Advertisement

ஜீவ தீபங்கள் -27

அத்தியாயம் -27(1)

உத்ராவும் ஆதவனும் பாலன் வீட்டிற்கு வந்தனர். வருணை பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர். மருத்துவமனை செல்லலாம் என உத்ரா அழைக்க மறுத்து விட்டான் வருண். வீட்டின் உள்ளே வரவும் மறுத்து வெறும் தரையிலேயே படுத்து கிடந்தான்.

ஆதவன் தனக்கு தெரிந்த மருத்துவ நண்பன் சரத் என்பவனை வரும் படி அழைத்தான். பிரியாவோடு பாலன் எங்கு சென்றான் என யாருக்கும் தெரியவில்லை.

சௌம்யாவின் வீட்டின் முன் பாலனின் கார் நிற்க பாலனும் பிரியாவும் இறங்கினார்கள். அந்த வீட்டு வாசல் படியில் கால் வைக்கவே பாலனுக்கு யோசனைதான், ஆனால் தம்பி பெரும் தவறு இழைத்திருக்க மனதை கல் ஆக்கிக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

ஹாலில் யாருமே இல்லை.

பாலன் யோசனையாக ஒருவாறு அசௌகர்யமாக நிற்பதை கண்ட பிரியா அவளே, “என்னங்க… யாருங்க வீட்ல?” என குரல் கொடுத்தாள்.

“யாரு?” நடுக்கத்தோடு அனுசுயாவின் குரல் கேட்க, “நான் பிரியா, பிரகதீஸ்வரி அத்தையோட மருமக” குரல் வந்த திசை பார்த்து கூறினாள் பிரியா.

“அம்மாடி இங்க கொஞ்சம் வாயேன்” அழுகையோடு அவர் கூற, பிரியா அங்கு செல்ல அவளை தொடர்ந்தான் பாலன்.

அந்த அறையில் மகளை தன் மடியில் போட்டுக் கொண்டு அனுசுயா அழுது கொண்டிருந்தார். மின் விசிறியில் புடவை ஒன்று சுருக்கு போட ஏதுவாக தொங்கிக் கொண்டிருந்தது.

இரக்கமாக அவர்களை பார்த்திருந்த பிரியாவின் கண்கள் கலங்கிப் போயின.

நடந்தது கேள்வி பட்டுத்தான் வந்தான் பாலன். இப்போது நேரில் இந்த காட்சியை காண்கையில் தம்பி மீது கொலை வெறி வந்தது.

‘எதுவும் தவறாக நடந்திருந்தால் அந்த பாவத்தை எங்கு போய் கரைப்பேன் ஐயோ!’ தீங்கு செய்தவனுடைய அண்ணனின் மனம் கூச்சலிட்டது.

“இன்னும் யாருக்கும் தெரியாது, நான் மட்டும் பார்க்கலைனா இந்நேரம்…” என்ற அனுசுயா குலுங்கி அழ அம்மாவின் வயிற்றை கட்டிக் கொண்டு அழுதாள் சௌமியா.

பாலன் ஸ்டூல் ஒன்றை எடுத்து போட்டு அந்த புடவையை மின் விசிறியிலிருந்து அகற்றி தூர எறிந்தான்.

“இவ விஷயம் யாருக்கும் தெரியாது. இவ அப்பா வெளியூர் போயிருக்கார். தெரிஞ்சா என்னாகும்னு எனக்கு தெரியலை. அண்ணி மேல நம்பிக்கை வச்சுத்தான் நேத்து நான் அவங்கள பார்க்க வந்தேன், அவங்க நம்பிக்கையா எதுவும் சொல்வாங்கனு நான் காத்திட்டு இருக்கையில இவ இப்படி… ஐயோ என் பொண்ணு வாழ்க்கை போச்சே!” அரற்றினார் அனுசுயா.

“சத்தம் போடாதீங்க, யார் வாழ்க்கையும் போகல” என்ற பாலன், “என் தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு எங்க வீட்டு மருமக. அவன் வச்சு நல்லா வாழ்வான். நான் பொறுப்பு, எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க” என்றான் பாலன்.

“நான் எங்கேயும் போகல, எனக்கு யார் கூடவும் வாழ வேணாம்” அழுது கொண்டே சொன்னாள் சௌமியா.

வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு என்ன பேசுகிறாய் என்பது போல மகளை வசை பாடினார் அனுசுயா.

எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டோம், எப்படி அன்பை பொழிந்து வாழ்ந்து விட்டு நிர்கதியாக விட்டு சென்றான் என்னை என தான் ஏமாந்து போன கதையை நினைத்தவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

“இங்க பாரும்மா உனக்கு அவன் செய்தது பெரிய தப்பு. அவனுக்காக வக்காலத்து எல்லாம் வாங்க மாட்டேன் நான். ஆனா நீ விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டவன்தானே? பிடிவாதம் செய்ய இது நேரமில்லை, உன் சொந்தம் எல்லாம் மனுஷத் தன்மை இல்லாதவங்க. இந்த நேரம் நீ இங்க இருக்க வேணாம், வாம்மா” என அழைத்தான் பாலன்.

இரண்டு நாட்களாக வருணின் துரோகத்தை நம்ப முடியாமல் அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருந்தவளுக்கு மீண்டும் வருணிடம் செல்ல துளி கூட விருப்பமில்லை. என்ன நடந்தாலும் சரிதான் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி விட்டாள்.

அனுசுயாதான் தான் ஏதாவது செய்து கொள்வேன் என சொல்லி மிரட்டி பாலனோடு அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து கிளம்பும் முன் அனுசுயாவை பார்த்தவன், “உங்க பொண்ணை நான் அழைச்சிட்டு போறது உங்களுக்கே தெரியாது, யார் கேட்டாலும் அப்படியே சொல்லுங்க” என அறிவுறுத்தியே புறப்பட்டான்.

பாலன் காரில் ஏற பின் இருக்கையில் சௌமியாவை ஏற்றி தானும் ஏறினாள் பிரியா. அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சரியாக விஷயம் தெரியவில்லை. ஏதோ கார் வந்தது, சௌமியா அவர்களோடு சென்று விட்டாள் என பேசிக் கொண்டனர்.

அண்ணனின் கார் வரவும் எழுந்தமர்ந்த வருண் சத்தியமாக சௌமியாவை எதிர்பார்த்திருக்கவில்லை. இரு நாட்களில் உரு குலைந்து போய் இப்போதும் ஏதோ பழைய சுடிதாரும் சரியாக வாரப் படாத கேசமும் வீங்கிய முகமுமாக அலங்கோலமாக இருந்த சௌமியாவை கண்டவன் மனம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

கோவமாக வருணை பார்த்த பிரியா தன்னோடு சௌமியாவை உள்ளே அழைத்து செல்ல தம்பியை திரும்பி பாராமல் பாலனும் உள்ளே சென்று விட்டான்.

வந்த பெண் சௌமியா என தெரியவும் பாலனிடம் வந்த ஆதவன், “தெரிஞ்சுதான் செய்றீங்களா?” எனக் கேட்டான்.

ஆம் என தலையாட்டிய பாலன், “இந்த பொண்ண நரேனுக்கு பேசி வச்சிருக்காங்க” என்றான்.

“பிரச்சனை செய்ய வருவாங்களா?”

“அப்படித்தான் கெஸ் பண்றேன்”

“போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம்”

உத்ராவை அழைத்த பாலன், “மேரேஜ் எங்க பண்ணினான், ரெஜிஸ்டர் பண்ணியிருக்கானான்னு கேளும்மா அவன்கிட்ட” என்றான்.

“சௌமியாகிட்ட கேட்கவா ண்ணா?” எனக் கேட்டாள்.

“அது ஏற்கனவே நொந்து போயிருக்கு, இந்த தடியன்கிட்டேயே கேளு” என பாலன் சொல்ல கேட்டு வந்தவள், “ரெஜிஸ்டர் மேரேஜ்தான் பண்ணியிருக்காம்” என்றாள்.

நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்ட பாலன் கைபேசி எடுத்துக் கொண்டு நகர ஆதவனின் மருத்துவ நண்பன் சரத் வந்தான்.

வருணின் உடலெல்லாம் காயமாக இருக்க “ஷர்ட் ரிமூவ் பண்ணிதான் பார்க்கணும், ரூம் ஏதாவது போலாம்” என்றான் சரத்.

வருண் வீட்டுக்குள் வர மறுக்க, “பிரைவேசி வேணாமா உனக்கு? இரு உன் அண்ணாகிட்ட நான் கேட்கிறேன்” என்ற ஆதவன் பாலனிடம் வந்து நின்றான்.

“ரொம்பத்தான் என் பேச்சை கேட்கிறவன்? அவன் இழுத்து விட்ருக்க பிரச்சனைய பார்ப்பேனா அவனை பார்ப்பேனா? நீ விடு அவன் அப்படியே கிடக்கட்டும், டாக்டர போக சொல்லு” என்ற பாலன் மீண்டும் கைபேசியை காதில் வைத்துக்கொண்டான்.

வெளியே வந்த ஆதவன், “உன் ரூம் போக சொல்றார் உன் அண்ணன். படுத்தாம எழுந்திருடா” என வருணிடம் எரிந்து விழ அவன் எழவே சிரம பட்டான்.

கைத்தாங்கலாக அழைத்து சென்று வருணை அவன் அறையில் கிடத்தினான் ஆதவன். பரிசோதித்த சரத், “கைல உள்ள காயத்துல எல்லாம் மண்ணு, பெட்டர் குளிச்சிட்டு வந்துடுங்க வருண்” என்றான்.

வருண் ஒத்துழைப்பு கொடுக்காமல் வெறித்துக் கொண்டிருக்க ஆதவன்தான் மல்லுகட்டி குளியலறை இழுத்து சென்று குளிக்க விட்டான்.

“என்னடா ஆச்சு?” என கேட்ட சரத்திடம், “நீதான் சொல்லணும்” என்றான் ஆதவன்.

“தோலை உறிக்கிறதுன்னு கேள்வி பட்ருப்போம், செஞ்சிட்டார் இவன் அண்ணன்” என சரத் கூற மேலோட்டமாக பிரச்சனையை கூறினான் ஆதவன்.

வருண் குளித்து வரவும் முதலுதவி கொடுத்து ஊசி மூலம் மருந்து செலுத்த தயாராகிக் கொண்டே, “சாப்பிட்டீங்கதானே?” எனக் கேட்டான் சரத்.

வருண் இல்லை என சொல்லவும் முதலில் சாப்பிட்டு விடுங்கள் என்றான் சரத்.

“எனக்கு எதுவும் வேணாம் நீங்க கிளம்புங்க” என்றான் வருண்.

சரத் ஆதவனின் முகம் பார்க்க, “இருக்கட்டும் டா, இதுக்கு மேல இவன் அழிச்சாட்டியம் பார்த்தா நானும் சேர்ந்து அடி பிரிச்சு விட்ருவேன். ஒரு வேளை திங்காட்டா என்ன? எது வந்தாலும் நல்லா தாங்குற உடம்புதான், நீ இன்ஜெக்ஷன் போடு” என்றான் ஆதவன்.

இப்படியாக வருணை ஆதவன் மிக சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்க, சௌமியாவை குளிக்க வைக்க வேறு ஆடை மாற்ற சாப்பிட என அவளோடு மல்லுகட்டிக் கொண்டிருந்தனர் உத்ராவும் பிரியாவும்.

இங்கு நரேனுக்கு விஷயம் தெரிந்து விட்டது. இவர்களை பழி வாங்கத்தான் வருண் சௌமியாவை மணந்தான் என இன்னும் தெரியவில்லை. தான் திருமணம் செய்ய இருந்த பெண்ணை வருண் காதலித்திருக்க, அவன் அண்ணன் வீடு வந்து அழைத்து சென்று விட்டான் என்பதாக புரிந்து கொண்டவன் வானளவு எகிறிக் குதித்தான்.

அந்த வீட்டில் தன் பேத்தி மருமகள் ஆனதில் சுயம்புலிங்கத்துக்கு ஒன்றும் அத்தனை வருத்தம் இல்லை. இதை வைத்து இந்த பகையை இத்தோடு முடித்து எப்படி சுமூகம் ஆக்கலாம் என சிந்தித்தார். வைத்தியநாதனும் அவனுக்கும் உரிமை இருக்கு, என்ன இப்போ என் பையன்தானே எனும் விதமாக பேசி அண்ணன் மற்றும் அண்ணன் மகனின் கோவத்தை சம்பாதித்துக் கொண்டார்.

ஆனால் நரேனும் பூமிநாதனும் சௌமியா விஷயத்தை அப்படியே விடுவதாக இல்லை. நாகை வரை சென்றிருந்த இளங்கோவனுக்கு விஷயத்தை சொல்லி திருவாரூர் வர சொல்லி விட்டனர்.

விஷயம் காட்டத் தீ என ‘பாலன் அவன் தம்பி காதலிச்ச பொண்ணை தம்பிக்கே கல்யாணம் பண்ணி வைக்கனும்னு கடத்திட்டு போயிட்டானாம்’ என திரிந்து பரவிக் கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement