Advertisement

ஜோல்னா பை – 4

வெளியில் அழைப்பு மணி கேட்கவும் பேரன் துயில் கலையாதவாறு அறையின் கதவை மெல்ல சாத்திவிட்டு கூடத்தின் கதவை திறக்க,

அங்கே இராமநாதனின் மனைவி ஷர்மிளாவும் அவரது அண்ணன் ரகுவும் நின்று கொண்டிருந்தனர். சிறு அதிர்வு எட்டி பார்த்தாலும் சிறந்த எட்டப்பனாக மனதை அடக்கி புன்னகையைக் காட்டி கொடுத்து நின்றார் இராமநாதன்.

தன்னைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் தவிக்கும் மனையாள் தலையைக் குனிந்து கொண்டு நிற்பது அத்தனை சிரிப்பாக இருந்தது.அதற்கு மேல் ரகுவின் செய்கை  கொஞ்சம் தவிப்பாக நின்று கொண்டிருந்தார்.

காளை பருவத்தைக் கொண்டுள்ள ஆணும் தெரிவை பருவத்தைத் தொட்டு நின்ற பெண்ணும் ஊடல் கொண்டு சண்டையிட்டு பிரிந்து,

அதற்குச் சமாதானம் செய்யத் தமயனுடன் வந்து நிற்பது போல் இக்காட்சி இருக்க.பொங்கி கொண்டு வந்தது அவருக்கு அடக்க வழியில்லாமல் வெடித்துச் சிரித்து விட்டார்.

அவரது சிரிப்பில் அண்ணன் தங்கை இருவருக்கும் இன்னும் பயம் கொண்டது போலும். இருவரது முகத்தையும் பார்த்தவர் தலையை இடமும் வலமும் ஆட்டி “உள்ள வாங்க ரகு” என்றுவிட்டு செல்ல அப்போது தான் மூச்சே வந்தது இருவருக்கும்.

உள்ளே வந்து அமர்ந்தவர்கள் மௌனமாக இருக்க அவர்களை வரவேற்று அடுக்கலைக்குள் சென்று விட்டார் இராமநாதன் “என்ன ஷர்மி இப்படி சிரிக்கிறார் உன் வீட்டுக்காரர் வில்லன் போல”

“அண்ணா பயந்து வருது நான் உன்கூடவே வந்துடவா” என்ற தங்கையை முறைத்தவர் பல்லை கடித்துக் கொண்டு.

“உனக்கு என்ன வயசாகுது? என்ன பேச்சு இது? நான் ஒன்னு சொல்லுவா நான் என்ன இப்படி பேசுறேன்னு யோசிக்காத ஷர்மி.

இந்த வயசுல தங்கை மனைவின்னு இடிபட முடியாது என்னால. நம்ப ரிலாக்ஸ் டா இருக்க வேண்டிய நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க நீ” என்று தங்கையைக் கடிந்து கொள்ள.

அண்ணன் பேசிவிட்டேன் என்று தங்கையும் இப்படி பேசியாகி விட்டதே என்று அண்ணனும்.இது போல் ஒரு சூழ்நிலையைச் சந்திக்காத உடன்பிறப்புகள் இருவரும் வருந்தி நின்றனர்.

“அப்போ நான் தப்புனு சொல்லுறியா? இனி உன்ன டிஸ்டப் பண்ணல, நான் போறேன் எங்கயாவது?” என்று முகத்தைத் தூக்க.

“ப்ச் ஷர்மி…” என்று கையைப் பிடிக்க அண்ணன் தங்கை இருவரும் கிசு கிசுப்பதைப் பார்த்தவாறே, அவர்களுக்கு டீ எடுத்து, வந்து டீபாயில் மேல் வைத்து விட்டு அவருக்கும் ஒரு கப்பை எடுத்து கொண்டவர்.

“எடுத்துக்கோங்க ரகு”

“ஹ்ம்ம்” என்றவர் தங்கைக்குக் கொடுத்து விட்டு அவரும் பருகினார். வந்த களைப்பு சற்று நீங்கியது போல் ஒரு எண்ணம் இருவருக்கும். மனம் சற்று மட்டு பட அவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவர் ரகுவை பார்த்து.

“எப்படி இருக்கீங்க ரகு? மாலினி ,மலர், சங்கவி எல்லாரும் எப்படி இருக்காங்க?” ரகுவின் மனைவி மக்களை விசாரித்தார்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க இராமநாதன்.நீங்க எப்படி இருக்கீங்க?”

“ரொம்ப நல்லா இருக்கேன் ரகு” என்றவர் பார்வை மனைவியைத் தொட்டு மீண்டது.

“ரோஷன் இங்க இருக்கிறதா சொன்னா ஷர்மி எங்க அவன்?”

“தோப்புக்குப் போயிருந்தோம் நல்ல ஆட்டம் அங்கே அதான் சாப்பிட்ட கையோட தூங்கிட்டான்”

“ஓ!” என்ற ரகு சிறு மௌனம் கொண்டு பெரும் தடுமாற்றத்துடன் பேச ஆரம்பித்தார் “இராமநாதன் நான் பேசுறதை தப்பா எடுத்துக்க வேண்டாம்” என்று நிறுத்த.

“சொல்லுங்க ரகு நான் எதுவும் யோசிக்கல”

“இல்ல என்ன சண்டனு தெரியல, ஆனா அனு குடும்பத்தைக் கொண்டு தான் ஏதோனு தெரியுது. அதுக்கு நீங்க ஷர்மிய பேசுறது சரியா?

அவ வந்து ஒரு வருஷமாகுது, இத்தனை நாளுல ஒரு பேச்சு வார்த்தை இல்ல எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு இராமநாதன். உங்க கிட்ட இதை எதிர்பார்கல”  என்றதும் ஒரு பெருமூச்சுடன்.

“என்கிட்ட நித்தமும் பேசி திரிய போன் கிடையாது ரகு. உங்களுக்கே தெரியும் எனக்கு அதுல நாட்டமில்ல சின்னப் போன் இருக்கு லேண்ட் லைன் இருக்கு.

அந்தப் போன் நம்பர் உங்க தங்கச்சிக்கு தெரியுமே அவ பேசி இருக்கலாமே” என்றதும் தலையைக் குனிந்து கொண்டிருந்த ஷர்மிளா வெடுக்கென இராமநாதனை பார்க்க.

அவரோ ‘என்னடி’ என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்கினார். ‘அடம் புடுச்ச மனுஷா’ என்று எண்ணியவர் அவரை முறைத்து விட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டார்.

“இது என்ன இது? சின்னப் பசங்க மாதிரி நீயா? நானா? போட்டி இராமநாதன். நீங்க ரொம்பப் பொறுப்பானவர் தெளிவானவர். நீங்களே இப்படி பேசுறது ஆச்சிரியமா இருக்கு எனக்கு”.

“அப்போ அந்த அளவுக்கு எதிர் புறம் தப்பிருக்குனு நம்புங்க ரகு” என்றதும் அமைதியாகி விட்டார் ரகு இதற்கு என்ன சொல்வது விடயம் சற்று பெரிது தான் போலும்.

“எனக்கு என்ன நடந்ததுன்னு தெரிய வேண்டாம் சொல்ல கூடிய விஷயம்னா சொல்லி இருப்பீங்க அதனால் நான் அதைக் கேட்க விரும்பல,

ஆனா இனி இது போல் நடக்குறது வேண்டாம் அதுவும் இத்தனை வயசு போயி”

“நீங்க சொல்றது சரிதான் நான் உங்க தங்கையைப் போகச் சொல்லலையே கணவன் மனைவினா சண்டையே வாராத?

அதுக்குப் பிறந்தகம் போணுமா என்ன? முப்பத்தி ஆறு வருஷ கல்யாண வாழ்க்கையில இது போல் நடந்திருக்கா  என்ன? நீங்களே சொல்லுங்க ரகு” என்று அழுத்தி சொல்ல.

‘இத்தனை வருடம் உன் தங்கையைத் தங்கமாகத் தான் தாங்கினேன்’ என்று பொருள் இருக்கப் பதறி போனவர்.

“நோ நோ நான் உங்களைக் குத்தம் சொல்லல என்ன சொல்லுறது?” என்று தடுமாற

“உங்க நிலைமை எனக்குப் புரியுது ரகு உங்களைச் சங்கட படுத்தி இருந்தா மன்னிச்சுக்கோங்க இனி இது போலச் சூழ்நிலை வராது” என்று கை கூப்ப இப்போது ஷர்மியே பதறிவிட்டார்.

“என்ன இது இராமநாதன்?”” அமர்ந்திருந்தவர் எழுந்து வந்து கூப்பிய கையைக் கீழ் பிடித்து இறக்கிய ரகு.

என்ன பேசுவது என்று தெரியாமல் அவரது கையைப் பிடித்து நின்றார்.மாமன் மச்சான் என்று உருகிய அழைப்புகள் இல்லை என்றாலும் மரியாதையாகப் பேசி கொள்ளும் கண்ணியமான உறவு இருவருக்கும்

“நான் கிளம்புறேன் இராமநாதன் இன்னொரு நாள் வரேன் எனக்கு கஷ்டமா இருக்கு இந்த சூழல்”

“என்ன அவசரம்”

“நைட் வண்டி ஓட்ட முடியாது இராமநாதன்” என்றதும் சரியென்று தலையை ஆட்ட தங்கையிடம் நெருங்கியவர்.

“ஷர்மி எனக்கு இதைச் சொல்ல ரொம்பச் சங்கடமா இருக்கு இருந்தாலும் சொல்றேன் பார்த்து நடந்துக்கோ” என்றவர் இருவருக்கும் பொதுவாகச் சொல்லி கொண்டு விடை பெற்றார்.

அண்ணனை அன்பாக வழியனுப்பி விட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டார் ஷர்மிளா. கணவனைக் காண பெரும் தயக்கம் போலும் பேரிளம் பெண்ணுக்கு ஆனால் அத்தகைய தயக்கம் எதுவும் நமது முதுமகனுக்கு இல்லை.

மிக ஆறுதலாக அமர்ந்து கொண்டு சோபாவின் கைப்பிடியில் தனது கை ஊன்றி தாடைக்கு முட்டு கொடுத்துப் பொல்லா நேர் பார்வையில் சிறிதே சிறுது கள்ளத்தை சேர்த்து மனைவியை வருடி கொண்டிருந்தார்.

அவரது பார்வையை  உணர்ந்த ஷர்மி தடுமாறி நெளிந்து, கைகளைப் பிசைந்து, இன்னும் என்னன்னவோ சேட்டை செய்ய.

அப்படி சிரிப்பு அவருக்கு ஒரு நிலைக்கு மேல் இராமநாதனால் முடியவே இல்லை மீண்டும் அப்படி ஓர் சிரிப்பு சிரித்து வைத்தார் மனிதர்.

தீடீரென அவர் சிரிக்கவும் பயந்து பார்த்த ஷர்மிளாவை “ஆனாடி கல்யாணம் பண்ண புதுசுல மறுவீடு வந்தப்போ கூட நீ இப்படி வெட்க பட்டு சங்கடப்பட்டு நான் பார்க்கல.

இத்தனை வருஷம் போயி இந்தக் கொடுப்பினை பாரேன் எனக்கு” என்றவர் கேலியில் கோபம் பொத்து கொண்டு வர.

“இங்க பாருங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது? எனக்கு வேற வழியில்லாம நான் வரல”அவர் கேலி, சிரிப்பு எதையும் தாங்கி கொள்ள முடியாமல் பேச வேண்டுமே என வம்பு செய்தார் ஷர்மிளா.

“அடேயப்பா அப்போ எதுக்கு வந்தீங்க? இன்னும் ஒரு வருஷம் பிறந்தகத்துல சீராட வேண்டியது தானே”

“ஏன் மாட்டேனோ”

“கீழ விழுந்தாலும் மீசையில மண் இல்லனு சொல்லுவாங்க அது எதுக்குன்னு தெரியுமா?…

உனக்கும்  உன் அண்ணிக்கும் ஏக பொருத்தும். அது வடக்குல தான் சூரியன் உதிக்கும்னு வம்பு செய்யுற ஆளு. நீ தெக்குல தான் உதிக்கும்னு நிப்ப உங்க இரண்டு பேர் தொல்லை தாங்காம.உங்க அண்ணன் கொண்டு வந்து இங்க தள்ளிட்டு போயிட்டார் அதானே?

இது தாண்டி உண்மையா இருக்கும். நீ ஒரு வருஷம் உங்க அண்ணன் வீட்டுல இருந்ததே இமாலய சாதனை” என்றவர் பல் தெரிய சிரிக்க

‘ஐயோ! எமகாதக மனுஷன்  அப்படியே சொல்லறாரு விடாத ஷர்மி’ மனதோடு பேசியவர்.

“இங்க பாருங்க இன்னும் நான் அங்கிருந்தா உங்களுக்குத் தான் கெட்ட பேர் அதான் வந்தேன்”

“அடேயப்பா புருஷன் பெயரை காப்பாத்துறவளாடி நீ அப்புறம்”

“என்ன அப்புறம்? இல்ல என்ன அப்புறம்ன்னு கேக்குறேன்? என்று அவரை நெருங்கி நின்ற ஷர்மியை மேலும் நெருங்கி தோளோடு அனைத்துக் கொள்ள வெடித்துக் கிளம்பிய அழுகையை அவரது நெஞ்சில் புதைத்து மறைந்து கொள்ளப் பார்த்தார் ஷர்மிளா.

“ப்ச் ஷர்மி”

“நீங்க பேசல என்ன பார்க்க வரல”

“மூட்டு தேஞ்ச பிறகு கெஞ்சி கொஞ்சி அலைய முடியாதும்மா” என்றதும் வெடுக்கென அவரைப் பிடித்துத் தள்ளி முறைக்க அவர் முகம் தீவிரமாக இருந்தது.

“கேலியா?”

“ப்ச் ஹே உண்மையா சொல்லுறேன். நீ போனதே தப்பு இதுல நான் வந்து வேற நின்னு, அங்க பேசி சமாதானம் படுத்துனா நல்லவா இருக்கும். அது போக நம்ப வீட்டு விஷயம் வெளில போறதை விரும்பல அதுவும் ரோஷன்…”இராமநாதன் சொன்னவுடன் பெரும் தவிப்பாக.

“இல்லங்க நானும் எதுவுமே சொல்லல உங்களுக்கும் எனக்கும் சண்டைனு சொன்னேன் அனுவலானு அண்ணன் யோசிச்சார். இதுவரைக்கும் நான் ஷேர் பண்ணல”

“நல்லது …” இருவரும் சில நிமிடங்கள் மௌனம் கொள்ள.

“உங்களுக்கு என்ன பிடிக்கல தானே?” ஷர்மி கேள்விக்குச் சலிப்பாகத் தலையை ஆட்டியவர் பின் வெகு குறும்பாக.

“கொஞ்சம் பொறுடி ரோஷனுக்குக் கல்யாணமாகி குழந்தை பிறகும் தானே அப்போ சொல்றேன் இதுக்குப் பதில்” என்றவரை முறைத்த ஷர்மி

“நான் ரொம்பக் கோபமா பேசுறேன்”

“பேசுடியம்மா”

“நீங்க கேலி பண்ணுறீங்க பிடிக்காம கட்டிகிட்டேனு சொன்னீங்க தானே”

“நான் எப்போடி அப்படி சொன்னேன்? எங்க அப்பா அம்மா கிட்ட வேணான்னு சொன்னேன். அவங்க கட்டி வச்சுட்டாங்கனு தான் சொன்னேன்”

“இரண்டும் ஒரே அர்த்தம் தான் மனசுல இருக்கப் போயி தானே சமயம் கிடைக்கவும் வெளில வந்துச்சு”

“இங்க பார் அன்னைக்கு எனக்கு இருந்த கோபத்துக்கும் வெறிக்கும் என்னால நிதானமா யோசிக்க முடியல ஷர்மி.

வார்த்தை விட்டது தப்புதான், ஆனா… ப்ச் விடு பேசி ஒன்னுத்துக்கும் ஆகுறதில்ல” என்றவர் அவரை அமர வைத்து அவருடன் அமர்ந்து கொண்டு மனைவியிடம் திரும்பி

“பட்டம்மா உன்னை ரொம்பப் புடிக்கும் உன்னை விட உன் கன்னத்தை ரொம்பப் பிடிக்கும்” என்று சற்று பருமன் கூடிய கன்னத்தைச் சற்று வன்மை பொங்க கிள்ளி அலற விட்டவர்.

உனக்கும் ரோஷனுக்கும் வித்தியாசமே தெரியலடி உருவத்துல தான் அப்படியே இருக்கீங்கன்னு பார்த்தா குணத்துலையும் அப்படியே தான் இருக்கீங்க இரண்டு பேரும்”

“நல்லது சொல்லி, பக்குவம் பண்ணி, பேரன் பேத்திகளை வழி நடத்தி கூட்டிட்டு போற வயசுல அம்மா வீட்டுக்கு போறேன், அண்ணன்கிட்ட சொல்லுவேன், என்ன பிடிக்கலைனு சிணுங்கி வைக்கிற ரோஷன் தேவலாம் போ” முகத்தைச் சுருக்கி பார்த்த ஷர்மிளாவை மீண்டும் தோளோடு அனைத்து கொண்டவர்.

அன்னைக்கு நடந்தது தப்பில்லையா? அளவுக்கு மீறின சுதந்திரம் எங்க கொண்டு போயி விட்டு இருக்கு பார்த்தியா? ரோஷன் எதிர் காலம் நல்ல படியா இருக்கணுமா? வேணாமா?” என்றதும் தலையைப் பலமாக ஆட்டினார்.

“அந்தப் பயத்துல தாண்டி நான் உன்னைத் திட்டி வச்சேன். என்னால சத்தியமா முடியல நான் பார்த்ததை நீ பார்த்திருந்த வச்சுக்கோ உயிரே போயிருக்கும்.

என்னதான் நீ இந்தக் காலத்தோட பொருந்தி போனாலும் சில விஷியத்துல அனுவை நீ கண்டிக்கல?

எங்க போனாலும் வீட்டுக்கு வந்துரனும். தோழிகள் வீட்டுல தங்குனா பிடிக்காது உனக்கு.அவளை டூருக்கு விட்டுருக்கியா நீ? சரி இதெல்லாம் விடு அவ நண்பர்கள் கூட வெளில போகும் போது நீயும் ஏன் கூடப் போற ப்ரைவசி கொடுக்க வேண்டியது தானே?”

“அது எப்படி நான் தனியா விட முடியும் அவ என்ஜாய் பண்ணட்டும் நான் ஒரு ஓர…” என்று பேசி கொண்டிருந்தவர் இராமநாதன் பார்வையைக் கண்டு அப்படியே நிறுத்தி விட்டார்.

“பணத்துல புரண்டு, கேட்டது கிடைச்சு, வசதியா வெகு சுதந்திரமா இருந்த நீயே உன் பொண்ணுன்னு வரும் போது எப்படி இருந்திருக்க” என்றதும் ஷர்மிளாவுக்கு        பதில் சொல்ல முடியவில்லை.

இராமநாதன் சொல்வது மறுக்க முடியாத உண்மை என்ன வேலை இருந்தாலும் ஷர்மியின் கவனம் தன்னைப் போலப் பெண்ணைச் சுற்றி வரும். கணவன் கூட இரண்டம் பட்சம் தான்.

அவருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும்.இதைத் தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்த வில்லையென்றாலும் சில விடயங்கள் அவர் சொல் படிதான் அனுவுக்கு.

“ஆண் என்ன பெண் என்ன ஷர்மி ஒழுக்கம் முக்கியம் தானே”

“கண்டிப்பாங்க எனக்குப் புரியுது”

“இத்தனை பேசி உனக்குப் புரிய கூடாது ஷர்மி” என்றதும் மௌனமாகி விட்டார்.அடுத்து சில நொடிகள் மௌனத்தில் நிற்க அவர்களைக் கலைத்தது பேரனது குரல்.

“ஜோல்னா!…”

Advertisement