Advertisement

அத்தியாயம் -33(2)

சிவபாலனின் இத்தனை வருட சேமிப்பையும் மிகப்பெரிய அளவிலான வங்கிகடனையும் முழுதாக விழுங்கி விட்டு சுற்று வட்டாரத்திலேயே பிரம்மாண்டாமான கடை இதுதான் என சொல்லுமளவுக்கு ஐந்து மாடிகளில் நவீனமாக கம்பீரமாக வளர்ந்து நின்றது அவனது ஜவுளிக்கடை.

கடையின் திறப்பு விழாவுக்கு நாள் குறித்தாகி விட்டது. குடவுன் என தனியாக இல்லாமல் பேஸ்மெண்ட்டையே குடவுனாக அமைத்திருந்தான்.

இறுதி கட்ட பணிகள் ஒரு பக்கம் நடக்க, ஆர்டர் செய்திருந்த ஜவுளி சரக்குகள் குடவுனில் இறக்கப் பட்டுக் கொண்டிருந்தன. திறப்பு விழாவுக்கு தொழிற்துறை அமைச்சர் வருகிறார். உள்ளூர் தொலைக்காட்சிகளில் அடிக்கடி கடையின் விளம்பரம் வந்தது. அனைத்து தினசரிகளிலும் திறப்பு விழா பற்றிய அறிவிப்பு முழு பக்கத்துக்கு விளம்பரம் செய்யப் பட்டிருந்தது.

“ஏன் பாலா இவ்ளோ ஆர்ப்பாட்டம்?” என கேட்டே விட்டார் மலையரசன்.

“வெறும் லாபம் பார்க்க திறக்கல இதை. ஒருத்தன் அடையாளத்தை அழிக்க அதை விட பெருசா… ரொம்ப பெருசா நாம செய்யணும். இனிமே நம்ம கடை பத்திதான் பேச்சா இருக்கணும்” என அழுத்தமாக சொல்லி விட்டான் பாலன்.

கடந்த இரு மாதங்களாகவே பர பரப்பாகத்தான் இருக்கிறான் பாலன். காலை வந்தால் இரவுதான் வீடு செல்ல முடிகிறது, மதிய உணவு அவனிருக்கும் இடத்திற்கு கொடுத்தனுப்பி விட சொல்லி விட்டான்.

இரவில் தம்பி உடனிருக்க, “சௌமியா பொறந்த வீட்டை ஒதுக்கி வச்சிட்டு இருக்கும் போது நீ ஒழுங்கா அது கூட நேரம் செலவு செய்யணும்” என்றான்.

“அண்ணி கூட…” என வருண் ஆரம்பிக்க, “அவ புரிஞ்சுக்குவா” என சொல்லி அவனை வற்புறுத்தி வீடு அனுப்பி வைத்து விட்டான்.

கணவனின் நிலை பிரியாவுக்கு புரியத்தான் செய்கிறது. அவன் வரும்வரை கண் விழிக்க உடல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஆனாலும் இரவில் அவன் வரும் போது விழித்துக் கொள்வாள். அவளுக்காக படுக்கையறையில்தான் அவனது இரவு சாப்பாடு நடக்கிறது.

“பெட் ரூம சாப்பாட்டு கடையா மாத்திட்டீங்க” என கிண்டல் செய்வாள்.

“கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும்” என சிரித்துக்கொண்டே சொல்வான்.

படுத்த பிறகும் பேச நேரம் இருப்பதில்லை. உறக்கம் இவன் கண்களை சுழற்றும். பிரியாவின் மனம் வாடிப் போனாலும் தன்னை அணைத்து தன் பாதங்கள் மேல் பாதங்கள் போட்டு உறங்குபவனை ஒண்டிக் கொண்டு அவளும் உறங்கிப் போவாள்.

ஒரு வேளையாவது அவளுடன் சேர்ந்து உண்ண வேண்டும் என்பதில் மட்டும் தீர்மானமாக இருப்பவன் காலை உணவை அவளோடுதான் சாப்பிடுவான். மதியமும் இரவில் அவள் உறங்க செல்வதற்கு முன்னரும் என்ன வேலையாக இருந்தாலும் மறக்காமல் ஐந்து நிமிடங்கள் அவளோடு பேசி விடுவான். அவளது உணவு எல்லாம் பிரகதீஸ்வரி கவனித்துக் கொள்வார். உத்ராவை அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறான்.

அவளுக்கு பிடித்தது எல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவான். மருத்துவரை பார்க்கும் போதும் சரியாக வந்து விடுவான். அவனால் முடிந்த அளவு மனைவியை பார்த்துக் கொண்டாலும் பிரியாவுக்கு எதுவும் போதவில்லை. அவனிடம் வாய் திறந்தும் கேட்கவில்லை.

அன்றைய இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றவளுக்கு படுக்கவும் பிடிக்கவில்லை. கணவனின் அழைப்புக்காக காத்திருந்தாள், சற்று தாமதமாகத்தான் பாலன் அழைத்தான். சோர்வாக பேசி விட்டு வைத்தவளுக்கு அழுகை வந்து விட்டது.

பின்னர் அவளாகவே ‘சீச்சி அழக்கூடாது, கடை திறந்தாச்சுன்னா அப்புறம் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவார்’ என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு படுத்து விட்டாள்.

சற்று நேரத்தில் பாலன் வந்து விட்டான். இன்னும் உறங்கியிராதவள், “சாப்பிட்டீங்களா? என்ன எதுவும் எடுக்க வந்தீங்களா?” என விசாரித்தாள்.

“என்னடா என்னாச்சு? குரல்ல உசுரில்லையே… என்னம்மா?” கேட்டுக் கொண்டே அவள் பக்கம் அமர்ந்து அவளது கையை பிடித்தான்.

எழுந்து விட்டவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள். பயந்து போன பாலன், என்னவென மீண்டும் கேட்க, “மிஸ் பண்றேன் உங்களை. நீங்க ரொம்ப மோசம், போங்க” என சொல்லி மார்பில் குத்தி இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.

பாலனுக்கு நெக்குருகி போய் விட்டது.

“இன்னும் பத்து நாள் பொழுது, அப்புறம் சீக்கிரம் வந்திடுவேன் பிரியா” என சமாதானமாக சொன்னான்.

“பத்து நாள்தான்” கண்டிப்போடு கூறியவள், “என்னைதான் பார்க்க வந்தீங்களா?” எனக் கேட்டாள்.

“பின்ன?”

“திரும்ப போகணுமா?”

“லோட் வருது பிரியா. நமக்கு அனுபவம் இல்ல இந்த தொழில்ல, யாரையும் நம்பி விட முடியலை. ஆரம்பத்திலேயே கஸ்டமர்ஸுக்கு நல்ல இம்ப்ரெஸன் கொடுத்தாத்தானே நல்லா இருக்கும்? கீழ உள்ள ரெண்டு ஃபிளோர் இன்டீரியர் ஒர்க்தான் முடிஞ்சிருக்கு, மத்தது இன்னும் முடியலை. நான் கூட நின்னாதானே பத்து நாளைக்குள்ள கடை முழுசா ரெடி ஆகும்?”

“சரி, ஒரு ஃபைவ் மினிட்ஸ் மட்டும்” என ஐந்து விரல்கள் காட்டி கூறியவள் படுத்துக் கொண்டு அவனையும் தன்னருகில் படுக்கும் படி கண் அசைத்தாள்.

 அவன் படுத்த பின் அவன் தோள் வளைவில் தலை வைத்து லேசாக தெரிய ஆரம்பித்திருக்கும் தன் வயிற்றில் அவனது இன்னொரு கையை எடுத்து வைத்துக்கொண்டாள்.

அவளது வயிற்றை வருடி விட்டுக் கொண்டே, “ஹாஸ்பிடல் போறது கஷ்டமா இருந்தா நிறுத்திடலாம் பிரியா” என்றான்.

“எதுக்கு? கொஞ்ச நேரமாவது உங்க கிறுக்கு இல்லாம நல்லா இருந்திட்டு போறேன்” என்றாள்.

“இன்னிக்கு என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி அழுதெல்லாம் பயப்படுத்துற என்னை?”

“ப்ச் தெரியலை. தினமும் தேடுவேன்தான், இன்னிக்கு என்னவோ நீங்க கூட இருந்தே ஆகணும்னு ரொம்ப தோணிடுச்சு. ஆனா வருவீங்கன்னு நினைக்கல”

“சரி சீக்கிரம் தூங்கேன், நான் போகணும்ல…”

“நீங்க கிளம்பினதும் தூங்கிக்கிறேன்” என்றவள் சற்றே தன் தலையை உயர்த்தி அவன் நெற்றி கண்கள் என முத்தமிட்டு இதழ்களில் மென்மையாக முத்தம் வைத்து மீண்டும் படுத்துக் கொண்டாள்.

பாலன் அவள் வயிற்றிலிருந்து கையை பிரித்து தன் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க, “இன்னும் டூ மினிட்ஸ் மட்டும்…” கெஞ்சியவள் அவனை விட மாட்டேன் எனும் விதமாக பிடித்துக்கொண்டாள்.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஏக்கமாக தன்னை பார்த்திருக்கும் மனைவியை விட்டு விலகி எழுந்தவன் கதவு நோக்கி சென்றான்.

மனம் கேளாமல் மீண்டும் பிரியாவை பார்த்தவன் கைபேசி எடுத்து பாஸ்கருக்கு அழைத்து, “நீங்க பார்த்துக்கோங்க ண்ணா. நான் காலைல வந்து பார்க்கிறேன்” என சொல்லிக் கொண்டிருக்க எழுந்து வந்திருந்த பிரியா அவனை முதுகோடு அணைத்துக் கொண்டாள்.

அவள் கையை பிடித்திழுத்து தன் முன்னால் நிறுத்தியவன், “சரியான லவ் டார்ச்சர்டி நீ. மனுஷனை இப்படியா கொடுமை பண்ணுவ?” செல்லமாக கடிந்து கொண்டே, “படு குளிச்சிட்டு வர்றேன்” என சொல்லி சென்றான்.

அவன் குளித்து வந்த போது துளி உறக்கம் கூட இல்லாமல் தெளிவாக அமர்ந்திருந்தாள் பிரியா.

“இன்னிக்கு சிவராத்திரி ஆக்க போற அதானே?” கேட்டுக் கொண்டேதான் அவள் பக்கத்தில் அமர்ந்தான் பாலன்.

“எல்லா ராத்திரியும் எனக்கு சிவபாலன் ராத்திரிதான்” என ஜக ஜோதியாக தன் பேச்சை ஆரம்பித்தாள் பிரியா.

நடு இரவை கடந்தும் உறங்காமல் வாயடித்துக் கொண்டிருந்த பிரியாவை, “போதும் பிரியா, தூங்க போறியா இல்லையா இப்போ?” என அதட்டினான் பாலன்.

“அது வந்தா தூங்க மாட்டேனா? ரெண்டு மாசமாச்சு உங்க கூட சரியா பேசி. என்ன சத்தம் போடுறீங்க?” என அவளும் கோவப்பட பாலன் பதில் பேசும் முன் அவனது அலைபேசியில் அழைப்பு வந்தது.

“உங்களைதான் கூப்பிடுறாங்க கடைல. போங்க…” கோவப்பட்டாள்.

“லோட் வந்திருக்கும் பிரியா. எல்லாம் பட்டு ரகம். நான் போகல, என்னன்னு பேசிக்கிறேன், விடு என்னை” என்றவன் எழுந்து கைபேசி எடுப்பதற்குள் அழைப்பு முடிந்திருந்தது. மீண்டும் பாலன் அழைக்க பிஸியாக இருந்தது எதிர்முனை.

“போன் இங்க எடுத்திட்டு வந்து வச்சிட்டு படுங்க” என்றாள்.

“பொறுமையே கிடையாது உனக்கு, இந்த சமயம் உன் பக்கத்துல ஃபோன் எல்லாம் வச்சுக்க கூடாது. இரு” என்றவன் மீண்டும் அழைக்க போக கதவு தட்டப் பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement