Advertisement

ஜீவ தீபங்கள் -30

அத்தியாயம் -30(1)

வள்ளி பாட்டிக்கும் ரமணி தாத்தாவுக்கும் சௌமியாவை வருண் மணந்து கொண்டதில் மிகுந்த மன வருத்தம். ஆனாலும் மசக்கையாக இருக்கிறாள் என்றதும் கடமைக்காக பார்க்க சென்றனர். தனக்கு பேச ஏதாவது விஷயம் கிடைக்காதா என்ற ஆவலில் துர்காவும் உடன் சென்றார்.

சௌமியா யாருடனும் கல கலப்பாக பேசாமலே இருக்க தாத்தா பாட்டியும் அவர்களது மகளை பார்க்க சென்று விட்டனர். சௌமியா மதிய உணவு சரியாக சாப்பிடாத காரணத்தால் அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள் பிரியா.

“இந்தாடி நீயும் இந்த வீட்டு மருமகதான், அதுவும் முறையா இந்த வீட்டுக்கு வந்தவ, வேலைக்காரி இல்ல. நீ எதுக்கு மத்தவங்களுக்கு சேவகம் செஞ்சுகிட்டு திரியுற?” என சௌமியா முன்னிலையிலேயே வைத்து கேட்டு விட்டார் துர்கா.

கலங்கிப் போன சௌமியா தான் என்ன பேசுவது என்ன வினையாற்றுவது என தெரியாமல் பிரியா கொடுத்த பழச்சாறை பருகாமல் ஓரமாக வைத்து விட்டாள்.

“ம்மா நான் என்ன வேலை செய்றேன்? எல்லாத்துக்கும் ஆளுங்க இருக்காங்க. இவளுக்கு இங்க புதுசு, நாமதானே கவனிச்சுக்கணும். நீ ஏதாவது சொல்லிட்டு இருக்காத” என அம்மாவை கண்டித்தாள் பிரியா.

“அதைத்தான் சொல்றேன் நீ என்னத்த கவனிக்கணும்? வேணும்னா அந்த பொண்ணே போய் ஜுஸ் கேட்டு வாங்கி குடிச்சுக்குது. உனக்கு முன்னாடி புள்ள பெத்துக்க போறான்னா உசந்து போய்ட்டாளா? நீதான் டி மூத்த மருமக, அதுக்கு தக்க இரு நீ” என விடாமல் பேசினார்.

“கலகம் ஏற்படுத்துற நினைப்புல இங்க வராதீங்க. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு” பின்னாலிருந்து பாலனின் குரல் கேட்க பதறிப் போய் எழுந்த துர்கா பவ்யமாக நின்றார்.

“நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க” என கணவனிடம் சமாதானமாக சொன்னாள் பிரியா.

“அவங்க என்ன வேணா சொல்லட்டும், நீதான் அந்த பொண்ண பார்த்துக்கணும். அப்படி பார்க்கிறதால நீ வேலைக்காரி ஆகிடுவியா? பார்த்து பேச சொல்லு அவங்கள” கண்டிப்போடு சொல்லி நகர்ந்தான் பாலன்.

துர்கா முறைத்துக் கொண்டிருக்க அவரை அழைத்து சென்று இன்னொரு அறையில் விட்டவள், “சும்மான்னு இருக்க மாட்டியாம்மா?” என கடிந்து கொண்டாள்.

மீண்டும் இவள் சௌமியாவுக்கு எதுவும் செய்யக் கூடாது அவள் மதிக்க மாட்டாள், உன்னை வேலைக்காரி போல நினைப்பாள் என ஏற்றி விட்டார்.

 பிரியாவும் அப்படியெல்லாம் இல்லை என மறுத்து பேச, “அப்புறம் என்ன ராஜகுமாரின்னு நினைப்பாளா உன்னை? உனக்கு விவரம் போதலைன்னு உன் புருஷன் அவ முன்னாடியே அவளை நீதான் கவனிக்கணும்னு சொல்றார். நீயும் ஈன்னு நின்னுட்டு இருக்க” என வசை பாடினார்.

“போதும் மா, நீ ரெஸ்ட் எடு. நான் அப்பாவை வர சொல்றேன், கிளம்புங்க எல்லாரும்” என்றவள், “அப்புறம் நான் ராஜகுமாரியும் இல்லை வேலைக்காரியும் இல்ல. நான் சிவபாலன் வைஃப் வள்ளிப்பிரியா, அது போதும்மா எனக்கு” என மலர்ந்த முகமாக சொல்லி சென்றாள்.

அப்போதும் துர்காவுக்கு பிரியாவின் மனம் புரியவில்லை. அவளது வெகுளித்தனத்தை வைத்து குறைவாக நடத்துகிறான் பாலன் என்ற நினைப்புதான் அவருக்கு.

சௌமியாவை சமாதானம் செய்து பழச்சாறு பருக வைத்து கணவனையும் மதிய உணவு சாப்பிட வைத்தாள்.

இனி தான் இப்படி முடங்கிக் கிடக்க கூடாது, இயல்பாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டாள் சௌமியா.

அவர்கள் கிளம்பிய பின் கணவனிடம், “எப்பவும் அம்மாவை ஒண்ணும் சொல்ல மாட்டீங்க, இன்னிக்கு என்ன?” எனக் கேட்டாள் பிரியா.

“அப்படி விட்டு விட்டுத்தான் உங்கம்மாவுக்கு தைரியம் ரொம்ப கூடிப் போச்சு. உன்னை பிரைன் வாஷ் பண்ணிட்டு இருக்காங்க”

“அவங்க சொன்னா நான் கேட்பேனா?”

“சௌமியா முன்னாடி சொல்லும் போது அதுக்கு எப்படி இருக்கும்? நான் அமைதியா போயிருந்தா நானும் அவங்க சொல்றத ஆமோதிக்கிற மாதிரி ஆகாது? அதான் பேசிட்டேன். ஏன் உனக்கு வருத்தமா?”

“நீங்க எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்” என்றாள்.

“அப்புறமா உங்கம்மாவுக்கு ஒரு ஃபோன் போட்டு உன்னை பேசினதுக்காக என்னை நல்லா திட்டிட்டேன்னு சொல்லிடு. இல்லைனா ஊதி பெருசாக்குவாங்க”

“என்ன எங்கம்மாவுக்கு போய் பயப்படுறீங்களா?” கிண்டல் செய்தாள்.

“இந்த பொம்பளைங்கள பிரச்சனை செய்யாம இருக்க வைக்க அடாவடித்தனம் எல்லாம் பண்ண முடியாது. இப்படித்தான் ஏதாவது செய்யணும்” என சொல்லி சிரித்தான்.

“நேரங்கெட்ட நேரத்துல இப்படி சிரிக்கிறீங்களே… என் மூட் மாறுதா இல்லையா?” மயங்கிய குரலில் கேட்டாள்.

“உனக்கு மட்டும்தான் நான் சிரிச்சா உத்து பார்த்தா ஏன் கொஞ்சம் வேகமா மூச்சு விட்டா கூட மூட் மாறும்”

“தானா வந்து வழிஞ்சா மதிப்பே இல்லடி பிரியா!” அலுத்துக் கொண்டு திரும்பியவளின் கை பிடித்து நிறுத்தியவன், “வேலைக்கு போறது பத்தி முடிவு பண்ணிட்டியா?” எனக் கேட்டான்.

“அண்ணன் இருக்க ஹாஸ்பிடல் போக மாட்டேன். வேற எங்கேயாது போறேன், நீங்களே சொல்லுங்க” என்றாள்.

“நாளைக்கு ரெடியா இரு, நான் எனக்கு தெரிஞ்ச ஹாஸ்பிடல் எம் டி கிட்ட பேசிட்டேன். ஒரு வருஷம் அங்க பாரு. அப்புறம் தனியா பார்க்கலாம்” என்றான்.

“தனியான்னா எங்க போய் பார்க்கிறது?”

“ஜவுளிக்கடை கடை கட்டி முடியவும் ஏற்பாடு பண்றேன்” என சொல்லிக் கொண்டே அவளை இடையோடு அணைத்து தன்னோடு நெருக்கிக் கொண்டவன், “ரொம்ப வேலையா உனக்கு? சிரம படுறியா என்ன?” எனக் கேட்டான்.

“இது கூட செய்யலைனா என் கை கால் எல்லாம் துரு புடிச்சு போய்டும். ஒரு சிரமமும் இல்ல” என்றாள்.

“ம்ம்ம்… வருண் செஞ்ச வேலைல அந்த புள்ளைக்கு நிறைய மனக் கஷ்டம் இருக்கும். இப்போ உணர்ந்திருப்பான். நீ இருக்க தைரியத்துலதான் இருப்பான், புரியுதா?”

“வருணுக்கு ஒரு ஃபோன் போட்டு பேசுங்களேன்”

“இன்னும் ஏத்துக்க முடியலை அவன் செஞ்சத. வேற பேசு”

“வேற பேசவா? நான் போறேன் போங்க” என பொய்யாக சிணுங்கினாள்.

“மூட் மாறுதுன்னு சொன்ன?”

“அது எனக்குதானே? உங்களுக்கென்ன… எப்ப பாரு மூங்கில் மரம் மாதிரி செங்குத்தாவே நிக்க வேண்டியது!”

“எனக்கெல்லாம் உன்னை மாதிரி மூட் மாறிட்டே இருக்காது. உன்கிட்ட மட்டும் எப்பவுமே ஒரே மூட்தான்”

“ம்ம்… விடுங்க”

“சரி போ, நைட் சீக்கிரம் வரேன்” என சொல்லி அவளை விட்டான்.

தலையில் அடித்துக் கொண்டவள் “ஒரு முத்தம்… அட… உதடு கன்னம் கூட வேணாம்… நெத்தியில ஒண்ணு கொடுக்க கூடாது. இதுல நைட் சீக்கிரம் வரப்போ…” என்றவளுக்கு கேட்டதை வழங்கி விலகியவன், “ரொம்ப கெட்டு போயிட்ட நீ. நான் ஸ்டெடியா இருக்கும் போதே போயிடு. இல்லைனா ஒரு வேலையும் நடக்காது” என்றான்.

வேண்டுமென்றே அவன் கழுத்தை சுற்றி கைகள் போட்டு புருவங்கள் உயர்த்தி அவனை சவாலாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவன் கதவு பக்கம் பார்க்க அவன் முகத்தை தன்னை பார்க்க திருப்பியவள், “அதெல்லாம் சாத்திட்டுதான் வந்தேன்” என்றாள்.

“அத்து மீறி போற நீ” சிரிப்போடு சொன்னான்.

“நாலு நாளா விட்டத்தை வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு தூங்குறீங்க. மூஞ்சு எப்ப பார்த்தாலும் உர்ருன்னே இருக்கு. நடந்தது நடந்து போச்சு. எல்லாத்துக்கும் உங்களை போட்டு வருத்திப்பீங்களா?”

“ரொம்ப யோசனையா இருக்கு பிரியா. கொஞ்ச நாள் கழிச்சு சௌமியா வீட்லேர்ந்து சொந்தம் கொண்டாட்டிட்டு வந்தா என்ன செய்றது? அம்மாவோட நிம்மதி போய்டாதா?”

“வருண் அதுக்கு அலோவ் பண்ணாது”

“ப்ச்…. இனி அவனாலேயும் அழுத்தி சொல்ல முடியாது. அப்படி ஏதாவது நடந்தா வருணை தனியாதான் வைக்கணும்”

“இப்பவும் தனியா திருச்சியிலதான இருக்க போறாங்க?”

“அது வேற. அவன் வேலைக்கு போயிட்டு வர வசதிக்காக அங்க இருக்கான். மத்த படி அவன் வீடு இதுதான். இப்போ சரியா வருமான்னு தெரியலை”

“அப்படி பிரச்சனை ஆகுறப்போ பார்த்துக்கலாம். நிறைய யோசிக்கிறீங்க. என்னை மட்டும் கண்டுக்குறதே இல்லை”

“அதனாலதான் நைட் சீக்கிரம் வர்றேன்னு சொன்னேன்”

“நைட் வரைக்கும் தாங்குற மாதிரி இப்போ ரிலாக்ஸ் ஆவீங்களாம். நைட் ஷிப்ட் நைட் பார்த்துக்கலாம்” என சொல்லி கண்கள் சிமிட்டினாள் பிரியா.

அவன் ஏதோ சொல்ல வர, “எதுவும் பேசாதீங்க. உங்களோட பெரிய பேஜாரா போச்சு. நேரம் காலம் நீதி நியாயம்னுட்டுதானே ஏதோ சொல்ல போறீங்க? போங்க…” என்றவள் அவனை படுக்கையில் தள்ளியிருந்தாள்.

மாலையில் பாலன் மீண்டும் வெளியில் கிளம்பும் போது அவன் முகம் இறுக்கமின்றி சாந்தமாக இருந்தது, இதழ்களில் வாடாத புன்னகை ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement