Advertisement

அத்தியாயம் -29(2)

மாலையில் மருத்துவமனை சென்று விட்டு இரவில் வீடு வந்த ஆதவனின் கண்களோடு சேர்ந்து மனமும் மனைவியைதான் தேடின. உறங்க பிடிக்காமல் மொட்டை மாடிக்கு சென்றவன் உத்ராவுக்கு கைபேசியில் அழைத்து பேசினான்.

அவள் மதியம் நடந்தது வருணை அண்ணன் திட்டியது என சொல்லிக் கொண்டிருக்க, “வருண் கதை தொடர்கதை. இனி தினம் புதுசா புதுசா ஏதாவது நடக்கும். என்னை பத்தி எதுவும் கேட்காம… போடி…” என அலுத்தான்.

“ஹான்! உங்களை பத்தி கேட்கணுமா?”

“ம்ம்ம்…”

“நான் இல்லைனா என்ன, உங்கம்மா நல்லா கவனிச்சுக்க மாட்டாங்க? படுத்து தூங்குங்க”

“எதுக்கு எங்கம்மாவை நமக்கு இடையில நுழைய விடுற? எல்லாம் செட்டில் பண்ணிட்டு நாளைக்கு வந்திடு”

“சௌமியாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும், நீங்க உங்க ஹாஸ்பிடல்லேயே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தாங்க. இப்போதைக்கு என்னால அங்க வர முடியாது போல…” என்றாள்.

“காலையிலயா ஈவ்னிங்கா எப்போ வேணும் அப்பாயிண்ட்மெண்ட்?”

“காலையிலேயே வர்றோம். வைக்கவா?”

“அதான் வர மாட்டேன்னு சொல்லிட்டீல… கொஞ்ச நேரம் பேசக்கூட கெஞ்சணுமா நான்?”

“கெஞ்ச எல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“எனக்கு வராதுன்னு தெரியுதில்ல, நான் கெஞ்சுறதா நீயாவே இமாஜின் பண்ணிக்க”

கற்பனையாக கூட உத்ராவால் அப்படி நினைக்க முடியவில்லை. ஆனால் சிரிப்பு வந்தது.

“என்னாச்சு அத்தான் உங்களுக்கு?”

“அத்தான்… இதெல்லாம் எனக்கு பிடிக்காதுடி, நீ சொல்லும் போது கிக்கா இருக்கு”

“என்னதான் ஆச்சு உங்களுக்கு சொல்லுங்களேன்?”

“எனக்கே தெரியலை. நீதான் ஏதோ பண்ணி வச்சிருக்க என்னை, நீயே சொல்லு, என்னாச்சு எனக்கு?” அவன் குரல் தித்திப்பாக உத்ராவுக்குள் இறங்கியது.

“நாளைக்கு உங்களையும் ஹாஸ்பிடல்ல செக் பண்ணிடலாமா?”

“நக்கலா?”

“பின்ன சம்பந்தமே இல்லாம பேசினா?”

“இதுக்கு மேல எல்லாம் ஒருத்தனால மிஸ் பண்றேன்னு ஓபனா சொல்ல முடியாது”

உத்ராவின் முகம் மலர குரலில் காட்டாமல், “அப்படியா?” எனக் கேட்டாள்.

“அழுத்தம் பிடிச்சவளே… ஒருத்தன் உசுர் போக உருகி பேசுறேன், கொசுவை தட்டி விடுற ஃபீல் கொடுக்கிற, உன்னை மிஸ் பண்றேன்னு சொன்னேன்டி நான்”

“எதுக்கு இப்போ சத்தம் போடுறீங்க? போங்க நான் வைக்கிறேன்” என்றவள் கைபேசியை வைத்தே விட்டாள். ஆனால் அவனது அடுத்த அழைப்புக்காக ஆவலாக காத்திருந்தாள். அவனும் ஏமாற்றாமல் மீண்டும் அழைத்தான்.

வேண்டுமென்றே அசுவாரஷ்யமான குரலில், “என்ன?” எனக் கேட்டாள்.

“உன் கூட சண்டை போட்டு தொலைச்சா தூக்கம் வராது எனக்கு, நல்லதா ஏதாவது சொல்லிட்டு வை” முறுக்கிக் கொண்டே சொன்னான்.

“நல்லதாதானே… இந்த நாள்… இல்லயில்ல இந்த நைட் இனிய நைட்டாக அமையட்டும். வாழ்க வளமுடன்!”

“ஹ்ம்ம்… வளம்தான… ரொம்ப வளமா இருக்கேன்” என சலித்தவன் இரு நொடி இடைவெளிக்கு பின், “மொட்டை மாடியில குளிர் காத்துல பாதி நிலா மட்டும் வானத்துல தெரியும் போது அதை கை கோர்த்துக்கிட்டே பார்த்து அனுபவிக்க பக்கத்துல பொண்டாட்டி இல்லாத கொடுமை இருக்கே… என் எதிரிக்கு கூட வர வேணாம். நீயே நல்லா வளமா வாழு, வை” என்றவன் அழைப்பை துண்டித்திருத்தான்.

அந்த நொடியில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள் உத்ரா.

வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவள் திண்ணைக்கு வந்து வானத்தை பார்த்தாள். பாதி நிலா அவளுக்கும் தெரிய கணவனை நினைத்துக்கொண்டே சிரிப்போடு தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

அப்போதுதான் வீடு வந்த பாலன் கேட் எல்லாம் பூட்டி விட்டு அவளிடம் வந்து “என்னம்மா, இங்க இருக்க?” எனக் கேட்டான்.

அண்ணன் வந்ததையே கவனித்திராதவள் அவனது திடீர் கேள்விக்கு, “அது… பாதி நிலா ண்ணா, மொட்டை மாடியிலேர்ந்து பார்த்தா நல்லா இருக்கும்…” என உளறினாள்.

நிலாவையும் தங்கையின் சங்கடத்தையும் மாறி மாறி பார்த்தவன் குரலை செருமி, “இப்போ தூங்கு போ, நாளைக்கு சௌமியாவை அழைச்சிட்டு ஹாஸ்பிடல் போகணும்னு பிரியா சொன்னாளே… அது முடிச்சிட்டு நீ கிளம்பிடலாம்” என்றான்.

“இல்ல ண்ணா, இங்க கொஞ்சம் சரியாகட்டும். நான் கூட இல்லைன்னாதான் அவருக்கு என் அருமை புரியுது, இன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணட்டும்” என்றாள்.

தங்கையின் தலையை அழுத்திக் கொடுத்தவன் சிரித்து விட்டு, “அண்ணன் தங்கச்சி எல்லாம் நம்மள மாதிரி பொறுமை இல்ல. அவன் ஃபீலிங்ஸ் ஓவரா போனா இங்க வந்து நின்னுடுவான், உள்ள வா” என சொல்லி சென்றான்.

சற்று நேரம் ஏகாந்தமாக அந்த இரவில் அமர்ந்து விட்டுத்தான் உள்ளே சென்றாள் உத்ரா.

வருணுக்கு லேசான காய்ச்சல். மாத்திரை சாப்பிட்டு உறங்கிப் போயிருந்தான். சௌமியாவும் உறங்கியிருக்க உத்ரா அவள் இருந்த அறையிலேயே உறங்க சென்றாள்.

கணவனை முறைத்துக் கொண்டே பரிமாறினாள் பிரியா. என்ன என அவன் கண்களால் கேட்க, “கோவம் வந்தா என்கிட்ட சொல்லிக்காம கூட வெளில போவீங்களா?” எனக் கேட்டாள்.

“கோவம் வந்தா அப்படித்தான் போவாங்க பிரியா” என அவன் சொல்ல அவள் முகம் திருப்பினாள்.

இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டவன், “நான் போனதுக்கு அப்புறம் ரெண்டு தடவ போன்ல பேசின, நல்லாத்தானே பேசின? இப்போ என்னாச்சு உனக்கு?” எனக் கேட்டான்.

“வெளில வேலையா இருக்கும் போது கோவத்தை காட்ட முடியுமா?”

“சரி காட்டு இப்போ உன் கோவத்தை” சாதாரணமாக அவன் சொல்ல எப்படி காட்ட கோவத்தை என விழித்தாள் பிரியா.

இடக் கையால் அவள் கன்னம் தட்டியவன் “இனிமே எவ்ளோ கோவமா கிளம்பினாலும் சொல்லிட்டு போறேன்” என்றான்.

“கோவமா எல்லாம் வெளில போக கூடாது, நல்ல மைண்ட் செட்லதான் போகணும்” தீவிர தொனியில் கூறினாள்.

சரி என உடனே ஒப்புக் கொண்டவனின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள். அவன் சாப்பிடும் வரை பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தவள் வருணுக்கு காய்ச்சல் என சொல்லவும் பாலன் முகம் தொய்ந்து விட்டது. ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்ததும் அம்மாவை மட்டும் சென்று பார்த்தவன் தங்கள் அறைக்கு சென்று விட்டான்.

அடுத்த நாளும் வருணுக்கு காய்ச்சல் இருக்க கணவன் மூலம் சரத்தை வீட்டிற்கு வர வழைத்து பார்க்க செய்தாள் உத்ரா. சௌமியா காதுக்கும் வருணுக்கு முடியவில்லை எனும் செய்தி சென்றதுதான். உள்ளுக்குள் என்ன நினைத்தாலும் வெளியில் கவலை கொள்வதாக காட்டிக் கொள்ளவே இல்லை அவள்.

காலை உணவுக்கு பின் பிரியா உத்ரா இருவரும் சௌமியாவுடன் மருத்துவமனை சென்றனர். பாலனுக்கு முக்கிய வேலை இருந்ததால் துணைக்கு பாஸ்கரை அனுப்பி வைத்திருந்தான்.

மகப்பேறு மருத்துவரிடம் சௌமியாவை காண்பித்து விட்டு அவளுக்கு தேவையான ஆடைகள் வாங்கி புது கைபேசி வாங்கி என மூன்று பெண்களும் மதியத்திற்கு மேல்தான் வீடு வந்தனர். வாசலிலேயே காத்திருந்த வருண் அவர்களை கண்டதும் ஆவலாக பார்த்தான்.

சௌமியா விடு விடு என உள்ளே சென்று விட்டாள். உத்ரா விவரமாக மருத்துவர் சொன்னது எல்லாம் சொன்னாள்.

 வருணை காண விரும்பாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் சௌமியா. அவனும் அவளை காண எல்லாம் முயலவில்லை. இரு நாட்கள் இப்படித்தான் கடந்தன.

சௌமியா அந்த வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்க, வருண் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை கருத்தில் கொள்ளாதது போல நடந்து கொண்டான் பாலன்.

சௌமியாவின் மனநிலையை கருதியும் அண்ணனின் பாரா முகத்தை அனுபவிக்கும் கொடுமையை தவிர்க்க நினைத்தும் வருண் மட்டும் தனியே திருச்சி புறப்பட்டு விட்டான். அன்று மாலையே மனைவியை அழைக்க வந்து விட்டான் ஆதவன்.

“இன்னும் சௌமியா சரியாகல, ஒரு வாரம்…” என பேசியவளின் வாயை கையால் மூடிய ஆதவன், “வருண் பண்ணின தப்புக்கு எனக்கு பனிஷ்மென்ட் கொடுக்காத” என்றான்.

உத்ரா முறைக்க, “அந்த பொண்ண பிரியா பார்த்துப்பா, ப்ளீஸ்…” கண்களை சுருக்கிக் கொண்டு குழைந்தான்.

“இப்போ நல்லாத்தான் இருக்கு, போக போகத்தான் எப்ப என்ன பண்ணுவீங்கன்னு என்னால கெஸ் பண்ண முடியாது”

“இந்த பாஸ்ட் பத்தி எல்லாம் பேசுவேன்னு நினைக்குறியா? உன் பாஸ்ட்டுக்கும் என் பாஸ்ட்டுக்கும் சரியா போச்சு. வாடி” இறுதியில் வந்த ‘வாடி’ கெஞ்சலாகத்தான் வந்தது.

தன்னிடம் கெஞ்சும் கணவனை பிடித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் முறுக்கினாள்.

“தனியா படுக்க பயமா இருக்குடி” அவள் கையை பிடித்துக்கொண்டு பாவமாக சொன்னவனை கண்டு சிரித்து விட்டாள்.

அவனும் சிரித்தவன், “நிஜமா பயம்தான், எங்க என்னை விட்டு தூர போய்டுவியோன்னு. லவ் ஃபெயிலியர்னு அழுதீல… அது மறந்து போகணும் உனக்கு, நான் மட்டும்தான் உனக்குள்ள இருக்கணும்” உள்ளத்தில் இருந்து சொன்னான்.

“அப்பப்பா! நீங்கதானான்னு டவுட் வருதா இல்லையா? இப்படியா தலைகீழா நிப்பீங்க?”

“அடுத்து அதுதான், வர்றியா இல்லையா நீ?”

“வர்றேன் வர்றேன்” செல்லமாக அலுத்துக் கொண்டே உற்சாகமாக தயாரானாள்.

வெளியில் அவளுக்காக வாங்கிய நீல நிற மாருதி வேகன் நின்றிருந்தது. கார் சாவியை அவள் கையில் கொடுத்து, “எங்கப்பாதான் பணக்காரர், நான் கொஞ்சம் வசதி கம்மிதான். என் சேவிங்ஸ்ல இதுதான் வாங்க முடிஞ்சது. பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

அவனை கண்கள் கலங்க பார்த்தவள், “நீங்க எனக்காக பொறி உருண்டை வாங்கி கொடுத்தாலே அது எனக்கு பொக்கிஷம். நல்லா இருக்கு” என்றாள்.

உத்ராவின் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்து பின் விட்டவன், கதவு திறந்து விட்டு “கோயிலுக்கு போயிட்டு போலாம், காரை எடு” என்றான்.

அவர்கள் மகிழ்ச்சியாக புறப்பட வாயிலில் நின்று பார்த்திருந்த பாலனின் முகம் இறுக்கம் இல்லாமல் நிறைவோடு காணப் பட்டது.

உத்ரா இல்லாததால் அன்றைய இரவு தான் துணைக்கு தங்குவதாக பிரியா சொல்லியும் மறுத்து விட்டாள் சௌமியா. அவளை தனியே விட பயந்தாள் பிரியா.

“என் முட்டாள்தனத்துக்கு என் குழந்தையை பலிகடா ஆக்க மாட்டேன்” என உறுதியாக அவள் சொல்லவும் பாலனிடம் யோசனை கேட்டாள்.

“எல்லா நாளும் நாமளும் கண் காணிச்சிட்டே இருக்க முடியாது. தெளிவா சொல்லுதுன்னா விட்ரு. ஆனா தனியா இருக்கோம்னு ஃபீல் பண்ண விட்ராத” என பாலன் சொல்ல சரி என விட்டாள் பிரியா.

வேலை முடித்து விட்டு தான் தங்கியிருக்கும் குடியிருப்பு வீட்டுக்கு வந்த வருணின் மனம் கனத்து கிடந்தது. அவள் யாரென தெரியாமல்தான் ஈர்ப்பு வந்தது. யாரென தெரிந்த பின் திட்டமிட்டுத்தான் காதலித்தான். போக போக அவளை உண்மையாக நேசித்தாலும் என்ன நினைத்து அவளுடன் பழக ஆரம்பித்தானோ அதை நிறைவேற்றி விட்டான்.

எளிதாக தவறு செய்து விட்டவனுக்கு அதை சரி செய்வது சுலபம் இல்லை என்பது இப்போது புரிகிறது.

நிம்மதி இழந்து தூக்கத்தையும் பறி கொடுத்து விழிகளுக்கு எதிரியான இமைகளோடு இருளையும் தனிமையையும் கூட்டு சேர்த்து கொண்டு மனதிற்குள் ஓலமிட்டுக் கொண்டிருந்தான்.

நல்லவன் தவறு செய்தால் அதற்கான தண்டனையை வழங்க எதிரிகள் தேவைப்படுவதில்லை. அவனது மனசாட்சி மட்டுமே போதுமானது.

வருணும் அவனது தண்டனையை அனுபவிக்கிறான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement