Advertisement

அத்தியாயம் -30(2)

இரவு சாப்பாட்டுக்கு பின், “மாடிக்கு போலாமா?” எனக் கேட்டாள் உத்ரா.

முதல் நாள் வீடு வந்த பின் அசதியாக இருக்க நேரமே உறங்கி விட்டாள். ஆதவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. இன்று காலையிலிருந்தே உத்ராவுக்கு கணவனுடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு செல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. எப்படி தானாக கேட்பது என மருகி மருகி ஒரு வழியாக கேட்டே விட்டாள். கேட்ட பின் சிவப்பு வர்ணம் வந்து பூசிக் கொண்டது அவள் கன்னங்களில்.

ஆதவன் அவளை ரசனையாக பார்க்க, “சும்மா… வந்து…” என்ன சொல்லி சமாளிக்க என திணறியவள் பெரிய மூச்சை விட்டு தோள்கள் தளர, அவனை பார்த்து அசடு பாதி வெட்கம் மீதி வழிய சிரித்தாள்.

இருவரும் மாடிக்கு வந்த பின் காற்றே வீசாமல் கம் என இருந்தது.

“சில்லுன்னே இல்ல” குறை பட்டாள்.

“ஆமாம் கொஞ்சம் ஹாட்… டா இருக்கு” மார்க்கமாக சொன்னவன் தலையில் கொட்டி, “பிச்சிடுவேன்” என்றாள்.

அவள் தோள் வளைவில் கை கொடுத்து தன்னோடு ஒன்றி நிற்க வைத்துக்கொண்டவன், “நட்சத்திரத்தை காணோம் பாரு, மழை வருமோ என்னவோ” என்றான்.

“அப்போ வாங்க ரூம் போய்டலாம்” என்றாள்.

“மொட்டை மாடி பாதி நிலா பக்கத்துல பொண்டாட்டி கூடவே சில்லுன்னு மழை…” ரசித்து சொன்னவன், “எப்படி இருக்கும் செம ல்ல?” என்றான்.

இப்போது கொஞ்சம் குளிர்ச்சியாக காற்று வீச அவனோடு இன்னும் ஒன்றியவள், “மழைல நனைஞ்சுட்டு கீழ போக முடியாது, யாராவது பார்த்தா ஷேம் ஷேம் ஆகிடும். வாங்க போலாம்” என்றாள்.

லேசாக தூறலும் விழ ஆரம்பிக்க மாடிப் படிகளின் தொடக்கத்தில் இருந்த மேற் கூரையின் கீழ் சென்று நின்று கொண்டனர். அவள் போகலாம் என சொல்லியும் கேளாமல் அவளை பிடித்து வைத்துக்கொண்டு நின்றான் ஆதவன்.

சிறு மழைதான். கால்களை நீட்டி பாதங்களை மழையில் நனைத்து விளையாடினாள் உத்ரா.

“உன்னை பத்தி சொல்லு உத்ரா” என்றான்.

“என்ன சொல்லணும்?”

“உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எல்லாம் சொல்லு” என்றான்.

“என் லவ் பத்தி சொல்லவா?” ஆசையாக கேட்டாள்.

உடனே விளக்கெண்ணெய் குடித்தவன் போல முகம் மாறியவன், தலையில் கை வைத்து உலுக்கிக் கொண்டே, “அதெல்லாம் சொல்லியே ஆகணுமா? வேணாம் வேற பேசலாம்” என்றான்.

“ப்ளீஸ் கேளுங்களேன்” என்றாள்.

வேறு பக்கம் பார்த்து உதடுகள் குவித்து மூச்சு விட்டவன், “வேணாம்” என்றான்.

“இல்ல நீங்க தெரிஞ்சுக்கணும்”

அவளை தன்னிடமிருந்து உதறி தள்ளி நிறுத்தியவன், “அறிவில்ல உனக்கு? எந்த நாதாரி பத்தியோ நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? அந்த…” சொல்லாமல் தொண்டை வரை வந்த கெட்ட வார்த்தையை விழுங்கி, “அந்த டேஷ் பத்தி எல்லாம் நான் தெரிஞ்சுக்க வேணாம். இனிமே நான் மட்டும்தான் உனக்கு, புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

“கோவ படாதீங்க அது நீங்க…”

“ஆமாம் டி நானும் சுதாவை லவ் பண்ணினேன், லவ்வா… ஹ்ம்ம்… லவ்னே வச்சுக்க. நான் அவ நம்பரை பிளாக் பண்ணிட்டேன். இப்போ நீ… நீ மட்டும்தான் எனக்குள்ள இருக்க, உன்கிட்ட அவன் நம்பர் இல்லைனா என்ன… அவன் நினைப்ப பிளாக் பண்ணு முதல்ல. நாம ரெண்டு பேருமே எக்ஸ் பத்தி பேசிக்க வேணாம். ஓகே” எரிச்சலும் கோவமுமாக கத்தினான்.

“என்ன சொல்ல வர்றேன்னு கேட்குற பொறுமையே கிடையாதா உங்களுக்கு?” அவளும் கோவப்பட்டாள்.

“தாராளமா கேட்குறேன், உன்னை பத்தி சொல்லு உன்னை பத்தி மட்டும்… விடிய விடிய கூட கேட்குறேன். மழை நிலா மாடி எல்லாம் எக்ஸ் லவ்வர் பத்தி பேசுறதுக்கு இல்ல புரிஞ்சுதா?”

“போய்யா நீயும்…” அவனை திட்ட வார்த்தை கிடைக்காமல் எரிச்சலாக பார்த்தவள் கோவமாக மாடிப் படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

“என்னை மட்டும் சொல்லுவ அந்த சுதா பத்தி பேசக்கூடாதுன்னு… நீ செய்றது சரியா? எவ்ளோ ஆசையா நேத்து உன்னை கூப்பிட வந்தேன். என் மனசை புரிஞ்சுக்காத கிராதகிடி நீ” கோவமும் ஆதங்கமுமாக பேசிக் கொண்டே ஆதவனும் கீழே வர அறைக் கதவை படார் என சாத்தி விட்டாள் உத்ரா.

கதவை தட்டியவன், “யாரும் பார்த்தா பெரிய சீன் ஆகிப் போகும். ஒழுங்கா கதவை திற” என்றான்.

“ட்ரெஸ் மாத்துறேன், வெயிட் பண்ணுங்க” என அவள் சொல்ல, “உலகத்திலேயே புருஷனை ரூம்ல வர விடாம ட்ரெஸ் மாத்துறவ நீயாதான் இருப்ப” என்றான்.

“ரொம்ப பேசுனீங்கன்னா காலைலதான் கதவ திறப்பேன்” என உள்ளிருந்து அவள் சொல்ல, கதவில் சாய்ந்து கொண்டு எப்படி இவளோடு சமாதானமாக செல்வது என யோசனையாக நின்றிருந்தான்.

ஆடை மாற்றியிருந்தவள் கதவை திறக்க கதவில் சாய்ந்திருந்தவன் சம நிலை இழந்து அவள் மேலேயே விழப் போனான். கீழே விழுந்து விடாமல் அவனை தாங்கிப் பிடித்துக்கொண்டவள், “ஒரு நிலையா இருங்க” என்றாள்.

நேராக நின்று கொண்டவன் “உனக்கென்ன கோவம்? உன் லவ் ஸ்டோரி கேட்கணும் நான் அவ்ளோதானே… ரெடி ஸ்டார்ட்” என கடுப்புடன் சொல்லி படுக்கையில் போய் குப்புற விழுந்து விட்டான்.

“இப்படி இருந்தா எப்படி சொல்றது நான்?”

“காதுதான் கேட்குது. என் மூஞ்சு ரியாக்ஷன்லாம் பார்க்க வேணாம் நீ” என்றான்.

புன்னகையுடன் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டவள், அவன் பெயரை சொல்லாமல் கதை சொன்னாள்.

பாதியிலேயே ‘யாரை சொல்கிறாள் அவளுக்கிருக்கும் மாமா பையன் நான் மட்டும்தானே?’ என சந்தேகம் வரப் பெற்றவன் அவளை பார்க்க திரும்பிப் படுத்தான்.

“அவர் தங்கச்சியும் சென்னைக்கு படிக்க வந்தா, அவளும் அவரும் சேர்ந்து இருக்கிற போட்டோஸ்லாம் அவ ஃபோன்லேர்ந்து சுட்டு எடிட் பண்ணி…” என உத்ரா சொல்லிக் கொண்டிருக்க வேகமாக எழுந்தவன் மேசையில் கிடந்த அவளது கைபேசியை எடுத்தான்.

முக்கால்வாசி புரிந்து போனாலும் இன்னும் முழுமையாக தெரியவில்லையே. அவனது அட்ரீனலின் தாறு மாறாக சுரந்து கொண்டிருந்தது.

உத்ரா வந்து தன் கைபேசியை அவனிடமிருந்து கைப்பற்ற முனைய ஒரு கையால் அவளை வளைத்து அவள் அசையாதபடி தன்னோடு பிடித்துக் கொண்டவன் மறு கையால் கைபேசி திரையை திறந்தான்.

ஏ யு என்ற ஆங்கில எழுத்துக்களால் பெயரிடப் பட்ட அந்த ஃபோல்டரை திறந்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம். அவளும் அவனும் இணைந்திருக்கும் எத்தனை போட்டோக்கள், அவனது உடல் சிலிர்த்துப் போக கூடவே உள்ளமும் சிலிர்த்துப் போனது.

அவன் முகத்தை பார்க்க திரும்பியவள், “என் லவ்வர் இவர்தான், இந்த முசுடனைதான் தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டேன்” என்றாள்.

கைபேசியிலிருந்து கண் எடுத்தவன் அவளை பிடித்திருந்த தன் இறுக்கமான பிடியை தளர்த்தி, “ஹேய் என்னடி இதெல்லாம்? ஏன் சொல்லலை என்கிட்ட? போடி…” என சொல்லி அவளை லேசாக தள்ளி விட்டான்.

“சொல்ற நிலைமைதான் நமக்குள்ள…” சலித்தாள்.

“நாலு வருஷம் முன்னாடியே ஏன் சொல்லலை?” ஆதங்கமாக கேட்டான்.

“சொல்லியிருந்தா மட்டும்?” முகத்தை சுருக்கிக் கொண்டாள்.

வேகமாக அவளிடம் வந்து அவள் முகத்தை கையில் தாங்கியவன், “யாருக்கு தெரியும்? நானும் அப்போவே லவ் பண்ணியிருந்திருப்பேன்” என்றான்.

“சும்மா… பொய். என்னை கட்டிக்க சொல்லி கேட்டும் வேணாம்னு சொன்னீங்க” உள்ளே சென்ற குரலில் சொன்னாள்.

“பெரியவங்க சம்பந்தம் பேசுறதும் நீ லவ் சொல்றதும் ஒண்ணா? எவ்ளோ டென்ஷன் உன்னால?” விலகி நின்றவன் அந்த நேர இனிய அவஸ்தையை கடக்க முடியாமல் ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்தான். பெரிய பெரிய மூச்சுகளாக விட்டான். இடையில் இவளை கோவமாக பார்த்தான், பின் தனக்குள்ளாக சிரித்துக்கொண்டான்.

திடீரென நின்று, “ஏன் டி சொல்லலை?” எனக் கேட்டான்.

“நிஜமா என்னவோ ஆகிடுச்சு உங்களுக்கு, வாங்க தூங்கலாம்” அவன் கை பிடித்து படுக்கைக்கு அழைத்தாள். அவளை சுண்டி தன்னிடம் இழுத்தவன் அணைத்துக் கொண்டான்.

“உத்ரா…” இசை போல கேட்டது அவன் குரல்.

“இன்னொரு முறை இப்படி ஒரு ஹாப்பியெஸ்ட் மொமெண்ட் என் லைஃப்ல வருமா தெரியலை. நீ வேற ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னதை ஈஸியா எடுக்கவே முடியலை தெரியுமா? அவ்ளோ திட்டினேன் அவனை… ஹையோ உத்ரா… நான் என்னையவே திட்டியிருக்கேன்…” ஏதேதோ பேசியவன், “உத்ரா உத்ரா…” என சொல்லி அணைப்பிலிருந்து அவளை பிரித்து முகத்தில் முத்தங்கள் இட ஆரம்பித்தான்.

“நாம புரிஞ்சுக்கிட்டு அப்புறம்…” என சொல்லிக் கொண்டிருந்தவளின் இதழ்களை முத்தத்தால் நிறைத்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement