Advertisement

அத்தியாயம் -33(3)

பாலன் திறக்க பதட்டமாக நின்று கொண்டிருந்தான் வருண். பிரியா குழப்பமாக எழ தம்பியை அழைத்துக் கொண்டு ஹால் சென்றான் பாலன்.

குடவுனுக்கு பாலனை கொலை செய்ய என ஆட்கள் வந்திருக்கிறார்கள். பிரியா அழைக்கவும் குடவுன் பின் பக்க வழியாக பாலன் வீடு வந்திருக்க அவன் அங்கு இல்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. யார் என்ன என அங்கிருப்பவர்கள் யோசிப்பதற்குள் பாஸ்கரை பிடித்து வைத்துக்கொண்டு பாலன் எங்கே என தேடியிருக்கிறார்கள்.

அங்கு பாலன் இல்லை என தெரிய வரவும் பாஸ்கரையும் இன்னும் எதிரில் வந்தவர்களையும் காயப்படுத்தி விட்டு தப்பி ஓடி சென்றிருக்கின்றனர்.

பட்டு ரகங்கள் லோடு குடவுனை வந்தடையவும் இல்லை. பாலன் கைபேசியை எடுக்காதததால் வருணுக்கு தகவல் தந்திருக்கின்றனர் கடை ஊழியர்கள்.

“நீ இந்நேரம் அங்க இருந்திருந்தா…” என்ன விபரீதம் ஆகியிருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வருண், “அந்த நரேனை சும்மா விடக்கூடாது ண்ணா” என்றான்.

“நான் போய் பார்க்கிறேன் அங்க. இங்க இரு நீ” என சொல்லி கிளம்பினான் பாலன்.

“நானும் வர்றேன் ண்ணா”

“வீட்ல ஆள் வேணாமா டா? இரு இங்கேயே” அதட்டலாக சொன்ன பாலன் கிளம்பி விட்டான்.

பாஸ்கரையும் மற்ற ஆட்களையும் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். உயிருக்கு ஆபத்து இல்லை என்ற போதும் சரியாக நாளாகும். அவர்களை பார்த்து விட்டு இன்னும் செய்ய வேண்டிய வேலைகளை சில ஆட்கள் வைத்து முடித்து விட்டு கடைக்கு வந்தான். அதற்குள் போலீஸ் வந்திருந்தது.

பாலன் வீடு வரும் போது நேரம் காலை பதினொன்று. லோட் ஏற்றி வந்தவர்களுக்கு பணம் கொடுத்து விபத்து போல மாற்றி பட்டு ரகங்களை பாழ் செய்ய வேண்டும் என சொல்லியிருப்பான் போலும் நரேன். அவர்கள் பணத்திற்கு ஆசை கொண்டு பட்டு துணிகளை அவர்கள் இடத்தில் பதுக்கி வைக்க நினைக்க மலையரசன் மூலம் வேறு ஆட்களை இரவே அனுப்பி பத்திரமாக லோடை மீட்டு விட்டனர்.

பாலன் முகம் இறுக்கமாக இருந்தது. ஆதவன் வீட்டினர் அனைவரும் இரவே இங்கு வந்திருந்தனர். லோட் வந்தடைந்து விடும் என தகவல் சொன்னான் வருண்.

தலையாட்டிக் கொண்ட பாலன் அறைக்கு சென்று குளித்து தயாராகி வெளியில் வந்தான். பிரியா சாப்பிட அழைத்தாள். அவன் பதில் சொல்லாமல் கைபேசியை காதில் வைத்துக்கொண்டு, “அங்கதான் வந்திட்டு இருக்கேன் பாய், கடைய அடைச்சிடுங்க” என பேசிக் கொண்டே வெளியே செல்ல முனைய கெட்டியாக அவன் கையை பற்றிக் கொண்டாள்.

“விடு பிரியா, உள்ள போ, அமைதியா இரு, வந்திடுவேன் நான்” என கடினமாக சொன்னான்.

“வேணாம் எங்கேயும் போக வேணாம் நீங்க. கடையில யாரை பிடிச்சு வச்சிருக்கீங்க, கம்பளைண்ட் கொடுத்தாச்சுதானே, நீங்க யார் மேலேயும் கை வச்சு எதுவும் செய்யக் கூடாது, வெளில விட்ருங்க” என்ற பிரியா அவனது கையை விடவே இல்லை.

“இந்நேரம் என் உடம்ப நடு வீட்ல வச்சுகிட்டு சுத்தி உட்காந்து அழுதுகிட்டு இருந்திருப்பீங்க எல்லாரும்…” கோவமாக சொன்னவன் உடனே நிதானித்து, “பகைய விட்டு வைக்க கூடாது பிரியா. நீ சின்ன புள்ள உனக்கு இதெல்லாம் புரியாது. விடு” என பொறுமையான குரலில் சொன்னான்.

“அடிதடியால எந்த பகையும் முடியவே முடியாதுங்க. நம்ம பசங்களுக்கு சொத்து இல்லாம போனா போகுது, பகை சேர்த்து வைக்காதீங்க. நீங்க ஒண்ணு செய்ய போய் அதுக்கு பழி வாங்கன்னு அடுத்து யாராவது வன்மத்தை மனசுல வளர்த்திட்டு வந்து நிப்பாங்க. யாரையும் உங்க கையால துன்புறுத்தாம பகைய முடிச்சு வைங்க. வேற ஏதும் தப்பா வேணாங்க” கெஞ்சலாக கேட்டவள் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.

“அண்ணி பேசாம இரு, என்ன அந்த பயலை மன்னிச்சு விட சொல்றியா? நாளைக்கு வேற விதத்துல ஏதாவது பண்ணுவான், பரவாயில்லையா உனக்கு?” கோவப்பட்டான் வருண்.

“ஏய் கத்தாதடா” என வருணை அதட்டிய ஆதவன் தங்கையை பார்த்து, “இவருக்கு எதுவும் ஆகாது, நாங்க கூட போறோம்ல பிரியா? வேற ஆளை வச்சுத்தான் செய்வோம்” என்றான்.

பிரியா அண்ணனை முறைக்க, “சமாதானமா பேசாம அண்ணனை ஏத்தி விடாதீங்க” என கடிந்த உத்ரா, பாலனை பார்த்து, “சட்டப் படி செய்யலாம் ண்ணா. யாரையும் எதுவும் செஞ்சா பாவம்தானே ண்ணா?” எனக் கேட்டாள்.

“இங்க நம்ம கை ஓங்கி இருக்கணும் மா” என்றான் பாலன்.

“அவங்கள அப்படியே விடலியே. உன்னை எதுவும் செஞ்சிருந்தா அவங்க கை ஓங்கினதா நீ நினைக்கலாம் ண்ணா. கடவுள் புண்ணியத்துல அப்புறம் என் அண்ணியால எதுவும் நடக்கலதானே? பாஸ்கர் அண்ணாவை அட்டாக் பண்ணினது, லோடை கடத்தினதுன்னு நிறைய தப்பு இருக்கே, அதை வச்சு அவங்கள போலீஸ்ல பிடிச்சி கொடுத்திடலாம். நீ எதுவும் செய்திடாத ண்ணா” கெஞ்சினாள் உத்ரா.

சௌமியாவுக்கும் அதே எண்ணம்தான். ஆனால் நரேன் இவளது அத்தை மகன் எனவும் எதுவும் சொல்ல தயங்கி அமைதியாக இருந்தாள்.

தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பார் என ஆழமாக நம்பிய பிரகதீஸ்வரியும் மகன்களை அமைதி காக்கவே சொன்னார்.

இப்படியாக பெண்கள் ஆண்களை சமாதானம் செய்து வன்முறையில் ஈடுபட விடாமல் சாப்பிட வைத்தனர்.

“அண்ணன் கம்பளைண்ட் கொடுத்திட்டார். நீங்களும் வருணும் செருப்பு கடைக்கு போங்க. கோவ படாம போலீஸ்ல மட்டும் புடிச்சு கொடுத்திட்டு வந்திடனும். உங்க மேல நம்பிக்கை வச்சு அனுப்புறேன்” என்றாள் உத்ரா.

சரி என்பது போல ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வருணோடு கிளம்பிச் சென்றான் ஆதவன். பூமிநாதன், நரேன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும் போது அவர்கள் உடம்பெல்லாம் ஊமைக் காயங்கள். வாழ்நாளில் வருணும் ஆதவனும் ஒற்றுமையாக இணைந்து செய்த காரியம் இதுவாகத்தான் இருக்கும்.

“ஷின்சான் க்ரூப் அட்மின் நீதான? பேஸ்மெண்ட்ல நாம செஞ்ச அடாவடித் தனத்தை க்ரூப்ல பெருமையா போஸ்ட் போடுறேன்னு என் குடும்பத்துல கலகம் ஏற்படுத்திடாதடா” என வருணிடம் சொன்னான் ஆதவன்.

“டேய் தேங்க்ஸ் டா” உணர்ந்து சொன்னான் வருண்.

இரவில் இப்படி என ஆதவனிடம் பிரியா சொல்லியிருக்க உடனே ஓடி வந்து விட்டான். அவன் மூலமாகத்தான் சென்னை கமிஷனரை தொடர்பு கொண்டு கொலை செய்ய வந்த ஆட்களையும் விரைந்து பிடிக்க முடிந்தது.

“அவர் என் தங்கச்சி புருஷன் டா. மத்த படி நீ ன்னா எனக்கு அலர்ஜிதான்” என கிண்டலாக சொன்னான் ஆதவன்.

“எனக்கும் நீன்னா அப்படித்தான்!” வருணும் உடனே முறுக்கிக் கொண்டான்.

அவர்கள் வீடு வரும் போது பாலன் உறக்கத்தில் இருந்தான்.

“அண்ணன் எங்க கூப்பிடு அண்ணி, எல்லாம் நல்ல படியா முடிஞ்சதுன்னு சொல்லணும்” என்றான் வருண்.

“ஷ்! ஏன் அவர் எழுந்தப்புறம் சொன்னா விஷயம் மாறிப் போயிடுமா? கஷ்ட பட்டு தூங்க வச்சிருக்கேன் அவரை” என்றாள்.

“ஆமாம் எங்கண்ணன் கைக்குழந்தை, தூங்க மாட்டேன்னு அழுது அடம் பண்ணினார் இவங்க தாலாட்டி தூங்க வச்சிருக்காங்க” என கிண்டல் செய்தான் வருண்.

“எழுப்பி விடு பிரியா, அவர்கிட்ட சொல்லணும்ல எல்லாம்” என்றான் ஆதவன்.

இருவரையும் ஒரு சேர முறைத்தவள், “ஒழுங்கா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு கடை வேலையெல்லாம் போய் பார்க்குறீங்க ரெண்டு பேரும்” என அதட்டலாக சொன்னாள்.

“அதெல்லாம் நாங்க ஷேர் பண்ணி பார்த்துக்கிறோம். எல்லாம் பேசி வச்சிட்டோம், அண்ணனை கூப்பிடேன்” என்றான் வருண்.

“உங்க வீர பிரதாபம் எல்லாம் எங்களுக்கே தெரியும் போது அண்ணாக்கு தெரியாதா? எப்பதான் திருந்துவீங்களோ?” என கோவமாக சொன்னாள் உத்ரா.

ஆதவனும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “உஸ்மான் பாய் அண்ணனை பார்க்க வந்திருந்தார்” என்றாள் உத்ரா.

“என்ன சொன்னார்?” மனைவிக்கு பயந்து போய் கேட்டான் ஆதவன்.

“எல்லாம் சொன்னார், வாங்க உள்ள” என அதட்டலாக கூறி அறைக்கு சென்றாள் உத்ரா.

“என்ன மாப்ள… பாம்போட பல்ல பிடுங்கி விட்டுட்டா போல என் தங்கச்சி!” வருண் நக்கல் செய்ய, “நீங்க போங்க சார் உங்க ரூமுக்கு. சிறப்பு பரிசு காத்திட்டு இருக்கு” என்ற பிரியா வருணையும் அவனது அறைக்கு அனுப்பி வைத்து விட்டு பாலனிடம் சென்றாள்.

இரவெல்லாம் கண் விழித்ததில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் பாலன். வீட்டிலிருந்து வெளியே செல்ல துடித்துக் கொண்டிருந்தவனை அடக்கி உறங்க வைப்பதற்குள் பிரியா ஒரு வழி ஆகியிருந்தாள்தான். ஆனால் அவளை தவிர வேறு யாராலும் அவனது கோவத்தை கையாண்டிருக்க முடியாது.

கணவன் பக்கத்தில் சத்தமில்லாமல் அமர்ந்து கொண்டாள் பிரியா. லேசாக அவன் கண் விழிக்க அவன் மார்பில் தட்டிக் கொடுத்தவள், “தூங்குங்க…” மெலிதான குரலில் சொன்னாள்.

அவளது குரல் கேட்கவும் தன்னைப் போல் அவனது விழிகள் மீண்டும் மூடிக் கொண்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement