Advertisement

ஜீவ தீபங்கள் -26

அத்தியாயம் -26(1)

காலையிலேயே எழுந்து வெளியே வந்து விட்டார் பிரகதீஸ்வரி. பாலனுக்கு இவரை போல அத்தனை கவலை இல்லை, தன் தம்பி மீது அத்தனை நம்பிக்கை! பிரகதீஸ்வரிக்கும் மகனை தவறாக நினைக்க முடியவில்லை என்றாலும் அனுசுயாவின் அழுகை பொய் இல்லையே என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.

பிரியா எழுந்த பின் மூவருமாக திண்ணையில் அமர்ந்து காபி பருகினர். வெளியில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலையாள், “தம்பி தண்ணீ வரலைங்க” என சொல்ல பாலன் எழுந்து சென்றான்.

“நான் என்னன்னு பார்க்கிறேன், பின்னாடி களை நிறைய மண்ட ஆரம்பிக்குது, வெட்டி விடுங்க” என வேலையாளை அனுப்பி வைத்து மோட்டாரை ஆராய ஆரம்பித்தான்.

“நீங்கதான் இப்படி இருக்கீங்க, உங்க பையன் கூலா இருக்கார் பாருங்க. அவங்க பொய் சொல்லியிருக்க மாட்டாங்க, அந்த பொண்ணும் திருச்சியில படிச்சதால ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகியிருக்கும். நம்ம வருண் போய் இப்படி செய்யுமா? வருண்ங்கிற பேர்ல வேற யாரும் கூட இருக்கலாம்” சமாதானமாக சொல்லிக் கொண்டிருந்தாள் பிரியா.

மோட்டாரின் கோளாறை என்னவென கண்டறிந்த பாலன் சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“ஆள கூப்பிடாம நீங்க என்ன செய்றீங்க?” திண்ணையிலிருந்து சத்தம் போட்டாள் பிரியா.

“என்னால முடியலைனா கூப்பிட்டுக்கலாம், நீ ஏதாவது பழைய துணி எடுத்திட்டு வா” என்ற பாலன் மோட்டாரை பிரித்து போட்டிருந்தான்.

பழைய துணி எடுத்து வந்தவள் கணவன் பக்கம் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு “என்ன செய்றீங்க ஆஃபீசர்?” எனக் கேட்டாள்.

“மோட்டாருக்கு உடம்பு சரியில்லை வைத்தியம் பார்க்கிறேன்” என்றவன், “இந்நேரம் வருண் வந்திருக்கணும், ஒரு ஃபோன் போட்டு கேளு” என்றான்.

“நைட் எல்லாம் பொண்டாட்டியே கதி, விடிஞ்சு போனா என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டீங்க” குறையாக சொன்னாள்.

“நான் ஏன் உன்னை நிமிர்ந்து பார்க்கணும்? என் ஹைட் விட கம்மிதான் நீ, சாதாரணமா பார்த்தாலே தெரியுற”

“எங்க சாதாரணமா பாருங்க ஒரு பார்வை”

“விளையாடாம போ, அம்மா கவலையா இருக்காங்க பாரு. அவன் வந்து அவன் வாயாலேயே சொன்னாதான் தெளிவாங்க”

“வருணை நினைச்சு உங்களுக்கு டென்ஷன் இல்லையா?” எனக் கேட்டவளை பார்த்து புன்னகைத்தவன், “அவன் என் தம்பி, என் கை புடிச்சுகிட்டு என் கூட திரிஞ்சவன், என் வளர்ப்பு பிரியா” என்றான்.

“அந்த எருமை பத்தி ஓவர் பெருமை! மாமா பொண்ண மட்டும் கண்டுக்காம விட்டுட்டீங்கல்ல?”

“ஏன் என் மாமன் பொண்ணுக்கு என்ன? அவ பாட்டுக்கும் கன்னுக்குட்டியோட ஜாலியா இருந்தாளே. அவதான் என்னை கண்டுக்கல”

“ஆமாம், எனக்கு அப்ப நீங்கதான் என் ஆளுன்னு தெரியாதுல்ல, இல்லைனா கன்னுகுட்டிக்கு பதிலு உங்க கூட சுத்தியிருப்பேன்”

“எது கல்யாணம் முன்னாடி என்கூட சுத்துவியா? போ அவனுக்கு போன் போடு”

“அதானே இப்போவே எங்கேயும் கூட்டிட்டு சுத்தறது இல்ல, கல்யாணம் முன்னாடி எங்கேயும் நீங்க கூட்டிட்டு போயிருந்தாலும்…” சலித்துக் கொண்டே பிரியா எழ காரில் வந்திறங்கினான் வருண்.

பிரகதீஸ்வரி நிமிர்ந்து அமர அண்ணனிடம் வந்த வருண், “என்ன ண்ணா செய்ற?” எனக் கேட்டுக் கொண்டே உதவ வந்தான்.

“டேய் டேய் வந்ததும் வராததுமா… அம்மாட்ட போ” என தம்பியிடம் சொன்னவன், மனைவியை பார்த்து, “இவனை கவனிம்மா” என்றான்.

“காபியா டீயா” இரு விரல் காட்டி கேட்டாள் பிரியா.

“நீ போடறதா இருந்தா எதுவும் வேணாம் அண்ணி” கை எடுத்து கும்பிட்டான் வருண்.

“நானே ரிஸ்க் எடுக்கிறது இல்ல வருண், செர்விங் மட்டும்தான் நான், கவலை படாம நீ சொல்லு”

“காபி” என்றான்.

“ஃபில்டர் ஆர் இன்ஸ்டண்ட்?”

“ஃபில்டர்”

“சீனியா… நாட்டு சர்க்கரையா?”

“ண்ணா!” அண்ணனை உதவிக்கு அழைத்தான் வருண்.

“டயர்டா இருக்க மாட்டானா பிரியா? எந்த நேரம் விளையாடன்னு தெரியாதா உனக்கு?” கடிந்தவன் பழுதை சரி செய்து விட்டதால் மீண்டும் மோட்டாரை பொருத்த ஆரம்பித்தான்.

அண்ணனிடமே அமர்ந்து அவனுக்கு உதவ ஆரம்பித்தான் வருண். பிரியா காபியோடு வர, “அவ்ளோதான் ஆச்சு, இனிமே நான் பார்த்துப்பேன், நீ காபி குடி” என தம்பியிடம் சொன்னான் பாலன்.

வீட்டின் இன்னொரு பக்கம் இருந்த தண்ணீர் குழாயில் கைகள் சுத்தம் செய்து கொண்ட வருண் காபியை வாங்கிக் கொண்டு அம்மா பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

மகன் காபி பருகும் வரை அமைதி காத்த பிரகதீஸ்வரி, “உனக்கு சௌமியாவை தெரியுமா?” எனக் கேட்டார்.

இங்கு வேலை செய்து கொண்டிருந்தவர் பின் பக்கம் சென்று விட்டதால் பாலனே மரங்களுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது கவனம் முழுதும் தம்பியிடத்தில்தான்.

சார்லியை பால் பருக வைத்துக் கொண்டிருந்த பிரியாவும் வருண் என்ன சொல்லப் போகிறான் என பார்த்தாள்.

“என்னம்மா ஏன் கேட்குற?” எனக் கேட்டான் வருண்.

“உனக்கு அந்த பொண்ண தெரியுமா?” அழுத்திக் கேட்டார் பிரகதீஸ்வரி.

வருண் பிரியாவின் முகம் பார்த்து கண்களால் ‘என்ன?’ எனக் கேட்டான்.

“நேத்து ஈவ்னிங் சௌமியாவோட அம்மா இங்க வந்திருந்தாங்க. அந்த சௌமியா யாருன்னா…” என்ன உறவுமுறை சொல்லி விளக்குவது என் விழித்தாள் பிரியா.

“நமக்கு ஆகாத வீட்டு பொண்ணுடா” பாலன் மரங்கள் பக்கம் நின்ற படி சொன்னான்.

உடனே பிரியா, “ஆமாம், அவங்க ஏதேதோ சொன்னாங்க, அதை விசாரிக்கதான் உனக்கு இந்த அவசர அழைப்பு” என்றாள்.

வருண் முகம் இறுக்கமடைய, “பதில் சொல்லுடா” என அதட்டினார் பிரகதீஸ்வரி.

“ஆமாம் ம்மா, தெரியும். அவங்க ஏன் இங்க வந்தாங்க?” எனக் கேட்டான்.

இப்போது கூட பாலன் தன் தம்பிக்கு தெரிந்த பெண்ணாக இருக்கலாம் என நினைத்தானே ஒழிய தவறாக நினைக்கவே இல்லை.

“வருண்… அனுசுயா சொல்றா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வாழ்ந்திட்டு இப்போ வேணாம்னு நீ விட்டுட்டதா? நீ இல்லதானேடா? உனக்கு எப்படி அந்த பொண்ணை தெரியும்? வேற யாரும் வருண்னு இருக்காங்களா?” உயிரை கையில் ஏந்திக் கொண்டு கேட்டார் பிரகதீஸ்வரி.

“உனக்கு நியாயம் கொடுத்தாங்களா அன்னிக்கு. இன்னிக்கு அவங்க வீட்டு பொண்ணுக்கும் உன் நிலைமைனதும் ரொம்ப துடிக்குதோ? நீ ஏம்மா அவங்க பொண்ணுக்காக கவலை படுற?” என கோவமாக கேட்டான் வருண்.

கையில் இருந்த தண்ணீர் குழாயை தரையில் விட்ட பாலன், தம்பி என்ன சொல்கிறான் என கிரகிக்க முயன்றான்.

பிரியா எழுந்து வந்து அத்தையின் பக்கம் நின்று அவர் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, “வருண்… அப்போ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டியா நீ? அவங்க சொன்னது எல்லாம் நிஜமா?” அப்படி இருக்க கூடாது என உள்ளுக்குள் வேண்டிக் கொண்டே கேட்டாள்.

“அந்த பொண்ணை நான் கல்யாணம் பண்ணி ரெண்டு மாசம் ஆகுது. நாங்க ஒண்ணா வாழ்ந்தோம். முந்தா நாள்தான் ‘போ உன் வீட்ல போய் கட்டின புருஷன் விட்டுட்டான்னு சொல்லு’ன்னு அனுப்பி வச்சேன்” என்றவன் கண்களில் குரூர திருப்தி.

பிரகதீஸ்வரி ஸ்தம்பித்துப் போய் பார்க்க சர்வமும் ஒடுங்கிப் போய் நின்றிருந்தான் பாலன்.

வருண் சொன்னதை நம்ப முடியாத பிரியா, “வருண் நீயா?” என்றாள்.

“நான்தான் பிரியா, நானேதான். என் அம்மாவுக்கு நியாயம் வாங்கி கொடுத்திட்டேன். அவங்க அழுத அழுகைக்கு பரிகாரம் செஞ்சிட்டேன்” என திருப்தியான குரலில் சொன்னான் வருண்.

“அந்த பொண்ணு பாவம் வருண்” கோவமாக சொன்னாள் பிரியா.

“பாவம்தான். அந்த வீட்ல பொறந்ததால அவங்க பாவத்துல பங்கு போட்டுக்கிட்டா” குற்ற உணர்ச்சி இருந்தாலும் தெளிவாகவே சொன்னான் வருண்.

“இன்னும் அங்க யாருக்கும் அவங்க சொல்லலை, சௌமியா அழுதிட்டே இருக்காளாம், ரொம்ப தப்பு வருண், நீ ஏன் இப்படி பண்ணின?” நியாயம் கேட்டாள் பிரியா.

“இங்க ஏன் வந்தாங்க அந்தம்மா? அன்னிக்கு என் அம்மா அவங்க பொண்ணு மாதிரிதானே அழுதிருப்பாங்க. கையில மூணு புள்ளைய வச்சுகிட்டு இருந்த என் அம்மாவுக்கு அவங்க எல்லாரும் துரோகம் பண்ணினாங்கதானே? என் அண்ணன் இல்லைனா இன்னிக்கு நாங்க என்ன ஆகியிருப்போம்?”

“எங்க அம்மா முகத்துல சிரிப்பு தொலைஞ்சு போச்சு. உன் வீட்ல அண்டி வாழ்ந்து உன் அம்மாகிட்டலாம் அசிங்க பட்டோம். சின்ன வயசுலேயே படிப்ப விட்டுட்டு என் அண்ணன் கஷ்ட பட்டார். எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம். அவங்க என் அம்மாவுக்கு என்ன செஞ்சாங்களோ அதையேதான் அந்த வீட்டு பொண்ணுக்கும் நான் திருப்பி கொடுத்திருக்கேன். இப்போ தெரியும் எங்க வலியும் வேதனையும்” ஏதோ சாதித்து விட்டவனை போல பேசிய வருணை வெறுப்பாக பார்த்த பிரியா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

பாலனுக்குள் அரூபமாக ஏதோ புகுந்து விட்டது போல உக்கிரத்தோடு வேக எட்டுக்கள் எடுத்து வைத்து வருணிடம் வந்தான். கணவனை பார்த்து விட்டு பிரியா திகைக்க அவள் பார்வை செல்லும் பக்கம் பார்த்த வருணும் அதிர்ந்து, “அண்ணா!” மன்றாடுதலாக அழைத்தான்.

Advertisement