Advertisement

அத்தியாயம் -3(2)

சிவபாலன் அவனது ஃபர்னிச்சர் ஷோ ரூமில் இருந்தான். கல்பனாவை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் இனியா. கடைக்குள் வந்த பின்னர் தலையை சுற்றி போட்டிருந்த துப்பட்டாவை விலக்கி விட்டு சிவபாலன் எங்கிருக்கிறான் என பார்வையால் துழாவினாள்.

இந்த ஒரு வார காலத்தில் மூன்றாவது முறையாக இவளை பார்க்கிறான் சிவபாலன். முதல் முறை லெதர் பேக் வாங்க வந்தோம் என கூறிக் கொண்டு கயிறு மண்டிக்கு வந்த போதே ஆர்வமாக தன்னை நோக்கும் இவளது பார்வையை கண்டுகொண்டான். அப்போதே யார் என்ன என்ற விவரங்களையும் தெரிந்து கொண்டான்.

மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் அவள் கயிறு மண்டி வந்த போது அவளது கண்களில் படாமல் கவனமாக இருந்தவன் அவள் தன்னை தேடுவதையும் குறித்துக் கொண்டான்.

இன்று இங்கு வந்ததும் அவளது எண்ணம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகி விட சினம் தலைக்கு ஏறியது. கடையிலிருந்த அவனது பிரத்யேக அறைக்கு சென்றவன் அவளை அழைத்து வருமாறு பணியாள் ஒருவனிடம் சொல்லி அனுப்பினான்.

கல்பனா வர மறுத்து விட இனியா மட்டும் உள்ளே வந்தாள். அவள் கண்களை சந்தித்தவன் அமரும் படி சைகை காட்ட சங்கடமும் ஆவலுமாக அமர்ந்து கொண்டவள் அவன் முகத்தை பார்த்து விட்டு என்ன பேசுவதென தெரியாமல் சிரித்தாள்.

இறுக்கமாக முகத்தை வைத்திருந்தவன், “என்ன நினைச்சுகிட்டு அடிக்கடி என் கடைக்கு வர்ற?” எனக் கேட்டான்.

“அது அத்தான்…” என இழுத்தாள்.

“நான் உனக்கு அத்தானும் இல்ல பொத்தானும் இல்ல. புரிஞ்சுதா?” என அதட்டல் போல அல்லாமல் ஆனால் அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

சற்று மிரண்டாலும் குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஏன் நீங்க என் மாமா பையன்தானே? அப்போ அத்தான்தானே?” எனக் கேட்டவள் அவனது விழிகளில் தெரிந்த கோவத்தில் திகைத்துப் போய் பார்த்தாள்.

அவளது மிரட்சியை கண்டு தன்னை தானே நிதானித்துக் கொண்டவன், “என் பகை உன் கூட இல்ல. உன்னை வச்சு காய் நகர்த்தி என் காரியம் சாதிச்சுக்கிற அளவுக்கு கேவலமானவனும் இல்ல நான். இனியொரு முறை உன் நிழல் கூட என் பக்கமோ என் கடை பக்கமோ விழக் கூடாது” என சாந்தமான குரலில் சொன்னான்.

அவமானமாக உணர்ந்தவளின் விழிகள் கலங்கி விட, அடுத்து என்ன பேசுவது செய்வது எனத் தெரியாமல் தலை குனிந்த வண்ணம் அமர்ந்தே இருந்தாள்.

“இந்த கடைய விட்டு நீ கிளம்பும் போது என் நினைப்பையும் இங்கேயே விட்டுட்டுதான் போகணும். இது கூட உனக்கும் நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறதால சொல்றேன். இல்ல நான் என் இஷ்ட படிதான் இருப்பேன் நடப்பேன்னு சொன்னா…” அவன் சொன்ன தொனியில் பயந்து போனவளாக நிமிர்ந்து பார்த்தாள்.

நான் அத்தனை இளகிய மனம் கொண்டவன் இல்லை என்பது போல பார்த்தான் சிவபாலன்.

சக்தியை திரட்டி விருட் என எழுந்து கொண்டவள் வேகமாக அங்கிருந்து வெளியேறி கல்பனாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கடை வாயிலை நோக்கி சென்று விட்டாள்.

ஒரு நொடி நின்றவள் திரும்பிப் பார்க்க கண்ணாடி தடுப்பின் வழியே பாலன் இவளை பார்த்திருப்பது தெரிந்தது. துளி கூட இளக்கம் இல்லாமல் கண்கள் கோவத்தில் மின்ன பார்த்திருந்தான். உடனே தன் பார்வையை விலக்கிக் கொண்டு சென்று விட்டாள் இனியா.

தீராத பகைதான், ஆனாலும் அந்த வீட்டு பெண்ணை முன்னிறுத்தி எதையும் சாதிக்க துளியும் விருப்பமில்லை. அந்த வீட்டை சார்ந்த உயிர் அற்ற பொருளை கூட ஏற்றுக் கொள்ள மாட்டான், அந்த வீட்டு பெண்ணை தன் வாழ்வோடு இணைப்பானா? ஆகவேதான் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டான்.

தங்கை உத்ராவிடமிருந்து அழைப்பு வந்தது. மன நிலை சற்று இலகுவாக அழைப்பை ஏற்றான்.

அண்ணனின் குரல் கேட்டதும் உத்ராவிடம் அத்தனை உற்சாகம். ஆனாலும் அவளது குரலில் மாற்றம் தெரிய, “நல்லா இருக்கியா உத்ரா?” என விசாரித்தான்.

“நைட் லைட்டா காய்ச்சல் ண்ணா, இப்போ ஓகேதான்” என்றவள் இரும வேறு செய்ய இவனுக்கு மனம் சோர்ந்து விட்டது.

உத்ரா சிறு வயதிலிருந்தே அண்ணன் வளர்ப்புதான். வருணுக்கு சில வருடங்களுக்காவது அம்மாவின் அருகாமையும் அரவணைப்பும் கிடைத்தது. ஆனால் உத்ராவின் சிறு வயது நினைவுகள் முழுதும் சிவாபாலன் மட்டுமே.

தங்கைக்கு எல்லாம் பார்த்து பார்த்து இவன் செய்ய அண்ணனுக்காக பார்ப்பாள் அவள். தன் வருத்தம் அவனை இன்னும் வருத்தம் கொள்ள செய்யும் என தெரிந்ததால் எதையும் வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டாள். அண்ணனால் இது முடியாது என நன்றாக தெரிந்து விட்டால் தான் ஆசைப்படுவதை கூட மறைத்து விடுவாள்.

இப்போதும் உடல் நலன் முடியாமல் தனக்காக நன்றாக இருப்பது போல காட்டிக் கொள்கிறாளோ என்ற எண்ணத்தில் பாலன் மனம் பதறியது.

மருத்துவரிடம் சென்றாயா, உண்மையாகவே நன்றாக இருக்கிறாயா என துருவி துருவி கேட்டவன் கவனமாக இருக்கும் படி சொல்லி விட்டு வைத்தான். அவள் நன்றாகவே பேசிய போதும் மனம் சமாதானம் அடையாமல் போக, வடிவம்மாளிடம் அம்மாவை பார்த்துக் கொள்ளும் படி சொல்லி பாட்டியையும் துணைக்கு வைத்து விட்டு இரவே தங்கையை பார்க்க சென்னைக்கு புறப்பட்டு விட்டான்.

வேறு வேலை விஷயமாகவோ அல்லது தங்கையை பார்க்க வந்தாலோ வழக்கமாக தங்கும் விடுதியில் அறை எடுத்து குளித்து தயாரானவன் உத்ராவுக்கு அழைத்து தான் வந்திருப்பதை தெரிய படுத்தினான்.

“எதுக்குண்ணா உனக்கு அலைச்சல்? நான் நல்லா இருக்கேன்தான்” என சொன்னாலும் அண்ணனை பார்க்க போகும் ஆவல் இருந்தது அவளிடம்.

“அதனால என்ன? வேற வேலையாதான் வந்தேன், இன்னிக்கு சண்டே லீவ்தானே? வெளில போகலாம், காலை டிஃபன் சேர்ந்து சாப்பிடலாம் ரெடியா இரு” என்றவன் காரெடுத்துக் கொண்டு தங்கையின் விடுதிக்கு சென்றான்.

கொஞ்சம் இளைத்து போனது போலதான் பாலன் கண்களுக்கு தெரிந்தாள் உத்ரா. பயந்து போனவன் காலை உணவுக்கு பின் மருத்துவமனை செல்லலாம் என்றான்.

“அச்சோ அண்ணா! என் உடம்புக்கு எதுவுமில்ல” என்றாலும் அவன் சமாதானம் கொள்ளவில்லை.

“அப்போ மனசுக்கு என்ன?” எனக் கேட்டான்.

உத்ரா கண்டனமாக பார்க்க, “என்னடா? என்ன பிரச்சனை உனக்கு?” என அக்கறையாக கேட்டான்.

“நீ இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை?” எனக் கேட்டு சிரித்தாள்.

“ம்ம்… ஆதவனுக்கு கல்யாணம் வைக்க போறாங்க” என பாலன் சொல்ல, நொடி நேரத்தில் தன் மன வேதனையை மறைத்துக் கொண்டவள், “ஓ யாருண்ணா பொண்ணு, எப்போ கல்யாணம்? நான் வரணுமா என்ன? லீவ் இருக்காதுன்னு நினைக்கிறேன், நான் வரலை ண்ணா” இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

தன்னிடம் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து கேள்விகளாக கேட்கும் அவளிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான் பாலன்.

உத்ராவுக்கு இந்த விஷயம் பிரியா மூலம் ஏற்கனவே தெரியும், அதனால்தான் வெகு சாமர்த்தியமாக அண்ணனிடம் தன் உணர்வுகளை மறைக்க முடிந்தது. ஆனால் தங்கையின் உள்ளக் கிடங்கில் இருப்பது அண்ணனுக்கு எப்போதோ தெரியும் என அவள் அறிந்திருக்கவில்லை.

“உனக்கும் கல்யாணம் பண்ணலாமா உத்ரா?” என பாலன் கேட்க திடுக்கிட்டு போனாள்.

“எதுக்கு இவ்ளோ ஷாக்? ஏன் உனக்கு வயசாகல?”

“அப்படியா? உனக்கு மட்டும் வயசு ஆகாம இருக்கிறதா நினைப்பா? எனக்கு அண்ணி வேணும், அண்ணி கூட ஜாலியா அட்லீஸ்ட் ரெண்டு வருஷமாவது இருந்திட்டு அப்புறம்தான் எனக்கு கல்யாணம்”

“உனக்கு பண்ணாம வருணுக்கு பண்ண முடியாது உத்ரா” என்ற அண்ணனை முறைத்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க உத்ராவின் கைபேசியில் அழைப்பு வந்தது.

பிரியாவின் எண்ணாக இருக்க பேசியதோ ஹர்ஷினி. அதிர்ச்சியும் திகைப்புமாக சில நிமிடங்கள் அவள் சொன்ன செய்திகளை கேட்டிருந்தாள் உத்ரா.

எதுவோ பிரச்சனை எனும் அளவில் புரிந்து கொண்ட பாலனும் என்ன என்ற யோசனையோடு அமைதியாக தங்கையை பார்த்திருந்தான்.

“அண்ணா, பிரியாவுக்கு பிராப்லம், நாம உடனே அவ வீட்டுக்கு போகணும்” என்ற தங்கையை நிதானமாக பார்த்தவன், “பிரியாவுக்கு என்ன?” எனக் கேட்டான்.

“பொறுமையா சொல்ற அளவுக்கு டைம் இல்ல ண்ணா. நல்ல வேளை நீ வந்த, இல்லண்ணா எனக்கும் என்ன பண்ணன்னு தெரிஞ்சிருக்காது, வா சொல்றேன்” என உத்ரா எழ பாலனும் எழுந்து கொண்டான்.

நடந்து கொண்டே ஹர்ஷினி சொன்ன விஷயத்தை அவள் சொல்ல அதிர்ச்சியில் நின்று விட்டான் சிவபாலன்.

அண்ணனை திரும்பி பார்த்தவள், “என்னண்ணா அவளுக்கு நம்ம ஹெல்ப் தேவை” தவிப்போடு சொன்னாள்.

தன்னிலை அடைந்து தங்கையை காரில் அழைத்துக் கொண்டு சென்றவன் வழியில் அவளது விடுதியில் நிறுத்தி விட்டான்.

உத்ரா தன் அண்ணன் முகம் பார்க்க, “நீ வர வேணாம், நான் பார்த்துக்கிறேன். ஹாஸ்டல் போ” என்றான்.

“ஏன் ண்ணா நான் வந்தா அவளுக்கு ஆறுதலா இருக்கும்” என்றாள்.

“அங்க போய் அவளை பார்ப்பேனா உன்னை பார்ப்பேனா? நீ என்ன செய்றன்னா உடனே மாமாவுக்கு… இல்லையில்ல ஆதவனுக்கு கூப்பிட்டு சொல்லு, உடனே கிளம்பி வர சொல்லு” என சொல்லி அவளை இறக்கி விட்டு காரை பிரியா தங்கியிருக்கும் வீடு நோக்கி விட்டான் பாலன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement