Advertisement

ஜீவ தீபங்கள் -6

அத்தியாயம் -6(1)

வள்ளிக்கண்ணு பாட்டி மகளோடு இருந்ததால் அவருக்கு மட்டும் பிரியாவின் விஷயம் தெரியவில்லை. சிவபாலன் காரில் உத்ராவோடு பிரியாவும் சேர்ந்து இறங்குவதை பார்த்து முகம் மலர்ந்தவர், அனைவர் முகங்களும் கலக்கமாக இருந்ததை கண்டு உடனே திகைத்து விட்டார்.

ஆனாலும் எதுவும் கேட்காமல் வரவேற்றார் வள்ளிக்கண்ணு. பாட்டியிடம் சொல்லலாமா வேண்டாமா என உத்ராவுக்கு தெரியவில்லை, அதனால் எதுவும் சொல்லாமல் பிரியாவை மட்டும் கவனித்தாள்.

மகளை இங்கு ஏன் அழைத்து வரவில்லை என மகனிடமும் கணவரிடமும் சண்டை போட்டார் துர்காதேவி.

“எங்க போய்ட்டா இப்போ, எதுக்கு கத்துற? வேணும்னா நீ போய் பார்த்திட்டு வா” என்ற ரமணி பேரன் வீட்டுக்கு கிளம்ப, துர்காவுக்கும் மகளை காண வேண்டும் போல இருந்தாலும் மகன் கணவருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதால் அவசரமாக சமையலறை சென்றார்.

பேரன் வீடு வந்த ரமணி தாத்தா மனைவியிடம் விஷயத்தை சொல்ல, “ஐயா தியாகேஷ்வரா! என் குடும்பத்தை காத்திட்டய்யா” என கண்கள் கலங்க மேல் நோக்கி கையெடுத்து கும்பிட்டு கடவுளுக்கு வாய் விட்டு நன்றி சொன்னார் பாட்டி.

குளித்து வந்த பாலன் அம்மாவை சென்று பார்த்து விட்டு உணவருந்தினான். பின் தாத்தாவிடம், “நான் கடைக்கு கிளம்பறேன் தாத்தா, நீங்களும் பாட்டியும் இங்கேயே இருங்க. ரெண்டு நாள் உத்ரா இங்க இருப்பா, பிரியாவும் இங்கேயே இருக்கட்டும். ஒண்ணும் பிரச்சனை இல்ல” என சொல்லி சென்று விட்டான்.

எதுவும் விசாரணை செய்யாமல் பேத்திகளை சாப்பிட வைத்தனர் பெரியவர்கள்.

ஏதாவது கேட்டு திட்டி விட்டால் கூட தாங்கி விடுவாள், இப்படி தன்னை தாங்குபவர்கள் கண்டு குற்ற உணர்ச்சியில் கண்ணீர் விட்டாள் பிரியா.

 தன் புடவை முந்தானையால் பேத்தியின் கண்ணீர் துடைத்து, “தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சு. கலங்காத தங்கம்” என ஆறுதலாக சொன்னார் பாட்டி. அவரின் மடியில் தலை வைத்து படுத்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.

 பிரகதீஸ்வரி அறையை விட்டு வெளியில் வந்த போது பிரியாவை அறையில் விட்டு மற்றவர்கள் ஹாலில் இருந்தனர்.

மெல்ல மகளிடம் வள்ளிக்கண்ணு விஷயத்தை சொல்ல ஆரம்பிக்க, “ பாலன் சொன்னான். நீ பயப்படாதம்மா, நம்ம பரம்பரை பாவம் எல்லாம் என்னோட முடிஞ்சு போச்சு, இனி நம்ம குடும்பத்து புள்ளைங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கும்” என்றார் பிரகதீஸ்வரி.

அதிகம் பேசாத பிரகதீஸ்வரி இப்படி சொல்லவும் மகளின் கைகளை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார் வள்ளிக்கண்ணு. பின் உத்ராவிடம் நலன் விசாரித்த பிரகதீஸ்வரி மீண்டும் அறைக்கு சென்று முடங்கி விட்டார்.

ஆதவனும் அவனது பெற்றோரும் வந்தனர். மகள் உறங்கினாலும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார் துர்கா. அரை மணி நேரம் சென்று கண் விழித்த பிரியா அம்மாவை கண்டு விட்டு பயம் கொள்ள கண்களால் குற்றம் சாட்டினாலும் வாய் விட்டு எதுவும் சொல்லவில்லை துர்கா.

மலையரசன் தன் மனைவியை கண்டித்துதான் அழைத்து வந்திருந்தார். திட்டினால் பிரியா எதுவும் செய்து கொள்வாள் என ஆதவனிடம் பாலன் கோடிட்டு காட்டியிருக்க அவனும் அதையே அம்மாவிடம் சொல்லியிருந்தான். எனவே அமைதியாக இருந்தார் துர்கா.

மதிய சமையல் நடந்தது. அனைவரும் அங்குதான் இருந்தனர். ஆதவனுக்கு பெண் பார்த்த வீட்டிலிருந்து மலையரசனுக்கு அழைப்பு வந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையாக நிச்சயம் எப்போது வைக்கலாம் என கேட்டார்கள். ஒரு அவசர வேலை, வீட்டில் கலந்தாலோசித்து விட்டு பிறகு சொல்வதாக சொல்லி வைத்து விட்டார்.

அருகில் இருந்த ஆதவன், “ஆறு மாசம் போகட்டும் ப்பா, முதல்ல பிரியாவுக்கு செஞ்சிடலாம்” என்றான்.

மலையரசனுக்கும் அதுதான் எண்ணம். காலையிலேயே துர்கா அண்ணன் வீட்டில் அழைத்து துக்கம் விசாரிப்பது போல விசாரித்திருந்தனர். இனி அங்கு பிரியாவை ஏற்க மாட்டார்கள் என தெரிந்து போனதால் துர்காவும் யோசனையாகத்தான் இருந்தார்.

ரமணி மெல்ல சிவபாலனுக்கு செய்யலாம் என்றார். ஆதவன் எரிச்சலாக தாத்தாவை பார்க்க மற்றவர்கள் துர்காவின் முகத்தை பார்த்தனர்.

குரலை செருமிக் கொண்ட துர்கா, “ஆதவனுக்கு பொண்ணு பார்த்திருக்கோமே சுதா, அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கார்தானே, அந்த பையனை கேட்டு பாருங்களேன்” என்றார்.

துர்காவின் எண்ணம் புரிய ரமணி மேலும் வாதிடவில்லை. “பிரியா பத்தி சொல்லித்தான் கேட்கணும், சொல்லாம செஞ்சு நாளைக்கு பிரச்சனை ஆச்சுன்னா சரி வராது” என மட்டும் சொன்னார்.

உத்ராவின் அறையில் பிரியா இருக்க அவர்களுக்கு இங்கு நடந்த பேச்சு வார்த்தை பற்றி எதுவும் தெரியவில்லை.

பாலன் தனது ஜவுளிக் கடை ஆரம்பிக்க ஒரு இடம் பார்த்திருந்தான். அங்குதான் துவக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தான். அதில் கொஞ்சம் இழுபறி. அந்த இடத்தையே பூமிநாதன் தரப்பிலும் வாங்க முயல்கிறார்கள். ஏற்கனவே பாலன் பற்றி சொல்லவே வேண்டாம், இப்போது அந்த இடத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என வெறியே எழுந்து விட்டது அவனுள்.

அது சம்பந்தமாக பார்க்க வேண்டியவரை பார்த்து விட்டு ஃபர்னிச்சர் கடைக்கு வந்தான். பூபதி கணக்கு எடுத்து வந்து காட்ட ஆரம்பித்தார். ஆமாம் தன் தவறை உணர்ந்து மனமார மன்னிப்பு கேட்டுக் கொண்ட பூபதியை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டான், ஆனால் கயிறு மண்டியில் இவர் இருந்தால் அந்த பெண் ராஜிக்கு சங்கடமாக இருக்க கூடும், இவரையும் அனைவர் முன்னிலையில் திட்டியிருக்க இவருக்கும் சகஜமாக இருக்க முடியாது என கருதி இங்கு வர சொல்லி விட்டான்.

அந்த இடம் பற்றிய சிந்தனையில் பாலனின் மனம் கணக்கில் செல்லவில்லை. இரவு பார்ப்பதாக சொன்னவன் மதிய உணவுக்காக வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

 பாட்டி மூலம் பிரியாவுக்கு திருமணம் செய்ய போவதை தெரிந்து கொண்ட உத்ரா பிரியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுக்காமல் அவள் மனதை தயார் செய்வதாக எண்ணி சொல்லியிருந்தாள்.

பிரியாவுக்கு அதிர்ச்சிதான், இதில் உடன்பாடு இல்லைதான். ஆனால் மறுத்து சொல்லும் நிலையில் இல்லையே அவள். என்னவோ நடக்கட்டும், மெதுவாக என் படிப்பை முடித்து விடுவது பற்றி மட்டும் கேட்டுக் கொள்ள வேண்டும் என இருந்தாள்.

பாலன் வந்ததும் ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டனர். பின் பாலன் அமைதியாக எழுந்து செல்ல, “இருடா பேசணும்” என்றார் தாத்தா.

பிரியாவை அழைத்து வந்து அவளோடு சாப்பிட ஆரம்பித்தாள் உத்ரா. பாட்டியும் துர்காவும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட அம்மாவை பார்த்து விட்டு வருவதாக சொல்லி அவரது அறைக்கு சென்று விட்டான் பாலன்.

 பெண்கள் சாப்பிட்டு முடிக்க அனைவரும் பாலனுக்காக காத்திருந்தனர். இவர்களை காக்க வைத்து சற்று தாமதமாகத்தான் வந்தான் பாலன்.

 பிரியா திருமணம் குறித்து சொன்னார் தாத்தா.

“என்ன நடந்து போச்சு இப்போ? சும்மா அதையே பெருசா பேசிக்கிட்டு. நாலு நாள் வீட்ல இருக்கட்டும், அப்புறம் போய் படிப்ப பார்க்கட்டும். ரெண்டு வருஷம் போனா நல்ல இடமா பார்க்கலாம். இதெல்லாம் ஒரு விஷயம் இல்ல” என உறுதி பட பேசினான் பாலன்.

பிரியாவின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. தண்ணீர் குடித்து அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டாள்.

ஆனால் துர்கா பிடிவாதம் செய்தார். அண்ணன் வீட்டிலேயே பிரியாவை வேண்டாம் என பேசி விட அவருக்கு இனியும் நாள் கடத்த துளியும் விருப்பமில்லை.

“இனிமே எல்லாம் சென்னை அனுப்பறதா இல்ல, அவ படிச்சு ஒண்ணும் செய்ய வேணாம். சுதாவோட அண்ணன் நல்ல பையன், பேசிப் பார்க்கலாம்” என ஆதவனும் சொல்ல, பாலன் தன் தங்கையை பார்க்க அண்ணன் கண்ணசைவு படி பிரியாவை அறைக்கு அழைத்து சென்று விட்டாள் உத்ரா.

“ஆசையா படிச்ச படிப்பை கெடுக்க நினைக்காத, இன்னும் அஞ்சாறு மாசம்தானே பாக்கி? அவள பாதுகாப்பா படிக்க வைக்கிறதுக்கு என்ன வழின்னு யோசி. கல்யாணம் செய்ற அளவுக்கு எல்லாம் உன் தங்கச்சிக்கு பக்குவம் வரலை, படிக்கட்டும், ரெண்டு வருஷம் வேலைக்கு போகட்டும். சொல்றதை கேளு” என பாலன் சொல்ல பிரியா வீட்டினர் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.

ஓரளவுக்கு மேல் பாலனால் வாதிட முடியவில்லை. பிரியாவை பற்றி முடிவெடுக்கும் உரிமை அவனுக்கில்லை என்பதால் ஒரு கட்டத்தில் உங்கள் இஷ்டம் என விட்டு விட்டான்.

அறையில் இருந்தாலும் தனக்காக பாலன் பேசியதை எல்லாம் கேட்டே இருந்தாள் பிரியா. அவளுக்கு தன் குடும்ப உறவுகளை கடந்து மனதுக்கு நெருங்கியவனாக தெரிந்தான் பாலன்.

மறுநாள் ஆதவனும் மலையரசனும் சுதாவின் வீடு சென்றனர். “வேற நல்ல இடம் சொல்றோம் நாங்களே, பையன் ராசிக்கு உங்க பொண்ணு ராசி பொருந்தி வராது” என மழுப்பலாக சொல்லி விட்டனர்.

நம்பிக்கையாக இருந்த ஆதவன் பெருத்த ஏமாற்றம் அடைந்தான். மலையரசன் மகன் முகம் பார்க்க அவன் எழுந்து கொண்டான்.

“அது… நாங்களே நல்ல இடம் பார்க்கிறோம்னு சொல்றோமே, பேசி வச்ச படி சுதாவுக்கும் உங்க பையனுக்கும் முதல்ல முடிக்கலாமே” என்றார் சுதாவின் தந்தை.

ஆதவனுக்கும் அந்த பெண் சுதா மீது விருப்பம். இப்போதுதான் கைபேசியில் பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். தங்கையை ஏற்றுக்கொள்ளாதது வருத்தம் என்றாலும் அதற்காக சுதாவை மறுக்க நினைக்க வில்லை.

“ஆறு மாசம் போகட்டும், பிரியாவுக்கு முடிச்சிட்டு பார்க்கலாம்” என்றான் ஆதவன்.

“அதுவும் சரிதாங்க, ஆனா இப்போ நிச்சயம் மாதிரி வச்சுக்கலாமே” என்றார் சுதாவின் தந்தை.

எரிச்சலடைந்த ஆதவன், “எதுவா இருந்தாலும் ஆறு மாசம் அப்புறம்தான். உங்களுக்கு அவசரம்னா எங்களை விட்ருங்க” என சொல்லி வெளியேறி விட்டான்.

மகனது விருப்பம் தெரிந்த மலையரசன் சற்று சமாதானமாக பேசி விட்டு வந்தார். ஆதவனுக்கு அழைத்த சுதா அழ இவனும் கொஞ்சம் இளகி சமாதானமாக பேசி வைத்தான்.

சுதா வீட்டிலும் தன் மகளை மறுத்து விட்டதில் துர்காதேவி அதீதமாக பயந்து போனார். சற்று பொறுக்கலாம் என தாத்தா சொன்னதை காதில் வாங்கவே இல்லை. அவரின் தொல்லையில் பிரியாவுக்கு மணமுடித்து வைப்பதில் மும்முரமாக இருந்தனர்.

உத்ரா அன்று இரவு சென்னை செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். பாலன் அறைக்கு வர அவளுடைய பொருட்கள் எடுத்து வைக்க உதவி செய்து கொண்டிருந்தாள் பிரியா.

“உத்ரா என் ரூம் வா” என சொல்லி சென்று விட்டான்.

பிரியா பற்றி பேசத்தான் அழைக்கிறார் அண்ணன் என நினைத்து உத்ரா சென்றாள்.

“வருண் அங்க தனியா இருக்கான். அவனுக்கு கல்யாணம் செய்யணும் உத்ரா” என்றான் பாலன்.

“அண்ணா நீ? உனக்குத்தான் ஃபர்ஸ்ட் கல்யாணம் நடக்கணும்” என இன்று மதியத்தில் அவன் அம்மா சொன்னதையே சொன்னாள் உத்ரா.

“அது நடக்கிறப்ப நடக்கும். உங்களுக்கு முடிச்சிட்டு பொறுமையா நான் பண்ணிக்கிறேன்” என அம்மாவிடம் சொன்னதையே சொன்னான் பாலன்.

பேச்சு வளர்ந்தது. இறுதியில் பாலன் பேச்சுதான் ஓங்கி நின்றது.

“சரி ண்ணா, வருணுக்கு செய்ங்க” என்றாள் உத்ரா.

“உன்னை வச்சிகிட்டு அவனுக்கு செய்ய கூடாதுனு அம்மா சொல்றாங்க. ரெண்டு பேருக்கும் பார்க்க ஆரம்பி, முதல்ல உத்ராவுக்கு செய், அப்புறம் வருணுக்கு செய்யலாம்னு சொல்றாங்க” என்றான்.

“இல்ல கொஞ்ச நாள் போகட்டும்” என்றாள் உத்ரா.

தங்கை அருகில் வந்து அவள் கையை எடுத்து வாஞ்சையாக மெல்ல வருடியவன், “ஆதவனை எனக்கு பிடிக்காட்டாலும் உனக்கு விருப்பம்னு தெரிஞ்சுதான் அதை நடத்தி வைக்க முயற்சி பண்ணினேன்” என்றான்.

உத்ரா திகைப்பாக நோக்க, “உன் மனசு எனக்கு தெரியும். என்ன வசதி இருந்தாலும் சில விஷயங்கள் நம்ம கைல இல்லைனு உன் ஆசை எனக்கு புரிய வச்சிடுச்சு” என்றான். உத்ராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement