Advertisement

ஜீவ தீபங்கள் -27(2)

செய்தியறிந்த சபரி கொந்தளித்து விட்டான். அம்மாவிடம் பேசி விட்டு வைத்த இனியா, “இல்லங்க சௌமியாவும் அந்த பையனை விரும்பினாளாம்” என்றாள்.

அனுசுயா சின்ன மகளுக்கு திருமணம் நடந்ததை பெரிய மகளிடம் கூட சொல்லியிருக்கவில்லை. பாலன் என்ன எப்படி கையாளப் போகிறான் என தெரியாத காரணத்தால் அவன் சொன்ன படி “லவ் பண்றேன்னு நைட் சொன்னா நான் கண்டிச்சேன், காலைல அவ ரூம்ல போய் பார்த்தா அவளை காணோம், அக்கம் பக்கம் உள்ளவங்கதான் ஏதோ கார்ல போனதா சொல்றாங்க, எனக்கு வேற எதுவும் தெரியாது” என்பதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஓ உனக்குத்தான் அங்க வாழ கொடுத்து வைக்கல உன் தங்கச்சியாவது வாழட்டும்னு சொல்ல வர்றியா?” குரூரமாக மனைவியிடம் கேட்டான் சபரி. வாயை மூடிக் கொண்டு ஒரு ஓரமாக பதுங்கி விட்டாள் இனியா.

பாலன் வீட்டில் காலை சாப்பாடு எப்போதோ தயாராகியிருக்க யாருக்கும் பசி என்ற உணர்வுதான் இல்லை. பெரியவர்களை வர வேண்டாம் என சொல்லி விட்டு சமயோசிதமாக துர்காவையும் வீட்டிலேயே விட்டு விட்டு மலையரசன் மட்டும் வந்திருந்தார்.

மாமாவிடம் எதுவோ சொன்னான் பாலன். அவர் உடனே எங்கேயோ கிளம்பி விட்டார்.

பிரகதீஸ்வரியை வற்புறுத்தி சாப்பிட வைத்த உத்ரா சரத் பரிந்துரை படி தூக்க மாத்திரை ஒன்றை அவருக்கு கொடுத்து உறங்க வைத்து விட்டாள்.

சௌமியாவை பிரியா சாப்பிட வைக்க ஒரு இட்லி சாப்பிட்டவள் அப்படியே வாந்தி எடுத்தாள். இன்னும் சரத் அங்குதான் இருக்க சௌமியாவை பார்க்க வைத்தனர்.

“கல்யாணம் எப்போ ஆச்சு, நாள் தள்ளி போயிருக்கா?” என சரத் விசாரிக்க அதிர்ந்து போய் பார்த்தாள் சௌமியா.

பிரியா அவளின் தோள் தொட்டு, “எப்போ லாஸ்ட் குளிச்ச?” எனக் கேட்டாள்.

“இல்ல…” திணறியவள், “இந்த மாசம்… டூ டேஸ்தான் தள்ளி போயிருக்கு, ஆனா… இருக்காது” பயத்தோடு சொன்னாள்.

உத்ராவும் பிரியாவும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “டெஸ்ட் பண்ணிடலாம்” என்றான் சரத்.

கணவனிடம் “ப்ரெக்னன்ஸி கிட் வாங்கிட்டு வாங்க, அர்ஜென்ட்” என உத்ரா சொல்ல, “நீ என்ன லூசா? நமக்குத்தான் ஒண்ணும் நடக்கலையே, நாள் தள்ளிப் போனா வேற எதுவா கூட இருக்கலாம். உனக்கு ஸ்ட்ரெஸ். இதெல்லாம் யோசிக்க இதுவா நேரம் உனக்கு? ஈவ்னிங் வேணும்னா கைனக் டாக்டர் பார்க்கலாம்” என்றான் ஆதவன்.

தலையில் அடித்துக் கொண்டவள் விவரமாக சொல்ல வருண் இருந்த அறையை எட்டிப் பார்த்தவன், “இன்னும் என்னென்ன ஷாக் தரப் போறான் உன் அண்ணன்?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான்.

பாலன் திண்ணையில் அமர்ந்திருக்க ஆதவன் அவசரமாக வெளிக் கிளம்பவும், “எங்க போற?” எனக் கேட்டான்.

விழித்த ஆதவன், “அந்த பொண்ணுக்கு மெடிசன் வாங்க” என்றான்.

“சீக்கிரம் போயிட்டு வா, போன் கைலேயே வச்சுக்க” என சொல்லி அனுப்பி வைத்தான்.

ஆதவன் மீண்டும் வீடு வந்த பின் ஐந்து நிமிடங்களில் சௌமியா கருவுற்றிருப்பது உறுதியானது.

வாந்திக்கு மாத்திரை எல்லாம் வேண்டாம், மகப்பேறு மருத்துவரை பார்த்து விடுங்கள் என சொல்லி சென்று விட்டான் சரத்.

சௌமியா அழ ஆரம்பிக்க பிரியா அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

சரத்தை அனுப்பி வைத்து விட்டு ஹால் வந்த கணவனிடம், “அண்ணன்கிட்ட போய் சொல்லுங்க” என்றாள் உத்ரா.

“அவன் இன்ஜெக்ஷன் போட்டதுல தூங்கிட்டு இருக்கான்” என்றான்.

“அச்சோ பாலன் ண்ணா கிட்ட சொல்லுங்க” என்றாள்.

“விளையாடுறியா நீ? ஏதோ பெருசா கலவரம் ஆகிட்டு இருக்கு, அவர் டென்ஷன்ல இருக்கார். உன் அண்ணன்தானே நீயே போய் சொல்லு. காலைல கல்யாணம் ஆனது தெரிஞ்சு மதியானம் ஆகறதுக்குள்ள அப்பா ஆகப் போறான் வருண். வேற லெவல்ல இருக்கான் அவன்” என்ற கணவனை முறைத்தவள் பிரியாவிடம் சென்று விட்டாள்.

“வருண் சரியான லூஸு. தெரியாம பண்ணிடுச்சு. உன்கிட்ட சாரி கேட்கும். நல்ல விஷயம்தானே அழாத” என சொல்லிக் கொண்டிருந்தாள் பிரியா.

உத்ராவும் சேர்ந்து அவளை சமாதானம் செய்து எப்படியோ சாப்பிட வைத்தனர். அவளும் வாந்தி எடுக்காமல் மூன்று இட்லிகளை மருந்தென நினைத்து விழுங்கி படுத்து விட மற்ற இரு பெண்களும் ஹால் வந்தனர்.

உத்ராவும் பிரியாவும் அவர்களுக்குள் ரகசியமாக விவாதம் செய்து பாலனிடம் பிரியாதான் சொல்வது என முடிவானது.

மனைவியை கண்ட பாலன் “எனக்கு ஒரு டீ கொடும்மா” என சொல்லி விட்டு பாஸ்கரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று, “சொல்லுங்க ண்ணா” என விஷயத்தை கேட்டுக் கொண்டு, “ஓகே ண்ணா, உஸ்மான் பாய்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு நீங்க இங்க வாங்க” என சொல்லி வைத்தான்.

நகராமல் நின்றிருந்த பிரியாவை பார்த்தவன், “சாப்பிட சொல்லாத, என்னால முடியாது. போ டீ எடுத்திட்டு வா” என்றான்.

அவன் அருகில் வந்தவள், அவன் தோளில் ஆதரவாக கை போட்டு, “நீங்க கோவப்படக் கூடாது” என்றாள்.

“என்ன?”

எச்சில் கூட்டி விழுங்கி திணறி ஒரு வழியாக சொல்லி விட்டாள் பிரியா.

முற்றிலும் ஓய்ந்து போனவனாக தூரமாக தெரிந்த வானத்தை வெறித்தான் பாலன்.

“என்னங்க…” என்ற பிரியாவின் அழைப்பில் விரக்தி நிறைந்த விழிகளோடு அவளை ஏறிட்டான்.

“சௌமியா ரொம்ப அழறா” என்றாள் பிரியா.

நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டவன், “அழ வேணாம்னு சொல்லு, பார்த்துக்கலாம்” என்றான்.

“நீங்க சாப்பிட வாங்க” என அழைத்தாள்.

“நீயும் படுத்தாம போ பிரியா, முடிஞ்சா டீ கொடு” பாலனின் குரல் உள்ளே சென்று விட்டது. ஆளும் சோர்ந்து விட்டான்.

“ப்ளீஸ், சாப்பிட்டு அப்புறம் பாருங்களேன்” கணவனின் கை பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

விட மாட்டாள் என புரிந்து உள்ளே வந்தவன் அவனது அறைக்கு சென்று குளிக்க சென்றான். தயாராகி வந்தவன் நேரே பூஜையறைக்கு செல்ல அவசரமாக வந்து விளக்கேற்றி வைத்தாள் பிரியா. கண்கள் மூடி ஒரு நிமிடம் நின்றவன் விழிகள் திறக்கையில் அவனையே கலக்கமாக பார்த்து நின்றிருந்தாள் பிரியா.

திருநீறு இட்டுக் கொண்டவன் மனைவிக்கும் இட்டு, “அந்த பொண்ணு சாப்பிட்டுச்சா?” எனக் கேட்டுக் கொண்டே ஹால் வந்தான்.

“பேருக்கு ஏதோ சாப்பிட்டுச்சு, இப்போ படுத்திருக்கா” என்றாள்.

“ம்ம்…” போட்டுக் கொண்டான்.

“வருண்தான் இன்னும் சாப்பிடவே இல்ல” என்றாள்.

“நான் கேட்கவே இல்லையே” என்றவனிடம் அடுத்து என்ன சொல்ல என பார்த்தாள்.

“சௌமியாவை தனியா விடாதீங்க, நீ இல்லன்னா உத்ரா யாராவது கூடவே இருக்கணும். போ ஆதவனையும் சாப்பிட கூப்பிடு” என சொல்லிக் கொண்டே உணவு மேசையில் அமர்ந்தான்.

கணவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல் அண்ணனையும் சாப்பிட அழைத்தாள் பிரியா.

ஆதவன் தங்கையை பரிவாக பார்க்க, “இந்த ஃபீலிங்லாம் ஒண்ணும் எனக்கு வேணாம். உத்ரா ஹஸ்பண்ட்டா போயிட்டியே… வா” என சொல்லி சென்றாள்.

ஒரு வழியாக வருணை தவிர மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்.

நரேன் ஆள் திரட்டிக் கொண்டு பாலனின் வீடு வருவதாக செய்தி கிடைத்தது.

பாலன் சொன்னதை செய்து முடித்து விட்டு வந்த மலையரசனை அவர் வீட்டிலும் யாராவது ஆள் இருக்க வேண்டும் என சொல்லி அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்து விட்டான்.

உத்ராவிடமும் பிரியாவிடமும், “யாரும் வீட்ட விட்டு வரக்கூடாது” என கட்டளை போல சொல்லி விட்டு திண்ணைக்கு வந்து விட்டான்.

பாலனுடனே நின்று கொண்ட ஆதவன், “நம்மளால என்ன செய்ய முடியும்? எதுக்கும் துணிஞ்ச பய ஏடாகூடமா ஏதாவது செஞ்சா லாஸ் நமக்குத்தான். போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணலாம்” என்றான்.

“நடு ராத்திரில வந்தா என்ன செய்வ? நாளைக்கு வந்தா… ஒரு வாரம் கழிச்சு வந்தா…” பாலன் கேட்க, “ப்ரொடக்ஷன் கேட்கலாம்” என்றான் ஆதவன்.

புன்னகைத்த பாலன் “எத்தனை பேருக்கு கேட்ப?” எனக் கேட்டான்.

“என்னதான் செய்யலாம்னு இருக்கீங்க? தெருவுல நின்னு அடிதடின்னு இறங்க போறோமா?”

“நாம இறங்கல, அவனுங்களா வந்தா என்ன செய்றது? முடிஞ்ச வரை அமைதியா முடிக்க பார்க்கணும், முடியலைன்னா கூட என் வீட்ல எந்த சத்தமும் கேட்காது”

“புதிர் போல பேசுறீங்க, அப்பாவை எங்க அனுப்புனீங்க? ப்ச்… நான் என் மாமா ரிலேட்டிவ் சென்னை கமிஷனர் இருக்காரே, அவர் மூலமா இங்க சொல்ல சொல்றேன்” கைபேசி எடுத்தான் ஆதவன்.

அவனது கைபேசியை வாங்கி மீண்டும் அவனது பாக்கெட்டிலேயே போட்ட பாலன, “எதுக்கு போலீஸ் போகணும் எதை நாமளே பார்க்கணும்னு எனக்கு தெரியும், உனக்கு பயமா இருந்தா போ இங்கேர்ந்து” என்றான்.

“எனக்கு எதுவும் ஆனா பரவாயில்ல, அதுக்கெல்லாம் பயந்தவன் இல்ல நான். வீட்டுக்குள்ள பொம்பளைங்க இருக்காங்க”

“என்னை மீறி என் வீட்டு பொண்ணை எவனாலயும் எதுவும் செய்ய முடியாது” அழுத்தமாக சொன்ன பாலனை திகிலோடு பார்த்திருந்தான் ஆதவன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement