Advertisement

அத்தியாயம் -7

தன் அம்மா தன் தங்கைக்கு வருணை மணமுடிக்கலாம் எனவும், “முதல்ல பிரியாவை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாம். அவகிட்டு கேட்டு முடிவு செய்யலாம்” என்றான் ஆதவன். 

“அவகிட்ட என்ன கேட்குறது? நாம சொல்றதுதான்” என்றார் துர்கா. 

அம்மாவை முறைத்த ஆதவன், “கல்யாணம் பண்றதுன்னு முடிவாகிடுச்சு, ஆனா அவ விருப்ப படிதான் மாப்ள பார்ப்பேன். அப்புறம் அண்ணன்னு நான் ஏன் இருக்கணும்?” கோவமாக கேட்டவன் உடனே எழுந்து சென்று விட்டான். 

மீண்டும் வீடு திரும்பும் போது பாட்டியையும் தங்கையையும் அழைத்து வந்து விட்டான். திருமணம் தள்ளிப் போவதில் பிரியாவுக்கு ஒரு புறம் நிம்மதி தர இன்னொரு புறம் அறியாமல் செய்த விஷயம் இந்தளவு பாதிப்பு தருமா என ஒருவித அச்சத்தையும் கொடுத்தது. 

பகல் பொழுது அமைதியாக செல்ல, மாலை நேரம் ஆதவன் தன் தங்கையிடம் வந்தான். பொறுமையாக வருணை பிடித்திருக்கிறதா என அவன் கேட்க அண்ணனை கூர்ந்து பார்த்தாள் பிரியா.

“உனக்கு கல்யாணம் பண்ணாம இருக்க முடியாது பிரியா.  ஆனா உனக்கு பிடிச்ச பையனா பார்ப்பேன்” என்றான். 

தனக்கு திருமணம் செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள், அதை விட தான் இங்கிருந்து சென்றால்தான் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கும் என பிரியாவுக்கு நன்றாக புரிந்தது. 

“சொல்லு பிரியா, வருண் ஓகேவா? உன்கிட்ட கேட்டுட்டுத்தான் பாலன்கிட்ட பேசணும்” என்றான்.

“அண்ணா…” தயக்கமாக அழைத்தாள் பிரியா. 

“என்னடா?”

“எனக்கு… எனக்கு…”

“சொல்லும்மா”

“நான் வருணோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள். 

இது எப்படி என அவளுக்கே தெரியவில்லை, இப்போது சிவபாலன்தான் வந்து நின்றான் அவளது மனதில். 

 திகைத்துப் போய் பார்த்தவன், “என்னடி லவ் பண்றியா?” எனக் கேட்டு முறைக்க அவளும் பதிலுக்கு முறைத்தாள். 

“சொல்லு” விடாமல் கேட்டான்.

“கல்யாணம் பண்ணிக்காம விட மாட்டீங்கதானே? எவன்கிட்டயோ மாட்டிட்டு முழிக்க முடியாது என்னால, கூட பொறந்தவன் நீயே நான் சொல்றதை புரிஞ்சுக்காம கோவ படுற, வேற எவன் புரிஞ்சுப்பான்? ஆனா அவர் புரிஞ்சுப்பார் என்னை, அவர் மட்டும்தான் என்னை எதுவும் கேட்க மாட்டார். அவர்கிட்ட ஸேஃபா இருப்பேன், இப்படி ஒருத்தர் கூட லைஃப் லாங்  இருந்தா நல்லா இருக்கும்னு வர்ற  தாட்தான் லவ்னா அப்படியே வச்சுக்க” என்றாள். 

தலையை கோதிக் கொண்டே ஐந்து நிமிடங்கள் தங்கை பக்கத்திலேயே அமர்ந்திருந்தவன், “ஏன் வருண் புரிஞ்சுக்க மாட்டானா உன்னை?” எனக் கேட்டான். 

“வருண் என் ஃபிரெண்ட், அவனை அப்படி எல்லாம் பார்க்க முடியாது” என பொறுமையாக சொன்னவள், குரல் உயர்த்தி, “ஒண்ணு கல்யாணம் கில்யாணம்னு பேசாம என்னை இப்படியே விடு, இல்ல அவருக்கு கல்யாணம் பண்ணி வை” என முடிவாக சொன்னாள். 

“அவசரத்துல சொல்லாத பிரியா” அண்ணனாக அக்கறையாக சொன்னான்.

“அவர்கிட்ட மட்டும்தான் நான் நிம்மதியா இருப்பேன்” என்றாள். 

பிடித்தம் போல தெரியவில்லை, தன் சௌகர்யத்தை பார்க்கிறாள் என்பதாக புரிந்து கொண்டான் ஆதவன். பழைய நிலையாக இருந்தால் பிரியாவுக்கு வருண் என சிந்திந்திருக்க கூட மாட்டான்.

அம்மா சொல்லவும்தான் வருணை பற்றியே யோசித்தான். தனக்கும் அவனுக்கும் ஆகாது என்றாலும் அவனை நன்றாக தெரியும், பிரியா மீது அன்பு கொண்டவன் என்பதும் தெரியும். அவன் கண்களுக்கும் அவன் அம்மாவை போலவே படிப்பு, தோற்றம், வயது என எல்லா விதத்திலும் பாலனை விட வருணே உயர்வாக தெரிய தங்கையிடம் எடுத்து சொன்னான். 

“வருணும் புரிஞ்சு நடப்பான், உன்னோட நல்ல ஃப்ரெண்ட் நல்ல லைஃப் பார்ட்னராவும் இருப்பான்” என்றான்.

இல்லை என தலையசைத்த பிரியா, “எனக்கு சொல்ல தெரியலை ண்ணா. கல்யாணம்ங்கவுமே பயம்தான் வருது. ஆனா அவர் என் பக்கத்துல இருந்தா நான் கம்ஃபோர்ட்டா இருப்பேன். ப்ளீஸ் ண்ணா” என்றாள். 

மெதுவாகத்தான் பேசினாள் பிரியா. ஆனால் செய்து கொடு என பிடிவாதம் இருந்தது போல அவனுக்கு பட்டது. 

இன்னும் பதில் சொல்லாமல் ஆதவன் யோசனையாக இருக்க, “உன்னை பார்த்துதான் நானும் படிக்க நினைச்சேன், ப்ச்… பாதியில நின்னு போச்சு. மிச்ச வாழ்க்கை கூட என் விருப்ப படி இல்லைனா… நான் ரொம்ப அன்லக்கிதான் இல்ல ண்ணா?” எனக் கேட்டாள் பிரியா. 

“உனக்கு பாலனை பிடிச்சிருக்குதானே?” இன்னொரு முறை கேட்டான். 

அவள் ஆம் என தலையாட்டினாள். 

தங்கையின் தலை வருடிக் கொடுத்து, “என் தங்கச்சி லக்கிதான். அண்ணன் பார்த்துக்கிறேன்” என சொல்லி எழுந்து கொண்டான். 

துர்கா எளிதில் சம்மதிக்கவில்லை. அவனது வயது, படிப்பு, நிறம் என காரணங்களை அடுக்கினார். மலையரசனுக்கு இன்றைய பாலனின் உயர்வு தெரியுமே, அவன் தன் மாப்பிள்ளை என்றால் கசக்குமா அவருக்கு? அவரது முடிவு என்றால் அவர் மனைவியை மீறி செய்திருக்க மாட்டார், ஆனால் இது ஆதவனின் முடிவாகிற்றே. தன் சம்மதம் இல்லாமல் கூட நடந்து விடும் என புரிந்து அரை குறையாக தலையாட்டினார் துர்கா. 

தாத்தாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனாலும் ஏற்கனவே சிவபாலன் இந்த சம்பந்தத்திற்கு மறுப்பு தெரிவித்ததை பேரனிடம் கோடு காட்டினார். பாட்டியும் கூட இந்த பேச்சு எடுத்தாலே கோவப்படுகிறான் என தெரிவித்தார்.

கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டான் என்பது ஆதவனுக்கும் புரிந்தது. கோவக்காரன் அவசரக்காரன் என்றாலும் உள்ளுக்குள் தன் ஒரே தங்கையின் மீது அத்தனை அன்பு வைத்திருப்பவனுக்கு எப்பாடு பட்டாவது அவளது ஆசையையாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என அழுத்தமான எண்ணம் ஏற்பட்டது. 

தான் பார்த்துக் கொள்வதாக பெரியவர்களிடம் சொன்னவன் இரவெல்லாம் தீவிரமாக யோசித்து காலையில் நேராக பாலன் அப்போது இருந்த ஃபர்னிச்சர் கடையில் போய் நின்றான். 

சுற்றி வளைக்காமல், “உத்ராவை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், என் தங்கச்சியை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றான். 

“என்னடா வியாபாரம் பேசுறியா என்கிட்ட?” கோவப்பட்டான் பாலன். 

“என் தங்கச்சி ஆசை படறா, நீங்க ஒத்துக்க மாட்டீங்கனு தெரியும். அதனாலதான் இப்படி கேட்கிறேன்” என உள்ளது உள்ள படி கூறினான். 

“என்ன பிரியா ஆசை படுறாளா!” வியப்பாக கேட்டவன், “ஏற்கனவே பொண்ணு பார்த்தாச்சுதானே உனக்கு?” என விசாரணை போல கேட்டான். 

“நூறு பொண்ணு கூட பார்க்கலாம், கல்யாணம் ஒரு பொண்ணு கூடத்தான். எங்களுக்கு நிச்சயம் கூட ஆகல, அதை விடுங்க, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றான் ஆதவன். 

“அவ கேட்டா, நீ… நீங்க எதுவும் சொல்லலையா? சின்ன புள்ள டா அது” 

“என்ன பால்ய திருமணம் செஞ்சு வைக்க போறோமா அவளுக்கு? அவளுக்கும் இருபத்திரெண்டு ஆச்சு”

“அந்த வயசுக்கு தக்கதான் பக்குவம் இருக்கா அவளுக்கு?”

“அவ ட்வெல்த்ல எவ்ளோ மார்க் தெரியுமா? எனக்கு மேனேஜ்மெண்ட் சீட்தான், அவளுக்கு ஃப்ரீ சீட்” 

“நல்லா படிக்கிறதுக்கும் நான் சொல்ற பக்குவத்துக்கும் சம்பந்தம் இல்ல ஆதவா” 

“என்ன இப்போ? நீங்கதானே கட்டிக்க போறீங்க, பக்குவமா பார்த்துக்கோங்க” என ஆதவன் சொன்னதில் பாலன் முறைக்க, “உத்ராவுக்கு என்னை கல்யாணம் செய்ய உங்களுக்கு ஆசைதானே? என் தங்கை ஆசை நிறைவேறினா உங்க ஆசையும் நிறைவேறும்” என்றான் ஆதவன். 

எச்சரிப்பது போல ஒரு விரலை காட்டிய பாலன், “நீ செஞ்சா நான் செய்றேன் அப்படினு சொல்ல கல்யாணம் பண்டம் மாத்திக்கிற வியாபாரம் இல்லை. மனசார செஞ்சுக்கிறது. என் தங்கச்சி லைஃப் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். நீ போடா, மாமாகிட்ட பேசிக்கிறேன் நான்” என்றான். 

“அப்புறம் எதுக்கு உத்ராவுக்கு என்னை கேட்டீங்க?” 

“கேட்டேன்டா, எல்லார் சம்மதத்தோட நடத்த நினைச்சேன். இப்படி கட்டாயம் செய்யல நான். இப்படி டீலிங் பேசுற மாதிரி நீ கேட்குறதே எனக்கு பிடிக்கல. நீ கிளம்பு” என பாலன் கராறாக சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே எழுந்து சென்றான் ஆதவன். 

சற்று நேரத்தில் தாத்தா அப்பா இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு வந்து நின்றான் ஆதவன். பாலனிடம் அவர்கள் பேசிக் கொண்டிருக்க வள்ளிக்கண்ணு மகளிடம் சொல்லி பாலனிடம் பேச செய்தார். 

பிரகதீஸ்வரி மகனிடம் பேசினார். ஐந்து நிமிட நேர உரையாடல். பாலன் ம் மட்டும் போட்டான், பேசியது முழுக்க அவர்தான். 

அவனது அம்மாவிடம் பேசி முடித்திருந்த பாலன் முகத்தை ஆதவன், ரமணி தாத்தா, மலையரசன் மூவரும் ஆவலாக பார்க்க அவன் ஆதவனை தீர்க்கமாக பார்த்து, “உத்ராவை நல்லா வச்சுப்பியா?” எனக் கேட்டான். 

அந்த கேள்வியில் உள்ளுக்குள் தடுமாறிய ஆதவன் உடனே சமாளித்து, “என் பொண்டாட்டிய சாகுற வரைக்கும் நல்லா பார்த்துப்பேன்” என்றான். 

அவனின் மறைமுக பேச்சு புரியாத பாலன், “கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டியா?” என கிண்டலாக கேட்டு சிரித்தான். 

ஆதவன் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் இருக்க, “என்னடா கல்யாண வேலை ஆரம்பிக்கலாமா?” என ஆசையாக கேட்டார் தாத்தா. 

“பிரியாகிட்ட பேசணும் நான்” என பாலன் சொல்ல, “அப்ப இப்போவே வாங்க” என அழைத்தான்  ஆதவன். 

“என்னடா அவசரம் உனக்கு? ஈவ்னிங் வர்றேன், முக்கியமான வேலை இருக்கு எனக்கு” என்றான் பாலன். 

Advertisement