Advertisement

ஜீவ தீபங்கள் -29

அத்தியாயம் -29(1)

வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு பாலனும் பிரியாவும் ஹால் வர அங்கு ஏற்கனவே வடிவம்மாள், பிரகதீஸ்வரி, உத்ரா மூவரும் நின்றிருந்தனர். சௌமியா இருந்த அறையின் கதவு மூடப் பட்டிருந்தது.

உள்ளிருந்துதான் சௌமியாவின் “போ இங்கேர்ந்து” எனும் சத்தமும் அதனை தொடர்ந்து ஏதோ விழுந்து உடையும் சத்தமும் கேட்க உத்ராவை பார்த்தான் பாலன்.

“அண்ணா அது… வருண்தான் உள்ள” என பயத்தோடு சொன்னாள்.

கோவமான பாலன் கதவை தட்டி, “திறடா ராஸ்கல்!” என கத்த உடனே கதவு திறக்க பட்டு விட்டது.

அறையின் மூலையில் அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் சௌமியா. அறை கலைந்து போய் பொருட்கள் எல்லாம் சிதறி இரைக்க பட்டு அலங்கோலமாக காட்சி தந்தது.

வருண் யாரையும் எதிர் கொள்ள முடியாமல் குன்றிப் போனவனாக நிற்க, “அந்த பொண்ணு மனச கொன்னுட்டு இப்போ இருக்கிற உசுரையும் எடுக்க வந்தியா இங்க?” எனக் கோவமாக கேட்டு அவனை அடிக்க பாய்ந்தான் பாலன்.

 பிரகதீஸ்வரிதான் இடையிட்டு பெரிய மகனை தடுத்தார்.

வருணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள் உத்ரா.

சௌமியா நிமிரவே இல்லை. அவளை அப்படி காண சகியாத பாலன், “பார்த்துக்க பிரியா” என சொல்லி வெளியேறினான்.

ஹாலில் வருண் அமர்ந்திருக்க அவனிடம் சமாதானமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் உத்ரா. அவர்களிடம் வந்த பாலன், “ஏன் மா உனக்கும் மூளை வேலை செய்ய மாட்டேங்குதா?” என ஆற்றாமையாக தங்கையிடம் கேட்டான்.

“சௌமியாகிட்ட சாரி கேட்கதான் வருண் வந்தான் ண்ணா. அதனாலதான் நானும் வெளில…” இழுத்தாள் உத்ரா.

“ஓ! சார் சாரி கேட்டதும் உடனே அந்த பொண்ணு சரின்னு அவன் கூட வந்திடணுமோ?” நக்கலாக கேட்டான் பாலன்.

“சௌமியா ப்ரெக்னண்ட்னு வருணுக்கு தெரியாதுல்ல ண்ணா, பண்ணின தப்பு புரிஞ்சுதான் சாரி…” அண்ணனின் கோவ பார்வையில் தொடர முடியாமல் வாயை மூடிக் கொண்டாள் உத்ரா.

“உனக்கும் அவன் பண்ணின தப்பு புரியும், என்ன… இவனுக்காக இரக்க பட்டு பேசத் தெரியாம பேசி என்கிட்ட வாங்கிக் கட்டிக்க ஆசை படுறியா?” இத்தனை கடினமாக தன்னிடம் அண்ணன் பேசியதாக நினைவில் இல்லாத உத்ராவின் கண்கள் கலங்கிப் போயின.

“இவனுக்கு புள்ள வரவும் இளகுதா மனசு? அப்ப அடுத்த வீட்டு பொண்ணுன்னா இளக்காரமா போய்டுச்சா?” பாலன் கேட்க, வருண் அர்த்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பினான்.

“டேய் என்னை விட அதிக கோவமா உனக்கு அந்த குடும்பத்து மேல? என்ன விவரம் தெரியும் உனக்கு அப்போ? அம்மா உடம்போடு சேர்த்து மனசும் வெந்து போயிடுச்சுன்னு நல்லா புரிஞ்சுக்கிற வயசு எனக்கு. கொலைகாரன் மகன் கொலைகாரனா ஆகுறதுல என்னடா பெருமை? உன்னை மாதிரிதான் நானும்னு அந்தாளுக்கு சொல்றத விட பார்த்தியா என் நேர்மையன்னு நெஞ்சு நிமித்தி காட்டியிருக்க வேணாம் நீ?” அண்ணன் கேட்ட கேள்விக்கு தம்பியிடம் பதில் இல்லை.

அவசரக் காரனுக்கு தன் தவறு புரியவும், “சாரி ண்ணா” மன்னிக்க சொல்லி பாவமாக பார்த்தான்.

தம்பியை ஏறிடவே இல்லை பாலன். நடுங்கும் தன் கரத்தால் அவன் தன் அண்ணனின் கை பிடிக்க உதறிய பாலன், “கிளம்ப சொல்லு அவனை, இப்போவே கிளம்ப சொல்லு” எரிச்சலாக சொன்னான்.

வருண் இரைஞ்சுதலாக பார்க்க, “அச்சோ அண்ணா, நடக்கவே சிரம படுறான். உடம்பு வேற சுடுது. இப்ப எப்படி அனுப்ப முடியும் ண்ணா? வேணா ண்ணா” கெஞ்சலாக சொன்னாள் உத்ரா.

“அப்ப இருக்கிற இடம் தெரியாம இருக்கணும். அந்த பொண்ணு பக்கம் போக கூடாது இவன், இல்லைன்னா தூக்கி கடாசிடுவேன்” பற்கள் நெறி பட சொன்னான் பாலன்.

“அண்ணா…” குரல் கமற அழைத்தான் வருண்.

“இனி ஒரு வார்த்தை என்கிட்ட அவன் பேசக்கூடாது, பேசவே கூடாது” கோவமும் கட்டளையுமாக சொன்ன பாலன் வீட்டை விட்டே சென்று விட்டான்.

அப்படியே அமர்ந்து விட்டான் வருண்.

சௌமியா அருகில் வந்து நின்ற பிரகதீஸ்வரி, “அழாதம்மா” என்றார்.

 புதிய குரலாக இருக்கவும் நிமிர்ந்து பார்த்த சௌமியா பயந்து போய் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அத்தையின் கையை பிடித்துக்கொண்ட பிரியா, “இவங்க வருணோட அம்மா சௌமியா” என சொன்னாள்.

“நீ விடு, இவ பயப்படறதுதான் எனக்கு புதுசா? பழகிப் போச்சுடா” என பிரியாவிடம் சொன்னவர் சௌமியா பக்கத்தில் அமர்ந்தார்.

சௌமியாவுக்கு கண்களை திறக்கவே கலக்கமாக இருந்தது. இவருக்கு தீ விபத்தில் காயம் ஏற்பட்டது என முன்னரே அறிந்ததுதான். ஆனால் நேரில் பார்க்கையில் அவளால் சகிக்க முடியவில்லை. தான் இப்படி நடப்பது அவருக்கு வேதனை அளிக்கும் என புரிந்து மனதை தயார் செய்து கொண்டு அவரை பார்த்தாள்.

உள்ளே வெட வெட என நடுங்கினாலும் காண்பித்துக் கொள்ளாமல், “சாரி வந்து… சாரி…” என திக்கினாள்.

அவள் தலை தடவி விட்டவர், “நீ பார்த்து பயந்த இதைதான் அஞ்சு வயசிலேர்ந்து பார்த்து பார்த்து வளர்ந்திருக்கான் அவன். இது விபத்துன்னாலும் அதுக்கு அப்புறம் எனக்கு நடந்தது அநியாயம். ப்ச்… அவனை நியாய படுத்தலம்மா. இந்த நிலைல அமைதியா இரு, உன் மனசு நிலையானதும் யோசி” என்றார்.

சௌமியாவுக்கு மீண்டும் அழுகை வந்தது. வேறு என்ன செய்திருந்தாலும் ஏற்றிருந்திருப்பாள். எப்பேர்ப்பட்ட துரோகம்?

“சரிதாங்க அவர் அப்பா செய்த தப்புக்கு அவர் வீட்டு பொண்ணை பழி வாங்கினார். உத்ராக்கா கூட அவர் பொண்ணுதான். அக்காக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லைனா எனக்கும் அவருக்கும் கூட சம்பந்தம் இல்லைதானே?” புதிய நியாயம் கண்டு பிடித்தாள் சௌமியா.

“உத்ரா உனக்கு அக்காவா? நான்தான் அக்கா, அவ அண்ணி” இடையிட்டாள் பிரியா.

பிரகதீஸ்வரி பெரிய மருமகள் தோளில் தட்ட, “உறவுமுறை எல்லாம் கரெக்ட்டா சொல்லணும்லத்த?” எனக் கேட்டாள்.

“இடுக்கட்டும் என்ன இப்போ? அவளுக்கு எப்படி சௌகர்யமோ அப்படி கூப்பிடட்டும்” என்றார் பிரகதீஸ்வரி.

“சரி அப்படியே இருக்கட்டும்” என்ற பிரியா சௌமியாவை பார்த்து, “வருண் செஞ்ச தப்ப இங்க எல்லாரும் தட்டிக் கேட்குறோம். வருணோட அண்ணன் சின்னதுலேயே வருணை அடிச்சது இல்ல. இப்போ தோலை உரிச்சிட்டார். ஆனா அன்னிக்கு எங்கதைக்கு ஏத்துக்கிட்டு யாரும் வாய கூட திறக்கலைதானே? எங்கத்தைக்கு நடந்த துரோகத்துல எல்லாருக்கும் பங்கிருக்கு, உங்கப்பா என்ன பண்ணினார் அவர் தங்கச்சிய ரகசியமா கல்யாணம் பண்ணி வச்சார்” என்றாள்.

சௌமியா கவலையாக பார்க்க, “இந்த சமயம் இதை சொல்லணும்னு எனக்கும் எண்ணம் இல்ல. வருணை எனக்கு நல்லா தெரியும், உன்னை விட்டாலும் வேற பொண்ணை கல்யாணம் செய்திருக்காது, கொஞ்ச நாள் போயிருந்தா உன்னை தேடி கூட வந்திருக்கும்” என பொறுமையாக சொன்னாள் பிரியா.

என்ன சொல்லியும் சௌமியாவால் வருண் செய்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பிரகதீஸ்வரி மேலும் ஏதோ பேச, “விடுங்கத்த, இந்த நேரம் எது பேசினாலும் யாருக்கும் எதுவும் ஏறாது. எல்லாம் தானா புரிஞ்சுக்கட்டும். நீங்க பேசிட்டு இருங்க, நான் அவரை பார்த்திட்டு வர்றேன். சும்மா எல்லாரும் டென்ஷன் பண்ணி விடுறாங்க அவரை” என சொல்லி எழுந்து சென்று விட்டாள் பிரியா.

 ஹால் வந்த பிரியா கணவன் கோவமாக வெளியில் சென்று விட்டது அறிந்து வருணை முறைத்தாள்.

“ஏய் விடுடி, இவன் ரியலைஸ் பண்ணிட்டான். பாவமா இருக்கு” என்றாள் உத்ரா.

பிரியாவுக்கும் பாவமாக இருக்க அவன் அருகில் அமர்ந்து, “உடனே எப்படி சரியாகும் வருண்? சௌமியாவை எமோஷனலாக்கி அவளுக்கு ஏதாவது ஆகிட போகுது, பொறுமையா இரு” என்றாள்.

முகத்தை மூடிக் கொண்ட வருணின் உடல் குலுங்க ஆரம்பிக்க பிரியாவும் மூக்கை உறிய, “ஹையோ அண்ணா வர்றார்” என்றாள் உத்ரா. உடனே அழுகையை நிறுத்தி முகத்தை துடைத்து நேராக அமர்ந்தான் வருண்.

திரும்பிப் பார்த்த பிரியா அங்கே யாரையும் காணாமல் உத்ராவின் தொடையில் கிள்ள, “ஷ்ஷா…” தொடையை தடவிக் கொண்டே, “அப்புறம் ஓவரா அழுதா? நான் அத்தை ஆகப் போறேன், நீ பெரியம்மா ஆக போற, ப்ரொமோஷன் டி நமக்கு. சிரி” என்றாள் உத்ரா.

“ஐய… நான் இன்னும் அம்மாவே ஆகல, அதுக்குள்ள பெரியம்மாவா? வருணை விட சின்ன பொண்ணுதானே நான், சித்தினு கூப்பிட சொல்லு பாப்பாவை” என்றாள் பிரியா.

“அது எப்படி? சௌமியா உன்னை விட சின்னவதான், அதனால பெரியம்மாதான் நீ. உறவுமுறைலாம் ரொம்ப முக்கியம், பெரியம்மா பிரியா…” உத்ரா அழுத்தி சொல்ல முகத்தை உர் என வைத்துக்கொண்டாள் பிரியா.

“சரி சரி வேணும்னா பிரியாம்மான்னு கூப்பிட சொல்லிடுவோம். நீ மூஞ்சு தூக்கி வச்சுகிட்டு அண்ணன்கிட்ட திட்டு வாங்கி தராத”

“யாரு உங்கண்ணன் உன்னை திட்டுவாரா?”

“இப்போதான் டி திட்டிட்டு போறார்”

“நான் பார்க்கலையே அதை.. வரட்டும் இன்னொரு தடவ திட்ட சொல்லி பார்த்துக்கிறேன்”

“போடி பெரியம்மா!” என உத்ரா சொல்ல மீண்டும் முகத்தை சுருக்கினாள் பிரியா.

“நான் தப்பிச்சேன் டா சாமி. நான் எப்பவுமே அத்தைதான்” சிலாகிப்பாக உத்ரா சொல்ல, “ஆன்ட்டி ஆகிட்ட நீ” பிரியாவும் கிண்டலாக சொல்ல அவர்களின் வாயாடலில் வருணுக்கு அழுத்தம் கொஞ்சம் குறைந்து சிறு முறுவல் வந்தது.

“ஹான் இப்படி சிரிச்ச முகமா இரு. சீக்கிரம் உன் வைஃபையும் ஷின்சான் க்ரூப்ல மெம்பர் ஆக்கிடலாம்” என பிரியா சொல்ல இன்னும் நன்றாகவே சிரித்தான் வருண்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement