Advertisement

ஜோல்னா பை – 3

“இப்போ எதுக்கு அப்புன் குட்டிய அங்க விட்டுட்டு வந்தீங்க என்ன அவசியம் அதுக்கு? என்றவர் அனுவை பார்த்து ரொம்பப்  உங்கப்பா எங்களைப் படுத்தி வைக்கிறார்.

எங்களுக்கு  இருக்குறது ஒரே பையன் அவன் பிள்ளைகளைப் பார்க்க வேணாமா நாங்க? அநியாயம் பண்ணுறீங்க அப்பாவும் பொண்ணும்” என்று காட்டு கூச்சலாகக் கத்தி வைத்தார் மேகலா.

ராகவ் எண்ணம் மனைவியின் வாய் வழியாக வர அவரும் மௌனமாக அமர்ந்திருந்தார்.விடியலில் வந்தவர்கள் தூங்கி எழுந்து சாப்பிடும் வரை அமைதியாக இருந்த மேகலா.சாப்பிட்டு முடித்த கையேடு தொடங்கி விட்டார்.

“சொல்லு ராகேஷ்  அனு போயி ஒரு வருஷம் ஆகுது, இப்போ தான் வரா இப்போ அப்புன். அவனை மூணு வருஷம் கழிச்சு அனுப்புவாரா உன் மாமனார். அப்படி என்னடா கொலை குத்தம் பண்ண மாதிரி  பண்றார்”

தனது பேர பிள்ளைகளைப் பார்த்தெடுத்து கொஞ்ச முடியாத தவிப்பு அவரிடம். கையில் பேத்தியை வைத்துக் கொண்டு தான் இத்தனை சத்தம்.

அத்தனை தூரம் சண்டையிட்டுக் கொண்டே. கையில் உள்ள பேத்திக்கு இடையில் ஓர் முத்தம் என்று மேகலா இருக்க என்ன பேசுவது என்றே தெரியவில்லை அனுவுக்கு.

தாயை சமாதானம் செய்யும் பொருட்டு “ம்மா த்ரீ மன்த்ஸ் தான் வந்துடுவான். எனக்கும் அவர் செய்யறது சரினு தோணுது மா”

“தோணும் உனக்கு எல்லாம் தோணும்.அன்னைக்கு என்ன சொன்னார் எங்களை? நீங்கெல்லாம் என்ன பெரியவங்கனு எத்தனை பேச்சு.என் வீட்டுக்காரை பார்த்து போயா நீயும் உன் வளர்ப்புனு சொல்லிட்டு போனார்.எங்களுக்கு மட்டும் பிள்ளைங்க மேல அக்கறை இல்லாத மாதிரி”

கத்தி கொண்டே இருந்தவர் இப்பொழுது அழுக தொடங்க சட்டென எழுந்த ராகவ் மேகலாவை நெருங்கி அனைத்துக் கொண்டார். ராகேஷ் அனு இருவரும் ‘என்னடா இது?’ என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

பொதுவாகத் தாய் அழுதால் பிள்ளைகளுக்குத் தாங்காது தாய்க்கு என்னவோ? ஏதோவென்று? அனைத்துக் கொள்ளும்.கண்ணில் உள்ள நீரை பிஞ்சு கை கொண்டு துடைத்து விடும்.

மேலும் தாயின் கன்னத்தில் சிறு முத்தம் வைத்து இறுக்கி கொள்ளும். அதற்கு தெரிந்த வகையில் ஆறுதல் செய்யும்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகள் என்றால் கை பிடித்து ஆறுதல் சொல்லும், ஆனால் இங்கு ராகேஷ் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இது தான் இவர்களது வாழ்க்கை முறை ஓட்டுதல் இல்லாத நெருங்கிய உறவு.உணர்வு பேசி நிற்கும் போது என்ன செய்வது என்று முழித்து நிற்கு வர்கம் அது சரி அவர்கள் வளர்ந்த விதம் அப்படி.மேகலா அழுது கொண்டே இருக்க அனு மெதுவாக அவரை நெருங்கி.

“அத்தை! அப்பா தப்பில்லை…” அவளை முடிக்கவிடாமல்.

“ஆமா உங்கப்பா தப்பில்ல நாங்க தான் தப்பு”

“ப்ச் கொஞ்சம் பேச விடுங்களேன்” என்றதும் மேகலா அதற்கும் பேச போக ராகவ் மேகலாவின் கையைச் சற்று அழுத்தி விட்டார் பேசாதே என்பது போல்.

சிறு மௌனம் கொண்டு அனு “அத்தை அப்பாக்கு நான் சப்போர்ட் பண்ணல ,ஆனா அப்பா சொல்லுறது எல்லாமே சரிதானே என்னையும் சேர்த்து தானே பேசுனார் அன்னைக்கு. கொஞ்சம் விட்ட அடியே வாங்கி இருப்பேன்.

யோசிச்சு பாருங்க அத்தை அப்புனுக்கு எதாவது ஆகி இருந்தா. அன்னைக்கு அந்தப் பொண்ணோட அம்மா அப்பா மட்டும் உண்மைய சொல்லல என் பையன் நிலைமை என்ன?

போலீஸ் அது இதுனு போயிருந்தா ரோஷன் நிலைமை அவன் குழந்தை அத்தை…நான் செத்தே போயிருப்பேன்” என்றவள் அதற்கு மேல் தாங்க மாட்டாமல் அழுக.

ராகவ், ராகேஷ், மேகலா மூவரும் அன்றைய கசப்பை இன்று விழுங்க தவித்து நின்றனர். அனு சொல்லுவது சத்தியமான உண்மை என்று புத்திக்கு உரைக்க மனமோ அன்றைய இராமநாதன் பேச்சில் மல்லு கட்டி நின்றது நீண்ட அமைதிக்குப் பின் ஒரு பெருமூச்சுடன் ராகவ்.

“அவர் பேசினது தப்பில்ல அனு, ஆனா பேசுன விதம் கொஞ்சம் தப்புதான். சரி அன்னைக்குச் சூழ்நிலை அப்படி எங்க மேலையும் தப்பிருக்கு என்றவர் தனது உள்ளங்கையை பார்த்தவாறு,

நாங்க உங்க அப்பா மாதிரி வளரல அவர் வளர்ந்த விதம் இடம் வேற.அதனால் எங்களுக்குச் சில விஷயம் பெரிய தப்பா தெரியல உண்மையா புரியல மா” என்று நிறுத்தியவர்

“உங்கப்பா மாதிரி எங்களால இருக்க முடியாது, பட் இனி என் பேரனுக்கும் பேத்திக்கும் பெஸ்ட் கொடுப்பேன்” என்றவர் மேகலா பாப்புவ தூக்கிட்டு வா என்றவர் மகனிடம் திரும்பி

“நான் கம்பெனிக்கு டூ டேஸ் வரல பார்த்துக்கோ” என்றுவிட்டு மனைவி பேத்தியுடன் அறைக்குச் சென்று விட்டார்.

ராகவ் சற்று பயந்து தான் இருந்தார் அதுவும் நடந்து முடிந்த சம்பவம்.தற்போது பெண் பிள்ளை என்பது அவருக்குக் கூடுதல் பயத்தைக் கொடுத்தது போலும். இனி வரும் காலம் பேர பிள்ளைகள் மீது கவனம் கொள்வது என்று எண்ணம் அவருக்கு.

அங்கே கும்பகோணத்தில்

“ஆ!.. ஆ!.. ஆ!.. ஜோல்னா!”என்று சாப்பாடு மேஜையில் அமர்ந்து ஒரே கூச்சல் ரோஷன். அவனது கூச்சலில் அடுக்கலைக்குள் இருந்து தோசை கரண்டியுடன் வந்தார் இராமநாதன்.

“எருமைக்குப் பிறந்த எரும எதுக்குடா இந்தக் கத்து கத்துற” அவரது பேச்சில் இன்னும் கோபம் வர.

“உங்க பொண்ணு எருமயா அப்போ?”

“என் பொண்ணு தங்கம் நான் உங்கப்பனை சொன்னேன்” என்றதும் ரோஷன் முறைக்க

“என்ன முறைப்பு எதுக்குடா கத்துன பொடி பையலே!”

“இது என்னது?” என்று தனது தட்டில் இருக்கும் கஞ்சியைக் சுட்டி காட்டி கேட்க.

“கொள்ளு கஞ்சி” புதினா துவையல்.

“ப்ச் எனக்கு நூடுல்ஸ் தாங்க. இல்ல மொறு மொறு தோசை வேணும் இது வேணாம்”

“மாவுக்குப் போடல இன்னைக்கு இது தான். நூடுல்ஸ் எல்லாம் இங்க சாப்பிட முடியாது கூடாது”

“நீ ரொம்பக் கொடுமை படுத்துற ஜோல்னா. ஆறு மணிக்கு எழுப்பி நடக்க விட்டு, குளிக்க விட்டு, இப்போ சாப்பிட கொடுக்காம கொடுமை”

“அடப்பாவி இதெல்லாம் கொடுமையா?” பல்லை கடித்துக் கொண்டு இராமநாதன் கேட்க.

“ஆமா பெரிய கொடுமை” கையை விரித்துக் கண்ணை உருட்டி கண்ணனாகப் புகார் வாசித்தான் ரோஷன்.

“தப்புப் பண்ணிட்டேன் உன்ன அங்க வளர் விட்டு இருக்கக் கூடாது” பல நாட்கள் எண்ணியதை இன்று வாய்விட்டே சொல்லிவிட்டார்.

“ப்ச் ஜோல்னா”

“சாப்பிடு ரோஷன் இது சத்தான உணவு எனக்கு வேலை இருக்கு. வம்பு செய்யாத என்ன அடம் பண்ணாலும் அதைத் தான் சாப்பிடனும்” சற்று கண்டிப்பாக இராமநாதன்.

“உங்களுக்கு மட்டும் தோசை சுடுறீங்க”

“உனக்கும் சேர்த்து தான் சுடுரேன் கம்பு தோசை” என்றதும் முழித்த ரோஷன் பெரும் அலறலோடு.

“வேணாம்! வேணாம்! நான் இந்தக் கஞ்சியே சாப்பிடுறேன்”என்றவன் வேகமாக உண்ண. உதடு மடித்துச் சிரிப்பை அடக்கியவர் அடுக்கலைக்குள் புகுந்து விட்டார்.

அதன் பின் தாத்தாவும் பேரனும் உண்டு முடித்து வெளியில் ஆயித்தமாகினர்.பொதுவாக விடுமுறைக்கு ரோஷன் வந்தால் இராமநாதன் அவனை அழைத்துச் செல்லுமிடம்.

வயல், வரப்பு, கோவில் இது போல் இடங்கள் தான் இன்றும் அதுபோல் தனது நண்பனான கணேசன் வயலுக்குக் கூட்டி வந்தார்.

ரோஷனுக்கு இங்குப் பிடித்த இடமென்றால் அது வயல், தோட்டம், தோப்பு, இவைகளை விடத் தண்ணியில் ஆடுவது.இன்றும் ஒரு செட் துணியுடன் தான் வந்தனர் தாத்தன் பேரன் இருவரும்.

“பொடி பையலே தண்ணிக்குள்ள இறங்குவோமா?” என்றதும் முகத்தில் அதனை மகிழ்ச்சியை தேக்கி தலையை ஆட்டிய பேரனை தூக்கி தண்ணிக்குள் விட்டு தானும் இறங்கினார்.

தண்ணியில் குதித்துக் குதித்துத் தண்ணீரை அடித்துத் தாத்தானை வம்பு செய்து கொண்டே விளையாடினான் ரோஷன். சுமார் ஒரு மணி நேர ஆட்டத்திற்குப் பின் இராமநாதன் அழைக்க வர மறுத்த ரோஷனை தூக்கி கொண்டார்.

“டேய் இதுக்கே உனக்குச் சளி பிடிக்கும் திரும்ப ஒரு வாரம் கழிச்சு வரலாம் வா”

“கண்டிப்பா வரணும்”

“மூணு மாசம் இங்க தானே வரலாம் வா” என்றவர் அவனுக்குத் துணியை அணிவித்துத் தானும் அணிந்து கொண்டு.

வயல் வரப்பில் நடந்து வந்து அங்குள்ள வேப்பமர நிழலில் ரோஷனை அமர வைத்து விட்டு. தனக்கு  ஒரு துண்டை விரித்து அவன் மடியில் தலை வைத்து படுத்து விட்டார்.

“ப்பா சொர்க்கம்டா!” என்றவர் திரும்பி படுத்து அவனது வயிற்றை தனது மீசை கொண்டு உரசி விட கிளுக்கி கிளுக்கி சிரித்து வைத்தான் ரோஷன்.

“ஆ! ஆ! ஜோல்னா விடு கூசுது” என்று அவரது தலையை ரோஷன் தள்ள அவர் தள்ள என்று சில மணி துளிகள் ஒரே விளையாட்டு தாத்தனும் பேரனும்.

சிரித்து ஓய்ந்தவன் தாத்தன் முகத்தில் தன்னுடைய முகத்தைப் புதைத்து மூச்சு வாங்கினான்.சில நொடிகளுக்குப் பிறகு எழுந்தவன் தீடீரென யோசனை வந்தவனாக.

“ஆமா ஜோல்னா அம்மாச்சி எப்போ வருவாங்க?”

“யாருக்கு தெரியும் உங்க அம்மாச்சி போயி ஒரு வருஷமாகுது” என்றதும் அதிர்ந்த ரோஷன்.

“ஏன்?” நடக்குமான குரலில்.

“அன்னைக்கு அவளைக் கொஞ்சம் கூடத் திட்டிட்டேன் தானே அதான் போடான்னு போயிட்டா”

“ஜோல்னா!” அடுத்து பிள்ளைக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை ஒன்று மட்டுமே விளங்கியது தன்னால் தான் எல்லாம் என்று அதனை வாய் விட்டே சொன்னான்.

“என்னால தானே எல்லாம்” என்றவனைப் பார்த்து

“விடு ரோஷன் பெரியவுங்களைப் பார்த்து தான் சின்னதுங்க வளரும். இங்க பெருசுங்க எல்லாம் பெருசு மாதிரியே இல்ல அதான் பிரச்சனை”

“ப்ச் பாவம் அம்மாச்சி”

“ஹ்க்கும் ரொம்பப் பாவம் தான் உங்க அம்மாச்சி. நீ வேற ஜாலியா இருக்காடா என்னை விட்டு அண்ணன் வீட்டுல”என்றவரது குரலில் மறைக்கப் பட்ட பெரும் ஆதங்கம் இருந்தது போலும்.

“அம்மாச்சி கூட பேசனும் போல இருக்கு”

“வீட்டுக்கு போயி பேசு” என்றவர் சிறிது நேரம் சென்று ரோஷன் என்றழைக்க.

“ஹ்ம்ம்!… ஜோல்னா!”

“நான் கொஞ்சம் பேசனும்” தாத்தனது பேச்சில் யோசனை கொண்டாலும் தன் போக்கில் “சொல்லுங்க” என்றான் ரோஷன்.

“உன் நண்பன் மோஹித், அசோக் எல்லாம் இப்பவும் உங்கூடத் தான் படிக்கிறார்களா என்ன? தாத்தன் கேள்வியில் சிறு நடுக்கம் பிறக்க அதனை மறைத்தவாறு.

“அசோக் மட்டும் தான் படிக்கிறான் தாத்தா”

“உன்கூடப் பேசுறானா?”

“இல்ல அவன் கூட நான் பேசுறதில்ல”

“ஹ்ம்ம்!…”

“போன் வச்சு இருக்கியா?”

“அதுல தானே ஸ்கூல் ஹாம் ஒர்க் ஆன்லைன் டெஸ்ட் வரும் அதான் யூஸ் பண்ணுறேன்”

“ஹ்ம் படிப்பு மட்டும் தானே அதுல” தாத்தன் கேள்வியின் நோக்கம் புரிந்து உண்மையாகப் பதில் சொன்னான் ரோஷன் பட்டது பாடம் சொன்னது போலும்.

“இல்ல தாத்தா கொஞ்சம் ஷாட்ஸ் விடியோஸ் பார்ப்பேன்”

“ஹ்ம்ம்!..” அதோடு அவர் தனது கேள்விகளை நிறுத்தி கொள்ள ரோஷன்.

“நான் இப்போ..” தன்னை விளக்கும் பொருட்டு எதுவோ சொல்ல வர.

“ரோஷன் நான் உன்னைச் சந்தேகப் படல, ஆனா கொஞ்சம் உன் வழமை தெரியனும் அதாவது தினமும் நீ என்ன செய்றனு “என்றதும்

“அப்பா கூடத் தான் இருப்பார் தாத்தா. டே கம்ப்ளீட் ஆனா அப்பா எனக்குத் தெரியாம போன் செக் பண்ணுவார்” ரோஷன் சொல்லவும் அப்படி ஒரு கோபம் இராமாந்தனுக்கு.

“கண்டிப்பு பண்ணுறாராம்! அது சரி உங்கப்பனுக்கு மூளையே இல்ல”

“உச்!”

“என்னடா உச்சு இதெல்லாம் முன்னையே கவனம் செய்யனும் இப்போ உனக்கு நேர பண்ணி ஒரு புரோஜனமும் இல்ல”

“என்னால எல்லாத்துக்கும் கஷ்டம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அம்மாச்சி” ரோஷன் வருத்தமாக சொல்ல.

“அதெல்லாம் இல்ல சரி அதை விடு நான் எதுக்கு இதெல்லாம்  கேட்டேன் தெரியுமா?” இல்லை என்று தலை ஆட்டிய பேரனை பார்த்து.

“ரோஷன் இப்போ உனக்கு எல்லாமே தெரியுது எங்களுக்கு இருபது வயசுல கொஞ்சமே கொஞ்சம் புரிஞ்சு வாழ்க்கை.

இப்போ உள்ள உங்களுக்குப் பத்து வயசுக்குள் புரிஞ்சுடுது. அதனால நான் சொல்றதும் புரியும்” என்றவரை கலவரமாகப் பார்த்து வைத்தான் ரோஷன்.

“ரோஷன் இப்பவே இந்த உலகம் இப்படி இருக்கு இன்னும் உன் தங்கச்சி வளர்ந்து வர எப்படியோ தெரியல?

அப்போ நான் இருக்கேனா இல்லையானு கூட தெரியாது . நீ தான் அவளைப் பார்த்துக்கனும் என் பொண்ணு பார்த்துக்குவா, ஆனா உன் தங்கச்சிக்கு நீ தான் பாதுகாப்பு. அவளுக்கு நல்லது கெட்டது சொல்லி தரணும் தப்புனா கண்டிக்கனும்”

“நான் பாப்பாவ பார்த்துக்குவேன்” பெரிய மனிதனாகச் சொல்ல.அவனை ஒரு வித சிரிப்போடு பார்த்தவர்.

“அப்புறம் ஏன் உங்கூடப் படிக்கிற பொண்ணைப் பார்த்துக்கல? அவ தப்பு செய்யுறானு தெரியும் போது ஏன் தப்புனு சொல்லல?” என்றதும் கப்பென வாயை மூடி கொண்டான் ரோஷன். என்ன பதில் இதற்கு என்று தெரியவில்லை அவனுக்கு.

“தாத்தா?”

“அவங்க அப்பா அம்மாவும் செல்லமா வளர்த்து இருப்பாங்க தானே உன்னை மாதிரி”

“ஆமா”

“அடுத்து வீட்டு பொண்ணும் பத்து மாசந்தான் தானே ரோஷன். உங்க அப்பா அம்மா மாதிரி தான் அவளையும் அவங்க அப்பா அம்மா பார்த்து இருப்பாங்க.

உங்க அம்மா அப்பா படுற கஷ்டம் புரிஞ்சு. அம்மா வேணுன்னு அடம் பண்ணி தானே வந்த. அப்போ அந்தப் பொண்ண பெத்தவங்களுக்கும் இதே அளவு கஷ்டம் இருக்கும் தானே”

“ஆமா தாத்தா” பேச்சே வரவில்லை விடலைக்கு.

“இப்போ நீயும் அசோக்கும் ஒரே ஸ்கூல். மோஹித் வேற ஸ்கூல்ல படிக்கிறானு கேள்வி பட்டேன்,ஆனா அந்தப் பொண்ணு ராகவி ஊரே விட்டு போயிடுச்சு” என்றதும் அதிர்ந்த ரோஷன்.

“ராகவி வேற ஸ்கூல் போகலையா? நாங்க அவ ஸ்கூல் மாறிட்டான்னு நினைச்சோம்”

“இல்ல அந்தப் பொண்ணோட அப்பா அவர் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டார். நல்ல படிக்கிற பொண்ணு ஒரு வருஷம் படிப்பு போயி இப்போ தான் வேற ஸ்கூல்ல சேர்ந்து இருக்கா”

“எனக்குத் தெரியாது தாத்தா”

“நான் தினமும் பேசிட்டு தான் இருக்கேன் ரோஷன்” என்றதும் ஆச்சிரியமாக

“எப்படி தாத்தா?…”

“உன்னை அன்னைக்கு நான் அடிக்கும் போது என்னைத் தடுத்து கூட்டிட்டு போனவர் ராகவி அப்பாதான் அப்போ பழக்கம். இப்போ வரை அந்தப் பொண்ணும் எங்கூடப் பேசுவா வாரம் ஒரு முறை”

“இஸ் இட் நல்ல இருக்காளா தாத்தா?” என்றான் ஒருவித குற்ற உணர்வோடு.

“நல்ல இருக்கா இந்த வாரம் பேசலாம்”

“இல்ல வேணாம் நான் பேசல”

“ஏன்?”

“பயமா இருக்கு அண்ட் ஐ பீல் கில்ட்டி”

“ஏன் பயம்? பேசலாம், பேசு, பேசனும்” என்றவர் மீண்டும் சில நொடிகள் மௌனம் கொண்டு பேரனிடம் பேச்சை தொடங்கினார்.

“ரோஷன் பொதுவா ஆண் பெண் ஒரே மாதிரி தப்பு பண்ணா இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுக்குறதில்ல இந்தச் சமுதாயம்.

அதே போலத் தான் உங்க நாலு பேருல பசங்க எல்லாம் ஒரே ஸ்கூல்ல படிக்கிறீங்க அந்த பொண்ணை பேசியே விரட்டியாச்சு.

தப்பு பண்ண உங்களை கண்டிச்சி விட்டுட்டாங்க, ஆனா ராகவியை பேசி வம்பு பண்ணி அவளை அழுக வச்சு, படிப்பையும் கெடுத்து அனுப்பியாச்சு என்ன சொல்லுறது இதை?”

“இல்ல தாத்தா ஸ்கூல்ல பனிஷ் பண்ணிட்டு விட்டுட்டாங்க”

“அது உங்க முன்னாடி தனியா ராகவி அப்பா அம்மாவை கூப்பிட்டு டி சி கொடுத்துட்டாங்க” இது ரோஷனுக்கு புது தகவல்.

“ஐயோ! எனக்குத் தெரியாது?”

“உங்க அப்பாக்கு தெரியும் ரோஷன். ராகவி அப்பா கஷ்ட பட்டு முன்னுக்கு வந்தவர் பணம் இருக்கு, ஆனா பின் புலம் இல்ல அதை வச்சு தான் அந்தப் பொண்ணுக்கு டி சி கொடுத்துட்டாங்க”

“ஓ!”

“நீங்க பண்ண ஒரு செயல் ஒரே ஒரு செயல் எத்தனை பேருக்குப் பாதிப்பை கொடுத்திருக்கு பார்த்தியா?” என்றதும் கண்கள் கலங்க தலையை குனிந்து கொண்டு.

“சாரி தாத்தா”

“சாரி வேணாம் ரோஷன். நீ உன் தப்பை உணரணும் உன் மனசுல சில விஷியத்தை நல்ல பதியவை ரோஷன்.

ஒரு தப்பு நீ பண்ணா அது உன்னோட முடியாது. உங்க அம்மா அப்பா தங்கைனு குடும்பத்தையே பாதிக்கும்.

உன்னை நம்பி இப்போ அம்மா, பாப்பா இருக்கா. நாளைக்கு நீ தான் எல்லாம். பின்னொரு நாள் நீ வளர்ந்த பிற்பாடு. உன்னை நம்பி சில பெண் உறவுகள் வரலாம் பக்கத்துக்கு வீட்டு பெண், தோழியா, காதலியா, மனைவியா யாரு வேணாலும்.

அவங்களை எல்லாம் நீ முடிஞ்ச வரை பாதுகாப்பா ரொம்பப் பத்திரமா பார்த்துக்கனும். எங்கையும் எப்போதும் நம்ப வீட்டு பொண்ணுங்களா? அப்படிங்கிற எண்ணமும் அலட்சியமும் வர கூடாது நான் சொல்றது புரியுதா?

“நான் பார்த்துப்பேன் பத்திரமா பார்த்துப்பேன். கேர் கொடுப்பேன் என் அம்மா தங்கச்சியைப் பார்த்துக்குற மாதிரி” என்றதும். அவனது கழுத்தை வளைத்து தனது இதழில் அவனது கன்னத்தைப் புதைத்துக் கொண்டார் இராமநாதன்.

இனி வரும் மூன்று மாதமும் எத்தனை நல் விதைகளை விதைக்க முடியுமோ அத்தனையும் சற்று ஆழமாக விதைத்து அனுப்ப வேண்டும் .

வாழ்க்கை பாடம் முழுவதையும் புகட்ட முடியா விடிலும் தன்னால் முடிந்த அளவு தெளிவு படுத்தி விட வேண்டும் என்ற முடிவு அவருக்கு.

சிறிது நேரம் அப்படியே இருந்தவரை விலகி “பசிக்குது ஜோல்னா” தண்ணியில் நன்றாக ஆடிய களைப்பில் தூக்கமும் பசியும் வந்தது ரோஷனுக்கு.

“வா! வா! பத்தே நிமிஷம் போயிடலாம்” என்றவர் அதே போல் பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்து பேரனுக்குக் செய்து வைத்த கேரட் சாதம் கீரை வைத்து. அவன் சினுங்க சினுங்க ஊட்டி விட. சாப்பிட்டு படுத்தவன் தான் தற்போது ஆழ்ந்த உறக்கத்தில்.

ரோஷன் பள்ளி விடுமுறை நாட்களில் பாதி உணவு அல்லது வெளியில் உண்பது.தூங்கவே மாட்டான் ஒன்று போன் அல்லது டிவி அதுவும் சலித்தால் நண்பர்கள் வீடு என்று இருந்தவன் இன்று வயிற்றுக்கு உண்டு தாத்தனுடன் பேசி சிரித்து இப்போது நல்ல உறக்கத்தில்.

தூங்கும் பேரனை யோசனையாகப் பார்த்துக் கொண்டு இருந்தவரை கலைத்தது வாயிலில் கேட்ட அழைப்பு மணி சத்தம்.

அவனது உறக்கம் கலையாதவாறு தனது அறை கதவை மூடிவிட்டு கூடத்தின் கதவை திறக்க. அங்கே தனது அண்ணனுடன் தலையைக் குனித்தவாறு நின்று இருந்தார் ஷர்மிளா.

அவர் நின்ற தோற்றமோ இல்லை தன்னை காண முடியாமல் தவிக்கும் செயலோ தெரியவில்லை அப்படி சிரிப்பை கொடுக்க. அடக்கவே முடியாமல் வெடித்துச் சிரித்து வைத்தார் இராமநாதன்.

தங்கை கணவன் சிரிப்பை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரகு.

Advertisement