Advertisement

அத்தியாயம் -4(2)

 தேஜ் குடும்பத்தினருக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை, அவனது பெற்றோர் மருத்துவமனையில் இருக்க சில உறவுகள் இங்கு பிரியாவை தேடிக் கொண்டு வந்து விட்டனர்.

கேள்விப்பட்ட வரை அனைவரும் கௌதமும் பிரியாவும் விரும்புவதாகவே சொல்லியிருக்க தேஜின் இந்த நிலைக்கு பிரியாவும் காரணம் என நினைத்தனர்.

பாலனும் பிரியாவும் வீட்டிற்கு வெளியில் வந்து காரில் ஏறிக் கொண்டனர். பாலன் காரை எடுப்பதற்கு முன் “ஒரு நிமிஷம்…” என்றவள் காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.

பாலன் என்ன என கேட்பதை காதில் வாங்காமலே அவள் வேகமாக மாடிப் படிகளில் ஏறிச் செல்ல, கோவம் வந்தாலும் பொறுமையாக அமர்ந்திருந்தான் பாலன்.

தேஜின் உறவினர்கள் நான்கு பேர் அங்கு வந்து விட்டனர். சில நிமிடங்களில் பிரியா கீழே வர, அங்கு தெரியாத ஆட்களை பார்த்து விட்டு திகைத்தாள். அதற்குள் அவளருகில் வந்திருந்தான் பாலன்.

 தேஜின் உறவினன் ஒருவன் பிரியாவை அடிக்க பாய அவனை தடுத்து அடித்து வீழ்த்தினான் பாலன்.

பயந்து போன பிரியா பாலன் கையை பிடித்து அவன் தோளில் முகம் மறைத்துக் கொள்ள மற்றவர்களும் அவர்களை தாக்க ஆரம்பித்தனர். ஒரு கையால் பிரியாவுக்கு அரணாக அவளை அணைத்து பிடித்திருந்தவன் மற்றொரு கையால் மற்றவர்களை சமாளிக்க பார்த்தான்.

எத்தனை பலம் கொண்டவன் என்றாலும் ஒருவனால் நால்வரை எப்படி சமாளிக்க முடியும், அதிக சேதாரம் இல்லாத போதும் பாலனுக்கு அடிகள் விழத்தான் செய்தன. இப்போது பிரியா அவனை பிடித்துக் கொண்டிருக்க மற்றொரு கையையும் அவர்களை சமாளிக்க உபயோகித்தான்.

நல்ல வேளையாக அவர்கள் ஆயுதங்கள் எதுவும் எடுத்து வர வில்லை. ஒரு கோவத்தில் வந்தவர்கள் வெற்று கையால் தான் தாக்கினார்கள்.

 தன் மீது அடி விழுந்தாலும் பிரியா மீது சின்ன சிராய்ப்பு கூட ஏற்படாமல் பாலன் காத்துக் கொண்டிருக்க, ஒருவன் பிரியாவின் தலை முடியை பிடித்து இழுத்து அவளை பாலனிடமிருந்து விடுவிக்க பார்த்தான்.

பயந்து போனவள் வீறிட்டு அலற அவன் மணிக்கட்டில் பாலன் அடித்ததில் அவளின் முடியை விட்டான்.

பிரியாவை தன்னிடம் இழுத்து தனக்கும் பின்னால் நிறுத்திக் கொண்ட பாலன் அவர்களுள் பருமனாக இருந்த ஒருவனை பிடித்து மற்ற மூவரின் மேலும் விழும் படி வேகமாக தள்ளி விட்டான்.

 நால்வரும் நிலை தடுமாறி தரையில் விழுந்தனர். அந்த நொடியை பயன்படுத்திக் கொண்டு அதி விரைவாக அவளை இழுத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றி இவனும் ஏறி காரை எடுத்து விட்டான்.

தேஜின் உறவினர்கள் சுதாரித்து எழுந்து அவர்கள் வந்திருந்த காரை நெருங்கி விட்டார்கள். எந்த திசையில் சென்றது என இவர்கள் உணரும் முன் மறைந்திருந்தது பாலனின் கார்.

நகரத்தின் போக்குவரத்தில் கார் சென்று கொண்டிருக்க இன்னும் அதிர்ச்சி நீங்காமல் பார்க்கும் எதுவும் கவனத்தில் பதியாமல் தலையெல்லாம் கலைந்து போய் நடுங்கும் உடலும் துடிக்கும் இதயமுமாக பாலன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் பிரியா.

காரோட்டிக் கொண்டே தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்தான் பாலன். பதற்றத்தில் மேலே எல்லாம் சிந்திக் கொண்டே நீரை பருகினாள்.

சில நிமிடங்கள் கழித்து, “அறிவில்ல, எதுக்கு கார்லேர்ந்து இறங்கி மாடிக்கு ஓடின?” என சீற்றமாக கேட்டான் பாலன்.

அவன் கேட்ட விதத்தில் வார்த்தை அவளது தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது. தாடை இறுக பார்த்தவன், “சும்மா முழிச்சிட்டே இல்லாம வாய தொறந்து பேசு” என்றான்.

“அங்க சார்லி இருந்தான், டெரஸ்ல இருந்த உட் ஹவுஸ்ல தனியா இருந்தான். ஓனர்ஸ் வர இன்னும் ரெண்டு நாள் ஆகும், அது வரைக்கும் எப்படி சார்லி அதுக்குள்ள அடைஞ்சு கிடப்பான்? அதான் டோர் ஓபன் பண்ணி விட போனேன்” என்றாள்.

என்ன சொல்கிறாள் என குழம்பியவன் அவள் சொல்வதை விளங்கிக் கொள்ள, “சார்லியா சார்லசா எவன் அவன்?” எனக் கேட்டான்.

“சார்லி, டாகி” என்றாள்.

“யாரு நாயா?” எனக் கேட்டான்.

மேலும் கீழமாக அவள் தலையை ஆட்ட, அவன் கடுங்கோவத்தோடு பார்த்தான். அவள் எதுவும் விளக்கம் சொல்ல பயந்து போய் பார்த்திருக்க அவனே, “என்னா நாய் அது? கீழ ஒரு பிரளயமே நடக்குது, வரவே இல்ல” என விசாரித்தான்.

“அச்சோ அது பப்பி, பொறந்து ஒன் மன்த் தான் ஆகுது. ஓனர் அங்கிள் ஃபிரெண்ட் வீட்டு டாக் நாலு குட்டி போட்டதாம் , அதுல ஒண்ணு அங்கிள் எடுத்திட்டு வந்திட்டார். சின்ன குட்டி, சத்தம் கேட்டு பயந்து போய்டுச்சோ என்னவோ. பாவம்” என்றவளை பற்கள் கடித்து முறைத்து பார்த்தான்.

“அதுவும் உயிர்தான, அடைக்காம விட்டா கூட எங்கேயாவது போய் ஏதாவது சாப்பிட்டு உயிரோட இருக்கும்ல?” எனக் கேட்டவளின் பார்வை பாலன் கைக்கு செல்ல அமைதியாகி விட்டாள்.

இரண்டு கைகளிலும் அடி பட்டதற்கான தடயங்கள், இன்னும் உள் காயம் எங்கெங்கோ… அவனிடம் கேட்கவும் பயந்து கொண்டு அந்த காயம் பட்ட கைகளையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹவுஸ் ஓனர் நம்பர் இல்லையா உன்கிட்ட, அப்புறம் போன் பண்ணி சொன்னா போச்சு. அதை விட்டுட்டு… அரை வேக்காடு, அதிக பிரசங்கி!” என திட்டினான்.

“எனக்கென்ன தெரியும் இப்படி ஆவேசமா அடிக்க வருவாங்கன்னு, தேஜ் ரிலேட்டிவ்ஸ் அவன் மாதிரி இல்ல, தேஜ் எவ்ளோ கைண்ட் தெரியுமா?” என்றவளுக்கு தேஜின் நிலை என்னவோ என சிந்தனை வர கண்ணீரும் சேர்ந்து வந்தது.

“என்னத்துக்கு இப்போ அழுது தொலைக்கிற?” எரிச்சலாக கேட்டான்.

அவள் காரணம் சொல்ல, “பொழச்சுக்குவான்… பொழச்சுக்குவான்.. அழாத” என மட்டும் சமாதானமாக சொன்னவன் அடுத்து எதுவும் பேசவில்லை.

பிரியா பின்னலில் இருந்த ஹேர் பேண்ட் கழட்டி ஏனோ தானோ என இருந்த பின்னலை அவிழ்த்து கைகளாலே கோதி சரி செய்து குதிரை வால் போட்டுக் கொண்டாள். மெல்ல அவனிடம், “நிறைய அடியா?” என விசாரித்தாள்.

சாலையில் பார்வையை வைத்துக்கொண்டே, “என்ன?” எனக் கேட்டான்.

“இல்ல உங்க கைல காயம், வேற எங்கேயும்…” என அவள் கேட்க அவன் பார்த்ததில் அப்படியே நிறுத்தி விட்டாள்.

அவனது வலது கன்னத்தில் லேசான கீறல் தெரிந்தது. சட்டையில் கூட இரத்தக் கறை தெரிய, ‘ஐயோ என்னாலதான்…’ மனதிற்குள் மருகினாள்.

உறவு முறையில் அவன் அவளுக்கு அத்தான் என்றாலும் அப்படி முறை வைத்து அழைத்தெல்லாம் அவள் பேசியது கிடையாது, சொல்லப் போனால் கடந்த சில வருடங்களாக பேசியதே கிடையாது. ஆகவே இப்போதும் மொட்டையாக பேசினாளே ஒழிய அத்தான் என அழைக்கவில்லை.

சில நிமிடங்கள் சென்று, “உனக்கு எதுவும் அடி பட்டுச்சா?” என அவன் கேட்க அவன்தான் பேசினானா என பார்த்தாள்.

“என்ன எங்கேயும் அடியா?” என அவன் கேட்டது பிரியாவுக்கு மிரட்டுவது போலிருந்தது.

“இல்ல” என சோர்வாக சொன்னவளுக்கு காலையிலிருந்து வெறும் வயிரோடு இருப்பது கூட உரைக்கவில்லை.

அவன் தங்கியிருந்த விடுதிக்கே அழைத்து வந்தவன், “என்ன சாப்பிடுற?” எனக் கேட்க வேண்டாம் என மறுத்தாள்.

நேரம் பதினொன்று ஆகியிருக்க வரவேற்புக்கு அழைத்து பேசினான். தோசையும் பூரியும் வந்தது.

“சாப்பிடு” என அதட்டலாக சொல்லி விட்டு குளியலறை சென்று விட்டான்.

சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அவனுக்கு பயந்து சாப்பிட ஆரம்பித்தவள் அனைத்தையும் காலி செய்து விட்டாள்.

குளிக்கும் போதுதான் அடி பட்ட இடங்களில் வலியை உணர்ந்தான் பாலன். தண்ணீர் பட்டதும் வலது பக்க காதின் பின் புறம் அதீதமாக எரிய கண்ணாடியில் பார்த்தான். நல்ல காயமாகியிருந்தது. அடித்தவன் எவனோ ஒருவனுடைய கை வளையம் அல்லது கைக்கடிகாரத்தின் கொக்கி எதுவோ பட்டு காயமாகியிருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டான்.

கன்னத்து காயத்தால்தான் சட்டையில் இரத்தம் என இவன் நினைத்திருக்க இந்த காயதிலிருந்துதான் இரத்தம் வந்திருக்கிறது என இப்போதுதான் இவனுக்கு புரிந்தது. நல்ல எரிச்சலும் வலியும் உணர்ந்த போதிலும் மருத்துவ உதவி தேவையில்லை என அவனே முடிவு செய்து ஆடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தான்.

 அடுத்து என்ன, ஊருக்கு போகணுமா? தேஜை பார்க்க கேட்டா அழைச்சிட்டு போவாரா என யோசித்தாலும் எதையும் வாய் விட்டு கேட்கவில்லை பிரியா.

உத்ராவுக்கு அழைத்த பாலன் பிரியா தன்னுடன் இருப்பதாக கூறி, “அவ போட்டுக்கிற மாதிரி ஏதாவது ட்ரெஸ் இருந்தா எடுத்திட்டு வா” என சொல்லி வைத்தான்.

ஆதவன் அழைக்க அவனுக்கும் பத்திரமாக இருப்பதாக விவரம் சொல்லி வைத்தவன் மீண்டும் ரிஷப்ஷனில் பேசி பேண்ட் எய்ட் வாங்கி வரவைத்து காதின் அருகே ஏற்பட்ட காயத்தில் போட்டுக் கொள்ள முயன்றான்.

பார்த்திருந்த பிரியா வந்து, “என்கிட்ட கொடுங்க, உங்களால சரியா போட்டுக்க முடியாது” என்றாள்.

அவனுக்கும் தன்னால் முடியாது என்றே தோன்ற அவளிடம் கொடுத்தான். காயத்தை பார்த்தவள், “டீப்பா இருக்கும் போல… டாக்டர்கிட்ட போலாம்” என்றாள்.

“நீ டாக்டர் இல்லையா?”

“நான் பல் டாக்டருக்கு படிக்கிறேன். ப்ச் இதுக்கு சூச்சர் போடணுமா என்னமோ…”

“பிளட் எதுவும் வரலை, நான் பார்த்துக்கிறேன், இப்போதைக்கு இதை மட்டும் ஒட்டு” என கண்டிப்பான தொனியில் அவன் சொல்ல, அவனை எதிர்த்து பேச முடியாமல் பேண்ட் எய்ட் ஒட்டி விட்டவள் அவனது கன்னத்து கீறலை ஆராய்ச்சியாக பார்த்தாள்.

தன் கன்னத்தின் காயத்தை ஒரு விரல் கொண்டு தொட்டு பார்த்தவன், “பெருசா இல்ல, சின்ன காயம்” என உரைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பிரியா படுக்கையின் ஓரம் அமர்ந்து கொண்டாள்.

கால் மணி நேரம் அப்படியே அமைதியாக கடந்தது.

பாலன் பிரியாவோடு இயல்பாக பேசினால் பரவாயில்லை, அவனுக்கு அவளிடம் அத்தனை பழக்கம் இல்லாத காரணத்தால் தேவையில்லாமல் எதுவும் பேசவில்லை.

அவனையும் அறையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கோஜமும் பதற்றமுமாக இருந்தாள் பிரியா. அவளை தனியே விட்டு செல்வது சரியாக படாததால் வேறு வழியின்றி அறையிலேயே இருந்தவன் அவளை கவனித்து விட்டு இலகுவாக இருக்கட்டும் என எண்ணி பால்கனி சென்று விட்டான்.

ஏதோ தன்னால் அவனுக்கு மிகுந்த சிரமம் எனதான் உணர்ந்தாள் பிரியா.

 உத்ரா எப்போது வருவாளோ, தேஜுவுக்கு சரியாகி விட வேண்டும், அண்ணன் திட்டினா என்ன சொல்றது, அப்பா சப்போர்ட் பண்ணுவாங்களா எனக்கு… இப்படி பல வித சிந்தனைகளில் இருந்த பிரியா பால்கனி பக்கம் பார்த்தாள்.

கைகளை கட்டிக் கொண்டு வெளிப் பக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிவபாலன் எதேச்சையாக இவள் பக்கம் திரும்ப, நன்றி சொல்லும் விதமாக புன்னகைத்தாள் வள்ளிபிரியா.

உதடுகளை ஒரு பக்கமாக வளைத்து மிக அளவாக மறுதலிப்பான புன்னகையை சிந்தியவன் மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

நல்ல ஆஜானுபாகுவான உடற்கட்டில் கருமை நிறமும் இறுகிய முகமுமாக இருப்பவன், அவனை காணும் போதெல்லாம் பயம் கொள்பவளின் கண்களுக்கு இன்று ரட்சகன் போல தெரிந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement