Advertisement

“ஏது… கல்யாண பேச்சு விட முக்கியமா வேலை இருக்கா உங்களுக்கு? அங்க என் தங்கச்சி என்ன பதில் வருமோனு காத்திட்டு இருப்பா, வாங்க வாங்க” கையை பிடித்துக்கொண்டான் ஆதவன். 

ஆதவனை முறைக்க முயன்று தோற்ற பாலன், “நிஜமா அவதான் விருப்பம்னு சொன்னாளா?” எனக் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு புறப்பட்டான். 

துர்கா மகளிடம் போய் பாலன் வேண்டாம், அவன் அத்தனை பொருத்தமில்லை உனக்கு, வருணை திருமணம் செய்து கொள் என பேசி பார்த்தார். அவள் பதிலே பேசாமல் அமைதியாக இருக்க தான் சொன்னதையெல்லாம் யோசித்து மறுத்து விடுவாள் என்ற நம்பிக்கையில் அகன்றார். 

பாலன் வந்தான்.  பின் பக்க வராண்டாவில் தூணில் சாய்ந்து பிரியா அமர்ந்திருக்க நேராக அவளிடம் சென்றான். அவனை கண்டதும் எழப் போனவளை கை காட்டி தடுத்த பாலன் அவளுக்கு இடைவெளி விட்டு தரையிலேயே அமர்ந்து கொண்டான். 

“ஏன் உன் அண்ணன்கிட்ட அப்படி சொன்ன? என்ன இருக்கு உன் மனசுல?” எனக் கேட்டான். 

“எப்படியும் கல்யாணம் பண்ணாம விட மாட்டாங்க என்னை” 

“அதுக்கு?”

“ஏன் உங்களுக்கும் என்னை கட்டிக்க விருப்பம் இல்லையா? என்னை தப்பா நினைக்குறீங்களா?” எனக் கேட்டாள். 

“அனாவசியமா கேள்வி கேட்குற, ஏன் உன்னை தப்பா நினைக்க போறேன்? வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க பயந்து போய் இப்படி சொல்லிட்டியா?” 

“கல்யாணம்னாலே பயமாதான் இருக்கு” 

“மாமாகிட்ட நான் இன்னொரு முறை பேசி பார்க்கவா?” 

“பிரயோஜனம் இருக்கும்னு நினைக்குறீங்களா?” 

எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவன், “என்னை பண்ணிக்கிறேன்னு ஏன் சொன்ன?” எனக் கேட்டான். 

சட்டென  மனதில் உள்ளதை என்ன வார்த்தைகள் கொண்டு சொல்வது என அவள் விழிக்க, அவளுக்கு அவகாசம் தராமல், “சரி, ஒரே ஒரு உண்மை மட்டுமாவது சொல்லு, இன்னும் அவன்… அந்த கெளதம் பத்தின நினைப்பு இருக்கா?” எனக் கேட்டான். 

அவளுக்கு வந்த கோவத்தில் முகம் சிவந்து விட்டது. 

ஏதோ பேசப் போனவளை கை காட்டி தடுத்தவன், “வேற எந்த விளக்கமும் அனாவசியம் பிரியா. எதையும் திரும்பி பார்க்காத, எனக்கும் காட்டாத. இங்கேர்ந்து நாம முன்னாடி பார்ப்போம். இப்ப உள்ளதை சொல்லு” என்றான். 

இல்லை என்பதாக தலையசைத்தாள். 

“வாய தொறந்து சொல்லு” என லேசாக அதட்டினான். 

“இல்ல, அவன் நினைப்பெல்லாம் எனக்கு இல்ல, போதுமா?” என சீற்றமாக சொன்னாள். 

“சரி, அப்புறம்… என் வயசு தெரியுமா உனக்கு?” எனக் கேட்டான். 

“என்ன ஒரு அம்பது இருக்குமா?” என கோவமாக கேட்டவளை பார்த்து லேசாக இதழ் விரித்தவன், “நீ டாக்டர் ஆக போறவ” என்றான். 

“எல்லாத்துக்கும் நானே மூடுவிழா நடத்திக்கிட்டேன். நான் எதுவுமே இல்லாத முட்டாள் இப்போ” என விரக்தியாக சொன்னாள். 

“இன்னொரு முறை உன்னை முட்டாள்னு சொல்லிக்கிறது… இல்லயில்ல… நினைச்சா கூட கல்யாணத்தை நிறுத்திடுவேன்” என சாதாரணம் போல சொல்லி எழுந்தவன் அவள் நிமிர்ந்து பார்க்கும் முன் அங்கிருந்து அகன்றிருந்தான். 

திகைப்பு நீங்கிய பின் “நான் சொன்னா தெரியும், நினைக்கிறது எப்படி தெரியுமாம் இவருக்கு?” வாய் விட்டு கேட்டவள் முகம் கடந்த சில நாட்களாக இழந்திருந்த பிரகாசத்தை திரும்ப பெற்றது போல ஜொலிப்பாக இருந்தது. 

மாமா வீட்டிலேயே தனியாக ஒதுங்கிய பாலன் இந்த திருமண பேச்சு வார்த்தை பற்றி தங்கையிடம் சொல்லி அபிப்ராயம் கேட்க அவள் இரண்டு முறை அப்படியா என கேட்டு தெளிவடைந்து கொண்டாள். பின் உற்சாகமாக பேசியவள் உடனே வாடிய குரலில், “அவருக்கு வேற பொண்ணு பார்த்தாங்கல்ல ண்ணா?” எனக் கேட்டாள். 

“நான் கேட்டுட்டேன் உத்ரா. பொண்ணு பார்க்கிறது எல்லாம் சகஜம்தானே. அவங்க வீட்ல பிரியாவை ஏத்துக்கலைன்னு கோவப்பட்டதா வேற மாமா சொன்னாங்க. அது ஒண்ணும் பிரச்சனை இல்ல” என்றான் பாலன். 

இன்னும் அவள் குழப்பமாக இருப்பது போலவே பாலனுக்கு தோன்ற, “நீ ஆசை பட்ட மாதிரி அவனும் உன்னை ஆசை படலைன்னு நினைக்காத. முதல்ல உன் எண்ணம் என்னங்கிறது அவனுக்கு தெரியாது, அரேஞ் மேரேஜ் மாதிரி இருக்கட்டும், பொறுமையா அவன்கிட்ட சொல்லு. ஆனா ஒண்ணு உத்ரா, ரொம்ப ஆசை பட்டு பண்ணிக்கிற, எல்லாத்தையும் சமாளிக்கணும் நீ” என சொல்லி திருமணத்துக்கு அவளது சம்மதத்தை பெற்றுக் கொண்ட பின் பெரியவர்களிடம் பேச வந்தான். 

இரண்டு திருமணங்களையும் ஒன்றாக வைக்கக்கலாம் எனதான் பாலன் சொன்னான். ஆனால் அப்படி இரண்டு திருமணங்கள் சேர்த்து வைக்க கூடாது என தாத்தா மறுப்பு சொல்லி விட சரி என விட்டு விட்டான் பாலன்.

இரண்டு வாரங்களில் திருமணம் வைக்கலாம் என தாத்தா நாள் பார்த்து சொல்ல, “ஏன் தாத்தா அதுக்கு முன்னாடி இல்லையா நாள்?” எனக் கேட்டான். 

“இல்லடா நாளைக்கு நல்லாருக்கு அப்புறம் விட்டா இந்த நாள்தான்…” தாத்தா பேசிக் கொண்டிருக்க, “அப்ப நாளைக்கே வச்சிடுங்க” என்றான் பாலன். 

அனைவரும் அதிர்ந்து பார்க்க, “முடிவாகிடுச்சுல்ல… அப்புறம் ஏன் நாளை கடத்தணும்? நான் வருணையும் உத்ராவையும் உடனே கிளிம்பி வர சொல்லிடுறேன். ஏற்பாடு பண்ணுங்க, அம்மாவை பார்த்து சொல்லனும் நான்” என அதுதான் முடிவு என சொல்லி கிளம்பி விட்டான். 

ஒரு நாளில் எப்படி முடியும் என துர்கா சத்தம் போட “அதெல்லாம் முடியும்” என அவரை அடக்கினான் ஆதவன். 

தனது பிடித்தமின்மையை காட்டிக் கொள்ள துர்கா அறைக்குள் புகுந்து கொள்ள அடுத்து செய்ய வேண்டியவை பற்றி மற்றவர்கள் கலந்தாலோசிக்க ஆரம்பித்தனர். 

ஆதவனுக்கு சுதாவிடமிருந்து அழைப்பு வர சத்தமில்லாமல் அங்கிருந்து நழுவி தனியே சென்றான் அவன். 

திருமணம் என முடிவு செய்யப்பட்டு முழுதாக இருபத்து நான்கு மணி நேரம் கூட அவகாசம் இருக்கவில்லை. விடியற்காலை முகூர்த்தம். வருண் இரவே வந்திருக்க உத்ரா இரண்டு மணி நேரம் முன்புதான் வந்தடைந்திருந்தாள். 

மணப் பெண்ணுக்கான பிரத்யேக அலங்காரம் இல்லை. மற்ற பெண்களை விட தலையில் கூடுதலாக பூ இருந்தது, அந்த வித்தியாசம் மட்டுமே பிரியாவிடம். பாலனை திருமணம் செய்வதில் சம்மதமும் நிம்மதியும்தான் என்றாலும் இத்தனை அதி விரைவான திருமண நாளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. 

அவசரக் கல்யாணத்தினால் பதட்டமும் பயமும் அவளை பீடித்திருந்தது.  உத்ராவை கண்டதும்தான் கொஞ்சம் இயல்பாக முகத்தை வைத்துக்கொண்டாள். 

வள்ளிபிரியாவின் கழுத்தில் சிவபாலன் மஞ்சள் கயிறை கட்டுகையில் அவள் தலை குனிந்த வண்ணமிருந்தாள்.  அட்சதை விழவும் அவள் கன்னம் உரசிக் கொண்டிருந்த அவனது கை அகலவும்தான் திருமணம் முடிந்து போனது என புரிந்து நன்றாக கவனித்து பார்க்க அவள் நெஞ்சம் உரசிக் கொண்டிருந்தது திருமாங்கல்யம். 

 நிமிர்ந்தவள் கலக்கமாக பாலனை பார்த்தாள். அவளை நேராக பார்த்த பாலன், “இந்த நொடியிலேர்ந்து உனக்கு நான் பொறுப்பு, உன் கவலை என் கவலை, என் சந்தோஷம் உன்னோடது. இப்படி கலங்கி நிக்க எந்த அவசியமும் இல்ல பிரியா” என சொல்லி முறுவலிக்க அவளும் புன்னகை செய்தாள். 

துர்கா மட்டும் ‘இப்படி ஏதேதோ பேசித்தான் எம்புள்ள இவனையே கட்டிப்பேன்னு நின்னா போல’ என மனதிற்குள் எரிச்சல் கொள்ள, மற்றவர்கள் அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தனர். 

மிக மிக எளிமையாகதான்  திருமணம் நடந்து முடிந்திருந்தது. பல வருடங்களாக மருத்துவமனை தவிர மற்ற பொது இடங்களுக்கு வராத பிரகதீஸ்வரி மகனின் திருமணம் முன்னிட்டு கோயிலுக்கு வந்திருந்தார். என்னதான் முகத்தை  மறைக்க தலையை சுற்றி துணி போட்டிருந்தாலும் முழுதும் மறைக்க முடிவதில்லை. பார்த்த சிலர் வேடிக்கை போல மீண்டும் மீண்டும் பார்க்க பாலன் கவனம் கூட அம்மாவிடம்தான். 

வருணிடம் சொல்லி வீட்டுக்கு அழைத்து சென்று விட சொல்லி விட்டான். இப்படி திடீரென தன் ஆசை நிறைவேறும் என தெரியாத உத்ரா மகிழ்ச்சியாக காணப் பட்டாள். அடிக்கடி ஆதவனை பார்க்க, கல்யாண வேலைகளில் பர பரப்பாக இருந்தவனோ இவளை கண்டு கொள்ளவே இல்லை. 

கோயிலுக்கு பக்கத்தில் இருந்த பிரியாவின் வீட்டுக்கு முதலில் சென்று விட்டு பின் பாலன் வீடு வந்தனர். நெருகிய சொந்தங்கள் மட்டுமே, அதிலும் அனைவரும் பிரியாவின் வீட்டில் இருக்க இங்கு வீட்டு ஆட்கள் தவிர வேறு யாருமில்லை. 

மனைவியை அம்மாவின் அறைக்கு அழைத்து சென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்  பாலன். பிரியாவின் கையை பிடித்து மகன் கையில் கொடுத்தவர், “எல்லா சந்தர்ப்பமும் இவ கூட துணையா நிக்கணும் நீ” என்றார். 

சம்மதமாக சிரித்தான் பாலன்.

 வருணும் உத்ராவும் பிரியாவை கொஞ்சம் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

“உன்னை அண்ணின்னு கூப்பிடணுமா நான்?” என போலியாக உத்ரா சலிக்க, “பிரியா அண்ணி பிரியா அண்ணி” என சொல்லிப் பார்த்து முகத்தை சுருக்கிய வருண், பிரியா பக்கத்தில் வந்து நின்று அவளது உயரத்தை குறிப்பிட்டு காட்டி, “கொஞ்சம் வளர்ந்திடுங்க அண்ணி” என்றான். 

எப்போதும் அவர்களுக்குள் கிண்டல் கேலி உண்டுதான் என்றாலும் இன்று என்னவோ சங்கடமாக உணர்ந்தாள் பிரியா

போதும் விடுங்க அவளைஎன பாலன்தான் அடக்கினான். உடனே அவனது உடன்பிறப்புகள் அமைதியாக, “நீ ரூம் போஎன பிரியாவை அனுப்பினான்.

அவள் எப்பொழுதும் போல உத்ராவின் அறைக்கு செல்ல, “அங்க இல்லடி அண்ணி, அண்ணன் ரூம் போஎன சத்தமிட்டாள் உத்ரா

பிரியா பாவமாக பார்க்க, “உத்ரா!” கண்டிப்பாக அழைத்த பாலன், “என்ன இப்போ உன் ரூம்லேயே இருக்கட்டும். நீயும் போ, அவ கூட இரு. ஆனா வம்பு பண்ணாம அவளை ரெஸ்ட் எடுக்க விடுஎன உத்தரவாக சொல்ல உத்ராவும் சென்றாள்.

பின் அண்ணனும் தம்பியுமாக உத்ரா திருமணம் குறித்து பேசினார்கள். தான் தங்கைக்கு நகைகள் வாங்கி தருவதாக வருண் சொல்ல, “அவளுக்கு எல்லாம் இருக்குடா” என்றான் பாலன். 

“இருக்கட்டும், இல்லாத மாடல் ஏதாவது வாங்கிக்கட்டும் அவ” என வருண் சொல்ல சரி என விட்டான் அந்த பேச்சை. 

மதிய உணவு தாத்தா பாட்டியோடு அனைவரும் உண்டனர். இரவு சடங்கு என சொந்தங்கள் யாரும் வேண்டாம் என ஏற்கனவே பாட்டி மூலம் பாலன் சொல்லியிருக்க பிரியாவை சங்கட படுத்த என அவளின் மாமி, சித்தி, பெரியம்மா என யாரும் வரவில்லை. 

அலங்காரம் ஏதும் இல்லாமல் எப்போதும் போலவே இருந்தது பாலனின் அறை. பிரியா கொஞ்சம் பதட்டமாக இருந்தாள். பாலன் உள்ளே நுழையவும் வேகமாக எழுந்து நின்றாள். 

இயல்பாக அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவளையும் அமர சொன்னான். அவள் தள்ளி அமர்ந்து கொள்ள, “நாளைக்கு நைட் சென்னை கிளம்பறோம், நாளன்னைலேர்ந்து நீ காலேஜ் போ” என்றான். 

கேட்ட செய்தியை நம்ப முடியாமல் சிறிதாக வாய் பிளந்த வண்ணம் பார்த்தாள் பிரியா. 

“இப்போ இன்டர்ன்ஷிப்தானே? அஞ்சு மாசம்தானே… அதை முடிச்சிடு, இப்போ தூங்கு” என்றான். 

“அம்மா அண்ணா எல்லாம் என்ன சொல்வாங்களோ?” என்றாள். 

“என்ன வேணா சொல்லட்டும், இனி நீயும் நானும் எடுக்கிற முடிவுதான். உன் படிப்ப முடிக்கிறத யார் நினைச்சாலும் தடுக்க முடியாது. நான் பார்த்துக்கிறேன்” என பாலன் சொல்லிக் கொண்டிருக்க அவன் பக்கம் நகர்ந்து அமர்ந்தவள் அவனது இரு கைகளையும் பற்றி அதில் முகம் புதைத்துக் கொண்டாள். 

வள்ளிபிரியாவின் முகத்தோடு சேர்த்து அவளது கண்ணீரையும் தாங்கிக் கொண்டன சிவபாலனின் வலிய கரங்கள்.

Advertisement