Advertisement

அத்தியாயம் -34(2)

குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருப்பதால் அன்றைய தினம் மட்டும் வீட்டில் இருக்க போவதாக சொல்லி விட்டாள் பிரியா.

வருணின் மூத்த மகன் பாலதர்ஷன், இரண்டு வயது நடக்கும் இளைய மகன் தருண், பாலனின் மகள் பிரகதி என மூவரும் அவர்களது பிரியாம்மாவை வால் பிடித்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தனர். தர்ஷன் முதல் வகுப்பிலும் பிரகதி யூ கே ஜி யிலும் படிக்கிறார்கள். உத்ரா தன் பிள்ளைகளோடு வந்திறங்க பிள்ளைகள் அனைவரும் உற்சாகமாகி விட்டனர்.

பாலனும் வருணும் வீட்டில்தான் இருந்தனர். தங்கை வருவதால் மாலையில்தான் கடைகளுக்கு செல்லப் போகிறார்கள்.

ஆதவன் ஏன் வரவில்லை என தங்கையிடம் கேட்ட பாலன் உடனே அவனுக்கு அழைத்து பேசினான்.

“மாப்ளன்னா அப்படித்தான், எப்போ வருவீங்க… வாங்க மாப்ள… வாங்க மாப்ளன்னு கூப்பிடணும். அடிக்கடி வந்தா மதிப்பில்லாம போயிடும்” என்றான் ஆதவன்.

“டேய்!” பாலன் அதட்ட, “ஹாஸ்பிடல என்ன செய்றது? பிரியாவும் வரலை. வீக் எண்ட் வர்றேன்” என்றான்.

“சரிடா, உன் ஹாஸ்பிடல இப்படியே கடமை தவறாம நல்லா பார்த்துக்க. இன்னிக்கு லஞ்ச் இங்கதான் உனக்கு, வந்திடு” என அவன் மறுத்து பேச முடியாத படி சொல்லி விட்டு வைத்தான்.

குழந்தைகளை சுற்றிக் கொண்டது சார்லி. பிரகதீஸ்வரி பேரன் பேத்திகளை கொஞ்சி விட்டு அவர்களில் கவனம் வைத்துக்கொண்டே ஸ்வெட்டர் பின்ன ஆரம்பித்து விட்டார். ஆமாம் கடந்த சில வருடங்களாக சிறு வயதில் கற்றுக்கொண்டிருந்த கைத்தொழிலை ஆசையாக செய்கிறார்.

 சிறு குழந்தைகள் அணியும் காலுறை கையுறை போன்றவற்றையும் மிக அழகாக பின்னி விடுவார். எதுவும் விற்பனைக்கு இல்லை. வீட்டு குழந்தைகளுக்கும் வீட்டில் வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கும் கொடுப்பார். மற்றவை ஆசிரமம் ஒன்றுக்கு கொடுத்து விடுவார்.

அவரது ஆர்வம் கண்டு மருமகள்கள் அவ்வப்போது யூ டியூப் மூலமாக இன்னும் வித விதமாக எப்படி செய்யலாம் என காண்பித்து கொடுக்க அவரது நேரம் ஆக்கபூர்வமாக செலவழிகிறது.

இப்போது பிரகதீஸ்வரியின் தேவைகளுக்கு வடிவம்மாளின் உதவி தேவையில்லை என்ற போதும் அவரை வேலையை விட்டு நிறுத்தவில்லை. பிள்ளைகளை கவனிக்க என வீட்டில் ஒரு ஆள் போலவே இருக்கிறார்.

மதிய விருந்துக்கு என்ன செய்யலாம் என சௌமியாவும் உத்ராவும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்க, “நானும் ஹெல்ப் பண்ணுவேன் ப்பா, என்னையும் சேர்த்துக்கோங்க” என வந்து நின்றாள் பிரியா.

அதற்குள் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளில் யாரோ அழும் சத்தம் கேட்க, “உன் ஃபேவரிட் ஐட்டம் எல்லாம் இருக்கும், தயவு பண்ணி அந்த அறுந்த வாலு கூட்டத்தை மட்டும் மேனேஜ் பண்ணிடு. இன்னிக்கு மட்டுமில்லை இந்த லீவ் முழுக்க நாங்க ஃப்ரீயா இருக்கிற மாதிரி அவங்கள டியூன் பண்ணிடுடி, உனக்கு புண்ணியமா போகட்டும்” என்றாள் உத்ரா.

அங்கே வருண் பிரகதீஸ்வரி இருவரும் அழும் தருணை சமாதானம் செய்ய அவன் இன்னும் அடமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

“என்னப்பா சத்தம்?” கைபேசியில் கடை ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த பாலன் கேட்கவும் தருணின் அழும் சத்தம் குறைந்து விட்டது.

பாலன் பிள்ளைகள் யாரையும் அதட்டிக் கூட பேச மாட்டான், பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கி கொடுத்தும் விடுவான். ஆனாலும் மற்றவர்கள் அவனுக்கு தரும் மரியாதை கண்டே வளர்ந்த பிள்ளைகளுக்கு தானாக அவனிடம் மரியாதை ஏற்பட்டு விட்டது. அவன் சொன்னால் பயத்தோடு கேட்டுக் கொள்வார்கள்.

“புள்ளைங்க கிட்ட என்னை பூச்சாண்டி ஆக்கி வச்சிட்டீங்க” என விளையாட்டாக குறை பட்டுக் கொள்வான் பாலன்.

இப்போதும் பெரியப்பாவுக்காக சத்தத்தை குறைத்தாலும் அழுவதை நிறுத்தியிருக்கவில்லை தருண்.

“டேய் சும்மா நை நைன்னு” எரிச்சல் பட்டான் வருண்.

“குழந்தைகிட்ட இப்படித்தான் பேசுவியா நீ? போ” என அவனை அதட்டி அங்கிருந்து அகற்றிய பிரியா தருணை தூக்கி வைத்துக்கொண்டு அவர்களுக்குள் என்ன பஞ்சாயத்து என விசாரிக்க ஆரம்பித்தாள். இனி இவள் பார்த்துக் கொள்வாள் என நினைத்து பிரகதீஸ்வரியும் திண்ணைக்கு வந்து விட்டார்.

அண்ணனும் தம்பியும் தொழில் சம்பந்தமாக ஏதோ பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். உத்ரா அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க சௌமியா சமையலறையில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்.

பிள்ளைகளை அமர வைத்து கிச்சு கிச்சு தாம்பூலம் விளையாட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் பிரியா. அவள் அழகாக மண்ணை குவித்து சிறு குச்சி ஒன்றை எப்படி ஒளித்து வைக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்க குவித்திருந்த மண்ணை கிளறி விட்டு சிரித்தான் தருண்.

“ஏன் டா இப்படி செய்ற?” எனக் கேட்டு அவன் மண்டையில் கொட்டு வைத்து விட்டான் தர்ஷன்.

மீண்டும் தருண் அழ திண்ணையிலிருந்த மற்றவர்கள் இவர்களை கவனித்தனர். பிரியா ஏதோ கண்களை உருட்டி விரலை எச்சரிக்கையாக காட்டி தர்ஷனை மிரட்டிக் கொண்டிருக்க தருண் பெரியம்மா மடியில் அமர்ந்து கொண்டு அண்ணனை பார்த்து சிரித்தான்.

தர்ஷன் கோவித்துக் கொண்டு தனியே போய் அமர்ந்து கொள்ள சார்லி அவன் கால்சராயை பிடித்து இழுத்து சமாதானம் செய்து கொண்டிருந்தது.

அதற்குள் ஹரிஷுக்கும் ஹரிணிக்கும் ஏதோ சண்டையாக பிரகதி ஹரிணிக்கு ஏற்றுக்கொண்டு ஹரிஷை ஏதோ சொல்ல அவன் பிரகதியை அடித்து விட்டான். அவள் அழுது கொண்டே அப்பாவை நோக்கி ஓடி வந்தாள்.

வருண் சென்று அண்ணன் மகளை தூக்கி சமாதானம் செய்ய, மரத்திலிருந்து குச்சி ஒன்றை ஒடித்து எடுத்துக் கொண்டு மகனை மிரட்டினாள் உத்ரா. அவன் பயந்து போய் பிரியாவின் மடியில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் தருணை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“இனி பத்து நாளும் வீடு இப்படித்தான் ரகளையா இருக்க போகுது” என பிரகதீஸ்வரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வடிவம்மாள்.

வருண் என்ன சமாதானம் செய்தும் அழுது கொண்டே இருந்த பிரகதி அப்பாவை பார்த்து தூக்க சொன்னாள். அவளுக்கு அப்பாவிடம் இரண்டு வரி கம்ப்ளைண்ட் செய்து விட வேண்டும், அப்பாவின் வாயால் அவனை கேட்கிறேன் அழாதே என சொல்ல வேண்டும், இல்லையென்றால் ஓய மாட்டாள்.

பாலன் மகளை வாங்கிக் கொண்டு கண்களை துடைத்து விட்டு சமாதானம் செய்தான். அவளும் அழுகையை நிறுத்தி விட்டு, “டேய் ஹரிஷ் இப்ப வந்து அடிடா, எங்கப்பா பிச்சு எடுத்திடுவார்” என மழலையில் சத்தமாக மிரட்டினாள்.

“அச்சச்சோ ரதிகுட்டி இப்படியெல்லாம் பேசக்கூடாது. அத்தை கோச்சுப்பாங்க. அவனும் உன் ஃப்ரெண்ட்தானே?” என்றான் பாலன்.

“அவன் பிரெண்ட் இல்லை, ஹரிணிதான் என் பிரெண்ட், என் பிரெண்ட்ட அடிச்சிட்டான் ப்பா. அவன் பேட்” என சொல்லிக் கொண்டிருந்தாள் பிரகதி.

அனைவருக்கும் வேலையாளிடம் குடிக்க கொடுத்தனுப்பியிருந்தாள் சௌமியா. வருண் உள்ளே சென்று அவளையும் அழைத்தான்.

“உங்க புள்ளைங்கள சமாளிக்கிறதுதான் எனக்கு கஷ்டம். வர்றேன் வர்றேன் போங்க” என சொல்லி விட்டாள். அவளை கண்டால் தருண் வந்து தொற்றிக் கொண்டு இறங்க மாட்டான். பிரியா வீட்டிலிருக்கும் நேரம்தான் அம்மாவை விட்டு இருப்பான், ஆதலால் முடிந்த வரை அவன் கண்ணில் படாமல் இருந்து கொள்வாள்.

பாலனை கொண்டு தர்ஷனை சமாதானம் செய்து மற்றவர்களையும் சமாதானம் செய்து மீண்டும் தன்னை சுற்றி அமர வைத்து விட்டாள் பிரியா. சௌமியாவுக்கு உதவ சென்று விட்டாள் உத்ரா. பாலனுக்கு பழக்கமான எம் பி இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். அவரிடமிருந்து அழைப்பு வர பாலன் பேசிக் கொண்டிருந்தான்.

விளையாடும் இடத்திலிருந்து, “என்னங்க உங்களைதான்… இங்க கொஞ்சம் வாங்க” என கணவனை வர சொல்லி சத்தம் கொடுத்தாள் பிரியா.

அவன் மனைவியை பார்த்து கண்களை சுருக்கி கெஞ்சுதலாக இரு நிமிடங்கள் என்பது போல கையால் சாடை காட்டி விட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தான்.

பிரியாவிடம் சென்ற வருண், “அண்ணன் மினிஸ்டர்கிட்ட பேசிட்டு இருக்கார் அண்ணி. உனக்கு நேரம் காலமே தெரியாதா? எதுக்கு இப்படி காட்டுக் கூச்சல் போடுற?” என கடிந்து கொண்டான்.

“எனக்கென்ன தெரியும் அவர் மினிஸ்டர்ட பேசுறாருன்னு. இங்க எங்களுக்கு விளையாட திங்ஸ் எல்லாம் வேணும், வாங்கி தர கூப்பிட்டேன்” என்றாள்.

“யார்கிட்ட பேசினாலும் போன்ல பேசுறப்ப டிஸ்டர்ப் பண்ணுவியா அண்ணி?”

“ஏய் என்ன பிரச்சனை உனக்கு, நான் தூங்க போறேன், எல்லாரையும் வச்சு நீயே சமாளி” என சொல்லி எழப் போனாள் பிரியா.

அவள் தோளை பற்றி மீண்டும் அமர வைத்த வருண் கைகள் குவித்து, “மன்னிச்சிடுங்க அண்ணி மாதா. ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம், இதையெல்லாம் என்னால பார்க்க முடியாது. என்ன வாங்கணும்னு கட்டளை போடுங்க, வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

“அதுக்கெல்லாம் நீ சரிப் பட்டு வர மாட்ட. அவரே வரட்டும்” என்றாள் பிரியா.

“ஓவரா போறீங்க அண்ணி. என்னன்னு சொல்லு” என வருண் கேட்க லிஸ்ட் எடுத்து கொடுத்தான் தர்ஷன்.

பளிங்கு, பம்பரம், பேப்பர் கப், ஸ்ட்ரா, பலூன், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், க்ளே என லிஸ்ட் நீண்டிருந்தது. இடையில் என்ன எழுதியிருக்கிறது என சரியாக வேறு தெரியவில்லை.

“எல்லாம் ஒரே கடைல கிடைக்காது. உனக்கு பொறுமை பத்தாது” என உள்ளதை சொன்னாள் பிரியா. அதற்குள் பேசி முடித்திருந்த பாலன் வந்து விட்டான்.

லிஸ்ட்டை வருணிடமிருந்து பறித்து கணவன் கையில் கொடுத்த பிரியா, “எல்லாம் வேணும், இப்பவே வேணும்” என்றாள்.

 அவனும் படித்து பார்த்து விட்டு, “என்ன பிரியா டி ஓ போட்ருக்க அதுக்கப்புறம் ஈ ஸி ஜி ல வர்ற கிராஃப் போட்ருக்க?” என சிரிக்காமல் கிண்டல் செய்தான்.

 எட்டிப் பார்த்த வருண் என்னவாக இருக்கும் என ஆழ்ந்து யோசிக்க, “அது டொமேட்டோ பெரியப்பா, டாக்டர்ஸ் ஹேண்ட் ரைட்டிங் அப்படித்தான் இருக்கும். மாமா கூட இப்படித்தான் எழுதுவாங்க” என்றான் தர்ஷன்.

“அப்ப கீழ எல் ஏ ன்னு போட்டு கிறுக்கியிருக்கிறது லேடிஸ் ஃபிங்கரா?” விளையாட்டகத்தான் கேட்டான் வருண், ஆனால் ஆமாம் என்றான் தர்ஷன்.

“இதெல்லாம் எதுக்குடா?” – வருண்.

“ம்ம்.. அதெல்லாம் கட் பண்ணி பெயிண்ட்ல டிப் பண்ணி பிரிண்ட் எடுப்போம். அத்தை சொல்லி கொடுப்பாங்க” என்றான் ஹரிஷ்.

“இதெல்லாம் ஓவரோ ஓவர் சொல்லிட்டேன். ஏன் வீட்ல காய் இல்லையா?” – வருண்.

“எல்லாம் இருக்கு, ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா? முத்தாத வெண்டைக்காய் எப்படி பார்த்து பார்த்து வாங்கினேன் தெரியுமான்னு கேள்வியா கேட்டு ஒண்ணும் தர மாட்டா உன் பொண்டாட்டி. லிஸ்ட் கீழ டம்ளர் ஸ்பூன்லாம் எழுதியிருக்கேன், அதும் வீட்ல இருக்குமே ன்னு கேட்காத. எல்லாம் உன் வைஃப் இன்வென்ட்ரி. மண்ணுல போட்டு விளையாடிட்டு திரும்ப எப்படி யூஸ் பண்றதுன்னு ரூல்ஸ் பேசுவா… அவர்கிட்டதானே நாங்க கேட்கிறோம், உனக்கென்ன, நீ தள்ளிப் போ” இறுதியாக எரிச்சலாக முடித்தாள் பிரியா.

“ஏய் அவன் எப்பவுமே உங்கிட்ட பேசுறதுதானே? ஏன் திடீர்னு இரிடேட் ஆகுற? என்னாச்சு உனக்கு?” எனக் கேட்டான் பாலன்.

பிரியா எதுவும் சொல்லாமல் சோர்வாக மடியிலிருந்த தருணின் தலை மீது தலை கவிழ்த்துக் கொள்ள, “இவ்ளோ நேரம் இதுகளோட மல்லு கட்டினா யாருக்கா இருந்தாலும் கண்ண கட்டும். லிஸ்ட் கொடுண்ணா நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான் வருண்.

மனைவியை யோசனையாக பார்த்துக் கொண்டே, “இல்லை நானே போறேன், எதுவும் கிடைக்கலைனா நீயா ஏதாவது வாங்கிட்டு வருவ. அவ டென்ஷன் ஆவா” என்ற பாலன் லிஸ்டில் உள்ள புரியாத கையெழுத்தை படிக்க எனவே தர்ஷனையும் உடன் அழைத்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement