Advertisement

அத்தியாயம் -32

வைத்தியநாதனை பிரகதீஸ்வரி நேரில் கண்டு பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் இப்போதும் அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கேட்டை திறந்து கொண்டு உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தவரை, “அப்படியே திரும்பி வெளில போய்டு!” என்ற வருணின் கோவமான குரல் தடுத்து நிறுத்தியது. 

வருணை எதிர்பார்த்திராதவர் அவனை கெஞ்சுதலாக பார்த்தார். 

“ஹேய் உன் ஆகட்டிங் ஸ்கில் எல்லாம் என்கிட்ட காட்டாத. வீட்டுல வச்சு பிரச்சனை செய்ய கூடாதுன்னு நினைக்கிறேன், வாயால சொல்லிட்டு இருக்கிறப்பவே தப்பிச்சு போயிடு” என்றான். 

வருணிடமிருந்து பார்வையை அகற்றி பிரகதீஸ்வரியை பார்த்தார் வைத்தியநாதன். 

பழைய பிரகதீஸ்வரியாக இருந்திருந்தால் இந்நேரம் அதிர்ச்சியில் மயங்கிப் போயிருக்க கூடும். ஆனால் கடந்த சில மாதங்களில் அவருள் நல்ல மாற்றம் வந்திருக்க, “எதுவும் சொல்லாத வருண், நீ உள்ள போ” என அமைதியாக சொன்னார். 

வருண் தன் அம்மாவின் முகத்தை பார்க்க, “வரட்டும், எனக்கு கொஞ்சம் பேசணும்” சின்னஞ்சிறு புன்னகை தாங்கி சொன்னார். 

அம்மாவின் கண்களில் என்ன கண்டானோ, “சரிம்மா, ஆனா உள்ள எல்லாம் போ மாட்டேன்,  உன் கூடவேதான் இருப்பேன்” என சொல்லி வைத்தியநாதனை எதுவும் சொல்லாமல் அமைதியாக அம்மாவின் அருகிலேயே நின்று கொண்டான். 

பிரகதீஸ்வரி மகனை அடக்கியது வைத்தியநாதனுக்கு நம்பிக்கை கொடுக்க தைரியமாகவே உள்ளே வந்தார். உத்ராவுக்கு பெரிதாக இவரை தெரியாது. சிறு வயதில் எப்போதோ ஓரிரு முறை கண்டிருக்கிறாள். முகத்தை சுளித்துக் கொண்டு பார்த்தவள் அம்மாவின் மற்றொரு பக்கம் போய் நின்று கொண்டாள். 

கையில் இருந்த பையை வழியில் நின்று திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்த சௌமியாவிடம் நீட்டிய வைத்தி, “இதுல பழம் இனிப்பெல்லாம் இருக்கு. வாங்கிக்க டா” என்றார். 

மறுப்பாக தலையசைத்த சௌமியா சங்கடத்தோடு பின்னால் நகர்ந்து கொண்டாள். வருத்தமாக பார்த்தவர் பையை அவள் காலடியில் வைத்து விட்டு பிரகதீஸ்வரியை நோக்கி முன்னேறினார். 

கணவனுக்கு தகவல் தரலாம் என நினைத்த பிரியா அவசரமாக உள்ளே செல்ல அவள் எண்ணத்தை கணித்திருந்த பிரகதீஸ்வரி, “வேணாம் பிரியா, சின்ன விஷயத்துக்கெல்லாம் அவனை தொந்தரவு செய்யாத, இப்போ அவன் தேவையில்லை. பொறுமையா இரு” என மெல்லிய குரலில் என்றாலும் கட்டளையாகவே சொன்னார். 

சரியென தலையசைத்து தூண் ஓரமாக நின்று கொண்டாள் பிரியா. 

ஏற்கனவே என்ன பேச வேண்டும் என மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டுதான் வந்திருந்தார் வைத்தியநாதன். அவருமே பல வருடங்கள் கடந்து பிரகதீஸ்வரியை பார்க்கிறார். 

எடுத்த உடன் “எப்படி இருக்க?” என ஆரம்பித்தார். 

ஏளனமான சிரிப்புடன், “ரொம்ப நல்லா இருக்கேன்” என தலை நிமிர்ந்து பதில் சொன்னார் பிரகதீஸ்வரி. 

“நான் உன்னை அனுப்பல. உன்னை கை விடவும் நினைக்கல. உனக்கே நல்லா தெரியும். நீதான் விட்டுட்டு போன” என வைத்தியநாதன் சொல்ல முஷ்டியை இறுக்கி கோவத்தை கட்டுப் படுத்தினான் வருண்.

சொல்லி முடிக்கட்டும் என சாந்தமாக பார்த்திருந்தார் பிரகதீஸ்வரி. 

“இப்போ வரை புள்ளைங்க மேல உன் மேல எல்லாம் பாசத்தோடதான் இருக்கேன். நீதான் கண்டதையும் பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து எனக்கு எதிரியாக்கி விட்ருக்க” என பிரகதீஸ்வரியின் மீதே குற்றம் சுமத்தியவரை கண்டு பிரியாவுக்கே ஆத்திரமாக வந்தது. 

“நீ எடுத்து சொல்லு புள்ளைங்ககிட்ட. நான் என்ன புள்ளைங்கள பார்க்க மாட்டேன் அவங்கள படிக்க வைக்க மாட்டேன் சொத்துல பங்கு தர மாட்டேன்னு எல்லாம் சொன்னேனா? இல்லையே… பிரகதீஸ்வரிக்கு உள்ள உரிமை அவளுக்கு எப்பவுமே இருக்கும்னு சொல்லித்தான் சுந்தரிய கட்டினேன்” 

எப்படி இவரால் குற்ற உணர்வின்றி இத்தனை விளக்கம் கொடுக்க முடிகிறது என அருவருப்பாக பார்த்தாள் உத்ரா.  

“இப்போ நம்ம பிரச்சனையால சௌமியாவ அவ அப்பாம்மா இங்க வந்து பார்க்க கூடாதுன்னு சொல்றது எல்லாம் நியாயம் இல்லை. நீ சொன்னா புரிஞ்சுப்பேன்னு நம்பித்தான் வந்தேன்” என்றார். 

“மாமா, இங்க யாரும் அப்படி சொல்ல சொல்லலை, நானாதான் சொன்னேன்” என்றாள் சௌமியா. 

“நீ சின்ன பொண்ணு பேசாம இரு, உனக்காகத்தான் வந்திருக்கேன் நான்” என்றார் வைத்தியநாதன். 

“நான் பேசாம இருக்கணுமா? அவங்க பட்ட கஷ்டத்தை எல்லாரை விடவும் அதிகமா என்னாலதான் புரிஞ்சுக்க முடியும். இப்போ கூட நீங்க என்ன தப்பு செய்தீங்கன்னு உணராம பேசுறதுதான் ஆச்சர்யமா இருக்கு எனக்கு” என்றாள் சௌமியா. 

“விடு சௌமியா, கடைசி வரை உணரவே மாட்டார்” தெளிந்த குரலில் சொன்னார் பிரகதீஸ்வரி. 

“உன்னாலதான் இவ்வளவும். ரெண்டு குடும்பமும் பகையா நிக்கிறதுக்கு நீதான் காரணம். நீ அப்போ இருந்த நிலையில மூணு புள்ளைங்களையும் பார்த்துகிட்டு என்னையும் எப்படி பார்ப்ப. எல்லாத்தையும் யோசிச்சுதான் சுந்தரிய கல்யாணம் பண்ணினேன். உன்னை போ ன்னு என் வாயால நான் சொன்னேனா? உனக்குத்தான் தாழ்வு மனப்பான்மை அதான் வந்திட்ட” என கோவமாக சொன்னார் வைத்தியநாதன். 

வருண் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைக்க அவன் கையை அழுந்த பற்றிக் கொண்ட பிரகதீஸ்வரி கண்களால் அவனை அடக்கினார். 

“உன் கூட வாழ்ந்த வரைக்கும் நல்லாதானே வச்சுக்கிட்டேன், ஒரு குறை சொல்ல முடியுமா என்னை? உனக்குத்தான் என் மேல அன்பு இல்லாம போய்டுச்சு” நரம்பில்லாத அவரின் நாக்கு பாதகமாக சுழன்றது. 

“நீ யார் நான் அன்பு வைக்க?” எனக் கேட்டார் பிரகதீஸ்வரி. 

வைத்தியநாதன் திகைத்து போய் பார்க்க, மீண்டும் அதே கேள்வியை கேட்ட பிரகதீஸ்வரி, “நிஜம்தான். என் புருஷன் ரொம்ப அன்பா பார்த்துகிட்டார் என்னையும் என் புள்ளைங்களையும்” என்றவரின் முகம் கோவத்தில் சிவந்து போனது. 

கண்களில் ஆத்திரம் வழிய, “அவர் செத்து போயிட்டார். என் புருஷன் என் புள்ளைங்களோட அப்பன் செத்து போய் வருஷக் கணக்காகுது. நீ எனக்கோ என் புள்ளைங்களுக்கோ யாருமில்ல, எந்த உறவுமில்ல, உன் மேல அன்பு வைக்க நான், நாங்கலாம் உனக்கும் யாருமில்ல. நீ நீ…” என கை காட்டி ஆங்காரமாக சொன்னவருக்கு மூச்சு வாங்கியது. 

ஆனாலும் விடாமல் பெரிய மூச்சுக்களை எடுத்து சக்தியை திரட்டி, “என்னை பொறுத்த வரை என் முன்னாடி நிக்குற நீ சவம் சவம்….சவம்…” என தொண்டை வலிக்க இரைந்தார். 

வருண் அம்மாவின் கை பிடிக்க அவரின் இன்னொரு கையை பிடித்துக்கொண்டாள் உத்ரா. பிரியா உள்ளே சென்று சுடு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அதுவரை வேடிக்கையாக பார்த்திருந்த சார்லி வைத்தியநாதன் முன் நின்று அவரை பார்த்து சத்தமாக குரைக்க ஆரம்பித்தது. 

வைத்தியநாதன் அசைவற்று நிற்க நீரை பருகி முடித்த பிரகதீஸ்வரி சார்லியை கையில் எடுத்துக் கொண்டு, “என்ன பெருசா செஞ்சிட்டேன் இதுக்கு? ஒரு வேளை என் கையால நான் சாப்பாடு வைக்கலைனா எனக்கென்னமோன்னு நினைச்சுகிட்டு என்னை தேடி வந்து பார்க்குது. எனக்கு முடியாம போய்டுச்சுன்னா இதுவும் சாப்பிடாம பட்டினி கிடக்குது. என் மனசுல சார்லிக்கு பெரிய உன்னதமான இடத்தை கொடுத்திருக்கேன்” என்றார். 

வைத்தியின் தலை குனிய, “உன் கூட வாழ்ந்த தீட்டு கழியத்தான் நெருப்பு என்னை சுத்த படுத்தியிருக்கு. உன்னை போல தகுதியில்லாதவன் மேல வச்ச அன்பை மறக்க முடியாம நானே எனக்கு துரோகம் பண்ணிக்கிட்டேன். இத்தனை வருஷ வாழ்க்கைய ஒண்ணுமே இல்லாம வெறுமையா வாழ்ந்திருக்கேன். தப்பு செஞ்ச…” என்றவர் பேச்சை நிறுத்தி ஏளனமாக சிரித்தார். 

“தப்புன்னு கூட உணராத நீயெல்லாம் நல்லா வாழும் போது நான் ஏன் நாலு சுவதுக்குள்ள அடைஞ்சி கெடந்தேன்? என் புள்ளைங்கள பார்க்காம விட்டேன்? இதெல்லாத்தையும் மாத்தி அமைக்க முடியாது, ஆனா இனிமே நல்லா வாழுவேன்” என கண்கள் பள பளக்க கூறினார். 

வைத்தியநாதன் பேச்சிழந்து நிற்க, “உன்னை விட்டுட்டு வந்ததால நாங்க கெட்டொன்னும் போயிடல. எம் புள்ள எங்களை விட்ரல. நான் கண் அசைக்க கூட வேணாம், மனசுல நினைச்சாலே போதும் சொடக்கு போடுற நேரத்துல நடத்தி வைப்பான்” என பெருமை பொங்க கூறினார்.

 “உனக்கெல்லாம் தண்டனை கிடைக்கலன்னு நினைக்காத. எப்பேர்ப்பட்ட புள்ள கூட இருந்து வாழ முடியாம அவனுக்கு எதிரியா நிக்கிற தெரியுமா? அதுதான் உனக்கு தண்டனை. நீ செஞ்ச தப்புக்கு உடந்தையா இருந்தவங்கள வா வராதன்னு என் வாயால நான் சொல்ல மாட்டேன்…” பிரகதீஸ்வரி பேசிக் கொண்டிருக்க, 

“இல்லத்த அவங்க இங்க வரக்கூடாது, வரவே கூடாது” என்ற சௌமியா, வைத்தியநாதனை பார்த்து, “போயிடுங்க இங்கேர்ந்து” என்றாள். 

என மனதில் நாய்க்கு இருக்கும் இடம் உனக்கில்லை என பிரகதீஸ்வரி சொன்னதிலிருந்து இன்னும் வைத்தியநாதனால் வெளி வர முடியவில்லை.

 மகனை பற்றி சொன்னது எத்தனை உண்மை? அவர் போகுமிடமெல்லாம் பாலனை பற்றி பெருமையாக கூறாதவர்கள் யார்? தந்தையாக என்ன, மனிதனாக கருதி கூட அவரை அவன் பார்ப்பதில்லையே… கனத்த மனதோடு அவர் கேட்டை தாண்ட வேகமாக கீழிறங்கிய வருண் அவர் கொண்டு வந்திருந்த பையை வெளியில் விசிறி எறிந்தான். 

Advertisement