Advertisement

ஜீவ தீபங்கள் -31

அத்தியாயம் -31(1)

சிவபாலனுக்கு தெரிந்தவர் ஒருவரது மருத்துவமனையில் பல் மருத்துவராக பணி செய்கிறாள் பிரியா. தனியே ஸ்கூட்டரில் சென்று திரும்பி விடுவாள். கிரவுண்ட் ஒன்றுக்கு அவளை அழைத்து சென்று பயிற்சி கொடுத்து ஒரு வாரத்தில் நன்றாக ஸ்கூட்டர் ஓட்ட பழக்கி விட்டிருந்தான் பாலன்.

 சௌமியாவுக்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. வருண் அவளுக்கு செய்தது இன்னும் உறுத்திக் கொண்டிருந்தாலும் அவனை வெகுவாக தேடவும் செய்கிறாள்.

ஒரு முறை யாருக்கும் தெரியாமல் அனுசுயா வந்து மகளை பார்த்து சென்றார். பின் இளங்கோவனிடம் பார்த்து வந்ததாக சொல்ல அவரும் மனம் மாறி “வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து கொஞ்ச நாள் வச்சிருந்து அனுப்பலாம்” என்றார். பெண்ணிடம் கேட்டு விட்டு நேரில் போய் அழைக்கலாம் என அனுசுயா சொல்ல அவரும் சரி என்றார்.

அன்றைய இரவே மகளுக்கு அழைத்து கேட்டார் அனுசுயா.

“பாலன் அத்தான்கிட்ட கேட்டுத்தான் சொல்லணும் மா” என சொல்லி விட்ட சௌமியா முதலில் பிரியாவிடம்தான் கூறினாள்.

அவள் போய் கணவனிடம் சொல்ல வெகு நாட்களுக்கு பின் தம்பிக்கு அழைத்த பாலன், “நீ வா, இப்போ அந்த பொண்ணு தெளிவா தெரியுது, சமாதானம் பண்ணி உன் கூட அழைச்சிட்டு போயிடு” என சொல்லி வைத்து விட்டான்

அண்ணன் பேசி விட்டதில் தலை கால் புரியாதவன் மீண்டும் அண்ணனுக்கு அழைத்து விவரம் கேட்க, “நேர்ல வா பேசிக்கலாம்” என சொல்லி பேச்சை வளர்க்காமல் முடித்து விட்டான். இவனால்தான் இத்தனை சங்கடம் என நினைத்த பாலனுக்கு இன்னும் தம்பி மீது கோவம் தீரவில்லை.

மூன்று மாதங்களுக்கு பின் அந்த வார இறுதியில் வீட்டுக்கு வந்தான் வருண். ஆள் கொஞ்சம் மெலிந்து முகமும் வாடிப் போய் தெரிந்தான். பாலனுக்கு தம்பியை அப்படி காணவும் மனம் பதறி விட்டது. ஆனாலும் இறங்கிப் போய் சகஜமாக பேச முடியவில்லை.

வா என்பது போல தலையசைத்த பாலன் ‘வந்த உடனே என்னத்த பேசுறது, இரண்டு நாட்கள் இருப்பான் பேசிக் கொள்ளலாம்’ என நினைத்து அமைதியாக இருந்து விட்டான்.

வருண் வந்தது சௌமியாவுக்கு இன்னும் தெரியாது. அவள் முன்பிருந்த அறையில் கழிவறை வசதி கிடையாது என்பதால் வருணின் அறைக்கு எப்போதோ சென்றிருந்தாள். அவனுக்கும் அவள் தன் அறையில் தங்குவது தெரியாது.

அறைக்குள் நுழைந்தவன் தன் படுக்கையில் சௌமியாவை கண்டு விட்டு ஒரு நொடி அப்படியே நின்றான். பின் மெல்ல கதவை மூடி விட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்னதான் பிரியா அவளை நன்றாக கவனித்துக் கொண்டாலும் மசக்கை கொஞ்சம் படுத்துகிறது, மனக் கவலை வேறு. எனவே அவளும் ஆள் மாறிப் போய் தெரிந்தாள்.

மெல்ல கண் விழித்தவள் அருகில் வருணை கண்டு விட்டு திடுக்கிட, “நான்தான் படு படு” என்றான்.

அவன் மீது கோவம்தான், இத்தனை நாட்கள் இங்கு இருக்கிறாளே… பிரியா நிறைய பேசி இவளது மனதை கரைய வைத்திருந்தாள். அடிக்கடி வந்து பார்த்து செல்லும் உத்ரா சிறு வயதில் தாங்கள் பட்ட வேதனைகளை கூறி வருணின் செயலை நியாய படுத்தா விட்டாலும் அவனது மனநிலை பற்றி விளக்கியிருந்தாள்.

யார் என்ன சொன்னாலும் கணவனின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதலித்த நாளில் இருந்து அவன் காட்டிய அன்பில் ஒரு நொடி கூட கயமையையோ பொய்மையையோ உணர வைக்கவில்லையே அவன். அதனால்தானோ என்னவோ அவன் அளித்த ஏமாற்றத்தையும் எளிதாக கடக்க முடியவில்லை. ஆனால் கரு சுமக்கும் இந்த வேளையில் எதையும் இழுத்துப் பிடிக்கும் மனவலிமையும் இல்லை.

இரவில் தனியாக இருக்க பிடிக்காமல் சாய்ந்து கொள்ள அவனைதான் பாவி மனம் நாடுகிறது. கூட இருந்து சண்டை போட்டுக் கொள்ளலாம், இனி பிரிந்திருக்க முடியாது எனும் மன நிலைக்கு வந்து விட்டவள் எதுவும் சொல்லாமல் அவன் மடியில் தலை வைத்துக்கொண்டாள்.

அவளின் செய்கையை வருணால் நம்பத்தான் முடியவில்லை.

அவள் கன்னத்தை மென்மையாக வருடி விட்டுக் கொண்டே, “எப்படி இருக்க?” எனக் கேட்டான்.

“ம்ம்…” என்றவளுக்கு வேறு பேச்சு வரவில்லை.

சில நிமிடங்கள் இப்படி அமைதியாகவே கடந்தது. லேசாக குனிந்து அவளது போர்வையை விலக்கியவன் எதுவும் சொல்லி விடுவாளோ சத்தம் போடுவாளோ என்ற பயத்தோடே மெதுவாக அவளது வயிற்றில் கை வைத்தான். பட்டும் படாமலும் இருந்த அவனது கையை வயிற்றோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டவளுக்கு அழுகையாக வந்தது.

அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட இவனிடம் சக்தி இல்லை. செய்த காரியம் ஆயிரம் குத்தூசிகளாக நெஞ்சில் பாய அவனது கண்ணீரும் அவள் கன்னத்தில் விழுந்தது.

 நிமிர்ந்து அவனை பார்த்தவள், “ஏன் அப்படி செஞ்சீங்க? என் அன்பை புரிஞ்சுக்கவே இல்லைல நீங்க?” எனக் கேட்டாள்.

அவளை எழுப்பி உட்கார வைத்தவன் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

“அத்தை பட்ட கஷ்டத்தை நானும் படணும்னு நினைச்சீங்களா?”

“சத்தியமா இல்ல சௌமியா. அம்மாவை நினைச்சு வருந்தாதவங்களுக்கு வலி கொடுக்க நினைச்சு இப்படி செஞ்சிட்டேன். உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்ல எனக்கு” என்றான்.

“என்கிட்ட இப்படின்னு சொல்லியிருக்கலாம்தானே? நானே போயிருந்திருப்பேன். நீங்க ஏமாத்தினததான் ஈஸியா எடுத்துக்க முடியலை” என சொல்லி தேம்பினாள்.

“இப்போ போய் இப்படி அழுவலாமா? தப்ப உணர்ந்தேட்டேன் சௌமியா” மன்றாடுதலாக சொன்னான்.

சௌமியாவின் காயம் அத்தனை எளிதில் ஆறி விடாதுதான். ஆனால் இதற்கு மேலும் அதை பற்றி பேச விரும்பாமல், “உங்க கூட அழைச்சிட்டு போறீங்களா?” எனக் கேட்டாள்.

ஆசுவாசமாக உணர்ந்தவன், “ம்… ரெண்டு நாள்ல நான் கிளம்பும் போது அழைச்சிட்டு போறேன்” என்றான்.

தன் அணைப்பில் அவளை வைத்துக்கொண்டே அவளை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க அம்மா அழைத்து பேசியதை சொல்லி அவன் முகம் பார்த்தாள்.

அவளை தீர்க்கமாக பார்த்தவன், “நான் எப்படியோ, ஆனா என்னை பத்தி நம்ம குடும்பத்து பகை எல்லாம் தெரிஞ்சுதானே என்னை விரும்பின நீ? நீயே சொல்லு என்ன செய்யலாம்னு?” என அவளிடமே கேட்டான்.

“அம்மா அப்பா இனியா எல்லாரையும் பார்க்க ஆசையா இருக்கு. நரேஷ் கரண்கிட்ட கூட பேசி நாளாச்சு…” என சொல்லி மூக்குறிந்தாள்.

வருணால் கடிந்து கொள்ளவும் முடியவில்லை, வர சொல் என சொல்லவும் முடியவில்லை. அண்ணன் தன்னை ஏன் அழைத்தார் என்பது இப்போது புரிந்தது. தற்சமயம் அது பற்றி எதுவும் சொல்லாமல் பேச்சை மாற்றி விட்டான்.

காலை உணவு அனைவரும் சேர்ந்துதான் சாப்பிட்டனர். வருணோடு சௌமியா இணக்கமாக இருப்பது கண்டு ஒரு வகையில் நிம்மதி அடைந்தான் பாலன். சின்ன அண்ணன் வந்திருப்பது தெரிந்து வந்த உத்ரா பிரியாவையும் வீட்டில் இருக்க சொல்லி கேட்டாள்.

“திடீர்னு எப்படி போகாம இருக்க? பேஷண்ட்ஸ் ரொம்ப வர மாட்டாங்கன்னாலும் யாராவது வருவாங்க. ஒரு மணிக்குள்ள வந்திடுறேன்” என சொல்லி கிளம்பி விட்டாள் பிரியா.

தம்பியை ஃபர்னிச்சர் கடைக்கு வரும் படி சொல்லி விட்டு பாலனும் கிளம்பி விட்டான். தங்கையிடம் எப்படி இருக்கிறாய் என விசாரித்தான் வருண். ஆதவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது, தன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்பதை முன்னரே கைபேசி வாயிலாக சொல்லியிருந்தாள்.

இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அவள் நேரில் சொல்லவும் கேட்ட வருணுக்கும் மகிழ்ச்சி.

ஆதவனுக்கு கைபேசியில் அழைத்து பேசிய உத்ரா திடீரென, “இந்தாங்க வருண்கிட்ட பேசுங்க” என சொல்லி வருணிடம் கைபேசியை கொடுத்து விட்டாள்.

மனதிற்குள் மனைவியை திட்டிக் கொண்டே, “எப்படி இருக்க வருண்?” என விசாரித்தான் ஆதவன்.

“இருக்கேன்… நீ எப்படி இருக்க?” எனக் கேட்டான் வருண்.

“டேய் நாம இப்படி பேசிகிட்டா நல்லாவா இருக்கு? நாளைக்கு வர்றேன் அங்க. கைகலப்புல இறங்கி தரமா ஒரு சம்பவம் பண்ணுவோம். இல்லைனா ஷாக்ல உலகம் ஸ்தம்பிச்சு போய்டும், இந்த வருஷம் மழை கூட பொய்ச்சு போய்டும்டா” என்றான் ஆதவன்.

“அப்போ வா. உனக்கு திருப்பி தர வேண்டியது நிறைய இருக்கு, மொத்தமா கணக்கு பண்ணி தர்றேன் வாங்கிக்க” என வருணும் பேச அண்ணனை முறைத்துக் கொண்டே கைபேசியை பிடுங்கிய உத்ரா, “நீங்கெல்லாம் ஜென்மத்துக்கும் திருந்த மாட்டீங்க. ஏதாவது வம்பு பண்ணி பாலாண்ணாவை டென்ஷன் பண்ணுனீங்க…” என மிரட்டினாள்.

“என்னடி பண்ணுவ?” சத்தமாக கேட்டான் ஆதவன்.

“நான் என்ன பண்ணனும்? இப்போதானே பிரியா உங்ககிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கா? அவ செய்வா ஏதாவது” என்றாள்.

“ஹேய் இது சும்மாடி, நீ பாட்டுக்கும் அவகிட்ட கோர்த்து விட்றாத. பிஸியா இருக்கேன், மதியம் பேசலாம்” என சமாளித்து கைபேசியை வைத்து விட்டான்.

பதினோரு மணி போல கடைக்கு புறப்பட்டு சென்றான் வருண்.

சுற்றி வளைக்காமல் பிரச்னையை சொன்ன பாலன், “சௌமியாவை அது குடும்பத்தோட பழகாதன்னு நாம சொல்ல முடியாது. அதே சமயம் அங்கேர்ந்து யாரையும் அம்மா இருக்க இடத்துக்கு அனுமதிக்கவும் முடியாது. திருச்சிக்கு அழைச்சிட்டு போ. அங்க வந்து பார்த்துக்க சொல்லு” என சொல்லி விட்டான்.

தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதை தெரிய படுத்தினான் வருண்.

“உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாட்டாலும் இனி எதுவும் செய்றதுக்கு இல்ல. சும்மா இதை வச்சு அந்த புள்ளகிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்காம நல்லா வச்சு வாழு. அம்மாவோட நிம்மதி நமக்கு முக்கியம்” என பொறுமையாகவே சொன்னான் பாலன்.

“ஏன் ண்ணா இப்படி பேசுற? இனிமே நாங்க இங்க வரக்கூடாதா? என்னை தனியா விடப் போறியா ண்ணா?” என்ன முயன்றும் வருணின் கண்கள் பனித்து விட்டன.

“எவன் டா இவன்? யாருடா உன்னை என்கிட்டேர்ந்து தனியாளா ஆக்க முடியும்? செய்றதெல்லாம் செஞ்சிட்டு கண்ண கசக்குறான் வளர்ந்து கெட்ட பய. போ மூஞ்ச கழுவிட்டு வா” அதட்டினான் பாலன்.

கைக்குட்டை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட வருண், சட்டென எழுந்து சாஷ்டாங்கமாக அண்ணனின் காலில் விழுந்து விட்டான்.

திடுக்கிட்டு போன பாலன் உடனே தம்பியை தூக்கி நிறுத்தி தோளோடு அணைத்து, “கடையில வந்து என்னடா வேடிக்கை பண்ணிட்டு இருக்க?” என கடிந்தான்.

“என்ன யாரும் பார்ப்பாங்களா? பார்க்கட்டுமே… இதுல எனக்கெந்த அசிங்கமும் இல்லை. எத்தனை தடவ வேணும்னாலும் உன் கால்ல விழுறேன். அப்போவும் கோவம் குறையலைன்னா அடி கொல்லு. தனியா போன்னு மட்டும் சொல்லாத” வருணின் முகம் எல்லாம் சிவந்து போய் விட்டது.

அறையின் கண்ணாடி தடுப்பின் வழி யாருக்கும் காட்சியாக வேண்டாமென நினைத்த பாலன் திரை சீலையை இழுத்து விட்டு வந்தான்.

“இந்நேரம் பார்த்திருப்பாங்க ண்ணா. நீ ஏன் ஸ்க்ரீன் போடுற?” எனக் கேட்ட வருணை, “உட்கார்டா முதல்ல, கால்ல விழுந்துதான் மன்னிப்பு எல்லாம் கேட்கணுமா? உணர்ந்தா சரி” என சொல்லி தேநீர் வரவழைத்தான்.

சௌமியாவை அவள் குடும்பத்தை முழுதும் விட்டு விடு என நாம் சொல்லக்கூடாது, அது முறையல்ல, திருச்சியில் இருக்கும் போது அவர்களை வந்து பார்த்துக் கொள்ள சொல். அவளும் அவள் பிறந்த வீட்டிற்கு சென்று வரட்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த வீட்டு ஆட்கள் இந்த வீட்டின் படி ஏறக் கூடாது. என்றும் நீ தனி இல்லை, அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன் என மிக மிக பொறுமையாக சொல்லி புரிய வைத்தான் பாலன்.

“நான் மட்டும் எப்படிண்ணா அவங்கள ஏத்துக்க முடியும்?” எனக் கேட்டான் வருண்.

“வேற வழியில்ல வருண். நீ சகிச்சுதான் ஆகணும். உனக்கு குழந்தை வர போகுது, பொறுப்பா மெச்சூர்டா இரு” என சொல்லி அவ்விஷயத்தை முடிக்கப் பார்த்தான் பாலன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement