Advertisement

ஜோல்னா பை – 6

“என்ன என்ன பண்ணுதுங்க பாருங்கப்பா” கண்ணன் சிறு ஆற்றாமையோடு இராமநாதனிடம் புலம்ப, அவரும் சன்ன சிரிப்புடன் ரோஷன் ராகினியின் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்ணன் குடும்பத்தோடு இராமநாதன் வீட்டுக்கு வந்து முழுதாக இரண்டு நாள் கடந்து விட்டது.பெரும் சங்கடத்திற்குப் பிறகு இவர்களது சந்திப்பு என்பதால் முதலில் பெரியவர்களே சற்று தடுமாறி நின்றனர்.

ஷர்மிளாவுக்கு பெரும் தயக்கமென்றாலும் மெல்ல மெல்ல பேச்சை தொடங்கி, இந்த இரண்டு நாட்களில் தயக்கத்தைத் தள்ளி வைக்கும் அளவுக்கு மலரிடமும் கண்ணனிடமும் நெருங்கி விட்டார்.

ஆனால் இந்தப் பொடிசுகள் பண்ணும் சேட்டை தான் தாங்க முடியவில்லை. ராகவி ரோஷன் முகம் பார்க்கவே தடுமாறி நிற்க, ரோஷன் அவளிருக்கும் பக்கமே வருவதில்லை.

‘இது என்ன இப்படி?’ என்று நொந்து போனது என்னவோ இராமநாதன் தான். அவருக்குப் பிள்ளைகள் செயல் பெரும் வியப்பையும் சிறு சலிப்பையும் கொடுத்தது இதுவே இரு நாட்கள் தொடர, இது வேலைக்கு ஆவதில்லை என்று எண்ணியவர்.

வம்படியாக இருவரையும் நேருக்கு நேர் அமர வைத்து விட்டு. கண்ணனையும் இருத்தி அவரும் அவர்களுடன் அமர்ந்து கொண்டார்.

பல நிமிடங்கள் சென்றும் ரோஷனும் ராகினியும் அதே நிலையில் இருக்க அதற்கு மேல் முடியாமல் பொங்கி விட்டார்.

“டேய் அநியாயம் பண்ணாதீங்க டா. இப்போ எதுக்கு இரண்டு பெரும் தயங்கி தயங்கி நிக்கிறீங்க.உனக்கு அவளைத் தெரியாத என்ன? ஹே ராகி உன்னையும் தான்” என்று இருவரையும் சாடியவர் பின்பு ராகினி புறம் திரும்பி,

“ராகினி தாத்தா சொன்ன கேட்பியா நீ?”

“ஹ்ம்ம்”

“அப்போ ரோஷன் கூடப் பேசு” என்றவர் ரோஷனிடம் திரும்பி,

“ரோஷன் அவ கூடப் பேசு” என்றதும் தயக்கத்துடன் நிமிர்ந்தவன் கண்ணனை ஒரு பார்வை பார்க்க.அவர் சிறு சிரிப்புடன் கண் மூடி தலையசைக்க பெரும் தயக்கம் கொண்டு மெதுவாக அவளது கையைப் பற்றி,

“ராகினி ஹவ் ஆர் யூ?” மென்மையாக கேட்க  மடந்தை வெடித்து அழுதது. என்னன்னவோ ஒவ்வாத எண்ணம் போலும் பெண்ணுக்கு.

“சாரி ரோஷன்! சாரி! எல்லாம் என்னால தான். நான் நல்ல பொண்ணு தானே என்கிட்ட யாருமே பேசல தெரியுமா? நான் பேட் இல்லை ரோஷன்” என்று அழுக அவனும் சிறு பிள்ளை தானே பயந்து தாத்தானை பார்க்க.

“ராகினி என்ன இது? ஜஸ்ட் ஸ்டாப்” மகளின் பேச்சு நெஞ்சை கவ்வ கண்ணன் சற்று அதட்டலாக மகளை கடிந்து கொண்டார்.

“பாப்பா ரோஷன் உன் தோழன். இப்போ அவன் வீட்டுக்கு வந்திருக்க… பழசை பேச வேண்டாம்” என்ற இராமநாதன் அவளது தலையை மெதுவாக வருட,

மெல்ல மெல்ல அழுகை குறைந்து தேம்பலாக மாற ரோஷனிடம் கண்ணைக் காட்டி விட்டு கண்ணனுடன் எழுந்து கொண்டார் இராமநாதன்.

“கொஞ்சம் வேலையிருக்கு நானும் கண்ணனும் வெளில போயிட்டு வரோம் நீங்க பேசுங்க அழுக கூடாது” என்றவர் கண்ணனை அழைத்து கொண்டு வெளியில் செல்ல.

அவர்கள் செல்லவும் மெதுவாக அவளது அருகில் அமர்ந்த ரோஷன் ராகினி கையை மெல்ல மெல்ல தடவி கொடுத்தான். இக்காட்சியை அறைக்குள் இருந்து ஷர்மியும் மலரும் பார்த்து கொண்டிருந்தனர்.

“ராகினி ஸ்டாப் க்ரையிங் ப்ளஸ்” சிறு தவிப்புடன் ரோஷன் சொல்ல.அழுகை சற்று மட்டு பட எழுந்து அமர்ந்து தனது கண்ணைத் துடைத்து கொண்டவள் தேம்பி கொண்டே,

“எப்படி இருக்க ரோஷன்? நம்ப ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க?

“ஆல் ஆர் பைன். தண்ணி குடிக்கிறியா நீ?”

“இல்ல ஐயம் ஓகே” சில மணி துளிகள் மௌனத்தில் கடக்க இருவரும் ஒரு சேர “சாரி” என்றனர் அதில் சிறு புன்னகை மலர

“ஏன் அழகுற எல்லாரும் தானே தப்பு பண்ணோம் பீல் பண்ணாத ராகி”

“ப்ச் ஆனா மாட்டுனது நீயும் நானும் தானே ரோஷன்”

“ஹ்ம்ம் சரி விடு… ஏன் ஸ்கூல் விட்டு போன?” என்றதும் முகம் கசங்கியது மடந்தைக்கு.

“பிரியா அம்மா, அனு அம்மா, ராஜி, சில்வியா அம்மா எல்லாரும் நான் ரொம்பப் பேட் எல்லாப் பிள்ளைகளையும் கெடுத்து விட்டுருவேன்னு ரொம்பப் பேசிட்டாங்க, அம்மா அப்பா கூட ஒரே சண்டை நான் இங்க படிக்க கூடாதுனு.

“அதுங்களும்  தானே அன்னைக்குத் தப்பு பண்ணாங்க இது என்ன?” காளைக்கு அத்தனை கோபம் சக நண்பர்கள் மீது.

“ப்ச் விடு ரோஷன் இப்போ நான் ஓகே தான்” இருவரும் பெரிய ஆட்கள் போலப் பேசி கொள்ள வெளியில் செல்வது போலப் போக்கு காட்டி நின்ற இராமநாதன் மற்றும் கண்ணன் காதில் இவர்கள் பேசியது தெளிவாக விழுந்தது.

“ப்பா பேச்சும் சரி, செயலும் சரி இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு ரொம்ப அதிகம். செஞ்சுட்டு தான் யோசிக்கிறது யோசிச்சுச் செய்யறது ரொம்பக் குறைவு” சிறு ஆதங்கமாக குறைப்பட்டார் இராமநாதன்.

“ஆமப்பா”

பல கதைகள் பேசி பட்டு போன நட்பை எந்த வித கள்ளமும் இல்லாமல் ராகினியும் ரோஷனும் தொடர ஒருவித நிம்மதியில் மலரும் ஷர்மியும் மதிய வேளை உணவை தயாரிக்கச் சென்றனர்.

“சரி கண்ணன் இனி அதுங்க பேசி சரி ஆகிடுங்க. நீ வா நம்பப் பக்கத்துல போயிட்டு வரலாம்” என்றவர் கண்ணனை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.

அவனும் ஒப்புதலாக அவருடன்…

நடந்து கொண்டே இருந்த கண்ணன் திடுமென “நான் எப்படி ராகினியை கொண்டு வர போறேன்னு தெரியலப்பா” என்றதும் புருவம் சுருக்கியவர்.

“ஏன் கண்ணன்?” பேச்சை வளர்க்க எண்ணினார் போலும்.அவருக்கும் ராகினியின் வழமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

“அவ இன்னும் அதுலையே இருக்கா போல எல்லாத்துக்கும் பயப்புடுறா. முன்ன மாதிரி இல்ல துடுக்கு தனமே போச்சு என் பொண்ணு சிரிப்பே போச்சு” பிள்ளையை பெத்தவனாக அத்தனை ஆதங்கம் அவனுக்கு.

“நீயும் மலரும் அதைச் சொல்லியே திட்டி, அவளைப் பயம் காட்டுறீங்களா என்ன?” வேண்டுமென்றே கேட்டு வைத்தார். அவரது கேள்வியில் பதறிய கண்ணன்.

“ஐயோ! ப்பா அன்னைக்கு அடிச்சதோட சரி. நான் அவளைத் திட்டுறதும் இல்ல அடிக்கிறதுமில்லை மலரும் அப்படிதான்”

“ஹ்ம்ம் அப்போ சரி கொஞ்ச நாள் போனா சரியாகிடு வா. பயம் இருக்கனும் கண்ணன் அப்போ தான் அடுத்த முறை தப்பு பண்ண வாய்ப்பு வந்தாலும் அதற்குப் பிறகான தண்டனை முன்னுக்கு வரும் தப்பே பண்ண கூடாதுனு எண்ணம் வரனும்” இராமநாதன் சொல்லில் உள்ள நியாயம் பிடிபட.

“அதுவும் சரிதான்”

“ரோஷன் ரொம்பக் கஷ்ட பட்டுட்டான் எனக்கே பாவமா தான் இருந்துச்சு, ஆனா பாவம் பார்த்தா சரிவராது கண்ணன். கொஞ்சம் அவங்களுக்கே தெரியாம இறுக்கி பிடிக்கனும் அதைத் தான் நான் பண்ணுனேன்”

“மலர் சொன்னா எல்லாத்தையும் அவகிட்ட அம்மா நடந்ததைச் சொல்லி வருத்த பட்டாங்க போல”

“அனு தான் பாவம் கண்ணன் நான் அவளுக்கு மட்டும் தான் நியாயம் செயலை. அவ அம்மா இல்லாம, ரோஷன் இல்லாம, அவ புருஷன் இல்லாம ரொம்ப வேதனை.

ராகேஷ் நம்பல மாதிரி நடுத்தரக் குடும்பமில்லை கண்ணன்.நல்ல வசதி அவர் அப்பா அம்மாவும் அப்படியே.அதனால ரொம்பச் செல்லமாகி போச்சு ரோஷனுக்குக் கண்டிப்பே கிடையாது.

அளவுக்கு மீறின பணம் சுதந்திரம் எப்பவுமே ஆபத்து தான். அதுக்கு உதாரணம் என் பேரன். அவங்களை எதுவும் சொல்ல முடியாத கோபம்.

அதான் அன்னைக்கு அத்தனை கடுமையா நடந்து கிட்டேன்” சிறு வருத்தம் இழையோட சொன்னார் இராமநாதன்.

“அப்படி நடந்ததுனால தான் இன்னைக்கு நாங்க இப்படியாவது இருக்கோம்.உண்மையா சொல்ல போனா நீங்க இல்லனா நாங்க அந்த நாட்களைக் கடந்திருக்கவே முடியாது”யோசனை போல் கண்ணன்.

“இன்னுமே எங்க அம்மா அப்பா எங்களோட பேசல ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு” வருத்தமாகச் சொன்ன கண்ணனை பார்த்த இராமநாதன்.

“அந்தக் காலத்து மனுஷாள் கண்ணன் கொஞ்சம் நேரமிடுக்கும்” என்றவரை பார்த்து,

“நீங்களும் அந்தக் காலத்து மனுஷன் தானே நீங்க எங்களுக்குக் கைகொடுக்கல”

“இந்த ஒப்பிடுதல் நல்லதில்ல” சிறு கண்டிப்பாக சொன்னவர் கண்ணன் நான் பாதி நகரம், பாதிக் கிராமம்.

அது போக நான் வளர்ந்த வளர்ப்பு, எல்லாம் சேர்த்து எனக்கு ஒரு நிதானத்தைக் கொடுத்துச்சு.அப்படி இருந்தும் கொஞ்சம் மூர்க்கமான பிடிவாதம் எனக்கு என் பொண்டாட்டி கூடப் பேசல, பேரன் கூடப் பேசல அவங்களா தான் வந்தாங்க.

நானே இப்படின்னா? உங்க அம்மா அப்பா? யோசி

உங்க அம்மா அப்பாக்கு நீ ஒரே பையன் உனக்கு ராகினி ஒரே பொண்ணு. உன்னை அப்படியெல்லாம் விட்டுற மாட்டாங்க கண்ணன்.

நேரம் கொடு வருவங்க இல்லையா, நீ ஒருதரம் போயி பார்த்துட்டு வா, அப்படியும் இல்லனா நான் வரேன் பேசலாம்.

நம்ப வளைஞ்சு கொடுக்கிற இடம் அம்மா அப்பாவா இருக்கலாம் தப்பில்லை.உன்னைக் கொண்டு தான் இனி ராகினி”

‘அவளுக்கு உதாரணமாக இரு பெற்றோரிடம் தணிந்து போ’ என்பதைச் சொல்லாமல் சொன்னார் இராமநாதன்.அதனைச் சரியாகப் பிடித்துக் கொண்டான் கண்ணன்.

“சரிங்கப்பா”

“இப்போ ராகினி படிப்பெல்லாம் எப்படி போகுது?”

“படிக்க ஆரம்பிச்சுட்டா, ஆனா முன்ன மாதிரி பழக மாட்டேங்குற” சிறு கவலையாக சொன்னான் கண்ணன்.

“நீ பேசு கண்ணன், தோழன் தோழிகள் வேணும். அது நல்ல நட்பா இருந்தாலும் சரி, இல்லாட்டியும் சரி. நல்ல நட்பு இப்படிதான் வாழனும் னு சொல்லி கொடுக்கும்.

கெட்டது இப்படி வாழ கூடாதுனு சொல்லி கொடுக்கும் போகப் போக அதுங்களுக்கே பிரிக்க தெரியும்.

“சரிதான் ப்பா… எனக்கும் மலருக்கும் ராகினியை கையாள தெரியல. உதாரணமா ஒரு செயல் செய்ய கூடாதுனா.அவகிட்ட என்ன பேசுறது எப்படி சொல்லுறதுனு ஒன்னும் புரிய மாட்டேங்குது.

எதையாவது பேசி அவ அதை தப்பா யோசிச்சானா? கற்பனை எங்கையோ ஓடுது எனக்கு. ஒத்த பிள்ளை வேற நடப்புல எத்தனை செய்தி பாக்குறோம்”.

“நீ என்ன நீ? இத்தனை தூரம் பேசுறேன் திரும்ப பயம்னு சொல்லுற” சிறு கண்டிப்புடன் இராமநாதன் பேச.

“நீங்க என்ன சொன்னாலும் அது ஆறுதல் வகையில தான் நிக்குது நிதர்சனம் பழக மாட்டேங்குது” இன்றைய பெற்றோரின் உள்ள குமுறல் இது, அதனை வெளிப்படையாகக் கண்ணன் சொல்லி விட்டார்.

“அது சரி பெத்தவனுக்குக் கண்டிக்க உரிமை இல்லனா பிள்ளையை எப்படி தான் வளர்க்குறது? என்னவோ என்னால இதை ஏத்துக்கவே முடியல போ” சலித்துக் கொண்டார் இராமநாதன்.

“கொஞ்ச வேண்டிய நேரத்துல கொஞ்சுங்க, கண்டிக்கிற நேரத்துல கண்டிங்க.உங்க வசதிக்கு பேசி, கொஞ்சி, கண்டிச்சா வேலைக்கே ஆகாது கண்ணன்.

நாங்க அப்படித்தானே உங்களையெல்லாம் வளர்த்தோம்? அப்போ உங்க குழந்தைகளையும் நீங்க அப்படித் தானே வளர்க்கனும்” என்றவருக்கும் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காக்க அவரே தொடர்ந்தார்.

“உங்க எண்ணம் என்னானு நான் சொல்லவா கண்ணன்?” என்றவரை புரியாமல் பார்க்க தற்போதைய பெற்றோர்களின் எண்ணத்தை அக்கு வேர் ஆணி வேராகச் சொல்ல தொடங்கினார்.

நமக்குக் கிடைக்காத படிப்பு, பணம், சுதந்திரம் கேளிக்கை, எல்லாமே நம்பக் குழந்தைக்குக் கிடைக்கனும்.

இது எல்லாப் பெத்துவங்களுக்கும் உண்டான ஆசை அதைத் தப்புனு சொல்ல முடியாது நானே அது மாதிரி யோசிச்சது உண்டு,ஆனா உங்களோட கஷ்டத்தைப் பணத்தின் அருமையை நீங்க சொல்லித்தான் வளர்க்கனும்.

இதைத் தான் செய்யனும்,இதைச் செய்யவே கூடாதுனு நாங்க உங்களைச் சொல்லி சொல்லி தானே வளர்த்தோம்.அதை ஏன் உங்க பிள்ளைங்க கிட்ட சொல்ல, செய்ய இத்தனை யோசனை உங்களுக்கு? கண்ணன் குனிந்த தலை நிமிரவில்லை.

“சொல்லனும் கண்ணன் நம்பத் தானே சொல்லி கொடுக்கனும். சும்மா சமூகம் அப்படி. உலகம் அப்படிக் காலம் மாறி போச்சுன்னு பேச கூடாது என்ன மாறினாலும் நம்ப இருக்குறது தான்.

நான் ஒத்துகிறேன் சிலது காலத்தோட ஒன்றி போயி தான் ஆகனும் வேற வழியில்லை, ஆனா நீங்க எல்லாத்துக்குமே காலத்தைக் கை காட்டி நிக்கிறது சரியே இல்லை.

உங்க வசதிக்கும், அலுப்புக்கும் முக்கியமா சோம்பேறித் தனத்துக்கும் சொல்லுற காரணம் தான் இந்த கால மாற்றம்.நீங்க சரியா இருந்தா தானே உங்களைக் கொண்டு உங்க பிள்ளைங்க சரியா இருக்கும் கண்ணன்”.

“உண்மை தான் ப்பா”

“அப்புறம் என்ன? அடுத்த வீட்டு பையன் மாதிரி படிப்பு வேணும், பணம் வேணும் பிள்ளைக்கு எல்லாமே வாங்கிக் கொடுக்கணும்னு யோசிக்கிற நீங்க,

ஏன் நம்ப பழக்க வழக்கத்தையும், நல்ல ஒழுக்கத்தையும், இப்படி தான் இருக்கணும்னு சொல்ல மாட்டேங்கிறீங்க?

எது கேட்டாலும் உடனே கிடைக்கப் போயி தான் எதுக்குமே அருமை தெரியாம இருக்கு. என் பேரனை கொண்டே எனக்கு அவளோ வருத்தம்.

இந்த விஷியத்துல ராகவ் அனு ரொம்பவே மோசம் அதை விட ரோஷன் தாத்தா பாட்டி” என்றவர் முகத்தில் அத்தனை கோபம்.

கோபம் குறையச் சிறு நேரம் பிடிக்க அமைதியாக ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டார்.நடந்த களைப்பா? அல்லது நீண்ட பேச்சுத் தந்த களைப்பா? என்று தெரியவில்லை.

அமைதியாக அமர்ந்து விட்டார் நேரம் மதிய உணவு வேளையை எட்ட. கை கடிகாரத்தை  திருப்பி பார்த்தவர்,

“சரி கண்ணன் கிளம்பலாம் நேரமாச்சு” என்றவர் எழுந்து கொள்ள. அவனும் அமைதியாக எழுந்து கொண்டான், எழுந்தவன் தோளை ஆறுதலாக தட்டி கொடுத்தவர்.

“ரொம்பப் பயம் வேண்டாம் கண்ணன் முழுமையும் என் பேரன் பேத்தியோட தான். சில விஷயங்களை எனக்குத் தெரிஞ்ச வகையில் பேசனும்.

அதான் வர சொன்னேன் எனக்கு ரோஷன் வேற ராகினி வேறயில்லை” என்றவர் பேச்சில் நெகிழ்ந்தவன் அவரது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான் அவரும் இறுக்கி கொண்டார்.

கடவுள் தந்த வரம் தாய் தந்தை என்றால் வரத்தை பெற்றவர்களை வழிகாட்டி நிற்பது தாத்தன் பாட்டி தான்.

வீட்டில் பெரியவர்களின் நிலை பாடு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகை என்றாலும் பெரியவர்களது இருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் அதுவும் இன்றைய நிலையில்.

விளையாட்டு தொடங்கி வினை வரை கற்று கொடுத்து கரை சேர்த்து நிற்பது அவர்கள் தான்.அது மட்டுமா எந்த அல்லவையும் அண்டாது,அண்ட விடாது அரண் அவர்கள்.

ஆனால் இன்றைய நிலை?

Advertisement