Advertisement

ஜீவ தீபங்கள் -4

அத்தியாயம் -4(1)

பிரியாவின் வகுப்பு தோழன் ஒருவனின் பிறந்தநாளுக்காக ஒரு விடுதியில் அவன் நடத்தும் பார்ட்டிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். ஆதவன் இருந்த வரை அப்படியெல்லாம் செல்ல அனுமதித்தது இல்லை. இந்த முறை செல்லலாமா என தோழிகள் கேட்க பிரியாவுக்கும் ஆர்வம் வர அவளும் சென்றாள்.

அதே விடுதியில் இருந்த பாருக்கு கெளதம் அவனது நண்பர்கள் இருவரோடு வந்திருந்தான். பிரியா இங்கு வந்திருப்பதை அறிந்த கெளதம் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வர தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் வகுப்பு தோழன் தேஜ் என்பவனோடு நின்றிருந்தாள் பிரியா.

மது போதையிலிருந்த கெளதம் அவளுடன் ஏன் பேசுகிறாய் என தேஜை கண்டிக்க தாங்கள் நண்பர்கள் இப்படி பேசாதே என்றாள் பிரியா. கெளதம் அவளை தன்னோடு இழுத்து நிறுத்திக் கொள்ள மது வாடையில் முகம் சுழித்தவள் அவனது தொடுகையில் உடல் நெளிந்தாள்.

“நீ ஏன் இவனோட பேசுற? என்கிட்ட சொல்லாம ஏன் வந்த இங்க?” என கெளதம் பிரியாவை கேட்க அவன் கையை உதறியவள் ஹர்ஷினி அருகில் போய் நின்று கொண்டாள்.

பிரியாவின் இன்னொரு வகுப்பு தோழன் அவளை அங்கிருந்து கிளம்ப சொல்லி அறிவுறுத்தினான். அதற்குள் கெளதம், தேஜ் இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.

 பார்த்திருந்த ஹர்ஷினி, “இங்க வந்ததே தப்புடி பிரியா, நாம வீட்டுக்கு போய்டலாம்” என சொல்ல, பிரியாவுக்கும் அதுவே சரி என பட உடனே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

அங்கு அடிதடி ஆகி விட்டது. கூடியிருந்தவர்கள்தான் பிரித்து விட்டனர். தன் நண்பர்களுடன் மீண்டும் மது அருந்த சென்று விட்டான் கெளதம். அவன் போதையில் தேஜ் பற்றி சொல்லி புலம்ப மற்றவர்கள் ஏற்றி விட மீண்டும் பார்ட்டி நடக்கும் இடம் வந்தான்.

அங்கு ஆடல் பாடல் கொண்டாட்டம் என இருக்க தன்னிலை மறந்திருந்த கெளதம், தேஜின் தலையில் மது பான பாட்டில் வைத்து அடித்து விட்டான். தேஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதித்து விட்டனர்.

தேஜ் நினைவிழந்து விட்டான். உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு எனவும் சொல்லப் பட்டது. கெளதம் வீட்டினர் தங்கள் பிள்ளையை காக்கும் பொருட்டு எதுவும் செய்ய தயாராக இருந்தனர். தேஜ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன்.

கெளதம் குடும்பத்து வக்கீல் கொடுத்த யோசனையின் படி தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் வள்ளிபிரியாவிடம் தேஜ் தவறாக நடக்க முயன்றதால் அவளை காக்கும் பொருட்டு இப்படி ஆனதாக கௌதமை சொல்ல சொன்னார்கள்.

பயந்து போயிருந்த கெளதம் வேறு வழியின்றி அப்படியே சொன்னான். பணம் விளையாடியது எங்கும். அங்கு என்ன நடந்தது என்பதற்கான தெளிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் எதுவும் இல்லாமல் போனது.

வெளி மாநில பிரமுகரின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க அதில் சம்பந்த பட்டு போனாள் பிரியா. காவலர்கள் விசாரிக்க வருவதற்கு முன் கெளதம் சித்தப்பாவும் உடன் மூன்று ஆட்கள் மற்றும் அவன் தரப்பு வக்கீல் மொத்தம் ஐந்து நபர்கள் பிரியாவின் வீட்டிற்கு வந்து விட்டனர். என்ன சொல்ல வேண்டும் என பிரியாவிடம் அவர்கள் சொல்ல தேஜு க்கு அப்படி ஆனதே அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

பிறந்தநாள் பார்ட்டி நடத்திய பையனின் அப்பா கெளதமின் அப்பாவுக்கு நெருங்கியவர் என்பதால் கெளதம் அப்பா சொன்னது படி நடந்தது எல்லாம்.

தேஜின் வீட்டினரும் விமானம் மூலம் சென்னை வந்து விட்டனர். தங்கள் பிள்ளை அப்படி இல்லை என ஆணித்தரமாக நம்பியவர்களுக்கு தேஜின் நண்பன் ரகசியமாக எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.

காவல் நிலையத்தில் கெளதம் இருக்க அங்கு ஒரே களேபரமாக இருந்தது.

இங்கு வீட்டில் பிரியா பொய் சொல்ல மாட்டேன் என சொல்லிக் கொண்டிருக்க முதலில் பொறுமையாக கெளதம் தரப்பு வக்கீல் பேசினார்.

“நீ இப்படி சொன்னா மட்டும்தான் கெளதம் வெளில இருப்பான், இல்லைனா பெரிய சிக்கல் ஆகும். பயப்படாம சொல்லு, இந்த பிரச்சனை கொஞ்சம் ஓஞ்சதும் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறோம்” என்றார் வக்கீல்.

தேஜை அவளுக்கு நன்றாக தெரியும், இவளுக்கு ஏதாவது படிப்பில் சந்தேகம் என்றால் அவனிடம்தான் கேட்பாள். நல்ல படிப்பாளி, பொறுமையாக விளக்குவான். இவளது கண்களை தாண்டி பார்த்து பேசியது கிடையாது அவன்.

தேஜ் நினைவே இல்லாமல் கிடக்கிறான் என்பதே இவளுக்கு பெரிய அதிர்ச்சி, இதில் அவன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் என எப்படி சொல்வாள்? பிரியாவின் மனசாட்சி அதற்கு இடம் தரவில்லை.

பிரியா ஒத்துக் கொள்ளாமல் போகவும் மிரட்ட ஆரம்பித்து விட்டனர். காலை நேரம், குளிக்காமல் இரவில் அணிந்திருந்த ஸ்கர்ட் மற்றும் டாப் உடன் இருந்தாள். மேல் வீட்டில் இருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பம் வெளியூர் சென்றிருக்க ஹர்ஷினிக்கும் இவர்களோடு தங்கியிருந்த இன்னும் இரு பெண்களுக்கும் என்ன செய்வதென தெரியவில்லை.

தேஜை நினைத்தும் இவர்களின் மிரட்டலுக்கு பயந்தும் அழுது கொண்டிருந்தாள் பிரியா.

 பிரியாவின் தோழிகளை அவள் அருகில் செல்லவே விடவில்லை வந்திருந்தவர்கள். ஹர்ஷினிக்கு உத்ராவை தெரியும், சில முறை பிரியா இவளையும் அழைத்துக் கொண்டு அவளை பார்க்க சென்றிருக்கிறாள். பிரியாவின் கைபேசி மூலம் அவளுக்கு தகவல் கொடுத்து விட்டாள்.

சிவபாலன் வீட்டுக்குள் நுழைய மழையில் நடுங்கும் பறவை போல ஓரமாக அமர்ந்திருந்தாள் வள்ளி பிரியா. பாலன் என்றாலே சிறு வயதிலிருந்தே பயம்தான், இப்போதும் கூட அவனை கண்டு பயம்தான் என்ற போதிலும் லேசாக நிம்மதியும் வந்தது.

சிவபாலன் பிரியாவிடம் சென்று, “ஏன் இப்படி இருக்க? முகத்தை துடை” என்றான்.

‘இவன் யார்?’ என பார்த்து நின்றனர் மற்றவர்கள். ஒருவன் “யார் நீ, வெளில போ” என மிரட்டல் விடுக்க பாலன் அவனை முறைத்து பார்த்தான்.

“என்னடா முறைப்பு?” என அவன் எகிறிக் கொண்டு வர, பாலன் விட்ட அறையில் அவன் தள்ளிப் போய் விழ மற்றவர்கள் திகைத்து போய் நின்றனர்.

“பெரிய வீரனாட்டம் பொண்ணுங்க மட்டும் இருக்க வீட்ல புகுந்து பிரச்சனை பண்ணிட்டு சவுண்ட் விடுவியா?” பாலன் கேட்ட தொனியில் கௌதமின் சித்தப்பா வக்கீலை பார்க்க அவர் கண்களால் அமைதி காக்க சொன்னார்.

“எங்கேர்ந்துடா வர்றீங்க நீங்கல்லாம்? என்னடா உங்க பிரச்சனை? உங்க பையன் குடிச்சிட்டு கூத்தடிச்சு செய்றதுக்கு எல்லாம் எங்க வீட்டு பொண்ணை பொய் சொல்ல சொல்லி மிரட்டுவியா?” கோவமாக கேட்டான் பாலன்.

பாலனை பிரியாவின் உறவினன் என புரிந்து கொண்டனர். இப்போது வேறு வழியின்றி அந்த வக்கீல், “உங்க பொண்ணும் எங்க பையனும் விரும்பறாங்க. அவனை காப்பாத்ததானே சொல்ல சொல்றோம்?” என இறங்கி வந்து பேச ஆரம்பிக்க பிரியாவை பார்த்தான் பாலன்.

“இல்ல நான் வீட்ல வந்து பேசத்தான் சொன்னேன், வீட்ல ஒத்துக்கிட்டாதான் எல்லாம்னு சொன்னேன். இல்ல… இவங்க சொல்ற மாதிரிலாம் இல்ல” என்றவளுக்கு அடுத்து எதுவும் பேச முடியவில்லை.

அந்த சூழல் ஏதோ பயங்கரமாக இருப்பது போலிருந்தது அவளுக்கு. பாலன் யாரென தெரியா விட்டாலும் பிரியாவுக்கு தெரிந்தவன், அவளுக்கு உதவத்தான் வந்திருக்கிறான் என புரிந்து கொண்ட ஹர்ஷினி அவளின் பக்கத்தில் வந்து நின்று ஆதரவாக பிடித்துக்கொள்ள அவளுக்கு அழுகை மட்டும்தான் வந்தது.

 பாலனிடம் தெளிவாக எல்லாம் சொன்னாள் ஹர்ஷினி.

கெளதம் இருந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரிடம் பேசி கொஞ்சம் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து கௌதமை காணொளி அழைப்பின் மூலம் பிரியாவிடம் பேச செய்தனர்.

எனக்காக சொல் என்பது போல அவன் கெஞ்சிக் கேட்க பிரியா தேம்ப ஆரம்பித்து விட்டாள்.

வக்கீல் பிடித்திருந்த கைபேசியை சட்டென தட்டி பறித்த பாலன், “அறிவிருக்காடா ராஸ்கல் உனக்கு? இவளே சம்பந்த பட்டிருந்தாலும் இவ பேர் வெளில வரக்கூடாதுன்னு நினைக்காம உன்னை காப்பாத்திக்க ஈஸியா இவளை உள்ள இழுத்து விடுறியா நீ?” என கோவப்பட்டான்.

கௌதமுக்கும் அவன் கேட்பதில் உள்ள நியாயம் புரிய அதற்கு மேல் பேசாமல் கைபேசியை வைத்து விட்டான். கெளதமின் சித்தப்பா “பிரியாவை சொல்ல சொல்லுங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து தருகிறோம்” என பேரம் பேச ஆரம்பித்தார்.

“நீ இந்த ஊர்ல பெரியாள்னா என் ஊர்ல நாங்களும் பெரிய கைதான். நடந்ததுல இவ சம்பந்த பட்டிருந்தாலே எதுவும் சொல்ல விட மாட்டேன், சம்பந்தமே இல்லங்கிறப்போ…” என அலட்சியமாக கேட்டான் பாலன்.

“பிரியா சொல்லலைனாலும் இதுதான் நடந்தது, பயந்து போய் பொண்ணு பொய் சொல்லுதுனு நிரூபிப்போம் பார்க்கிறியா? ஏதோ ஸ்மூத்தா செய்யலாம்னு பார்த்தா…” குரல் உயர்த்தாமல் விஷமமாக பேசினார் வக்கீல்.

பிரியாவை பார்த்த பாலன், “யாரு கெளதம்? உனக்கு ரொம்ப தெரிஞ்சவனா? உன் காலேஜ்ல எத்தனையோ பேர் படிச்சு பாஸ் அவுட் ஆகி போறாங்க, எல்லாரையும் எப்பவோ பார்த்திருப்ப, அப்படித்தான இவனும், அவன் மூஞ்சு நினைவு இருக்கா உனக்கு?” என அர்த்தம் பொதிந்த பார்வையோடு கேட்டான்.

சட்டென அவன் பார்வையின் செய்தியை பிடித்துக் கொண்டவள், “ம்ஹூம்… சரியா நினைவு இல்ல, அண்ணன் படிச்சப்ப அண்ணன் கூட எப்பவோ பார்த்தது” என்றாள்.

“நேத்து எப்படி அங்கேர்ந்து வந்தீங்க?” என பிரியாவிடம் அவன் கேட்க, “கேப்ல” என்றாள்.

“என் போன்லேர்ந்துதான் அண்ணா கேப் புக் பண்ணினேன், எப்போ கிளம்பினோம் இங்க எப்போ ரீச் ஆனோம் எல்லாத்துக்கும் பக்கா எவிடென்ஸ் இருக்கு ண்ணா. தேஜுக்கு அடிபட்டப்போ நாங்க சீன்லேயே இல்லை” என அந்த வக்கீலை முறைத்துக் கொண்டே கூறினாள் ஹர்ஷினி.

“என்னங்க தம்பி, ரொம்ப அறிவாளின்னு நினைப்போ? அதே கேப் கம்பெனி கார்ல பிரியா வந்து போன நேரத்தை மாத்தி ரெகார்டு கிரியேட் பண்ண முடியும் என்னால, பார்க்கிறியா?” எனக் கேட்டார் வக்கீல்.

“இன்னும் கொஞ்சம் பேசினா பிரியா திருவாரூர்ல நைட் ஷோ சினிமா பார்த்திட்டிருந்தா, சென்னையிலேயே இல்லைனு நான் சொல்வேன். ஆமாம் பார்த்தேன்னு நூறு பேர் சாட்சி சொல்லுவான். போடா” பாலன் சொன்னதில் ஐயோ படுத்துறானே என்பது போல பார்த்தார் வக்கீல்.

“என்ன தம்பி! நீ ஒத்த ஆளு, இது எங்க இடம், நாங்க சொல்றதை கேட்குறதுல பிரியாவுக்கு எந்த பாதகமும் வர போறது இல்ல. சும்மா புரியாம வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு… ஏன் நல்ல படியா ஊர் திரும்ப எண்ணம் இல்லையா உனக்கு?” எனக் கேட்டார் கௌதமின் சித்தப்பா.

அவரை அலட்சியமாக பார்த்த பாலன், “உங்க தில்லாலங்கடி வேலைய என்கிட்ட காட்டாதீங்க. ஒருத்தன் எலும்ப உடைச்சு எடுத்து அதை வச்சே மத்தவன் தொண்டையில ஓட்டை போட்டு விட்டேனா உசுர் அந்த ஓட்டை வழியா ஆவியா போய்டும். போங்கடா வெளில” என அதட்டினான்.

கௌதமின் சித்தப்பா எப்படியாவது பிரியாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிரட்டலை விடுத்து மீண்டும் சமாதானமாக பேச ஆரம்பிக்க பாலனுக்கு அழைத்தான் ஆதவன்.

உத்ரா எப்போதோ ஆதவனுக்கு அழைத்து சொல்லியிருக்க அவனும் தந்தையோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

ஆதவனிடம் பேசிய பாலன் சுருக்கமாக எல்லாம் சொல்ல ஆதவன் அவனுடைய தாய்மாமாவுக்கு அழைத்து பேசினான். அவரின் மனைவியின் அண்ணன்தான் இங்கு கமிஷனர். அவரிடமும் பேசி விட்டு உடனே பாலனுக்கு அழைத்த ஆதவன், “கமிஷனர் சித்தப்பா பிரச்சனை ஆகாதுன்னு சொல்லிட்டார், பிரியா அங்க இருக்க வேண்டாம்” என்றான்.

பாலன் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியாவிடம் பேசி அவள் மனதை கரைக்க முயன்று கொண்டிருந்தனர்.

“தேஜ் அப்பா பெரிய பிஸ்னஸ் மேனாம், உங்களை தாண்டின பெரிய இடமாம் ஆந்திரால, அதனால எந்த சல்லித்தனமும் இல்லாமதான் கேஸ் விசாரிப்பாங்களாம். ரெண்டு நிமிஷத்துல நீங்க யாரும் இங்கேர்ந்து கிளம்பலைனா உங்க மேல கேஸ் கொடுத்தா ஆக்ஷன் எடுக்கிறதா சொல்றார் கமிஷனர், வசதி எப்படி?” என பாலன் கேட்க, இது வேலைக்கு ஆகாது என உணர்ந்து கெளதமின் சித்தப்பா வக்கீல் மற்றும் அவரது ஆட்களோடு அங்கிருந்து கிளம்பினார்.

 இந்த வீட்டில் யாரும் இப்போதைக்கு இருக்க வேண்டாம் என பாலன் சொல்ல அவர்களில் ஒரு பெண்ணின் வீடு திருவள்ளூரில் இருக்க பிரியாவை தவிர மற்றவர்கள் அங்கு செல்வது என முடிவானது.

தாமதிக்காமல் கேப் புக் செய்து அவர்கள் கிளம்ப பிரியாவோடு பாலனும் அங்கிருந்து கிளம்பினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement