Advertisement

ஜீவ தீபங்கள் -28

அத்தியாயம் -28(1)

நரேனும் சபரியும் ஆட்களை அழைத்துக் கொண்டு பாலனின் வீடு இறங்கும் போது சபரியின் தந்தை நெடுமாறன்தான் அவர்களை வரவேற்றார். உடன் எம் பி யும் இன்னும் அந்த நகரத்தின் முக்கியமான சில பெரிய மனிதர்களும் இருக்க தன் தந்தையை திகைப்பாக பார்த்தான் சபரி.

பூமிநாதனோடு வந்த இளங்கோவனும் தன் சம்பந்தியை பார்த்து அதிர, “வாங்க உட்காருங்க. உங்களுக்கு பிரச்சனைனா நீங்க சொல்லக்கூட தேவையில்லை, எப்படி வந்து நிக்கிறேன் பாருங்க” என கிண்டலாக வரவேற்றார் நெடுமாறன்.

குடவுனில் வேலை செய்யும் சிலரைதான் இது போன்று அடிதடிகளுக்கு எல்லாம் நரேன் பயன்படுத்துவான். சரக்கு எடுக்கும் டெம்போ வேனில் குடவுன் ஆட்கள் இருக்க யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை நெடுமாறன்.

“நமக்குன்னு ஒரு பேர் இருக்கு, குண்டாஸ் ரவுடித்தனம் இதெல்லாம் நல்ல குடும்பத்துக்கிட்ட காட்டவீங்களா?” பொதுவாக கடிந்தவர் மகனிடம், “நீ எப்படிடா இவங்களோட சேர்ந்த?” என கண்டனமாக கேட்டார்.

பாலன் இறுக்கமாக அமைதியாக நேராக நிமிர்ந்து நிற்க வந்தவர்களை நக்கலாக பார்த்து சத்தமில்லாமல் சிரித்தான் ஆதவன்.

சபரியின் திருமணத்திற்கு முன்னர் வரை நெடுமாறனுடன் மலையரசனுக்கு நல்ல பழக்கம் இருந்து வந்தது. பாலனையும் அவருக்கு தெரியும், பாலனுடன் அதிக பழக்கம் இல்லா விட்டாலும் உழைப்பால் நேர் வழியில் உயர்ந்தவனிடம் அவருக்கு மிகுந்த அபிமானம் உண்டு.

இனியாவை சபரி மணந்து கொண்டதும் பாலனுக்காக நெடுமாறனோடு விலகி நின்று விட்டார் மலையரசன்.

இடப் பிரச்சனையின் போது சபரி தலையீடு செய்தது எல்லாம் நெடுமாறனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே கண்டித்திருப்பார். பூமிநாதன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போது தங்களுக்கு அவமானம் என பேசி பாலனிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளங்கோவனிடமும் அறிவுறுத்தி இருந்தார்.

நெடுமாறன் வரை பிரச்சனையை கொண்டு செல்ல விரும்பாமல் பாலன்தான் வேறு வகையில் பார்த்துக் கொண்டான். இப்போது மீண்டும் மீண்டும் சபரி தன் வழியில் குறுக்கிடவும் நெடுமாறனிடம் விஷயத்தை விளக்க மாமாவை அனுப்பி வைத்தான்.

 காலை நேரத்தில் அவரது பெட்ரோல் பங்கில்தான் இருப்பார் நெடுமாறன், “இதோ கணக்க பார்த்திட்டு வந்திடுறேன்” என மலையரசனிடம் சொல்லி அனுப்பியவர் சரியான நேரத்துக்கு பாலன் வீட்டிற்கு வந்து விட்டார்.

மற்றவர்களை கைபேசி மூலம் பேசி அழைத்திருந்தான் பாலன்.

பூமிநாதனும் நரேனும் யாருக்கு அடங்கிப் போவார்கள். ‘எங்களுக்கு நீ பெரியாளா? நீ வந்தா நாங்க போயிடுவோமா?’ எனும் ரீதியில் நெடுமாறனை பார்த்து நின்றனர்.

வீட்டின் வெளியில் இருந்த இடத்தில்தான் அனைவரும் அமர வைக்க பட்டனர். வீடு வெளிப் பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.

பாஸ்கரும் அவனுடன் இருந்த ஆட்களும் வந்தவர்களுக்கு தேநீர் கொடுக்க ஆரம்பித்தனர். நரேன் பக்க ஆட்களுக்கு கொடுப்பதா வேண்டாமா என்ற யோசனையோடு பாலனை பார்த்தான் பாஸ்கர். அவன் ‘கொடுங்கள்’ என கண்களால் சொல்ல பூமிநாதனிடம் தேநீர் கோப்பையை நீட்டினான் பாஸ்கர்.

“நாங்க என்ன சம்பந்தம் பேச வந்திருக்கோமா?” என கோவப்பட்டார் பூமிநாதன்.

“அட அவருக்கு சக்கர இல்லாத டீய கொடுங்க, சுகர் இருக்குதோ என்னவோ?” தீவிர முக பாவனையில் ஆதவன் சொன்னாலும் கிண்டல்தான் செய்கிறான் என மற்றவர்களுக்கு புரிய வாய்க்குள் சிரித்துக்கொண்டனர்.

நரேன் முறைக்க, “வேணாம்னா விடுங்க” என்ற நெடுமாறன், இளங்கோவை பார்த்து, “பொண்ணோட அப்பா நீங்கதான், நீங்க சொல்லுங்க” என்றார்.

இளங்கோவனுக்கு சம்பந்தி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆதலால் நெடுமாறனிடம் தன் மகளை மீட்டு தரும் படி பவ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்னை நேராக சந்திக்க வழி தெரியாமல் தம்பியை வைத்து பழி வாங்குகிறான் பாலன் என பேசினான் நரேன்.

என் மனைவியின் தங்கையை எவனோ ஒருவன் கடத்திப் போய் மணம் புரிந்தால் எனக்கும் அவமானம் என்றான் சபரி.

திருமணமே முடிந்து விட்டது என நெடுமாறன் சொல்லவும் நரேன் பக்கம் திகைத்துப் போய் விட்டனர்.

“உங்க பொண்ணும் விருப்ப பட்டுத்தான் கல்யாணம் பண்ணியிருக்கு, பகைய பெருசா நினைக்காம மருமகளா ஏத்துக்கத்தான் பார்க்கிறாங்க இங்கேயும். பொண்ணு வாழ்க்கைய பாருங்க. பிரச்சனை செய்ய வேணாம்” என இளங்கோவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நெடுமாறன்.

திருமணம் எல்லாம் நடக்கவில்லை பொய் சொல்கிறார்கள் என கிளப்பினான் நரேன்.

திருமணம் ஆனதற்கான ஆதாரத்தை காட்டிய பாலன் ஆதவனை பார்க்க அவன் உள்ளே சென்றான். திரும்ப வரும் போது அவன் பின்னால் சௌமியா வந்தாள். நெடுமாறன் கேட்ட போது ஆமாம் திருமணம் நடந்து விட்டது என ஒத்துக் கொண்டு இங்குதான் இருப்பேன் என உறுதியாக சொன்னாள்.

நரேன் ஆக்ரோஷமாக எழுந்து அவளை தாக்க பாய அவனை எதிர்த்துக் கொண்டு அடிக்க பாய்ந்தான் ஆதவன். நொடியில் சுதாரித்த பாலன் எழுந்து இருவருக்கும் இடையில் நின்றான். அவனது ஒரு கை ஆதவனை தடுத்து பிடித்திருக்க மற்றொரு கை நரேனின் ஏற்கனவே அடி பட்டிருந்த கையின் மணிக்கட்டை வலிமையாக வன்மையாக பிடித்திருந்தது.

வலியை காட்டிக் கொள்ளக் கூடாது என முகத்தை அஷ்ட கோணலாக்கிய நரேன் நெளிந்து கொண்டு நிற்க அவனை மீண்டும் அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே பிடித்து தள்ளி உட்கார வைத்தான் பாலன். நாற்காலி ஒரு ஆட்டம் கண்டு தன் நிலையடைய மூச்சிறைக்க அமர்ந்திருந்தான் நரேன்.

ஆதவனை கண்களால் பாலன் அடக்க, இல்லாத பொறுமையை தேடிப் பிடித்து தன்னிடம் இழுத்து நிறுத்தி அமைதியடைந்தான் ஆதவன்.

“இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க இருக்கும் போது சின்னத்தனமா நீ நடந்தா அப்புறம் பேச்சு வார்த்தைக்கே இடமில்ல. பின் விளைவுகள் மோசமா இருக்கும் தம்பி” ஒருவர் கோவமாக நரேனிடம் சொல்ல அவர் சொன்னதை வழி மொழிந்தார் எம் பி.

மகனை அடக்கி அமைதியா இரு என பூமிநாதன் சொல்லவும் அவரை எரிச்சலாக பார்த்துக் கொண்டே தற்காலிகமாக அமைதியானான் நரேன்.

“சௌமியாவை உள்ள அழைச்சிட்டு போ ஆதவா” என பாலன் நிதானமாக சொல்ல, ஆதவன் சௌமியாவை பார்க்க அவள் மிரண்டு போய் பயமாக பார்த்தாள்.

அவன் உள்ளே போக கை காட்ட அவளும் சென்று விட கதவை அடைத்த ஆதவன் மீண்டும் பாலன் பக்கம் வந்து நின்று கொண்டான்.

நரேன் எகிறி எகிறி பேசிக் கொண்டிருக்க, “அட இவன்கிட்ட என்ன பேச்சு? வாய்லேயே போடுங்க ரெண்டு” என்ற ஆதவன் கையை முறுக்கிக் கொண்டு முன்னால் வர அவன் கையை பிடித்து இழுத்து தனக்கு பின் நிறுத்தினான் பாலன்.

“கை நீட்டுறதுன்னா எனக்கு தெரியாதா? எனக்காக வந்து நிக்கிறாங்க எல்லாரும், அமைதியா இருக்கிறதா இருந்தா மட்டும் இரு. நாம பொறுமையா இருக்கிறது வந்தவங்களுக்கு தர்ற மரியாதை, புரிஞ்சுதா?” பாலன் வெளிப்படையாக ஆதவனை கண்டிக்க, உள்ளுக்குள் கடு கடு என இருந்தாலும் சரி என தலையாட்டிக் கொண்டான் ஆதவன்.

பேச்சு வார்த்தை பாலனுக்கு சாதகமாகவே இருக்க மீண்டும் எழுந்து நின்று குதிக்க ஆரம்பித்தான் நரேன்.

ஓரமாக நின்றிருந்த பாஸ்கரும் அவனுடன் இருந்த ஆட்களும் அவனை பிடித்து மீண்டும் அமர வைத்தனர்.

சபரி தன் தந்தையை முறைக்க, “உனக்கு தேவையில்லாத பிரச்சனைய ஏன் இழுத்து விட்டுக்குற? யார்கிட்ட மோதுறோம்னு பார்த்து செய்யணும் எதுவா இருந்தாலும். உனக்கு எதுவும் பிரச்சனைனா நான் நிக்கலாம், நீ என்னடா பண்ணிட்டு இருக்க?” மகனிடம் மெல்லிய குரலில் சொல்லி பற்களை நெறித்தார் நெடுமாறன்.

மனைவி விரும்பியவன் என்பதில் பாலன் மீது துவேஷம் கொண்டிருந்த சபரிக்கு தந்தையின் வார்த்தை மண்டையில் ஏறவில்லை. நரேனுக்கு ஆதரவாகத்தான் இருந்தான்.

“எனக்கு நிச்சயம் செஞ்ச பொண்ணு, நான் தூக்கிட்டு போவேன். இல்லைனா கொன்னு போட்ருவேன்” என சீறினான் நரேன்.

“வாய் இருக்குன்னு எது வேணா பேசக்கூடாது. துள்ளாம இரு தம்பி” என்றார் ஒருவர்.

“கட்டினவன்னு சொல்றீங்களே எங்க அவனை காணோம்? பயந்திட்டானா?” எனக் கேட்டார் பூமிநாதன்.

“இவர் மாதிரி பொறுமையா இருக்க மாட்டான் அவன். இந்நேரம் எத்தனை பேர் மண்டைய பொளந்து விட்ருப்பானோ? அதான் உள்ளேயே இருன்னு புடிச்சு வச்சிருக்கோம், என்ன இருந்தாலும் வீடு தேடி வந்தவங்களோட ஸேஃப்டி முக்கியம் இல்லையா?” நக்கல் தெறித்தது ஆதவனின் பேச்சில்.

“என்னடா அவனை ஒளிச்சு வச்சுகிட்டு காசு கொடுத்து நாலு பேரை கரெக்ட் பண்ணி கொண்டாந்து வச்சுகிட்டு பம்மாத்து வேலை காட்டுறீங்களா? என்ன நடந்தாலும் சரி அவ இல்லாம போ மாட்டேன் நான், ப்பா கூப்பிடுங்க நம்ம ஆளுங்கள. கல்யாணம் செஞ்சதா சொல்றவன் கழுத்த அறுத்து போட்டுட்டு அழைச்சிட்டு போறேன் அவளை” தந்தையிடம் சொன்னான் நரேன்.

“இவனுடன் எல்லாம் உனக்கு நட்பா?” என நெடுமாறன் தன் மகனை கடிய, பஞ்சாயத்து பேச வந்திருந்த மற்றவர்களும் நரேனை வன்மையாக கண்டித்தனர். ஆனால் அவன் அடங்குவதாக காணோம். பாலன் பாஸ்கரை பார்த்து கண்கள் காட்டினான்.

ஒரு பை மற்றும் கைபேசியை நடுவில் காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் வைத்த பாஸ்கர், “நரேஷோடது” கணீர் என சொல்லி ஒதுங்கி நின்றான்.

அந்த இடம் அமைதியடைய, “தப்பான எண்ணத்தோட செய்யல. பாதுகாப்பா இருக்கான். பிரச்சனை பண்ணாம இங்கேர்ந்து கிளம்பிட்டா உங்களுக்கு முன்ன வீடு போய் சேர்ந்திடுவான். இப்போன்னு இல்ல எப்பவும் என் குடும்பம் மேல கை வைக்க நினைச்சா அதுக்கு முன்ன நான் கை வைப்பேன். இப்போ வரை ரொம்ப… ரொம்ப பொறுமையா போய்கிட்டு இருக்கேன். அப்படியே என்னை இருக்க விட்டா எல்லாருக்கும் நல்லது” சத்தமில்லாமல் பேசினான் பாலன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement