Advertisement

அத்தியாயம் -26(2)

ஒரே இழுப்பில் வருணை தரையிறக்கிய பாலன் தர தரவென இழுத்துக் கொண்டு வந்து காம்பவுண்ட் உள்ளேயே இருந்த இடத்தில் நிறுத்தினான். பாலனின் முகமும் உடல்மொழியும் வருணை அதிர வைக்க பிரியாவுக்கு பயம் பரவியது. பிரகதீஸ்வரி மட்டும் அவனது கோவம் சரிதான் என்பது போல நின்றிருந்தார்.

அருகிலிருந்த வேப்ப மரத்தின் கிளையை வளைத்த பாலன் அதை ஒடித்து கையில் எடுத்துக் கொண்டான். ஆவேசமாக அதன் இலைகளை சர சர என பிய்த்து போட்டவன் அந்த குச்சியின் வலிமையை வளைத்து பரிசோதித்துக் கொண்டே வருணின் முன் வந்து நின்றான்.

“ஐயோ வேணாங்க!” அலறிய பிரியா கணவனை தடுக்க நினைத்து திண்ணையிலிருந்து இறங்கப் போக அவளின் கை பிரகதீஸ்வரியின் இறுகிய பிடியில் இருந்தது.

“வேணாங்க, பாவம் வருண், விடுங்க ப்ளீஸ், என்னங்க…” பிரியாவின் சத்தம் எல்லாம் பாலனின் காதை சென்றடையவே இல்லை.

என் தம்பி ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டான் என்பதில் அவனது உள்ளம் நொறுங்கிப் போய் விட்டது. என் வளர்ப்பா இப்படி என அவனது உடல் எல்லாம் கூசுகிறது. தெரியாதவன் யாராவது ஏதாவது பெண்ணுக்கு தீங்கு செய்தாலே பாலனிடம் அடுத்த விசாரணை கிடையாது. சொந்த தம்பியே அதை செய்திருக்க கை வழியே தன் சக்தியை அந்த கம்பில் கொண்டு வந்து வருணின் உடலை நோக செய்தான்.

பச்சைக் கம்பு வருணின் உடலை நன்றாகவே பதம் பார்த்தது. அண்ணனிடம் இருந்து தப்பி செல்ல நினைக்காமல் வலியில் துடித்துக் கொண்டே அவ்விடம் விட்டு அகலாமல் நின்றிருந்தான் வருண். தம்பியின் உடலில் இரத்தக் கசிவு கண்ட பின்னும் பாலனின் மனம் இளகவே இல்லை.

கல் போல் நின்று பிரகதீஸ்வரி பார்த்திருக்க வேலையாட்கள் வேடிக்கை பார்க்க வடிவம்மாள் பயத்தோடு அந்த காட்சியை பார்த்திருந்தார்.

பிரியாவால் பொறுக்கவே முடியவில்லை. அத்தையின் கையை விலக்கி விட்டவள் இறங்கி ஓடி வந்தாள். கணவனின் கையை அவள் பிடிக்க, அவளை விலக்கி விட்டான் பாலன்.

“நிறுத்துங்க, வருண் உடம்புல இரத்தம்” கெஞ்சினாள் பிரியா.

“தள்ளிப் போ” அவளை பார்த்து சீறியவன் நைந்து உடைந்து போன குச்சியை கீழே வீசி எறிந்து விட்டு மரத்திலிருந்து இன்னொரு கிளையை வளைத்தான்.

வருணின் கை பிடித்த பிரியா, “இங்க நிக்காத, உள்ள வா, சீக்கிரம் வா” என சொல்லி அவனை இழுத்தாள்.

சக்தி திரட்டி அண்ணியின் கையை விலக்கி விட்ட வருண் அங்கேயே நிற்க அதற்குள் புதிய கம்புடன் வந்து விட்டான் பாலன். தன் கையில் இருக்கும் இரத்தக் கறையை கண்ட பிரியாவுக்கு பரிதவிப்பாக இருந்தது. பாலனின் கோவத்தை குறைக்கும் வழி தெரியவில்லை. அங்கிருந்த யாரும் பாலனை நெருங்கும் துணிச்சல் இன்றி நின்றிருந்தனர்.

வருணை காப்பாற்றும் பொருட்டு கணவனுக்கும் வருணுக்கும் இடையில் புகுந்தாள் பிரியா. வருணை காக்கும் பொருட்டு கைகளை அரணாக விரித்தாள். பாலனின் அடுத்த அடி ‘சட்’ எனும் சத்தத்தோடு பிரியாவின் முதுகில் பட்டது. அலறித் துடித்த பிரியா வலி பொறுக்க முடியாமல் தரையில் அமர்ந்து விட்டாள்.

மனைவியின் அழுகையையும் துடிப்பையும் பார்த்துதான் பாலனின் கை ஓய்ந்தது. வடிவம்மாளும் பிரகதீஸ்வரியும் பிரியாவை நோக்கி ஓடி வர வருணும் நிற்க இயலாமல் தரையில் அமர்ந்து விட்டான்.

பிரியாவை கைகளில் ஏந்திக் கொண்ட பாலன் வீட்டுத் திண்ணையில் அமர வைத்தான். கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க அவள் முதுகை தடவிக் கொடுக்க கை வைத்தான் பாலன்.

அவன் கையை விலக்கி விட்டவள், “எனக்கே அப்படி வலிக்குது பாவம் வருண். அங்க பாருங்க, வருணுக்கு ஏதாவது செய்ங்க” என அழுது கொண்டே கெஞ்சினாள்.

“அந்த ராஸ்கலை திரும்பி பார்த்தேனா அவன் கழுத்த அறுத்து போட்ருவேன். உன்னை யாரு குறுக்க வர சொன்னது?” கடிந்தவன் வடிவம்மாளை பார்த்து, “இவளை உள்ள அழைச்சிட்டு போய் என்னன்னு பாருங்க” என்றான்.

பிரியாவும் வடிவம்மாளும் உள்ளே சென்று விட வருண் வீட்டின் வெளியில் கட்டாந் தரையில் கால்களை நீட்டி கைகளை ஊன்றி இலக்கில்லாத பார்வையோடு அமர்ந்திருந்தான்.

கண்ணீரோடு கலக்கமாக இருந்த பிரகதீஸ்வரி பெரிய மகனை பார்க்க என்ன சொல்லி அம்மாவை தேற்ற என பாலனுக்கும் தெரியவில்லை. இன்னும் ‘நம்ம வருணா இப்படி?’ எனதான் இருவரது உள்ளங்களுமே தவித்துக் கொண்டிருக்கிறது.

“அம்மா…” பலஹீனமாக குரலில் அழைத்த வருண் தன்னை விளக்கி விட வேண்டும் என்பது போல பார்த்தான்.

“அவனை என்கிட்ட பேச வேணாம்னு சொல்லுடா. கடைசியில அந்தாளு மகன்தான்னு நமக்கு நிரூப்பிச்சு காட்டிட்டான்ல?” ஆற்றாமையாக சொன்னார் பிரகதீஸ்வரி.

அம்மாவின் கையை பற்றிக் கொண்ட பாலன், “நீ அமைதியா இரும்மா” என்றான்.

சக்தியை திரட்டி எழுந்த வருண் நடக்க முடியாமல் நடந்து அவர்களிடம் வந்தான்.

இருவருமே அவனை காண பிடிக்காமல் நிற்க, “எனக்கு அந்தாளு யாருமில்ல, நான் அண்ணன் வளர்த்த பையன் மட்டும்தான். இது உங்களுக்காகத்தான், என்னை எவ்ளோ வேணா அடி ண்ணா. ஆனா இப்படி வெறுப்பா பார்க்காத” என்றான் வருண்.

விழிகள் தெறிக்க தம்பியை பார்த்தவன், “அம்மாக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்க கூடாதுன்னு நீ நினைச்சிருந்தா பெருமை பட்ருப்பேன் டா. இப்படி கீழ்த்தரமா ஒரு பொம்பள புள்ளைய நம்ப வச்சு ஏமாத்திருக்கியே… ச்சீய்… ஒரு வார்த்தை என்கிட்ட பேசக்கூடாது நீ, என் மூஞ்சியிலேயே முழிக்காத” என்றான்.

வருண் கண்ணீரோடு அண்ணனை பார்க்க அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டான் பாலன்.

பிரியாவின் முதுகு வரியாக சிவந்து போயிருந்தது. தேங்காய் எண்ணெய் போட்டு விட்டிருந்தார் வடிவம்மாள். நேரம் எட்டு ஆகியிருக்க சமையல் செய்பவர் காலை உணவு என்ன செய்ய என வடிவம்மாளிடம் கேட்டார். அவர் யாரிடம் சென்று கேட்பது என விழித்து ஏதாவது செய் என சொல்லி பிரகிதீஸ்வரி இருந்த அறைக்கு வந்தார்.

அறையிலிருந்த பிரியா உத்ராவுக்கு அழைத்து சுருக்கமாக விஷயத்தை சொல்லி, “நீ வா, வீடே என்னவோ போல கெடக்கு. அண்ணனையும் அழைச்சிட்டு வா. வருணை திருப்பி இவர் அடிச்சா சமாளிக்க கூட ஆள் இல்ல இங்க” என்றாள்.

பதறிப் போன உத்ரா கணவனை அழைத்துக் கொண்டு உடனடியாக புறப்பட்டு விட்டாள்.

அறையிலிருந்து வந்த பிரியா காலை சமையல் என்ன என பார்த்து விட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் திண்ணைக்கு வந்தாள்.

வருண் அனாதரவாக திண்ணையின் வெறும் தரையில் படுத்திருந்தான்.

“எழுந்திரு இந்த தண்ணிய குடி” என பிரியா சொல்ல தன் கண்ணீரை மறைக்க புறங்கை எடுத்து கண்களை மூடிக் கொண்டான்.

அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் கையை விலக்கி விட்டு, “இப்படி அழுதா சரியா போச்சா? செஞ்ச தப்ப எப்படி சரி செய்றதுன்னு பார்க்கலாம்” என சமாதானம் செய்து அவனை எழுப்பி நீர் பருக வைத்தாள்.

“பிரியா!” உள்ளிருந்து பாலன் அலற எழுந்து உள்ளே ஓடி சென்றாள்.

பாலன் கோவமாக அவளை பார்க்க கண்களால் கெஞ்சலாக பார்த்தாள் பிரியா.

“கொலை பாதகம் பண்ணிட்டு வந்திருக்கான் டி அவன், கெடக்கட்டும், சோறு தண்ணி எதுவும் கொடுக்காத”

“என்னங்க!”

“என் நெஞ்சறுத்திட்டான்னு சொல்றேன், நீ அவனுக்காக பரிஞ்சு பேச வர்ற” நிஷ்டூரமாக அண்ணன் சொல்ல வருணுக்கு இந்த நொடியே தன் உயிர் போய் விட்டால் பரவாயில்லை என தோன்றியது.

வேகமாக கணவன் பக்கம் வந்து அவனை மேலும் எதுவும் பேச விடாமல் வாயை பொத்தினாள் பிரியா. அவள் கையை விலக்கி விட்டு விரக்தியாக பாலன் பார்க்க பிரியா ஆறுதலாக ஏதோ சொல்லப் போவதற்குள், “தாங்க முடியல பிரியா என்னால. நீ அம்மாவ பாரு” என்றான்.

மாமியார் அறைக்கு சென்ற பிரியா அவருக்கு ஆறுதலாக பேச, “பட படப்பா வருது பிரியா, நான் படுத்துக்கிறேன்” என சொல்லி படுத்து விட்டார்.

பிரியாவும் சோர்வாக அங்கிருந்து எழ பிரகதீஸ்வரியின் கைபேசி சத்தமிட்டது.

பிரியாதான் எடுத்து பார்த்தாள். நேற்று இவள்தான் அனுசுயாவின் எண்ணை இதில் பதிந்தது. அவரின் பெயர் தெரியவும் உடனே அழைப்பை ஏற்றவள் அவர் சொன்ன செய்தியில் உடல் பதற கைபேசியை இறுகப் பற்றிக் கொண்டே பாலனிடம் ஓடி சென்றாள்.

பாலன் ஹாலில் இல்லை.

“தக்காளி சட்னியும் வச்சிடவா?” கேட்ட சமையல்கார பெண்ணை தாண்டி அவர்கள் அறைக்கு பிரியா ஓடி செல்ல இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்திருந்தான் பாலன்.

“என்னங்க…” மூச்சிறைக்க அழைத்தவள் தான் கேட்ட செய்தியை பகிர ‘விருட்’ என எழுந்து நின்றான் பாலன்.

பிரியா பதற்றமாக பார்க்க, “நான் கார் எடுக்கிறேன், நீயும் உடனே புறப்பட்டு வா” என்ற பாலன் கார் சாவியோடு வெளியே சென்றான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் பாலனும் பிரியாவும் காரில் புறப்பட்டிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருந்த வருண் குழப்பமடைந்தான். விவரிக்க தெரியாத பயம் அவன் நெஞ்சில் வியாபிக்க ஆரம்பித்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement