Advertisement

அத்தியாயம் -28(2)

தன் இளைய மகனை கடத்தி விட்டான் இப்போது பேசுங்கள் நீங்கள் என அங்கிருந்த பெரிய மனிதர்கள் பார்த்து நியாயம் கேட்டார் பூமிநாதன்.

“இவ்ளோ நேரம் நாங்க சொன்னதை கேட்டீங்களா? பாலன்தான் தெளிவா சொல்றாப்லயே… கிளம்புங்க வந்திருவான் பையன்” என்றார் ஒருவர்.

“அதானே… போலீசுக்கு போக தெரியாமலா தம்பி எங்களை கூப்பிட்ருக்கு. என்ன வேணா செய்திட்டு காசு கொடுத்து வேற ஆளை போலீஸ்ல சரண்டர் ஆக வைக்கலாம்னு திட்டம் போடாதீங்க. இந்த ஜில்லாவுலேயே தொழில் நடத்த முடியாது நீங்க… ஆமாம் சொல்லிப்புட்டேன்” எச்சரித்தார் ஒருவர்.

“நீங்க கிளம்புங்க சம்பந்தி, ரெண்டு குடும்ப பகை தெரிஞ்சுதான் நம்ம பொண்ணு கல்யாணம் செய்திருக்கு. பொண்ணுக்கு ஏதும் பிரச்சனைனா நான் பொறுப்பு. அது நல்லா வாழ்ந்தா போதாதா நமக்கு? உங்க அக்கா வீட்டுக்காரர்னா அலர்ஜி ஆகுது, இவர் சங்காத்தம் வேணாம் எனக்கு” என எழுந்து நின்றார் நெடுமாறன்.

வேறு வழியின்றி இளங்கோவன் எழுந்து கொண்டார். தன் மகனை எரிப்பது போல நெடுமாறன் பார்க்க சபரியும் எழுந்து விட்டான்.

“நரேஷ் வருவான், நான் அழைச்சிட்டு வர்றேன்” என சமாதானமாக சொன்ன எம் பி பூமிநாதனையும் நரேனையும் அனுப்பி வைத்தார்.

இப்படியாக கலவரம் ஆகாமல் பேச்சு வார்த்தை அளவிலேயே முடிந்து நரேன் தரப்பினர் கிளம்பி சென்றனர்.

வந்தவர்களுக்கு மனமார நன்றி தெரிவித்து அனுப்பி வைத்த பாலன் பாஸ்கரை பார்க்க அவன் உஸ்மான் பாய்க்கு பேசிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

முன்னெச்சரிக்கையாக நரேன் வீட்டிலிருந்து யாரையாவது பிணையாக வைக்க வேண்டும் என கூறியிருந்தான் பாலன். நரேஷ் ஊருக்கு வந்து கொண்டிருப்பது தெரிந்து கொண்டு பாஸ்கர் செய்தி தர, “தூக்குங்க அவனை” என சொல்லி விட்டான் பாலன்.

நரேஷை செருப்புக் கடையின் பேஸ்மெண்டில் அடைத்து வைத்ததும் பாஸ்கர்தான். இந்நேரம் நரேஷ் அவன் வீடு நோக்கி போய் கொண்டிருப்பான்.

அந்த இடம் அமைதியாக இருக்க தன்னை விட்டு அகலாமல் தன்னுடனே நின்றிருந்த தங்கை கணவனை பரிவும் பாசமுமாக பார்த்தான் பாலன்.

“நல்லா சான்ஸ் கிடைச்சுதுன்னு எல்லார் முன்னாடியும் திட்டி விட்டுட்டீங்கல்ல?” குறையாக கேட்டான் ஆதவன்.

“நான் உன்னை திட்டலைனா வேற யாராவது பேசியிருப்பாங்க, நான் உன்னை சொல்றதுக்கும் அடுத்தவன் சொல்றதுக்கும் வித்தியாசம் இல்லையாடா?”

ஆதவனுக்கு புரிந்தாலும் விடாமல், “என்னவோ என்னை திட்டினதுல உங்களுக்கு குளு குளுன்னு இருந்தா சரிதான்” என்றான்.

“வேணும்னா திரும்ப நீ திட்டிக்கடா, ரெண்டு அடி கூட போட்டுக்கோயேன்” என சிறு சிரிப்போடு பாலன் சொல்ல ஆதவன் முகமும் மலர்ந்தது.

 பாலனின் அருகில் வந்து அவன் கையை பிடித்துக் கொண்டவன், “வருஷக் கணக்கா உங்களை தெரியும், ஆனா உங்களை புரிஞ்சுக்கவே இல்ல நான்” என்றான்.

“ஒத்த நாளைக்கு நீங்க கொடுத்திருக்க இந்த ஷாக் போதும்டா, இதுக்கு மேல தாங்காது” என்ற பாலன் ஆதவன் தோளில் தட்டி கொடுத்து விட்டு வீட்டிற்குள் வந்தான்.

 சௌமியாவுடன் உத்ரா பிரியா இருவரும் மாறி மாறி துணைக்கு இருந்தனர். ஆதவன் தன் மனைவியை இங்கேயே விட்டு அவன் மட்டும் கிளம்பி விட்டான்.

பிரகதீஸ்வரி எழவும் அவரிடம் சௌமியா கருவுற்றிருக்கும் விஷயத்தை பக்குவமாக சொல்லி அவரை சமாதானம் செய்து சாப்பிட வைத்த பாலன் தானும் மதிய உணவாக ஏதோ கொறித்து தனது அறைக்கு வந்து விட்டான்.

வருண் எழுந்து விட்டதை பார்த்த பிரியா அவனை சாப்பிட அழைத்தாள். அவன் வர மறுக்க அறைக்கே சாப்பாடு எடுத்து சென்றாள். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது கிறக்கமாக இருந்த போதிலும் அவனுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை.

பாலனிடம் சொன்னாலும் பலன் இருக்காது என்பதால் மாமியாரிடம் போய் சொன்னாள் பிரியா. அவருக்கு வருண் மீது கோவம் இருந்த போதும் மகன் சாப்பிடவில்லை எனவும் மனம் கேளாமல் வந்தார்.

அம்மாவை கண்டதும் கெஞ்சலாக பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான் வருண். அடி வாங்கி காயங்களோடு சோர்ந்து ஓய்ந்து தெரிந்த மகனை பார்க்க பார்க்க அவருக்கு இரக்கம் சுரந்தது.

அங்கு வைக்க பட்டிருந்த சாப்பாட்டு தட்டை எடுத்து அவன் கையில் கொடுத்து, “சாப்பிடு முத” என்றார்.

மறுக்க முடியாமல் அவன் சாப்பிட ஆரம்பிக்க வேறெதுவும் அவனிடம் பேசப் பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார் பிரகதீஸ்வரி.

வருண் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அம்மா சென்ற திசையை பார்க்க, “படுத்தின வரை போதும் வருண், ஒழுங்கா சாப்பிடு” என அதட்டிய பிரியா அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

சௌமியா பற்றி விசாரிக்க உள்ளம் துடித்தாலும் வெட்கிப் போனவனாக எதுவும் கேளாமல் பிரியாவே அவளாகவே எதுவும் சொல்ல மாட்டாளா என அவளின் முகத்தை அடிக்கடி பார்த்தான்.

அவன் சாப்பிட்டு முடிக்கவும், காலையில் எந்த நிலையில் சௌமியாவை இங்கு அழைத்து வந்தோம் என கூறினாள் பிரியா. அதிலேயே மொத்தமாக உடைந்து போய் விட்டான் வருண்.

“ஏதாவது ஆகியிருந்தா உனக்கு சந்தோஷமா? அப்படி நடந்திருந்தா நீ நினைச்சது விட அதிகமாவே அவளை நினைச்சு அவ குடும்பம் வருத்த படுவாங்கதானே?” என ஏளனமாக பிரியா கேட்க அமைதி காத்த வருணின் கண்களில் கண்ணீர் வர காத்திருந்தது.

நரேன் வீட்டினர் வந்து பிரச்சனை செய்தது பாலன் சமாளித்து அனுப்பியது என எல்லாம் சொன்னவள், “அவருக்காக செய்றேன்னு என்னத்தையோ நீ செஞ்சு வச்சு இப்போ மொத்தமா அவர் நிம்மதியே போய்டுச்சு. எல்லாம் உன்னாலதான்” என்றாள்.

“இல்ல அவங்க வீட்ல அம்மாவை நினைச்சு…” சொல்ல முடியாமல் குரல் கமற அமைதியாகி விட்டான்.

“ஆனா சௌமியாவால அவங்க பட போற அதே வருத்தம் காலத்துக்கும் உனக்கும்தாங்கிறத மறந்து போய்ட்ட. அந்த பொண்ணு சும்மா இல்ல இப்போ…” என சொல்லி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “நீ அப்பா ஆக போற வருண்” என்றாள்.

வருண் உச்ச பட்ச அதிர்ச்சி அடைய எப்படி தெரிந்தது என சொல்லி, “எப்படியோ பெரிய பாவத்திலேர்ந்து உன் அண்ணன் உன்னை காப்பாத்திட்டார். இனியாவது சரியா இரு” என்றாள் பிரியா.

தன் உணர்வை பிரியாவிடம் விவரிக்க வருணுக்கு வார்த்தைகள் ஏதும் சிக்கவில்லை. நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. மூளையில் எதுவோ முட்டி மோதுவது போல பிரம்மை ஏற்பட்டது.

அவன் யோசிக்கட்டும் என நினைத்து அங்கிருந்து அகன்ற பிரியாவுக்கு இந்த ஒற்றை நாள் ஏதோ பல நாட்கள் கடந்தது போல அயர்வை தந்தது. உத்ரா சௌமியாவுடன் இருக்க தனது அறைக்கு சென்றாள்.

பாலன் உறங்குகிறானா என தெரியவில்லை, ஆனால் கண்கள் மூடி படுத்துக் கிடந்தான். சத்தமில்லாமல் அவன் பக்கம் படுத்தவள் அவன் கையை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டு அவனை அணைத்து அவன் மார்பில் முகம் வைத்து நிம்மதியாக சுவாசித்தாள்.

அவன் அவளது தலை கோதவும்தான் அவனும் விழித்திருக்கிறான் என புரிந்தது.

“தூங்குங்களேன் கொஞ்ச நேரம்” என்றாள்.

“எல்லாத்தையும் மறந்திட்டு நானும் கொஞ்சம் கண்ணசரதான் நினைக்கிறேன் பிரியா, ஆனா…” என்றவன் தன் வேதனையை வெளியேற்றுவது போல மூச்சை இழுத்து விட்டான்.

“இவ்ளோ அப்செட் ஆக வேணாம் நீங்க. கொஞ்ச நாள்ல சௌமியா சரியாகிடுவா” என்றவள் “பாப்பா வேற வரப் போகுது” என உற்சாக குரலில் சொன்னாள்.

அவன் அவளையே பார்த்திருக்க, “குட்டி பாப்பா கண்ண மூடி திறக்கிறது வாய சப்பு கொட்டுறது சோம்பல் முறிக்கிறது எல்லாம் பார்க்க எவ்ளோ க்யூட்டா இருக்கும் தெரியுமா? என் பிரெண்ட் அக்காவுக்கு குழந்தை பொறந்தப்போ நான் போய் பார்த்தேன். அது தலைமுடி தொட தொட அவ்ளோ ஸாஃப்ட், ஸ்கின் தொடவே பயமா இருந்தது. அப்படியே அள்ளி எடுத்து கொஞ்சிட்டே இருக்கணும் போல…” என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

தானும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், “உன்னை விட க்யூட்டா கூட இந்த உலகத்துல எதுவும் இருக்குமா?” எனக் கேட்டான்.

“இது கொஞ்சம் ஓவர் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்!” அவன் அணைப்பில் இருந்தவாறே சொன்னாள்.

“நிஜம்தான் பிரியா. இவ்ளோ பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. உன் குரலே என்னை ரிலாக்ஸ் பண்ணுது. நீ தொட்டதும் என் உடம்பெல்லாம் தளர்ந்து போச்சு. நீ இல்லைனா இந்நேரம் வெறுத்து போயிருப்பேன்” என்றான்.

“ஏன் இப்படிலாம் பேசுறீங்க? அது தெரியாம பண்ணிடுச்சு, இப்போ ஃபீல் பண்ணுது. அத்தை கூட பேசிட்டாங்க, அவங்கதான் சாப்பிட வச்சாங்க. தப்புன்னாலும் அது உங்களுக்காகவும் அத்தைக்காகவும்தான்…”

“எது சொல்லியும் நியாய படுத்ததாத பிரியா. காரணம் எதுவா இருந்தாலும் தப்புன்னா தப்புதான். நான்தான் அவனுக்கு சரியா சொல்லி வளர்க்கலைன்னு எனக்கு கூசுதுடி…” பாலனின் குரல் உடைய அதிர்ந்து முகத்தை மட்டும் அவனிடமிருந்து விலக்கி அவனை பார்த்தாள் பிரியா.

அப்படியே அசையாமல் கண்கள் சிமிட்டாமல் வேதனையை தொண்டையில் தள்ளி விழுங்குவது போல எச்சில் கூட்டி விழுங்கியவன், “அவனை பத்தி பேசாத, உள்ள போட்டு அழுத்தது. என்னை தூங்க வையேன்” என யாசகமாக கேட்டான்.

அவன் கண்களில் முத்தமிட்ட பிரியா அவனை தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டாள். கன்னம் தடவி கழுத்து வருடி தோள்கள் தழுவி நெற்றியில் தன் இதழ் ஈரத்தால் இதம் கூட்டி அவனை ஆற்றுப் படுத்த முயன்றாள்.

எத்தனை மன வலிமை கொண்டவனுக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சாய தோளும் இளைப்பாற மடியும் தேவை படுகிறது. பாலனை தன்னில் ஏந்திக் கொண்டாள் பிரியா.

அனைத்தும் மறந்து தன்னையும் மறந்து அவள் அருகாமையில் அசந்து விட்டான் பாலன். பிரியாவுக்கு முதுகில் பட்ட அடி எரிச்சல் கொடுத்தது. அவனை வெகு நேரம் தாங்கிக் கொண்டு படுத்திருந்ததில் தோள் நோக ஆரம்பித்தது. ஆனாலும் அவனை தள்ளி படுக்க வைக்க மனம் வராமல் மனமுவந்து அனைத்தையும் பொறுத்தாள் மென்மையான பிரியா.

திடீரென வீட்டில் சத்தம் கேட்க பதறிப் போய் எழுந்தனர் இருவரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement