Advertisement

ஜோல்னா பை10

அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய.

அவளது தவிப்புக்கு மாறாகக் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் இராமநாதன். காலையில் அவர் வந்ததில் இருந்து ரோஷனை தேடி கொண்டிருக்கிறார்.

இதோ மணி இரவு பதினொன்று காலையில் பத்து மணிக்கு சென்ற பிள்ளை.

அவன் எங்குச் சென்றான் என்பது அனுவுக்கு மட்டுமே தெரிந்தது, ஆனால் எதற்குச் சென்றான் என்ற கணிப்பில்லை எதோ நண்பனது வீடு என்றவரை அனுவுக்குத் தெரிந்தது.

மேகலா ராகவ் இருவருக்கும் அதுவும் தெரியவில்லை பிள்ளையைக் காணவில்லை என்ற தவிப்பில்லை இராமநாதன் கேட்டதற்கு,

வந்துவிடுவான் நண்பன் வீடு தானே என்ற அலட்சிய பதில் வேறு. அதுவே இராமநாதனை கொதி நிலைக்கு அழைத்துச் சென்றது.

ஷர்மிளா மெல்ல கணவனை நெருங்கி “ஏங்க நேரமாகுது படுக்க வாங்க ரோஷன் வந்துடுவான்” என்றதும் வெடுக்கெனத் திரும்பி ஷார்மியை முறைக்க வாயை கப்பென மூடி கொண்டார்.

கடந்த ஒரு மணி நேரமாக மனைவியைப் போட்டு பிராண்டி எடுத்து விட்டார் மனிதர். பிள்ளையைப் பார்ப்பதை விட என்ன என்று சற்றுக் கடுமையாகத் தான் சாடினார்.

மேலும் அவரைச் சோதிக்கவென வந்து சேர்ந்தான் ராகேஷ். வந்ததும் கூடத்தில் தவிப்புடன் அமர்ந்திருந்த அனுவிடம் சென்று அமர்ந்து கொண்டு சோபாவில் தலை சாய்த்துக் கொண்டு சிறுது நேரம் இருந்தவன் அனுவிடம் திரும்பி

“சாப்பிட்டியா?”

“ஹ்ம்ம்! ஆச்சுங்க ரோஷன் இன்னும் வரல என்னானு  பார்த்துட்டு வரலாமா?”

“அசோக் வீட்டுக்கு தானே போயிருக்கான் வந்துடுவான்” என்றதும் அதுவரை கோபத்தை அடக்கி கொண்டிருந்த இராமநாதன் பொங்கி விட்டார்.

“என்ன பதில் இது ராகேஷ்? ரோஷனுக்கு இருபது வயசு கிடையாது அவன் வருவான்னு பயப்புடாம இருக்க” அவரது குரலும் முகமும் அத்தனை கோபத்தைக் காட்ட.

ராகேஷ் திரும்பி அனுவை புரியாமல் பார்த்தான் அவளோ தந்தையின் கோபத்தைக் கண்டு பயந்து விட்டாள்.

இன்று எதோ என்ற பயம் பெண்ணுக்கு இதயம் வழமைக்கு மாறாகத் துடித்து இன்னும் பயத்தைக் கொடுத்தது.

பேச மறந்து முழித்துக் கொண்டிருந்த அனுவை பார்த்து என்ன எண்ணினானோ ராகேஷ் அவளை நெருங்கி “இரு நான் போயி பார்த்துட்டு வரேன்” என்றவன் இராமநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல போக.

சரியாக அந்நேரம் பதறிக் கொண்டு ஓடி வந்தார் ராகினியின் தந்தை. அவர் பின்னே அவரது மனைவி கண்ணில் நீர் பெருக கன்னம் வேறு வீங்கி இருந்தது பேரிளம் பெண்ணுக்கு.

“சார்! சார்! ரோஷன் எங்கே?” சிறு பதட்டமாகக் கண்ணன் கேட்க.

“என்ன சார் நீங்க தானே அசோக், ராகினி, ரோஷனை கூட்டிட்டு போனீங்க” கண்ணன் கேள்வியில் அனு இன்னும் பதட்டம்  கூடி கேட்க.

“மேடம் நான் தான் கூட்டிட்டு போயி அசோக் தாங்க வீட்டுல விட்டேன், ஆனா அவங்க பேரன்ட்ஸ் வந்து எங்ககிட்ட கேக்குறாங்க.

நான் விட்டுட்டு போன கொஞ்ச நேரத்துல இன்னும் இரண்டு பசங்க வந்து எல்லாரும் சேர்ந்து வெளிய போனதா சொல்லுறாங்க”

“என்ன சார் நீங்க?…” கடிந்து கொண்டான் ராகேஷ்.

இதனை கேட்டு கொண்டிருந்த இராமநாதன் “பையன பெத்தவங்க தான் பதினோரு மணி வரைக்கும் தேடலை,

நீங்க பொண்ணைப் பெத்தவர் தானே? இத்தனை அலட்சியமா இருக்கலாமா? காலம் எப்படி போகுதுனு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை” என்றவர் குரலில் மருந்துக்கும் மென்மை இல்லை.

மேலும் என்ன பேசுவதென்று தவிப்புடன் நின்றவரை “இன்னும் எதுக்கு நிக்கிறீங்க அவங்க ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் கால் பண்ணுங்க” என்றவர் அனுவிடம் திரும்பி.

“அனு அவன் பிரண்ட்ஸ் யார் யார் நம்பர் தெரியும் கொடு பேசி பார்ப்போம்” என்றதும் உள்ளே சென்றவள் ரோஷனை போன்னை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“ப்பா! இது ரோஷன் போன் அவனுக்குத் தான் தெரியும்” என்றதும் பல்லை கடித்தவர்

“அப்புறம் எதுக்கு நீ அம்மானு அவனுக்கு? சுள்ளெனக் கேட்க அழுகையை அடக்கி கொண்டிருந்தாள் அனு அவளது நிலையைப் பார்த்துச் சினம் கொண்ட ராகேஷ்.

“இப்போ எதுக்கு அவளைத் திட்டிகிட்டே இருக்கீங்க? நீங்க டென்ஷன் ஆகுற அளவுக்கு எதுவும் இல்லை”

“ஓ!..” என்றவர் அந்தப் போனை எடுத்து அதில் நம்பர் தேட, கையில் தவறுதலாகத் தட்டி வந்து விழுந்தது சில படங்கள் அதில் சற்று அதிர்ந்தவர். அடுத்த வந்த சில நொடிகள் அந்தப் போனில் முழுகிவிட்டார்.

அவரது செயலை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகேஷ் மேலும் சில நொடிகள் போனை பார்த்து கொண்டிருந்தவர்.

என்ன? ஏது? என்று எல்லாரும் பார்த்திருக்கும் முன்பே அந்தப் போனை ஆவேசமாக விட்டெறிய விழுந்து சுக்கு நூறாகி போனது.

அவரது செயலில் அனு அதிர்ந்து நிற்க “உன்னையெல்லாம் என்ன பண்ணுறதுனே எனக்குத் தெரியல,

அவன் கிடைக்கட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் எல்லாத்தையும்” என்றவர் கை நீட்டி எச்சரிக்கை செய்ய. இப்போது தான் நடப்பின் வீரியம் சற்றுப் புரிந்தது போலும் ராகவ்வுக்கு.

“என்ன ஆச்சு இராமநாதன்?”

“உங்ககிட்ட பேச இப்போ நேரமில்லை முதல உங்க பையனை வண்டியெடுக்கச் சொல்லுங்க” என்றவர் நிற்காமல் வாயிலை நோக்கி செல்ல. அனு அழுது கொண்டே ஓட வேறு வழியின்றி அவள் பின்னால் சென்றான் ராகேஷ்.

ராகவ் மற்றும் மேகலா மற்றோர் காரில் ஏறி கொண்டனர்.எந்த இடமென்று கேட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல சொல்ல அதன் படி சென்றனர். கிட்டத்தட்ட நடு நாசி நெருங்கும் வேளையில் ரித்விக் வீட்டில் பிள்ளைகள் இருப்பதாக தெரிய வர.

ரித்விக் வீட்டை நோக்கி சென்றனர்.வண்டியை நிறுத்தியது தான் தாமதம் இரண்டு பெண்கள் இருவரும் பதறிக் கொண்டு ஓடினர்.

ராகேஷ்,” அனு மெதுவா பார்த்து போ” என்றவாறே அவள் பின் சென்றான்.

பூட்டிருந்த கதவை இரண்டு முறை தட்டி பார்த்தனர். கதுவு திறக்க படாமல் இருக்கவும். கதவை வேகமாகத் தட்ட அந்த வேகத்தில் பூட்டாத கதவு திறந்து கொண்டது.

ராகேஷ் பின்னால் வந்த கண்ணன், ராகவ் இராமநாதன், ஷர்மிளா, மேகலா அனைவரும் உள்ளே நுழைய அங்கே கண்ட காட்சியில் உறைந்து நின்றனர்.

பெற்றவர்கள் பார்க்க கூடாது காட்சி. முதலில் தெளிந்த கண்ணன் கதறிக் கொண்டு தனது பெண்ணை நோக்கி செல்ல.

ராகவியின் தாய் மயங்கியே சரிந்து விட்டாள்.கலைந்திருந்த ஆடைகளைச் சரி செய்து பெண்ணை நெஞ்சோடு இறுக்கி அணைத்த கண்ணன் கதறி தீர்க்க.

இராமநாதன் கண்ணை இறுக்க மூடி நின்று விட்டார். இப்போது தான் சூழ்நிலையின் முழு வீரியம் புரிய ராகவ் துரிதமாகச் செயல் பட்டார். தனது பேரனை தூக்கி கொண்டு ஓட.

அவர் பின்னில் மேகலா, ஷர்மிளா, ராகேஷ். அனு ராகவியின் தாயை தாங்கி கொண்டால் இராமநாதன் கண்ணனை நோக்கி சென்று “தம்பி நீ பிள்ளையைத் தூக்கு ஹாஸ்பிடல் போகலாம்” என்றவர் வீட்டை சுற்றி பார்த்து விட்டு.

“அனு இந்தப் பிள்ளைங்களைப் பெத்தவங்க பத்தி தெரியுமா?”

“இல்லப்பா?” என்றதும் கோபம் வர

“உனக்கு என்ன தான் தெரியும் அனு? உனக்கெல்லாம் இன்னொரு பிள்ளை கேடு” என்றதும் கண்ணில் நீர் பெறுக அழுக தொடங்கினாள்

ஒருவராக ராகினி அவளுடைய தாய் ரோஷன் என்று அனைவரையும் ஒரே மருத்துவமனைக்கு ராகேஷ் அழைத்துச் செல்ல.

இராமநாதன் மீதம் உள்ள பிள்ளைகளைச் சில பல போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் பெற்றவர்களைக் கண்டு பிடித்து,

அவர்கள் வந்து சேரும் வரை இருந்து. தனது மன கொதிப்பை கொட்டி பிள்ளைகளை ஒப்படைத்த பின்னே மருத்துவமனை வந்து சேர்ந்தார்.

மனம் முழுக்க ஒருவித பயம் அவர் வயதில் எங்கோ ஒரு மூலையில் கேட்டும் கண்டும் பதறிய காட்சி இன்று தனது வீட்டிலே என்றவுடன் மனம் பதறித் துடித்தது.

அவரது வரவில் அனு பயந்து நிற்க வேகமாக வந்தவர் கண்ணனிடம் சென்று “என்ன ஆச்சு?”

“ஆ! ஆ! அது ஆல்கஹால் யூஸ் பண்ணிருக்காங்களாம்” அதிர்ச்சியில் அயர்ந்திருந்தவருக்கு பேச்சு வரவில்லை

“என்னது?” என்று அதிர்ந்த இராமநாதன்  சில நொடிகள் பேச்சற்று நிற்க.

“என்ன சொல்றீங்க ஆல்கஹால்?”

“ஆமாங்க”

“வேற எதுவும்?” சற்றுப் பதறிக் கொண்டு அவர் கேட்க

‘இல்லை’ என்று தலையை மட்டும் ஆட்ட சற்று ஓய்ந்து அமர்ந்து விட்டார். அதுவரை கருணை கொண்ட கடவுள் என்று எண்ணினார் போலும்.

இரு கைகளாலும் முகத்தை மூடி கொண்டவர் சற்று நேரம் அமைதிக்குப் பின் நிமிர்ந்து பார்க்க. அங்கே அனு ராகேஷ் நிற்பதை பார்த்தவர்.

அவர்களைப் பார்க்க பார்க்க வெறியே வந்தது வேகமாக அவர்களை நோக்கி வந்தவர் அனுவை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டார்.

“அனு!…” சற்று உரக்க கத்த தந்தையின் கோபத்தில் உடல் உதற எழுந்து நின்றாள். இதுவரை இப்படி ஒரு நிலையில் அவள் தந்தையைக் கண்டதில்லை போலும் அதுவும் அவரது இந்த கோபம்…

“நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க வீட்டுல தானே இருக்கப் பிள்ளை என்ன பண்ணுறான்? ஏது பண்ணுறான்னு? பார்க்க வலிக்குதா”

“அப்பா நான் அவன் கூடத் தான் இருப்பேன். இப்போ தான் உடம்பு படுத்தி வைக்குது அவனைக் கவனிக்க முடியல”

“கவனிக்க முடியாதவளுக்கு எதுக்கு இன்னொரு பிள்ளை?” சுள்ளெனக் கேட்க தந்தையின் கேள்வி அவமானத்தைக் கொடுக்க அழுது விட்டாள்.

“பணம் காசு இல்லாட்டியும் பிள்ளையை ஒழுக்கமா வளரக்கனும் அனு. நீ என்ன பண்ணி வச்சிருக்க?  பிள்ளையை ஒழுங்கா பார்த்துக்க முடியாத நீயெல்லாம் என்ன ஜென்மம்?” மாமனார் மனைவியைச் சாடுவதை தாங்காத ராகேஷ்.

“என்ன நீங்க? இப்போ எதுக்கு அவளைத் திட்டுறீங்க?”

“என்னால என் புள்ளையைத் தான் திட்ட முடியும் உங்களைப் பார்த்து நீயெல்லாம் ஒரு அப்பனானு கேட்க முடியுமா? பிள்ளை என்ன பண்ணுதுனு? என்ன படிக்குது? யாரு கூடப் பழகுதுனு தெரியுமா வீட்டுல எல்லாரும் என்ன பண்ணுறீங்கனு?

உங்களைக் கேள்வி கேட்க முடியுமா? பேரனை பார்குறதை விட உங்க அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க? பெரியவங்கனு எதுக்கு அவங்க? இப்படியெல்லாம் நான் உங்களைக் கை நீட்டி கேட்க முடியுமா? சொல்லுங்க.

அதான் என் பொண்ணை கேக்குறேன். அதுக்கு எனக்கு கொஞ்சமே கொஞ்சம் உரிமை இருக்குனு நினைக்கிறன்”

“இராமநாதன் என்ன பேசுறீங்க கொஞ்சம் பொறுமை” ராகவ் இடைப்புக.

“பொறுமையெடுக்குற நேரம் இது இல்லை ராகவ். உங்க வளர்ப்பு படி இது பெரிய விஷயமில்லை தான், ஆனா எனக்கு அப்படில்லை” முகத்தில் அடித்தார் போல் கணவனை பேசவும்.

“மேகலா இங்க பாருங்கண்ணா நீங்க விவரம் தெரியாம பேசாதீங்க எங்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியாது?”

“என்னதானம்மா அப்போ உங்களுக்குத் தெரியும்? நீங்க தானே வீட்டை நிர்வாகம் பண்ணுறது அவ பிள்ளைக்காரி நீங்க என்ன செஞ்சீங்க?”
என்றதும் ராகேஷ்.

“நீங்க என்ன எங்க அம்மாவை பேசுறீங்க?”

“நான் பேசல நீங்க தான் பேச வைக்கிறீங்க உங்க வளர்ப்பு, உங்க நடத்தை, உங்க அலட்சியம், உங்க நாகரீகம்னு கெட்டு போயி நிக்கிறது என்னோடு பொண்ணும் பேரனும் தான்.

எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு அவ தலைமுறை நல்ல இருக்கனும் அது தான் எனக்கு வேணும்?

உங்க பகட்டுக்கு நான் ஒழுக்கத்தை இழக்க முடியாது” என்றவர் பேச்சில் ராகவ்வுக்கும் கோபம் வர.

“என்ன நீங்க திரும்பத் திரும்ப ஒழுக்கம்னு பேசுறீங்க அப்போ நாங்க என்ன ஒழுக்கம் இல்லாம இருக்கோம் சொல்லுங்க? பார்த்து வார்த்தையை விடுங்க இராமநாதன்” என்றதும் இன்னும் பிள்ளையின் நிலை புரியாமல் நாங்கள் என்ன செய்தோம் என்று தர்க்கம் பண்ணும் ராகவ் மீது சினம் துளிர்க்க

“யோவ்!…” என்று சட்டையை பிடித்து விட்டார் இராமநாதன்.

Advertisement