Advertisement

ஜீவ தீபங்கள் -34 (final)

அத்தியாயம் -34(1)

ஒரு காலத்தில் திருவாரூரின் அடையாளமாக இருந்த சுயம்புலிங்கத்தின் ஜவுளி ஸ்தாபனம் அடியோடு மறைந்து விட்டது. நரேனும் பூமிநாதனும் சிறைக்கு சென்று விட்டனர். அவர்களின் தண்டனை காலம் முடிய இன்னும் ஒரு வருடம் மீதமிருக்கிறது.

வைத்தியநாதனும் இளங்கோவனும்தான் ஜவுளி நிறுவனங்களை பார்த்து வந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சப்ளை செய்து வந்த ஆலைகள் அவர்களுடனான வியாபாரத்தை நிறுத்திக் கொண்டன. மற்ற பெரிய நிறுவனங்களும் இவர்களுக்கு சப்ளை செய்ய மறுத்து விட்டன. இதன் பின்னணியில் தீயாக வேலை செய்த வருண் இருந்தான்.

மிகச் சிறிய நிறுவனங்களில் இருந்து துணிகள் பெற்று வியாபாரத்தை ஒப்பேற்றிக் கொண்டிருந்த சமயத்தில் குடலில் புற்றுநோய் வந்து படுத்து விட்டார் வைத்தியநாதன். நரேஷும் கரணும் இந்த தொழிலில் விருப்பமில்லை என சொல்லி தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.

இளங்கோவன் ஒருவரால் தனியாளாக வீழ்ச்சியடைந்த வியாபாரத்தை நிமிர்த்தி நிற்க வைக்க முடியவில்லை. முதலில் இரண்டு சிறிய கடைகளை விற்றனர். சமீபத்தில் பெரிய கடையையும் விற்று விட்டனர். அதை வாங்கிய உரிமையாளர் கட்டிடத்தை இடித்து விட்டார், அங்கு ஏதோ உணவகம் வரப் போவதாக சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் வைத்தியநாதனின் சுக கேடை நினைத்து அழுது புலம்பி நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார் சுந்தரி. போக போக அவருக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. கவனித்துக் கொண்டாலும் வசவுகளை கூறிய வண்ணம் இருப்பார். நோயின் தாக்கம் அதற்கான வைத்தியத்தின் வீரியம் உடன் மனைவியின் சுடு சொற்கள் என பரிதாபமாக கழிகிறது வைத்தியநாதனின் வாழ்க்கை.

நரேஷுன் அப்பா அண்ணன் சிறையில் இருக்க கரணின் அப்பா படுக்கையில் இருக்க அவர்களுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் தொடர்கிறது. யாரும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள்.

சௌமியா இங்கு வருவதே இல்லை. அம்மாவையும் அக்காவையும் திருவாரூரிலேயே சந்தித்துக் கொள்கிறாள்.

இனியா கணவனை விட்டு மாமனார் வீட்டிற்கு சென்றதும் வீட்டில் சும்மா இல்லாமல் பெட்ரோல் பங்க் கவனிக்க ஆரம்பித்தாள்.

உடனிருந்த போது தெரியாத மனைவியின் அருமை அவள் பிரிந்து சென்ற பின்தான் சபரிக்கு புரிந்தது. தான் பேசியது அவளை எத்தனை துன்பப் படுத்தியிருக்கும் என மெல்ல மெல்ல புரிந்து கொண்டான். மனம் மாறி அவளுடன் சேர்ந்து ஒழுங்காக குடும்பம் நடத்துகிறான். அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

பூமிநாதன் நரேன் இருவரது செயல்களில் கோவம் கொண்டு அங்கு அதிக போக்குவரத்து வைத்துக்கொள்ளக் கூடாது என நெடுமாறன் கண்டிப்போடு கூறி விட்டார். ஆகவே இனியா எப்போதாவது பிறந்தகம் வருவாள், வந்தாலும் தங்குவதில்லை உடனே புறப்பட்டும் விடுவாள்.

மகன்களின் வாழ்க்கை, பேத்திகளை காண முடியாதது, பேரன்களுக்கு நல்வாழ்வு அமையாதது என மன உளைச்சலுக்கு ஆளானார் சுயம்புலிங்கம். அவருக்கு முன் பாப்பாத்தியம்மாள் உயிர் துறக்க துணையை இழந்த துக்கமும் சேர்ந்து கொண்டது. ஒரு பெண்ணின் கண்ணீருக்கு எத்தகைய சக்தி உண்டு என்பதை புரிந்து கொண்டுதான் அவரும் உயிர் துறந்தார்.

நரேஷும் கரணும் சொந்த ஊருக்கு வர இஷ்ட படவே இல்லை. சென்னையில்தான் இருக்கிறார்கள். வேரூன்றி வாழ்ந்த இடத்தின் ஒட்டுறவு இந்த தலைமுறையோடு முடிவடையப் போகிறது.

சிவபாலன் ஜவுளிக்கடை என்பது வெகு பிரபலமாகி விட்டது. விஷேஷ காலங்களில் ஆடைகள் வித விதமாக ஆடைகள் எடுக்க பிரியப் பட்டு தஞ்சை திருச்சி என செல்பவர்கள் எல்லாம் இங்குதான் வந்தனர். அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்தவென ஆரம்பிக்க பட்ட கடை என்பதால் கிராமப் புற மக்கள் எளிய மக்கள் மத்தியிலும் கடை பிரபலம்.

கடையை வருண்தான் நிர்வாகம் செய்கிறான். நாகையில் இன்னொரு கிளை ஆரம்பிக்க இடம் பார்த்துக் கொண்டிருக்கிறான் பாலன்.

ஆதவனும் பிரியாவும் இணைந்து பல் மருத்துவமனை நடத்துகின்றனர். இடம் மனைவிக்காக பாலன் வாங்கியது, மருத்துவமனையை ஆதவன் கட்டிக் கொண்டான்.

அங்கு வரும் குழந்தைகளை எல்லாம் பெரும்பாலும் பிரியாதான் கையாள்வாள். கதை சொல்லிக் கொண்டே பொறுமையாக செயல்முறைகளை முடித்து விடுவாள். அடுத்த முறை வரும் குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் “பிரியா டாக்டர் இருக்காங்களா?” என கேட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.

ஆதவன் மிகத் திறமையான பல் மருத்துவன் என்றாலும் குழந்தைகளை கையாளும் போது இத்தனை நெளிவு சுளிவு இருக்காது. தங்கையின் இந்த சிறப்பு பற்றி அவனுக்கு பெருமையே.

சௌமியாவை கடை நிர்வாகம் பார்க்க கூடாது, வீட்டில்தான் இருக்க வேண்டும் என யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவளுக்கு கடைக்கு செல்வதில் ஈடுபாடு வரவில்லை. குடும்பத்தை திறமையாக நிர்வாகம் செய்கிறாள். அந்த விஷயத்தில் பிரியா இன்னும் துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்கும் வித்தியாசம் தெரியாத ஆள்தான்.

“உன்னை ஒண்ணுமில்லாம ஆக்கி அவளே வீட்டு ராஜ்ஜியத்தை பிடிச்சுக்கிட்டா, நீ ஏண்டி விட்டுத் தர்ற?” என துர்காவும், “அவ மட்டும் நல்லா வேலைக்கு போயிட்டு வந்திட்டு கெத்தா இருக்கிறா. உன்னை மட்டும் வீட்டுக்குள்ள அடைச்சு போட்டுட்டாங்க. எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு உன் புருஷனோட நீயும் கடைக்கு போ” என அனுசுயாவும் தங்கள் மகள்களுக்கு சொல்லித் தருகிறார்கள்.

ஆனால் பிரியாவும் சௌமியாவும் அவர்களுக்கு எது வரும் வராது எது தங்களுக்கு கம்ஃபோர்ட் என்ற தெளிந்த நிலையில் இருப்பதால் இதை வைத்து சண்டை போட்டுக் கொள்வதில்லை.

பாலனும் மனைவியிடமும் தம்பியிடமும், “நமக்காக பொறந்த வீட்ல ரொம்ப போக்குவரத்து வச்சிருக்கிறது இல்ல சௌமியா, இதான் அதோட வீடுங்கிற அந்த பொண்ணோட எண்ணத்துல நாம எப்பவும் சந்தேகத்தை உண்டாக்கிட கூடாது” என தெளிவாக சொல்லியிருந்தான்.

ஆதலால் குடும்ப நிர்வாகத்தில் அனைத்தும் சௌமியா விருப்பம்தான். பிரியா தான்தான் மூத்த மருமகள் என சொல்லிக் கொண்டு எதிலும் தலையிட்டுக் கொள்ளவே மாட்டாள். வீட்டிலிருக்கும் நேரத்தில் குழந்தைகளை தனது வசம் வைத்துக் கொண்டு சௌமியாவை சுதந்திரமாக இருக்க விட்டு விடுவாள்.

வீட்டின் பெண்கள் ஒற்றுமையாக இருந்து விட்டால் அதை விட வேறென்ன வேண்டும்?

உத்ரா மாமனாரோடு சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டை நன்றாக நடத்துகிறாள். அவரே ஏதாவது யோசனை என்றால் மருமகளிடம்தான் கேட்டு செய்கிறார்.

வயோதிகம் காரணமாக ரமணி தாத்தா, வள்ளி பாட்டி இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டனர்.

பிள்ளைகளுக்கு அரைப் பரீட்சை முடிந்து விடுமுறை ஆரம்பித்திருக்கிறது. காலையிலேயே உத்ராவின் மகன் ஹரிஷுக்கும் மகள் ஹரிணிக்கும் சண்டை. இருவரும் இரட்டையர்கள், எல் கே ஜி படிக்கிறார்கள்.

ஏதோ பொம்மைக்கு மேக் அப் செய்வதில்தான் இருவருக்கும் சண்டை. பொம்மையை கையோடு எடுத்துக் கொண்டு அம்மாவிடம் சென்று விட்டான் ஹரிஷ்.

ஹரிணியை அடித்து அழ விட்டது என்னவோ இவன்தான், உறங்கிக் கொண்டிருக்கும் அப்பா எழுந்தால் தன் முதுகில் பூசை விழும் என்பதால் அப்பா அடங்கிப் போகும் அம்மாவிடம் போய் நின்றான். அவளும் மகனை விசாரித்து அழாதே என சமாதானம் செய்து தான் ஹரிணியை கேட்பதாக சொல்லி அறைக்கு அழைத்து வந்தாள்.

படுக்கையில் ஆதவனை உட்கார வைத்து அவனுக்கு ஏனோதானோ என ஒரு குடுமி இட்டு நெற்றியில் கோணலாக மையினால் பொட்டு வைத்து பவுடர் பூசிக் கொண்டிருந்தாள் ஹரிணி. பார்த்த உத்ராவும் ஹரிஷும் வாய் விட்டு சிரிக்க ஒரு விரல் காட்டி பத்திரம் காட்டிய ஆதவன் மகளுக்கு தன் முகத்தை காட்டிக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான்.

அப்பாவின் முகத்தை கண்டு திருப்தி கொண்டவளாக ஹரிணி இதழ் விரிக்க மகளை அள்ளி மடியில் வைத்துக்கொண்டவன், “அவ்ளோதானே? அதுக்கு ஏன் தங்கம் அழறீங்க?” எனக் கொஞ்சினான்.

“ப்பா அவன் வந்திட்டான்” என ஹரிஷை காட்டினாள் ஹரிணி.

ஆதவன் மகனை முறைக்க குழந்தை அம்மாவின் பின்னால் சென்று மறைந்தது.

“சும்மா எதுக்கு இவனை மிரட்ட பார்க்குறீங்க. இவன் எடுத்த பொம்மைக்கேதான் அவளும் மேக் அப் செய்யணுமா? அவளையும் கொஞ்சம் கண்டிங்க” என்றாள் உத்ரா.

“ஒன்சைடா இருக்கு உன் நியாயம்? எதுக்கு இவளை அடிச்சான்? என்ன இருந்தாலும் அடிக்கிறது தப்பில்லையா?” என மகளுக்காக நியாயம் கேட்டான் ஆதவன்.

உத்ரா புருவம் உயர்த்தி கிண்டலாக பார்க்க அவனும் கண்களால் அவளை அடக்கினான்.

மகனை முன்னால் இழுத்து நிறுத்திய உத்ரா, “அடிச்சது தப்புதானே சாரி கேளு” என்றாள்.

அம்மாவை பிடித்திழுத்து குனிய செய்து அவள் காதில் ஏதோ சொன்னான் ஹரிஷ். சிரிப்போடு நிமிர்ந்தவள், “அவன் சாரி கேட்கிறானாம். அவனும் உங்களுக்கு மேக் அப் போடணுமாம்” என கணவனிடம் கூறினாள்.

அவன் பாவமாக பார்க்க, “பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. இவனுக்கும் பொறுமையா உங்க முகம் தலை எல்லாம் காட்டுங்க” என கட்டளையாக உத்ரா சொல்ல மகனை வா என அழைத்தான் ஆதவன்.

ஆசையாக ஓடி சென்ற ஹரிஷ், ஹரிணிக்கு சாரி சொல்லி விட்டு அவளோடு சேர்ந்து கொண்டு அப்பாவை ஒரு வழி செய்ய அந்த காட்சியை ரசித்து பார்த்துக் கொண்டே குழந்தைகளின் உடைகளை பேக் செய்ய ஆரம்பித்தாள் உத்ரா. ஆமாம் விடுமுறை என்றால் குழந்தைகள் மாமா வீடு சென்று விடுவார்கள்.

உத்ராவும் பிள்ளைகளோடு அண்ணன் வீடு சென்று விடுவாள். விடுமுறை முடியும் வரை அங்குதான் வாசம். முதல் இரு நாட்கள் ஓய்வாக இருந்து விட்டு பின் அங்கிருந்தே சூப்பர் மார்க்கெட் செல்வாள்.

ஒரு வழியாக பிள்ளைகளை குளிக்க வைத்து தானும் குளித்து தயாரானான் ஆதவன். பிள்ளைகள் சாப்பிடுவதற்காக பாட்டியை தேடிக் கொண்டு ஓடினர். துர்காவுக்கு மருமகளிடம் குறை கண்டுபிடித்து சண்டை போடவெல்லாம் அதிக நேரம் இருப்பதில்லை. பேரப் பிள்ளைகளை கவனித்துக் கொள்வதிலேயே அவரது நேரம் செல்கிறது.

உத்ராவை குறை பேசி குறை பேசி பேரப் பிள்ளைகள் தன்னை வெறுத்து விடுமோ என்ற பயத்தில் வாய் பேசுவதை வெகுவாக நிறுத்தி விட்டார். ஆனாலும் பிறவிக் குணத்தில் எப்போதாவது பேசுவார், உத்ரா கண்டு கொள்வதே இல்லை.

உத்ராவும் குளித்து விட்டு வர அவளை ஆடை மாற்ற விடாமல் தன்னிடம் இழுத்து நிறுத்திக் கொண்டு சேட்டைகள் செய்ய ஆரம்பித்தான் ஆதவன்.

“எனக்கொன்னும் இல்ல, உங்களுக்குத்தான் ஹாஸ்பிடல் போக லேட் ஆகும்” என்றாள்.

“ஹ்ம்ம்… பத்து நாள் நீ இல்லாம எப்படி இருப்பேன்?”

“நீங்களும் வாங்க”

“பத்து நாளும் கஷ்டம். ரொம்ப முடியாதுன்னு தோணும் போது வர்றேன். என் தொல்லை இல்லாம நீ ஃப்ரீயா இரு, அதுவரைக்கும் தாங்குற மாதிரி…” என்றவன் அழகாக அவளிடம் அத்து மீற ஆரம்பித்தான்.

அவள் பொய்யாக கோவம் கொள்ள, “இன்னும் கா மணி நேரம் விட்ருந்தா நான் கிளம்பி போயிருப்பேன். வேணும்னுதானே இப்போவே அவசரம் அவசரமா குளிச்சிட்டு வந்து அரையும் குறையுமா என் முன்னால வந்து நின்னு என்னை மயக்குற? சும்மா நடிக்காதடி” என்றான்.

அவன் வாயில் பட் என அடி வைத்தவள், “ரெடியாகித்தானே இருந்தீங்க, போக வேண்டியதுதானே…” எனக் கேட்டாள்.

“அதெப்படி போக முடியும்? ஃபாஸ்ட்டா டவல் எடுத்திட்டு குளிக்க ஓடுனவ ஓரக் கண்ணால அவ அயித்தான பார்த்தப்புறமும் போனா ஏங்கி போயிட மாட்ட நீ?”

“ச்சீ…”

“ஆமாமாம் ச்சீதான்… சிச்சச்சீயேதான்… அந்த ச்சீயினாலதான் ரெண்டு பேபி நமக்கு. ரொம்பத்தான் ச்சீ…” அடுத்து ஆதவன் என்னவெல்லாம் பேசியிருப்பானோ, நல்ல வேளையாக உத்ரா அவனை பேச விடாமல் செய்து விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement