Advertisement

அத்தியாயம் -31(2)

“அண்ணா…” என ஏதோ சொல்ல தயங்கினான்.

“என்னடா சொல்லு, ரொம்பத்தான் எனக்கு பயந்த மாதிரி… என்ன, புது கார் வாங்கி தரேன்னு சொல்லியிருந்தேனே அதா? என்ன மாடல் வேணும்னு சொல்லு. இப்போ பழைய கார்ல… வேணும்னா பெருச கூட எடுத்திட்டு போ. அடுத்த வாரம் புதுசு அங்க வந்து நிக்கும்” என்றான்.

“அதில்ல ண்ணா”

“வேற? என்ன வேணுமோ தயங்காம கேளுடா. யாருக்காக சம்பாதிக்கிறேன் நான்?”

“நான் வேலைய விடலாம்னு இருக்கேன்” என வருண் சொல்ல எதிர்பார்க்கா விட்டாலும் முழுதும் சொல்லட்டும் என அமைதி காத்தான் பாலன்.

“எவ்ளோ வேலைய நீ தனியா பார்ப்ப? அதான்…”

“நிஜமா அதான் காரணமா?”

“உன்னை கொலை செய்ய ட்ரை பண்ணுனப்ப எடுத்த முடிவு ண்ணா. அப்போ வேற வேலை இருந்ததால…” தலை குனிந்தவன், எதுவும் பேசாமல் சில நொடிகளை கடத்தி விட்டு, “என்னால அங்க நிம்மதியா வேலை பார்க்க முடியாதுண்ணா. நானும் இங்க வரலாம்னு இருக்கேன்” என்றான்.

“நீ வேலைக்கு போறேன்னு படிச்சப்பவே நான் என்ன சொன்னேன்? இங்கேயே பார்டான்னு சொன்னேனா இல்லையா? நீதான் இங்க இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொன்ன. அப்பவே மெனெக்கெடாம விட்ருந்தா இன்னொருத்தனுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கும். எல்லாத்திலேயும் அவசரம்”

“நான் வர்றேன் ண்ணா இங்க”

“நீ இங்கேயே வரதுல எனக்கும் ஓகேதான். ஆனா உன் பயம் அவசியம் இல்லாதது. இபோதைக்கு அங்க இரு. நான் சொல்றப்ப வரலாம்”

“இப்போவே அதுக்கான வேலை எல்லாம் பார்த்தாதான் ரெண்டு மூணு மாசத்துல ரிலீவ் ஆகி நான் வர முடியும்”

“திருச்சியில நீ இருந்தா சௌமியா வீட்லேர்ந்து பார்க்க வர வசதியா இருக்கும். நீ இப்போவே இங்க வர்றதுன்னா தனி வீடு பார்த்திட்டுத்தான் போற மாதிரி இருக்கும். வேற ஏதாவது யோசனை வர்ற வரை அங்கேயே இருடா”

அதற்கு மேலும் அதை பற்றி பேசவில்லை வருண். வெகு நாட்கள் கழித்து அண்ணனோடு சுமூகமான நேரமாக இருக்க கடைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தான். பாலனும் கோவத்தையெல்லாம் விட்டொழித்து சாதாரணமாக பதில் சொன்னான்.

கடை கட்டும் இடத்தை பார்த்து விட்டு வா என பாலன் சொல்ல அவனும் பார்வையிட்டு வந்து அண்ணனிடம் சில யோசனைகள் சொன்னான். மதிய உணவுக்கு இருவரும் சேர்ந்துதான் வீடு சென்றனர். பிரியாவும் வந்திருந்தாள்.

 சமையலறையில் உத்ராவும் பிரியாவும் சேர்ந்து தேங்காய் பர்ஃபி செய்கிறோம் என அதகளம் செய்து கொண்டிருந்தனர்.

சௌமியாவுக்கு சமையலறை சென்றாலே வாந்தி வந்து விடுவதால் ஹாலில் இருந்த படி எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த படியே அவர்களும் இவளிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தனர்.

வருணை கண்டதும் ஒரு கிண்ணத்தில் பர்ஃபி எடுத்து வந்து கொடுத்தாள் பிரியா.

“என்ன அண்ணி, பர்ஃபின்னு சொல்லிட்டு புட்டு கொண்டாந்து தர்ற?” என கிண்டல் செய்தான் வருண்.

“நீ என்ன அப்படியேவா முழுங்க போற, கடிச்சுதானே சாப்பிட போற? அதான் உனக்கு கஷ்டம் வேணாம்னு இடிச்சு கொண்டு வந்திருக்கேன்” என சமாளித்தாள் பிரியா.

“ஏன் இதை கொண்டு போய் அண்ணாகிட்ட கொடுக்க வேண்டியதுதானே?”

“நீதான் முதல்ல சாப்பிடணும்”

ஸ்பூனில் எடுத்தவன் அவளிடமே நீட்டி, “லேடிஸ் ஃபர்ஸ்ட், அதுவும் என் அண்ணி வேற… சாப்பிடுங்க அண்ணி” என்றான்.

அவள் பின்னால் அடி எடுத்து வைக்க கிண்ணத்தை சௌமியா கையில் கொடுத்து விட்டு அவளை ஒரு கையால் பிடித்து, “ஒழுங்கா சாப்பிடு” என வற்புறுத்தி சாப்பிட வைத்து விட்டான்.

ஒரு வாய் சாப்பிட்டவள், “நல்லாத்தான் இருக்கு” என சொல்லி, “டீ உத்ரா அப்படி ஒண்ணும் மோசம் இல்ல. நாமதான் பயந்துகிட்டு இருந்தோம்” என சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள்.

“அடிங்க…” என சொல்லி அவளை துரத்திக் கொண்டு வருணும் சமையலறை செல்ல, இரு பெண்களும் அவனை பிடித்துக்கொண்டு பர்ஃபி சாப்பிட வைக்க முயல என அங்கே கலவரப் பட்டுக் கொண்டிருந்தது.

வருணுக்கு புரையேறிப் போக பிரியா தண்ணீர் கொடுக்க அவனும் வாங்கி பருகினான்.

“இந்தா உத்ரா நைட் என் அண்ணனுக்கு ஊட்டி விடு, அது பிஸியா இருந்தாதான் பேஷண்ட்ஸ் என்னை பார்க்க வர்றாங்க. இத சாப்பிடுறதுல ஒரு வாரம் அது ஹாஸ்பிடல் பக்கமே வரக்கூடாது” என பிரியா சொல்ல முறைத்தாள் உத்ரா.

“ஏய் தப்பா இல்லமா. இந்த பர்ஃபி டேஸ்ட்ல மயங்கிப் போய் என அண்ணன் உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து பிஸியா இருக்கட்டும். அந்த கேப்ல பேஷண்ட்ஸ் எல்லாம் என்னை பார்க்க வருவாங்க, நான் பிக் அப் ஆகிடுவேன்” என பிரியா சொல்ல குபீர் என எழுந்த சிரிப்பில் வாயிலிருந்த தண்ணீரை தரையில் துப்பினான் வருண்.

“ஹையோ வருண் வாயிலேர்ந்து வாட்டர் ஃபால்ஸ்!” பிரியா கேலி செய்ய உத்ராவும் சிரித்து விட்டாள்.

ரெஃப்ரெஷ் ஆகி வந்த பாலன், “என்ன சத்தம்?” என அதட்டல் போடவும் உடனே அமைதியாகி நல்ல பிள்ளைகள் போல மூவரும் வெளியில் வந்தனர்.

சௌமியா என்ன நினைப்பாளோ என்ற எண்ணத்தில் மற்ற மூவரையும் முறைத்தான் பாலன்.

உத்ராவும் வருணும் பிரியாவை கை காட்ட, “ஹையோ நான் இல்லைங்க” கணவனுக்கு மிகவும் பயந்தவள் போல காட்டிக் கொண்டவள் சௌமியாவை கை காட்டி, “அவதான் தேங்கா பர்ஃபி சாப்பிடணும் போல இருக்கு சொன்னா. நாங்களும்…” என ஏதோ கதை புனைய ஆரம்பித்தாள்.

“ஐயோ அத்தான் நான் கேட்கல” பதறிப் போய் சொன்னாள் சௌமியா.

“நீ இல்லையா, அத்தைதான் சொன்னாங்க. ஒரு வேளை அத்தைக்கு பர்ஃபி சாப்பிட ஆசை வந்திருக்குமோ!” என பாலனிடமே கேட்டாள் பிரியா.

இவளிடம் எப்படி கோவம் கொள்ள முடியும், முளைத்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “போ அம்மாவை சாப்பிட அழைச்சிட்டு வா” என கண்டிப்பான குரலில் மனைவியிடம் சொன்னவன் உடன் பிறப்புகளை பார்த்து முறைத்தான்.

“நைசா அவளை மட்டும் எஸ்கேப் பண்ணி விட்டு எங்களை மட்டும் முறைக்கிற, வர வர சரியில்லண்ணா நீ. ஒன் சைடா போச்சு உன் நியாயம், அநீதிய கண்டா பொங்கி எழுந்திடுவார் என் புருஷன், அவர்கிட்ட சொல்றேன்” என உத்ரா மிரட்ட புன்னகையோடு தங்கையை பார்த்தான் பாலன்.

“ஆமாம் வர சொல்லு அவனை. அவனுக்கும் ஒரு கப் பர்ஃபி கொடுங்க, அப்புறம் இந்த பக்கம் தலை காட்ட மாட்டான்” என்றான் வருண்.

என்னடா என பாலன் விசாரிக்க சௌமியா பர்ஃபி இருந்த கிண்ணத்தை அவனிடம் நீட்ட அவன் வாங்க போகும் முன் வேகமாக ஓடி வந்த பிரியா தடுக்கி விழப் போனாள்.

சரியான நேரத்தில் அவளை தாங்கிப் பிடித்துக்கொண்ட பாலன், “கால்ல வீல் இருக்கா? எதுக்கு அங்கேர்ந்து சர்ருன்னு ஓடி வர்ற?” என மெல்லிய குரலில் கடிந்தான்.

“கால்ல வீல், ஷோல்டர்ல ஃபெதர் எதுவும் இல்ல எனக்கு” என சொல்லிக் கொண்டே விலகப் போனவளால் முடியவில்லை.

 அவளது சுடிதாரின் டாப்பில் இருந்த எம்ப்ராய்டரி நூல் பிரிந்து பாலனது பெல்ட்டில் சிக்கிக் கொண்டிருந்தது. கவனமாக கையாளா விட்டால் எம்ப்ராய்டரி முழுதும் பிரிந்து போகும் அபாயம் இருக்க பொறுமையாக அதை எடுத்து விட முயன்றான் பாலன்.

நூலை பிரிக்க முடியாமல் போக பெல்ட்டின் கொக்கியை வளைத்து ஒடித்து விட்டவன் மண்டியிட்டு அமர்ந்து அந்த கொக்கியையும் அவளது ஆடையிலிருந்து லாவகமாக பிரித்து விட்டான்.

“பெல்ட் போச்சு இப்போ” குறையாக சொன்னான் வருண்.

“அது போனா போகுது. ரொம்ப ஆசையா வாங்கினா, ட்ரெஸ் பாழாகலைல” என திருப்தி கொண்டவனாக சொன்னான் பாலன். அதுதானே பிரியாவின் முகம் வாடினால் எப்படி பொறுப்பான்?

மூன்று மாதங்களாக பாலனை கவனிக்கிறாள் சௌமியா. ஏதோ பிரியாவை அதட்டுவது கண்டிப்பது போலவேதான் தெரியும். ஆனால் ஊன்றி கவனித்தால் அவனது செயல்கள் எல்லாம் அவள் மீதான அன்பை நேசத்தை அப்படியே காட்டும்.

கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வது என சொல்வது இதைத்தானோ என நினைத்தவள் நிகழ்வுக்கு வந்து, “பர்ஃபி அத்தான்” என சொல்லி மீண்டும் கிண்ணத்தை நீட்டினாள்.

பாலனை வாங்க விடாமல் சட்டென கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்ட பிரியா, “இது சொதப்பி போய்டுச்சு. அப்புறமா நல்லா செஞ்சு தர்றேன் உங்களுக்கு” என்றாள்.

“என்னை கொடுமை செஞ்ச, உன் அண்ணனுக்கு பார்சல் கட்டி வச்சிருக்க. உன் வீட்டுக்காரர் மட்டும் தப்பிக்கணுமா?” பொங்கினான் வருண்.

“நீங்கல்லாம் நல்லா இல்லைனு துப்பி வைப்பீங்க. இவர் மட்டும் நான் செஞ்சதுன்னு எதுவும் சொல்லாம சகிச்சுக்கிட்டு சாப்பிட்ருவார், பாவம்ல இவர்?” எனக் கேட்டாள் பிரியா.

பாலன் மீது அவன் உடன்பிறப்புகளுக்கும் அளவுக்கதிகமான அன்பும் மரியாதையும் உண்டுதான். ஆனால் பாலன்தான் இவர்களை தாங்குவான். எல்லாம் பார்த்து பார்த்து செய்வான். பிரியாவின் செயல் சிறுபிள்ளை போல இருந்தாலும் நுணுக்கமான விஷயத்தில் கூட பாலனை கவனிப்பதில் அவளை மிஞ்ச யாருமே கிடையாது.

தன் அண்ணன் மீதான பிரியாவின் கரிசனையில் உருகிப் போன வருண், “ஹேய் அண்ணி அவ்ளோ மோசமில்லை. நல்லாத்தான் இருக்கு, அண்ணனுக்கும் கொடு” நல்லவிதமாக சொன்னான்.

“இது சாம்பிலுக்கு செஞ்சது. இன்னும் செய்யணும், பெர்ஃபெக்ட்டா செஞ்சு ஈவ்னிங் கொடுத்துக்கிறேன். இது நல்லாருக்குன்னு சொன்னீல இந்தா நீயே சாப்பிட்டு முடிச்சிடு, வேஸ்ட் பண்ணாத” என சொல்லி வருணிடம் கிண்ணத்தை நீட்டினாள்.

வருண் பாவமாக தன் அண்ணனை பார்க்க அதற்கு மேல் அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தான் பாலன். அவனது சிரிப்பு மற்றவர்களுக்கும் தொற்ற அவர்களை நிறைவாக பார்த்துக் கொண்டே வந்தார் பிரகதீஸ்வரி.

 உணவு நேரம் இனிமையாக கல கலப்பாக சென்றது.

உணவுக்கு பின் அறைக்கு வந்த வருண் சௌமியாவிடம் மனம் விட்டு பேசினான். அவளது பிறந்த வீட்டு சொந்தம் இங்கு வர இயலாது, அதற்காக திருச்சியில் இருக்க நேரிடும். இல்லையென்றால் அண்ணன் தனியாக வைத்து விடுவார் என விளக்கமாகவே சொல்லி அவள் முகத்தை பார்த்தான்.

அவன் முன்னிலையிலேயே அவளது அம்மாவுக்கு அழைத்த சௌமியா இங்கு யாரும் வர வேண்டாம், ஏதாவது பொது இடத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி வைத்தாள்.

வருண் வியப்பாக பார்க்க, “என்னை ஒரு வார்த்தை குறையா சொல்லாம அப்படி பார்த்துக்கிறாங்க எல்லாரும். நான் என்ன திருப்பி செய்ய முடியும்? அட்லீஸ்ட் அத்தைக்கு நானாவது நியாயம் செய்யணும்” என்றாள்.

அவளது புரிதலில் அவனுக்கு ‘ஹப்பாடா!’ என இருந்தது.

பாலன் மாலையில் மீண்டும் கடைகளை பார்க்க புறப்பட உடன் வருவதாக வருண் சொல்லியும், “ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, நீ இரு” என சொல்லி அவன் மட்டுமே சென்றான்.

சௌமியா வருணுடன் ராசியாகி விட்டதால் அன்று பிரியாவின் ரகளை சற்று அதிகமாகவே இருந்தது.

பிரகதீஸ்வரி திண்ணையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சார்லி அவரது பக்கத்திலேயே வாலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தது.

சௌமியாவை அப்போதே பாலன் வீட்டிலிருந்து அழைத்து வரவில்லை, சம்பந்தி பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக வந்து விட்டார் என சொல்லி பூமிநாதனுக்கு இளங்கோவன் மேல் மனத்தாங்கல். இருவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை.

இப்போது சௌமியா இங்கிருந்து யாரும் வர வேண்டாம் என சொல்லியிருக்கவும் அதை மாமாவிடம் சொல்வதற்காக வந்திருந்தார் இளங்கோ. அவரை கண்ட பூமிநாதன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். நரேனும் வீட்டில் இல்லை.

சுயம்புலிங்கத்துடன் வைத்தியநாதனும் உடனிருந்தார்.

“என் பொண்ணு உறவே இல்லைனு ஆகிடும் போல எனக்கு. பாலன்கிட்ட பேச சொல்லி சம்பந்திகிட்ட கேட்டும் அவர் மறுத்திட்டார். என்னைய தள்ளி இருங்கன்னு சொல்றார். அதெப்படி அவளை அப்படியே விட முடியும்?” என சொல்லிக் கொண்டிருந்தார்.

பாலனுடன் சமாதானம் எனும் பேச்சுக்கே இடமில்லை என சுயம்புலிங்கத்துக்கு நன்றாகவே புரிந்துதான் இருந்தது. அவரும் என்ன செய்யலாம் என யோசிக்க தான் சென்று பேசுவதாக சொன்னார் வைத்தி.

பாலன் விரட்டி அனுப்புவான் என இளங்கோ சொல்ல, “பாலன்கிட்ட வருண்கிட்ட எல்லாம் பேசல நான். பிரகதீஸ்வரிகிட்ட பேசுறேன்” என்றார்.

அவர்களுக்குள் பேசி முடிவெடுத்து பாலன் இந்த நேரம் வீட்டில் இருக்க மாட்டான் என்பதால் உடனே வைத்தி மட்டும் தனியே புறப்பட்டார். வருண் வந்திருப்பது இன்னும் யாருக்கும் தெரியாதே.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement