Advertisement

ஜீவ தீபங்கள் -3

அத்தியாயம் -3(1)

வள்ளிபிரியா பல் மருத்துவம் இறுதியாண்டில் இருக்கிறாள். ரமணி தாத்தா அவரது காலத்தில் அவரது குடும்பத்துக்கு என இருந்த பிளாஸ்டிக் சாமான்கள் கடையை ‘வள்ளி பல் பொருள் அங்காடி’ என தன் மனைவி பெயரில் மாற்றினார்.

 ரமணியின் தாத்தா காலத்தில் இழந்த செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக கூடியது அப்போதுதான். அதுவரை இறங்கு முகமாகவே இருந்தவர்களுக்கு அந்த அங்காடி ஏறுமுகத்தை காட்டியது.

அப்பாவை பின்பற்றி வள்ளி பல் பொருள் அங்காடியின் பொறுப்பேற்ற மலையரசன் அதனை வள்ளி சூப்பர் மார்க்கெட் என மூன்று தளங்கள் கொண்ட மிகப்பெரிய அங்காடியாக மாற்றியிருந்தார். வெவ்வேறு இடங்களில் சிறிதாக இரண்டு கிளைகள் வேறு வைத்திருந்தார்.

அதனால் தன் மகளுக்கு வள்ளி என்ற பெயரை வைக்க அவர் பிரியப் பட, அது பழமையான பெயரென கருதிய துர்காதேவி , வள்ளி என்பதோடு பிரியா என்ற பெயரையும் இணைத்து விட்டார்.

வள்ளிபிரியாவுக்கு மிக மென்மையான குணம், தானிருக்கும் இடத்தை தனது கல கலப்பால் உயிர்ப்போடு வைத்திருப்பாள்.

பிரகதீஸ்வரி ஆதரவுக்காக தன் பிள்ளைகளோடு தாய் வீடு வந்த போது பிரியா ஒரு வயது குழந்தை. உத்ரா இவளை விட பத்து மாதங்கள் பெரியவள். வருணும் ஆதவனும் ஒத்த வயது உடையவர்கள். ஐந்து வருடங்கள் ஒரே வீட்டில்தான் வளர்ந்தனர்.

சிறு வயதிலிருந்தே பிரியாவும் உத்ராவும் நெருங்கிய தோழிகள். அதற்கு நேர் மாறாக ஒரே வகுப்பில் படித்த வருணும் ஆதவனும் எப்போதும் முட்டிக்கொள்வார்கள்.

துர்காதேவி தன் நாத்தனார் பசங்களோடு தன் பிள்ளைகளை சேர விட மாட்டார், அம்மாவின் போதனைகளை ஆதவன் கேட்டுக் கொண்டாலும் சிறு குழந்தையாக இருந்த பிரியாவுக்கு அவர் சொல்வது ஒன்றும் புரியவில்லை. உத்ரா, வருண் இருவரோடும் விளையாடிக் கொண்டே இருப்பாள். பிரகதீஸ்வரியை கண்டால் மட்டும் பயந்து போய் அழுவாள், உத்ராவே அழும் போது இவளை கேட்க வேண்டுமா?

என் பொம்மையை தொடாதே, என் தங்கையோடு விளையாடாதே, எனக்குதான் தின்பண்டம் அதிகம் வேண்டும் என சிறு பிள்ளைகளுக்கு உரிய சண்டைகள் போடுவான் ஆதவன். வருண் வேண்டுமென்றே அவனிடம் வம்பு செய்வான். படிப்பில் எப்போதும் வருண் சுட்டி, அதை ஒப்பிட்டு பேசி தன் மகனை மலையரசன் திட்ட அவனுக்கு வருண் என்றாலே சுத்தமாக பிடிக்காமல் போனது.

வருண், ஆதவன் இருவரும் சண்டையிட்டால் எப்போதும் ஆதவன் பக்கமே தீர்ப்பாகும், துர்காதேவி தன் மகனை விட்டுக் கொடுக்கவே மாட்டார். அவருக்கு பயந்தே பெரியவர்களும் மகள் வயிற்று பேர பிள்ளைகளைதான் ஒதுங்கி போக சொல்வார்கள்.

அப்படி ஒரு சண்டையின் போது பாலன் தன் தம்பிக்காக பேச ஆனாலும் அவன் நியாயம் எடுபடாமல் போனது. துர்கா பிலு பிலுவென கணவரை பிடித்துக்கொள்ள வருணை அடித்து விட்டார் மலையரசன்.

“தப்பு செஞ்சா யாருக்கா இருந்தாலும் அடிதானே? அவனும்தான் என் தம்பிய அடிச்சான்” என சொல்லி பெரியவர்கள் முன்னிலையிலேயே ஆதவனை அடித்தான் பாலன்.

 மலையரசன், “நான் கண்டிக்கும் போது நீ என்னடா குறுக்க வர்ற? தொலைச்சு கட்டிடுவேன்” என பாலனையும் அடித்து கண்டித்தார்.

அப்பா அடிப்பது வேறு, பாலன் அடிப்பது வேறு எனதான் ஆதவன் உள்ளத்தில் பதிந்து போனது. அதை மறக்க விடாமல் துர்கா அடிக்கடி நினைவு படுத்த ஆறாத அவமானமாக அவன் மனதில் பதிந்து போனது.

ஆதலால் வருணை போலவே பாலன் என்றால் கூட ஆதவனுக்கு ஆகாமல் போனது. பாலன் ஒதுங்கி விட்டாலும் வருணுக்கும் ஆதவனுக்கும் நிதம் ஏதாவது ஒரு சண்டை வந்த வண்ணமிருந்தது.

பிரகதீஸ்வரியும் அந்த வீட்டில் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. அவரது தீக்காயத்தினால் பிள்ளைகள் பயப்படுகிறார்கள், தனக்கே பகீர் என இருக்கிறது என்றெல்லாம் துர்கா சொல்ல அவரும் தன் தேவைகளுக்காக கூட யாருமில்லாத நேரத்தில்தான் அறையை விட்டு வருவார்.

பாட்டியின் மேற்பார்வையில் சாப்பாட்டுக்கு குறை இல்லை என்ற போதும் தாங்கள் சாப்பிடுகையில் துர்காவின் பார்வையில் வித்தியாசம் இருப்பதை விளங்கிக் கொண்டான் பாலன்.

பொறுத்து பார்த்த பாலன் பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தாத்தாவின் தயவில் தனி வீடு பார்த்துக் கொண்டு குடும்பத்தோடு வெளியேறி விட்டான்.

ஒரு வருடம் தாத்தாவின் நண்பரது கயிறு மண்டியில் வேலை பார்த்தான். பின் அம்மாவின் நகைகளை விற்றும் குறிப்பிட்ட தொகையை தாத்தாவிடம் கடனாக பெற்றும் தனியாக கயிறு மண்டி ஆரம்பித்தான். அதிலிருந்து அவனுக்கு வளர்ச்சிதான்.

சிறியவர்கள் மற்றவர்கள் வீடு செல்வது குறைந்து போனது. ஆனால் ஒரே பள்ளி என்பதால் பார்த்துக் கொள்வார்கள். பிரியா மட்டும் வருண் மற்றும் உத்ரா மீது கொண்ட அன்பை மாற்றிக் கொள்ளவில்லை, அவர்களும் இவளிடம் அன்பாக இருப்பார்கள்.

 மாமா வீட்டில் இருந்த காலத்திலேயே குழந்தைதனம் தொலைந்து போய்தான் இருந்தான் பாலன். அம்மாவுடன் இருப்பது, தாத்தாவுடன் கடைக்கு செல்வது எனதான் அவனது மாலை நேரம் செல்லும். ஆகவே பிரியாவுக்கு அவனோடு அதிக ஒட்டுதல் கிடையாது. அவளுக்கு நினைவு கொஞ்சம் தெரிய ஆரம்பித்த வயதில் பாலன் அவளது அண்ணனை அடித்ததை பார்த்திருக்க அவனை கண்டாலே பயம்தான்.

பாலன் குடும்பம் வேறு வீடு சென்ற பிறகு அவனை பார்ப்பதே பிரியாவுக்கு அரிதாகி விட அவனை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. எப்போதாவது பார்த்துக் கொள்ளும் போது கூட காரணமே இல்லாமல் அச்சம்தான் எழும். இன்று வரை அது அப்படியே தொடர்கிறது.

உத்ரா சென்னையிலேயே இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது சந்தித்துக் கொள்வார்கள். வருண் அடிக்கடி கைபேசியில் பேசுவான். மூவருக்கும் சேர்ந்து தனி வாட்ஸ் ஆப் க்ரூப் இருக்கிறது. ஷின்சான் என இவள்தான் அந்த க்ரூப்புக்கு பெயர் வைத்தாள்.

ஆதவன் தனி ரகம் என்றால் பாலன் தனி ரகம். ஆனால் மற்ற மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

“என்னடி பிரியா இன்னிக்கு உன் ஆளை காணோம்?” மாலையில் தாங்கள் தங்கயிருக்கும் வீட்டுக்கு திரும்பும் போது கேட்டாள் அவளது தோழி ஹர்ஷினி.

“எத்தனை தடவ சொல்றது அப்படி சொல்லாதன்னு? போடி” கடிவதை கூட அழுத்தமாக சொல்ல தெரியவில்லை.

“அப்புறம் என்ன நினைச்சு அவன்கிட்ட அப்படி சொல்லி வச்ச?” ஹர்ஷினி மிகுந்த கோவமாக கேட்டாள்.

“வேற என்ன பண்ண சொல்ற? என் பின்னால அவன் சுத்துறதை ஸ்டாப் பண்ண வேற வழி தெரியலை, அதான்” என்ற பிரியாவை நன்றாக முறைத்தாள் ஹர்ஷினி.

“ஏன் உன் அண்ணனுக்கு தெரிஞ்சவன்தானே இந்த கெளதம்? அண்ணாகிட்ட சொன்னா ஈஸியா பிராப்லம் சால்வ் ஆகிடும்”

“உனக்கு ரொம்ப தெரியும், படிச்சு கிழச்சது போதும் வா வீட்டுக்குன்னு கூட்டிட்டு போய்டும் எங்கண்ணன். வீட்டுக்கெல்லாம் தெரியவே கூடாது”

“அதுக்காக இப்படி செய்வியா?”

“எப்படியும் வீட்ல சொல்ற பையனைத்தான் கல்யாணம் செய்துப்பேன், நான் தப்பா சொன்னேனாடி? நீ வேற பேசு, நான் இன்னிக்கு ஏழு வயசு பையனுக்கு டெண்டல் ஃபில்லிங் பண்ணினேன், எவ்ளோ சமத்தா கோ ஆப்ரேட் பண்ணினான் தெரியுமா?” பேச்சை மாற்றினாள் பிரியா. ஹர்ஷினியும் வேறு பேச ஆரம்பித்து விட்டாள்.

விஷயம் இதுதான், கெளதம் இவர்கள் கல்லூரியில் பல் மருத்துவம் மேற்படிப்பு இந்த வருடம்தான் முடித்து விட்டு அவர்கள் குடும்பத்து மருத்துவமனையில் பிராக்டீஸ் செய்கிறான்.

ஆதவனும் இதே கல்லூரி என்பதால் அவனுக்கும் இவனை தெரியும், அவனது ஜூனியர்தான் கெளதம்.

அப்போதிருந்தே அவனுக்கு பிரியாவை பிடிக்கும். ஆனால் ஆதவனுக்கு பயந்து காதலை வெளிப்படுத்தாமல் இருந்தான். ஆதவன் இங்கு படிப்பு முடித்து விட்டு சென்றதுமே பிரியா பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டான்.

பிரியா வீட்டில் அவளை வெளியூர் அனுப்பி படிக்க வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் வீட்டிலிருந்து செல்வது போலத்தான் ஏதாவது படிக்க சொன்னார்கள். பல் மருத்துவம்தான் படிப்பேன் என அடம் செய்ததாலும் ஆதவன் கல்லூரியிலேயே இடம் கிடைத்ததாலும் தைரியமாக அனுப்பி வைத்தனர்.

இப்போது ஒருவன் பின்னால் சுற்றுகிறான் என சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்களோ என பிரியாவுக்கு பயம். நேரடியாக சொல்லி பார்த்தும் கெளதம் விடுவதாக இல்லை.

 எனவே, “என் படிப்பு முடியற வரை டிஸ்டர்ப் செய்யாதீங்க, அப்புறம் எங்க வீட்ல வந்து பொண்ணு கேளுங்க. வீட்ல ஒத்துக்கிட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்” என சொல்லியிருந்தாள்.

கௌதமுக்கு இதுவே அவள் காதலுக்கு சம்மதித்து விட்டது போலத்தான் இருந்தது. மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவன், காதலுக்கு ஓகே சொல்லி விட்டாள் என அன்றே நண்பர்களுக்கு விருந்தெல்லாம் கொடுத்தான். இன்னும் இந்த கல்லூரியில் படிக்கும் சிலர் அவனுடன் தொடர்பில் இருப்பதால் பிரியா அவனை காதலிக்கிறாள் என்றே கல்லூரியில் செய்தி பரவியது.

அதனால்தான் ஹர்ஷினி அவளிடம் கோவம் கொண்டாள். பிரியாவுக்கும் தெரிகிறதுதான், கொஞ்சம் அச்சமாக இருந்த போதும் இன்னும் ஆறு மாதங்கள் இண்டர்ன்ஷிப் மட்டுமே மீதம் இருக்க எதுவும் பிரச்சனை வளர்க்காமல் இப்படியே அமைதியாக பொழுதை ஓட்டி விட்டு ஊர் சென்று விடலாம் என எண்ணியிருந்தாள்.

சிறு வயதிலிருந்தே வீட்டில் அனைவராலும் தாங்கி தாங்கியே வளர்க்க பட்ட பெண். கல்லூரியில் கூட அண்ணனின் பாதுகாப்பில்தான் இருந்தாள். அத்தனை பக்குவம் கிடையாது.

‘வீட்டுக்கு வந்துதானே பொண்ணு கேட்க சொன்னோம், வரட்டுமே, வீட்ல பிடிச்சா சரின்னு சொல்ல போறாங்க, இல்லையா முடியாதுன்னு அவங்களே அனுப்பி வச்சிடுவாங்க, அவ்வளவுதானே இப்போதைக்கு பிரச்சனை இல்லை’ என்ற மனப்பாங்கு.

உத்ராவுக்கு தெரிந்தால் வருணுக்கும் கண்டிப்பாக தெரிய வரும், கோவத்தில் அவன் கௌதமை எதுவும் செய்து பிரச்சனை ஆகிப் போகுமோ என்ற பயத்தில் அவர்கள் இருவரிடமும் கூட இது பற்றி அவள் சொல்லவில்லை.

ஆனால் கௌதமிடம் தன் பின்னால் இனி வரக்கூடாது என மிக கண்டிப்போடு சொல்லியிருந்தாள். கைபேசியில் பேசக்கூட அனுமதி கொடுக்கவில்லை. அவன் இவள் வீடு செல்லும் போது தினம் பார்த்து செல்வான், தொந்தரவு எதுவும் செய்ய மாட்டான். இப்படித்தான் கடந்த ஒரு மாதமாக நடக்கிறது.

பிரியாவும் ‘என்னமோ பண்ணு, என்னை தொல்லை பண்ணாம இருந்தா சரி’ என விட்டு விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement