந்ததை நம்பவியலாது பிரம்மை பிடித்தவள் போல் இருந்தவளை அந்த ஆடவன்தான் நடப்பிற்கு கொண்டு வந்தான்.

“இன்னைக்கு கொடுக்க வேண்டியது அஞ்சு லட்ச சரக்கு. சீக்கிரம் எடுத்துட்டு கிளம்பு.” என்று அவன் அதட்டி நிற்க, சக்திவேலன் நொடிப்பொழுதில் தன்னை விட்டு சென்றுவிட்டான் என்பதையே ஏற்க முடியாமல் பார்த்து நின்றாள் அழகுராணி. இயல்பாய் துவங்கிய நாள் அவன் இல்லாமையோடு முடிந்தது. தனித்து விடப்பட்ட வீட்டில் அவள் மட்டும் இருக்கிறாள் என்ற செய்தி திரை மறைவு ஆட்களுக்கு தெரியவர அதிலிருந்து துவங்கியது அவளது ‘சக்தி’ பயணம்.

அவர்கள் பிரிய காரணமாய் இருந்த அதே போதை பொருளை கடைசி ஒரு முறை கைமாற்றி அவனுடன் சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். அன்று இருந்த அழகிக்கு இந்த திரை மறைவு கும்பலிடமிருந்து தப்பிக்க வழி தெரியவில்லை. ஆனால் இன்று இருக்கும் சக்திக்கு இதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்று தெரியும். எப்படி கையாள வேண்டும் என்றும் தெரியும். பலத்த யோசனையுடன் திட்டம் தீட்ட, அலைபேசியில் அழைப்பு வந்தது. ராஜா அழைத்திருந்தான்.

“கப்பல்ல சரக்கை ஏத்திட்டாங்க. இங்க வர பத்து நாளாகும்னு நினைக்குறேன். வெளில எடுக்க உன் பேருல டோக்கன் போட்டிருக்கேன் சக்தி.” 

“நல்லது. கடைசி வியாபாரத்தை இன்னும் சுவாரசியம் ஆக்கலாமா?” என்றவள் இதழ்கள் கேலியாக வளைந்தது.