Advertisement

ோல்னா பை – 1

சென்னை மாநகரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர்.எதனை நோக்கி ஓட்டமென்றே தெரியாமல் ஓடும் மக்கள். வாழ்வாதாரம், பொருளாதாரம், தொழில் துறை சினிமா துறை என்று எண்ணற்ற துறைகளைக் கையில் கொண்டு மிரட்டும் நகரம்.

கலர் பேப்பர் கொண்டு சுற்றிய இனிப்பு துண்டு எப்படிக் குழந்தைகளை ஈர்க்குமோ, அதே போல் பல கேளிக்கைகளைக் கொண்டு மக்களை ஈர்த்துக் கொள்கிறது இந்நகரம்.

நாகரிகம் நஞ்சாக நின்ற தருணம் கலியுகத்தின் பிறப்பிடம் என்றாகி போனது இன்றைய மக்களின் வாழ்க்கை முறை.

இத்தகைய சென்னையிலிருந்து கதையின் பயணத்தைத் தொடர்கிறேன் வாருங்கள் என்னுடன்…

சென்னை நீலாங்கரை நல்ல வசதியான மக்களின் வசிப்பிடம் போலும் தெருக்களும் ரோடுகளும் மிக நேர்த்தியாக இருந்தது. அது போக வித விதமான கலைநயம் மிக்கச் சிறிதும் பெரிதுமான பங்களாக்கள்.

அதில் கடல் கரையை ஒட்டிய ராகவன் இண்டஸ்ட்ரீஸ் என்று சுவற்றில் பெயர் பொறிக்கபட்ட பங்களாவில் இருந்து “தாத்தா என்கூட வர போறீங்களா இல்லையா? எனக்கு அம்மா இப்பவே இங்க வரனும். எனக்கு அம்மா வேணும்” என்று தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தினான் ரோஷன் அதற்கு அவரது தாத்தா ராகவன்.

“அப்புன் கொஞ்சம் பொறுமையா இருடா. ஏன் இவுளோ டென்ஷன் ஆகுற?” பேரனை சமாதானம் செய்ய முயன்ற ராகவன் மேல் கோபம் கொண்ட அவரது மனைவி மேகலா.

“அவன் கத்துறதுல என்ன தப்பிருக்கு. ஒரு வருசமா அம்மாவ பிரிஞ்சு பிள்ளை இருந்தா கோபம் வர தான் செய்யும்” பேரனுக்கு மேல கத்தினார் மேகலா.

ராகவன் – மேகலா தம்பதியினர் ரோஷனது தந்தையை  பெற்றவர்கள்.

“ஓ! அப்போ ஒன்னு செய் நீயே கும்பகோணம் போயி அந்த மகராசன் கிட்ட பேசி உன் மருமகளைக் கூட்டிட்டு வா” என்ற ராகவனை பார்த்து இப்போது அலறினார் மேகலா.

“என்ன? ஏன் பேச சொல்லுறீங்க? அன்னைக்கு போல அந்த மனுஷன் என்னை கேள்வி கேட்கவா? அவருகிட்ட என்னால பேச முடியாது” என்றவரை ஏளனமாகப் பார்த்த ராகவன்.

“தெரியுதுல அப்போ நான் மட்டும் எப்படி பேச முடியும்? பேச வேண்டியது நீயோ நானோ இல்ல. உன் மகனும், உன் பேரனும் தான். அதை விட்டுட்டு நம்பக்கிட்ட கத்தி வேலைக்கு ஆகுறதில்ல” என்று மனைவியிடம் பேசுவது போல் மகனையும் பேரனையும் குத்தி வைத்தார்.

“தாத்தா! அவர் என்னை அங்க படிக்க வர சொல்றார் என்னால முடியாது. நான் இப்போ ஒழுங்கா தானே இருக்கேன் அப்புறம் என்ன?” என்றவன் கண்ணில் மணி மணியாக நீர் இறங்க அதனைப் புறங்கையில் துடைத்தவாரே,

“நான் ரொம்ப பேட் பாய் இல்ல தாத்தா நானும் நல்ல பையன் தான் அம்மா கிட்ட சொல்லுங்க. நான் அம்மாவ பாக்கனும் அவுங்க கூட பேசணும் முக்கியமா பாப்பாவ பாக்கணும்” என்று அழுக.

அதுவரை இவர்களது உரையாடலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவனது தந்தை ராகேஷ் மகன் அழுகவும் தாங்க முடியாதவனாக ஓடி வந்து ரோஷனை வாரி அனைத்துக் கொண்டு முதுகை நீவினான்.

“அப்புன்! டோன்ட் க்ரை! டோன்ட் க்ரை! அம்மாவ பார்க்க போலாம் அதுவும் இன்னைக்கே” என்றதும் அழுது கொண்டிருந்தவன் அழுகையை நிறுத்தி ஆவலாக தந்தை முகம் காண. மகனது தவிப்பை உணர்ந்தவன் போல் அவனை மார்போடு இறுக்கி கொண்டான் ராகேஷ்.

ரோஷன் கத்தி அழுவது போல அவனால் அழுக முடியவில்லையே தவிர அவனும் மனைவி மகளின் பிரிவை எண்ணி கலங்கி தான் நின்றான்.

அதுவும் பல வருடங்கள் சென்று பிறந்த செல்ல மகளின் பிரிவு பெரும் வலி. ஒரு வருடத்திற்கு முன்பு முதுகு வலி என்று மருத்துவமனை செல்ல.

அங்கே இது குழந்தை அதுவும் ஆறு மாத கருவென்று சொல்லிவிட அத்தனை களிப்பு குடும்பத்தாருக்கு. பல வருடங்கள் சென்று பிள்ளை என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

ராகேஷ் – அனு பிரியா தம்பதிக்கு இரு பிள்ளைகள் ஒன்று ரோஷன் இன்னொரு பெண் பிள்ளை ஒரு வயதை எட்டி பிடிக்கப் போகும் வினு பிரியா.

“ராகேஷ் பிரச்சனை வேண்டாம் அவர் என்ன பேசினாலும் பொறுமையா பேசி அனுவை அழைச்சிட்டு வா நானும் என் பேத்தியை பார்க்கனும்.

பிறந்த பிள்ளையைப் பார்க்க கூட விடாம ரொம்பப் படித்திட்டார் டா உன் மாமனார்” மெதுவாகத் தொடங்கிக் ஆதங்கமாக பேச்சை முடித்துக் கொண்டு தனது அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டார் ராகவன்.

மேகலா, “ராக்கி நான் வேணா வரட்டுமாடா எனக்கும் பாப்புவ பார்க்கனும் போல இருக்கு. அவ்ளோ அழகுடா பிள்ளை இதுல என்னை வெறுப்பேத்தவே உன் மாமியார் ஸ்டேட்டஸ் வைக்கிறா”

“ப்ச் மா நீங்க வேற என் மாமனார் விடுவாரான்னு தெரியல. அவர் உங்களைப் பேசுனா எனக்குக் கோபம் தான் வரும் நீங்க வர வேணாம் நானும் ரோஷனும் மட்டும் கிளம்புறோம்”

“அதுவும் சரிதான் அப்பா சொல்லுற மாதிரி பார்த்து பேசு அனுவோட வா” என்றவர் மனமே இல்லாமல் புலம்பி கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டார்.

மேகலா – ராகவன் இருவரும் நல்ல வளமான செழுமையான குடும்பத்தில் பிறந்தவர்கள். தொழில் வட்டாரத்தில் சற்று பெரிய ஆட்கள் இவர்களுக்கு ஒரே மகன் ராகேஷ்.

நல்ல குடும்பம், நல்ல வசதி, நல்ல அழகு, நல்ல பணப் புழக்கம் அதில் வசீகரிக்கும் இளைஞனாக வளம் வந்தவன் ‘களவும் கற்று மற’ என்பதை மனதில் கொண்டு இளமையில் ஆடாதா ஆட்டம் எல்லாம் ஆடியவன்.

காளை பருவத்தில் அனு என்ற கன்னியை பார்த்து கவுந்து விட்டான். ஆம் ராகவன் உறவு முறையில் தங்கை முறை உள்ள ஷர்மிளா இராமநாதன் அவர்களின் ஒரே பெண் தான் அனுப்பிரியா.

உறவினர் திருமணத்தில் ராகேஷ் அனுவை பார்த்து கை காட்டி நிற்க. நம் ஷர்மிளா பெண் தானே என்று பெண் கேட்க இராமநாதன் மறுத்து விட்டார்.

அவரிடம் கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு மேல் பேசி பேசி தலை கீழ் நின்று தண்ணீர் குடித்துத் தான் ராகேஷ் அனு திருமணத்தையே முடித்தார்கள்.

“ரோஷன் ஈவ்னிங் கிளம்பலாம் இப்போ போயி ஹாம் ஒர்க் பண்ணு எதுவும் யோசிக்க கூடாது என்ன?” என்றதும் சந்தோசமாகச் சரியென்று தலையை ஆட்டியவன் தாயை பார்க்க போகும் களிப்பில் வேகமாக தன்னுடைய வேலைகளைச் செய்தான்.

கும்பகோணம் ரயில்வே குவாட்டர்ஸ்

“ம்மா! அழுக்காதீங்க மா! நீங்க கிளம்பி வாங்க அதெல்லாம் அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார்” என்று அனு பிரியா போனில் அழும் தாயை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.

“இல்ல அனு உங்கப்பா முடிவு பண்ணிட்டார் போலடி இல்லனா ஒரு வருஷமாகியும் எங்கூடப் பேசாம இருப்பாரா வீம்பு கண்ட மனுஷனை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே போச்சு” என்று ஒப்பாரி வைத்த தாயின் பேச்சில் கோபம் வர.

“மா! என்ன பேசுறீங்க நீங்க? அறுபது வயசுல அண்ணன் வீட்டுல உட்காந்து கிட்டு இருக்குறதே தப்பு இதுல வாழ்க்கை போச்சுன்னு அழுது வைங்க. இது ஒரு பெரிய பேச்சா மாறட்டும் எல்லாரும் என்னனு கேட்கனும் அதானே.

ரொம்ப நல்ல இருக்கு நீங்களே இப்படி அழுது வச்சா நான் எங்க போயி அழுக. என் புருஷன் கூட தான் என்கிட்ட பேசுறது இல்ல. நானும் அவர்கூட பேசுறதில்ல என்றவளை

“இங்க பாரு நீ உங்கப்பா மாதிரி வீம்பு புடிச்சு அவர் பேச்சை கேட்டு பேசாம இருந்தா அதுக்கு நான் பொறுப்பா.போடி நீயும் உங்க அப்பாவும் கல்லு நெஞ்சு திமிரு பிடிச்ச குடும்பம்” என்று தேம்ப.

“நீங்க எந்த குடும்பமாம்?” எண்ணிய அனுவுக்கு பாவமாகி போனது இருந்தும் அவளால் என்ன செய்ய முடியும் அதுவும் தனது தந்தையை மீறி மௌனம் கொண்டாள்.

“அனு பயமா இருக்குடி உண்மையாவே நான் வேணான்னு உங்கப்பா முடிவு பண்ணிட்டாராடி எனக்கு வர வர கனவும் ரொம்பப் பயங்கரமா வருது.

நேத்து கூட உங்க அப்பா  அவர் அம்மா வழி அத்தை பொண்ணு ஒன்னு இருக்கே. அவ கூடக் கல்யாணம் பண்ணுற மாதிரி கனவு வருதுடி.

அவ புருஷன் சின்ன வயசுல இறந்துட்டான் வேற. அவ பெயர் கூட ஹ்ம்ம்!… ஆஹான் நந்தினி” என்றதும் சோகம் மறந்து பக்கெனச் சிரித்த அனு.

“மா! இது கனவில்ல உங்க கற்பனை எதையாவது யோசிச்சு கிட்டே இருக்காதீங்க மா”

“இல்லடி அனு உங்கப்பாக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது அதுவும் எங்க வீடு ஆட்களைக் கண்டா சுத்தமா ஆகாது, இப்போ இந்தப் பிரச்சனையை சாக்கா வச்சு ரொம்ப விலகி போயிட்டார் போலடி.

உங்க அப்பா வேற பார்க்க வேற ஜம்முனு இருக்கார் என் பேரன் சொல்லுறது போல விவகாரமான ஆளு ஜோல்னா பை எப்போ என்ன பண்ணுவாருனு தெரியலடி”.

“மா! என்னமா! ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க”

“இல்ல அனு தோணுது அவர் மட்டும் என்னை விட்டு விலக்கிட்டார்னு வை நான் செத்து போயிடுவேனு சொல்லிடு அவர்கிட்ட” என்றவர் அனுவின் பேச்சை காதில் வாங்காமல் போனை வைக்கச் சோர்ந்து போயி அமர்ந்து விட்டாள் அனு.

கணவன், மகன் ஒரு புறம் தாய் ஒரு புறம் என்று தத்தளித்தாள் பேரிளம் பெண்.

ராகேஷ்,ரோஷன்,ராகவன்,மேகலா,ஷர்மிளா வெனக் குடும்பத்தையே அலற வைத்த மகராசன் திருவாளர் இராமநாதன் அவர்களோ தலையில் நீர் வழிய சிறிய தேங்காய் பூ துண்டை இடுப்பில் கட்டி கொண்டு,

கடவுளிடம் கண் மூடி அபிராமி அந்தாதி சொல்லி கொண்டு இருந்தார்.

தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

கையில் அவரது பேத்தி வினு பிரியா தாத்தன் வாய் அசைவை பார்த்து கொண்டே இருந்தது சமத்தாக.

இராமநாதன் சின்னப்பன்- லட்சுமி தம்பதியினரின் பொறுப்பான மகன். பொறியியல் முடித்து ரயில்வே பணியில் சேர்ந்து குடும்ப பொறுப்பை கையிலெடுத்து கொண்டான் அப்போது அவருடைய வயது இருபது.

இப்படி தான் வாழ வேண்டும் என்ற சில கொள்கை உடையவர் வித்தியாசமான மனிதன். அவரது குணம் பார்த்தே ஷர்மிளாவின் தந்தை ராஜரெத்தினம் மகளை இராமநாதனுக்கு திருமணம் பேசினார்.

வசதி அவர்கள் வாழ்க்கை முறை கண்டு சிறு தயக்கம் காட்டி விலகி நின்ற இராமநாதனை பேசி கரைத்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இராமநாதன் தோற்றத்தில் தொடங்கிச் செயல் வரை அனைத்தும் தனித்துவமான நேர்த்தியான செயல் தான்.

அதுவே ராஜரெத்தினத்தை பிடிவாதமாகத் தனது மகளுக்குக் கட்டி வைக்கக் காரணமாகி போனது.

அவரைப் பொறுத்தவரை பணம் இல்லையென்றாலும் குணம் வேண்டும் அது இராமநாதனிடம் நிரம்ப உள்ளதால் அவரை மாப்பிள்ளையாக வழிய சென்று ஏற்று கொண்டார்.

ஷர்மிளா பிறப்பிலே செழுமை கண்டு வளர்ந்த பெண் இராமநாதனை திருமணம் செய்து சில வேறுபாடுகள் கண்டாலும் அவர் குணத்தைக் கொண்டு விரும்பியே வாழ்ந்தார்.

இவர்கள் அன்பு வாழ்க்கைக்குச் சான்று பெற்றது போல் அனு பிரியா பிறந்தாள். தந்தை தாய் இருவரது குணமும் சரிவிகிதம் பெற்ற அழகி அவள்.

தற்போது அன்பான கூட்டில் விரிசல் விழுந்தது போல் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கணவனும் மனைவியும் பிரிந்து இருக்கின்றனர்.

கடவுளை வணங்கி விட்டு வந்தவர் பேத்தியை மகள் கையில் கொடுத்து விட்டு உடை மாற்றி வர. அவர் வருவதற்குள் காலை உணவு தயாராக இருக்கச் சாப்பிட அமர்ந்தவர். எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து வர.

கையில் அவரது ஜோல்னா பையுடன் நின்றாள் அனு பிரியா மகளின் கலங்கிய விழிகளைப் பார்த்தவாரே பையை வாங்கியவர்.

எதுவும் பேசாமல் சிறு புன்னகையுடன் வெளியில் சென்று விட்டார். அவர் போகும் வரை அழுகையை அடக்கி கொண்டு இருந்த அனு. தந்தை சென்ற மறு நொடி தனது மகளைக் கட்டி கொண்டு அழுக தொடங்கி விட்டாள்.

ஒரு வருட போராட்டம், மகன், கணவனது பிரிவு, வயது சென்று குழந்தை, அதனால் ஏற்படும் உடல் உபாதையென மனமும் உடலும் சோர்ந்து போக இயலாமை தந்த வலியில் கண்ணில் அருவி கொண்டது பேரிளம் பெண்ணுக்கு.

வீட்டை கடந்த வெளியில் சென்ற இராமநாதன். ஆதி கும்பேசுவரர் கோயில் சென்று வழி பட்டு விளக்கேற்றி கும்பிட்டுவிட்டு கோவிலுக்கு எதிரில் உள்ள அவரது தோழன் கணேசன் வைத்திருக்கும் கரும்பு சாறு கடைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்.

நான்கு ஐந்து நபர்கள் இருந்தமையால் இராமநாதனை “வா ராமா” என்று அழைத்து விட்டு வேலை செய்து கொண்டு இருந்தார் கணேசன்.

இருபது நிமிடங்கள் கடந்த நிலையில் ஆட்கள் சற்று குறைய இரு லோட்டாவில் கரும்பு சாரை நிரப்பிக் கொண்டு வந்து இராமாந்தனுக்குக் கொடுத்து தானும் குடித்தார்.

இருவரும் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசி கொள்ளவில்லை குடித்த பின்பு ராமா “உன் மருமக பையனும் பேரனும் வராங்க போலக் கொஞ்சம் நடு சாமம் ஆகும்” தயங்கி தயங்கி சொல்ல சிறு புன்னகையுடன்.

“அந்தப் பொடி நாயிக்கு இறங்கி வர ஒரு வருஷம் ஆகியிருக்கு பாரு அதையும் என்கிட்ட சொல்லாம உங்கிட்ட தூது” என்றவனை முறைத்த கணேசன்.

“அநியாயம் பேசாத ராமா நீ போன் உபயோக படுத்த மாட்ட உன் மக போனே எடுக்க மாட்டேங்குது அப்போ எப்படி தகவல் சொல்லுவாங்க, ஆனாலும் நீ ரொம்ப படுத்துறடா”

“அதுவும் சரி தான், ஆனா நான் செய்றது தப்பில்ல”

“டேய் ராமா காலத்துக்குத் தக்க மாறிக்கனும் டா சாதாரணமா பேசுற மாதிரி ஒரு போன் வாங்கிக்கோ ஒரு அவசரத்துக்குப் புள்ளைங்க பேச தகவல் சொல்ல தவிச்சு போகுதுங்கடா”

“என்னை மறக்க செய்யிற எந்தச் சூனியமும் எனக்குத் தேவையில்ல கணேசா.  இந்தப் போனும் எனக்குத் தேவையில்ல எதாவதுனா நேருல வந்து பார்க்கட்டும் பேசட்டும், தகவல் சொல்லட்டும்” என்றவனை என்ன செய்தால் தகும் என்று முறைத்தார் கணேசன்.

“நீ பேசுறது சரியா? இந்தப் பிடிவாதம் தான் பிள்ளை வாழ்க்கையை முடக்கி போட்டுருக்கு. ஒரு வருசமா புள்ளைங்க தவிச்சு கிடக்குதுங்க ராமா”

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும் தப்பு அவங்க மேல” இப்போது ராமநாதனும் எகிறினார்.

“சரிதான் அதுக்குன்னு? தப்ப சரி செஞ்ச பிறகும் வதைக்குறது என்ன நியாயம் சொல்லு. தப்பு செய்யாத மனுஷன் உண்டா நீ தப்பு செஞ்சதே இல்லையா? உன் வலுவ குருத்துகிட்ட காட்டுறது சரியா ராமா?”

“ப்ச் இந்தப் பேச்சு வேண்டாம் கணேசா என் கண் படப் பார்த்தாதான் நம்புவேன் என் பொண்ணை அனுப்புவேன்” என்று பிடிவாதமாக பேச கணேசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“எப்படியோ போ உன் கிட்ட என்னால மல்லுக்கட்ட முடியாது நான் வேலையைப் பார்க்குறேன்” என்றவர் வியாபாரத்தைப் பார்க்க செல்ல. நண்பனது கோபத்தில் சிறு புன்னகை கொண்டவர் வருவோர் போவோரை வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டார்.

பணியில் ஓய்வு பெற்ற பின் அவரது வழமை காலையில் கோவில் சென்று வழிபட்டு.பள்ளி தோழனான கணேசன் கடையில் வந்து அமர்ந்து பேசி, சிறுது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு மதிய உணவுக்குத் தான் வீட்டுக்கு செல்வார். இன்றும் அதே போல் வேடிக்கை பார்த்து விட்டு,

“கணேசா கிளம்புறேன்”

“போயிட்டு வா ராமா பத்திரம்”

“ஹ்ம்ம்! எப்போ வருவானுங்க” ராமநாதன் கேட்ட தினுசில்.

“நீ இருக்கப் பாரேன் மாப்பிள்ளைக்காவது மரியாதைக் கொடுத்து பழகு மத்தது பேசுற? நீ செய்யிறது சரியா?”

“ப்ச் அவனுக்குனு இல்ல எவனுக்கும் குடுக்க முடியாது நீ சொல்லு”

“உன்னைய?… நடுச் சாமம் ஆகும் அனுக்கிட்ட சொல்ல வேண்டாமா உன் மாப்பிள்ளை சொல்ல சொன்னாரு”

“இதெல்லாம் நல்ல செய்வான் ஆனா பொறுப்பா பிள்ளைகளைப் பார்க்க மாட்டான் சரி நான் வரேன்” என்றவர் கிளம்ப

“இவன் என்ன இவன்? இப்படி இருக்கான்?” என்று கவலையாக நின்று விட்டார் கணேசன். காலத்திற்கு ஏற்ப தன்னை வளைத்துக் கொள்ளாமல். இக்காலத்திலும் நான் இப்படி தான் என்றிருக்கும் நண்பனை எண்ணி வருத்தம் கொண்டார்  கணேசன்.

நான்கு பிள்ளைகள் பெற்ற தனக்கே நிழல் இல்லாமல் ஜீவனம் செய்ய இந்த வயதில் தொழில் பிடித்து நிற்க.

ஒற்றைப் பெண் பிள்ளையை வைத்துக் கொண்டு அனைவரையும் பகைத்துக் கொண்டு இருக்கிறானே என்ற கவலை அவருக்கு.

என்ன இல்லை இவனிடம்? எல்லாமிருந்தும் அனுபவிக்க தெரியவில்லையே!

நல்ல வசதி, அன்பான மனைவி, ஒரே பெண் கண்ணுக்கு நிறைவான செழிப்பான வாழ்க்கை, அழுகு பேரன் பேத்தி, அது போக அறுபதிலும் அவரது தோற்றம்.

நல்ல வாட்ட சாட்டமான கலையான முகம். உதிராத கேசம் நெற்றியில் திருநீர் அடர்த்தியான மீசை ஆங்காங்கே வெள்ளை முடிகள் எட்டி பார்க்க கம்பீரமாக இருந்த இராமநாதன் ஜோல்னா பையை இறுக்கி பிடித்து நடக்க. போகும் அவரை ஒரு வித கலக்கத்தோடு பார்த்து வைத்தார் கணேசன்.

Advertisement