Advertisement

அவரை தாண்டி சென்று விழுந்த பையிலிருந்து அவர் வாங்கி வந்திருந்தவை எல்லாம் சிதறி தெறித்தன. திரும்பிப் பார்க்கும் தைரியமின்றி தளர்வாக நடந்து சென்றார் வைத்தியநாதன். 

எத்தனை வருட மன சுமை? அத்தனையையும் கொட்டி தீர்த்ததில் லேசாகிப் போன மனதுடன் பெரிய மூச்சை விட்ட பிரகதீஸ்வரியின் முகத்தில் அதி நிறைவான புன்னகை. 

ஓடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டான் வருண். அம்மாவை பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள் உத்ரா. மகனின் மார்பிலிருந்து தலையை நிமிர்த்தி பிரியாவை தேடினார் பிரகதீஸ்வரி. அவள் சுவரில் சாய்ந்த வண்ணம் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க தன்னிடம் வர சொல்லி கை நீட்டினார்.

அவர்களின் பக்கம் வந்த பிரியா வருணையும் உத்ராவையும் பிரித்து விட்டு தன் அத்தையின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள். பிரியாவின் இரு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டவர், “நாம தேங்காய் பர்ஃபி செய்யலாமா?” எனக் கேட்டார். 

“எஸ் கண்டிப்பா. ஸ்வீட் செய்றோம், கொண்டாடுறோம்” என உற்சாக குரலில் சொன்ன பிரியா கையோடு அவரை இழுத்துக் கொண்டு சமையலறை சென்றாள். 

சௌமியா கலங்கிய கண்களும் சிரிப்புமாக அவர்களை பார்த்து நிற்க அவளிடம் “தேங்க்ஸ்” என்றாள் உத்ரா. 

“நீங்க பிரியாக்காவுக்கு எப்பவுமே எதுக்காகவும் தேங்க்ஸ் சொல்றது இல்ல” என வருத்தமாக சொன்னாள் சௌமியா. 

மலர்ந்து சிரித்த உத்ரா, “வாபஸ்” என சொல்ல சௌமியாவும் சிரித்தாள். 

உள்ளே சிரிப்பு சத்தமும் பாத்திரம் உருளும் சத்தமும் சேர்ந்து கேட்க, “நிஜமாவே அம்மாதான் பர்ஃபி கேட்டாங்களா?” என வியப்பாக கேட்டான் வருண். 

“ப்ச் இருக்காது. பாலாண்ணாவுக்கு பிடிச்ச ஸ்வீட்டா இருக்கணும். அம்மா சொல்லியிருப்பாங்க அவகிட்ட” என துல்லியமாக கணித்து சொன்னாள் உத்ரா.

“என்ன நடந்துச்சு இப்போன்னு இன்னும் இன்னும் ரீவைண்ட் பண்ணிட்டே இருக்கேன் உத்ரா. அம்மாக்கு என்னாச்சு?” எனக் கேட்டான் வருண். 

“நான் நாம செய்ய தவறுனதை நம்ம அண்ணி செய்திட்டா” கண்ணீர் நிறைந்த விழிகளோடு நிஜமான வருத்தம் பிரியா மீது பெருமை என இரண்டும் கலந்த தொனியில் கூறினாள் உத்ரா. 

சார்லி அமைதியாக படுத்திருக்க அதை தூக்கி கொஞ்சிய வருண், “கலக்கிட்டடா சார்லி. எப்டி எப்டி… எப்டி அவரை பார்த்து கோவ பட்ட… லொள் லொள்…” அவன் சார்லியிடம் பேச அதுவும் தன் மொழியில் பேசியது. 

சார்லியை இறக்கி விட்ட வருண், “நான் அண்ணனை பார்த்திட்டு வர்றேன்” என சொல்லி சென்றான். 

கடை கட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்த அண்ணனிடம் எல்லாம் சொன்னான் வருண். வீடு வரை வைத்தியநாதன் வந்ததில் பாலனுக்கு முதலில் கோவம் என்றாலும் அம்மா தன் பேச்சாலேயே அவரை அடித்து துவைத்து அனுப்பியதை கேட்டதும் நிம்மதியாக இருந்தது. 

“அந்தாள் போனதும் அம்மா முகத்துல ஒரு சிரிப்புண்ணா. நான் இது வரை பார்த்ததே இல்ல. இதை அம்மா முன்னாடியே செய்திருக்கலாம்” என்றான் வருண். 

“நமக்கு நெருக்கமானவங்க பாதிக்க படறப்போ அதுக்கு காரணமானவங்கள எப்படி பழி வாங்குறது, எப்படி அவங்கள கஷ்ட படுத்தி பார்க்கிறதுன்னு எவ்ளோ யோசிக்கிறோம். பிரியா மட்டும்தான் பாதிப்படைஞ்சவங்கள எப்படி மீட்டு கொண்டு வர்றதுன்னு யோசிச்சிருக்கா. நமக்கு ஏன் டா தோணாம போச்சு?” எனக் கேட்டான் பாலன். 

“என்கிட்ட ஆன்சர் இல்ல ண்ணா. ஆனா சௌமியா முகத்தை பார்க்க முடியலை. காலத்துக்கும் அவளுக்கு உறுத்தல் கொடுத்திட்டேன்ல ண்ணா நான்?” 

தம்பியை தட்டிக் கொடுத்த பாலன், “அன்பால சரி செய்” என்றான்.

“ண்ணா… என்ன என் அண்ணி ட்ரைனிங்கா?” 

“போடா!” கொஞ்சமாக வெட்கப்பட்டான் பாலன். 

பேசிக் கொண்டே வெளியில் வந்தனர். 

எதிரில் தெரிந்த நரேன் கடையை பார்த்த வருண், “உன்னை கொலை செய்ய ட்ரை பண்ணினான் ண்ணா. எதுவும் செய்ய வேணாமா இவனை?” என கேட்டான். 

“இவங்க அடையாளமே இந்த கடைதான். நம்ம ஊர் பேர் சொன்னா சுத்தி உள்ளவங்களுக்கு இந்த கடையும் நினைப்பு வருதுதானே? இந்த கடைய ஒண்ணுமில்லாம ஆக்கி அவனுங்கள செல்லாத காசு ஆக்கிடுவோம். நம்ம கடைய திறப்போம் முதல்ல, அப்புறம் அவனுங்கள கவனிச்சுக்கலாம். நீ ஏதாவது எனக்கு தெரியாம பண்ணிடாத” என்றான். 

“அதெப்படி ண்ணா அவன் கை காலையாவது…”  என்ற தம்பியை முறைத்த பாலன், உடனே இயல்பாகி,“வேணாம் வருண், நம்ம வாழ்க்கைய நாம வாழ வேணாமா?” எனக் கேட்டான். 

எனக்கு ஏதாவது ஒன்று என்றால் நீ விடாதே இவர்களை என முன்பொரு முறை சொன்ன அண்ணன் தானே இவர் என உற்று பார்த்தான் வருண். 

“டேய் என்னை பார்த்தது போதும், நீ கிளம்பு, நைட் நான் வர லேட் ஆகும், எனக்காக வெயிட் பண்ணாம தூங்கணும்னு பிரியாகிட்ட சொல்லிடு” என்ற அண்ணனை கிண்டலாக பார்த்தான். 

“டேய் போடா!” வாய் கொள்ளாமல் வழிந்த சிரிப்போடு சொன்னான் பாலன். 

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் கடைகளுக்கு மெதுவாகத்தான் செல்வான் பாலன். வீடு சென்றாலும் கணக்கு பார்க்க விடுவதில்லை பிரியா,  ஏதாவது தொந்தரவு செய்த வண்ணம் இருப்பாள். எனவே எல்லாம் முடித்து தாமதமாகத்தான் வீடு சென்றான். பிரியாவை தவிர அனைவரும் உறங்கியிருந்தனர். 

திண்ணையில் அமர்ந்திருந்தவள் இவனை கண்டதும் முகத்தை உர் என வைத்துக்கொண்டு ஹால் சென்றாள். உள்ளே வந்தவன் அம்மாவை சென்று பார்த்தான். 

எப்போதும் உடலை குறுக்கிக் கொண்டு படுத்திருப்பவர் இன்று ஒரு பக்கம் ஒருக்கலித்து உடலை குறுக்காமல் மனதின் இளக்கம் முகத்தில் தெரிய உறங்கிக் கொண்டிருந்தார். 

சத்தமின்றி ஹால் வந்தவன் அங்கே வேறு யாருமில்லை என உறுதி செய்து கொண்டு பிரியாவை அணைத்தான். இரு நிமிடங்கள் கழித்து விலகியவன் அவள் முகத்தை பார்க்க என்ன முயன்றும் அவளால் புன்னகை செய்யாமல் இருக்க முடியவில்லை. 

அவனுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டே மாலையில் நடந்ததை இவளும் ஒரு முறை ஒப்பிக்க ஆரம்பித்தாள். இப்போதுதான் கேட்பது போல அவனும் பொறுமையாக கேட்டுக் கொண்டான். 

அறைக்கு வந்த பின் அவன் மடி மீது அமர்ந்து கொண்டவள் அவனுக்கு பர்ஃபி எடுத்து ஊட்ட ஒரு வாய் சாப்பிட்டவன், “எனக்கு இதுன்னா ரொம்ப பிடிக்கும், ரொம்ப வருஷம் கழிச்சு இன்னிக்கு சாப்பிடுறேன். நல்லா இருக்கு பிரியா” என்றான். 

“அப்படியா உங்களுக்கு பிடிக்குமா?” அறியாதவள் போல கேட்டவள் இன்னொரு பர்ஃபி கொடுத்தாள்.

“அச்சச்சோ பிரியா! நான் பிரஷ் பண்ணிட்டேன், இப்போ இதை கொடுத்திட்ட, திரும்ப பிரஷ் பண்ண சொல்லாத” பாவமாக சொன்னான். 

“அவ்ளோ பயமா என் மேல?”

“எதுக்கெடுத்தாலும் சின்ன புள்ள மாதிரி அடம்ல செய்வ நீ. சமாளிக்க கஷ்டமா இருக்கு” என்றான்.

அவன் மூக்கோடு மூக்குரசியவள், அவன் கன்னத்தில் கன்னம் வைத்து காதில் ரகசியமாக, “இனிமே சின்ன பொண்ணுன்னு சொல்லக்கூடாது என்னை, உங்களை அப்பா ஆக்கிட்டேன் நான்” என்றாள். 

அவள் முகத்தை தன்னிடமிருந்து விலக்கி பிடித்து, “நிஜமாவா?” எனக் கேட்டான். 

“ஆமாம் ஹாஸ்பிடல்லேயே கன்ஃபார்ம் பண்ணிட்டேன். உங்களுக்கு தேங்கா பர்ஃபிதானே பிடிக்கும்? ஸ்பெஷல் ஸ்வீட் கொடுத்து சொல்லணும்ல?” 

“பிரியா… அம்மாடி… தாங்கிடுவியா நீ?” பயத்தோடு அவன் கேட்க அவன் முடியை கலைத்து விட்டவள், “ப்ரெக்னன்ஸி என்ன டிஸீஸா? கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணுவீங்க, தூக்கிட்டு சுத்துவீங்க, ரொம்ப சந்தோஷ படுவீங்கன்னு எல்லாம் நினைச்சேன். சத்தியமா இந்த ரியாக்ஷன் எக்ஸ்பெக்ட் பண்ணல நான். போங்க நீங்க?” அவன் மடியிலிருந்து எழுந்து தள்ளி அமர்ந்து கொண்டாள். 

அவள் பக்கத்தில் அமர்ந்து தன்னை பார்க்க அவளை திருப்பியவன், “கோச்சுக்காத பிரியா. நிஜமா பயமாதான் இருக்கு, நான் என்ன செய்ய?” எனக் கேட்டான். 

“சௌமியா என்னை விட சின்னவ” 

“அந்த புள்ளையும் கஷ்ட படுதுதானே?” 

“எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். இதெல்லாம் நார்மல். கஷ்ட பட்டா நீங்க பார்த்துக்க மாட்டீங்களா? குழந்தை வேணும்னு ஆசை இல்லையா உங்களுக்கு?” 

அவள் புறங்கை பிடித்து முத்தமிட்டவன், “ம்ம்… ஆனா ஒண்ணு போதும் நமக்கு” என்றான். 

“முதல்ல இந்த குழந்தையை பெத்து எடுக்கிறேன். மத்தத அப்புறமா பிளான் பண்ணிக்கலாம்” என்றவள் ஆசையாக அவன் கையை எடுத்து தன் வயிற்றில் பதித்துக் கொண்டு, “பெட்ல குறும்பு பண்ணும் போது குழந்தை வரும்னு தெரியாதா உங்களுக்கு? ஷாக்க குறைச்சிட்டு சிரிங்க ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்” என்றாள். 

“நான் குறும்பு பண்ணினேனா, நீதான்…” என்றவன் அவள் முறைப்பில் பேச வந்ததை மாற்றி, “டாக்டர்கிட்ட காட்டிட்டியா? என்ன சொன்னாங்க?” என அக்கறையாக கேட்டான். 

“மூணு மாசம் உன் ஹஸ்பண்ட்ட எந்த குறும்பும் பண்ண சொல்லாதம்மான்னு சொல்லிட்டாங்க” உதடுகள் பிதுக்கினாள். 

அடக்க முடியாமல் சிரித்து விட்டவன், ஒரு பர்ஃபி எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டு, “கவலை படாத, பாப்பாக்கு கஷ்டம் தராம குறும்பு பண்றேன்” என்றான். 

“ம்ம்ம்… நைட் மட்டும் சீக்கிரம் வந்திடுங்க, ரொம்ப நேரம் முழிச்சிருக்க முடியலை. நிறைய செல்லம் கொஞ்சணும் என்னை, நல்லா பாம்பர் பண்ணி பார்த்துக்கணும். அப்புறம்…” யோசித்தவள், “ஹான்… நிறைய சர்ப்ரைஸ் கிஃப்ட் தரணும். ஹாஸ்பிடலுக்கு செக் அப் போகும் போது எதுவும் சாக்கு சொல்லாம கூட வரணும், நான் என்ன அடம் பண்ணினாலும் சலிச்சுக்காம அதட்டாம சிரிச்சிட்டே ஹேண்டில் செய்யணும் என்னை. வாமிட் வந்தா…” சட்டென அவள் வாயை மூடி விட்டான் பாலன். 

அவளிடமிருந்து அவன் விலகிய பின், “இப்படி கூட அடிக்கடி என்னை பேச விடாம ஆஃப் பண்ணனும்” என சொல்லி கல கல என சிரித்தாள். 

“ஆக மொத்தம் உன் சேட்டை இப்போ உள்ளதை விட நாலு மடங்கு ஆக போகுது, என்ன செஞ்சாலும் சமாளிக்க நான் ரெடியா இருந்துக்கணும். அதானே, வா தூங்கு” என சொல்லி அவளை ஒரு வழியாக படுக்க வைத்து விட்டான். 

அவள் உறங்கிய பின் பாலனுக்கு உறக்கமே வரவில்லை. பிரியாவை மென்மையாக அணைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். கற்பனையாக பிரியாவின் சாயலில் ஒரு குழந்தை உருவம் தெரிய உள்ளுக்குள் நெகிழ்ந்து போனான் பாலன்.  

Advertisement